தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட இடையீட்டு மனு ஒன்றை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே 1992 இல் அளித்த உத்தரவின் கீழ் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து, பொதுப் பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் தொழிற் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைப் பொதுப் பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது.
இதைப் போன்று இந்த ஆண்டும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரியும், 2018 - 19 கல்வி ஆண்டில் 50 விழுக்காடு ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து பொதுப்பிரிவு மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சிலர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில்தான் 01.08.2018 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்தும், அதற்கு தடை கோரியும் இன்னொரு மனுவை தாக்கல் செய்யுமாறு, இடஒதுக்கீட்டை எதிர்ப்போருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இதில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக நாம் கருத முடியாது.
மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 1992 ஆம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நவம்பர் 16, 1992 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16(4) எனும் உறுப்பின்படி மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பு அளித்தது.இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக இருந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 1993 நவம்பர் 9 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், “தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை தொடர்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தீர்மானம் சட்ட முன்வடிவாக அறிமுகம் செய்யப்பட்டு, 1993 டிசம்பர் 31 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, அரசியலமைப்புச் சட்டம் 31பி, 31சி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 9 ஆவது அட்டவணையில் வரிசை எண் 257ஏ இல் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் நீதிக்கட்சி அரசு காலம் தொட்டு நடைமுறையில் இருந்து வரும் சமூக நீதி காப்பாற்றப்பட்டது.
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதும் இன்னொரு மனுவை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக நீதிக்கு எதிராகவும், குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பின்னப்பட்டு வரும் சதி வலைகளை அறுத்து எறியும் வகையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட இயக்கம் ஏற்றி வைத்துள்ள சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 03-08-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment