டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் நீதியரசர்கள் கோயல், ஜாவத் ரகீம், வாங்கோய் மற்றும் நிபுணர் நாகின் நந்தா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வைகோவின் மனுவை ஏற்கக் கூடாது, அரசியல் விளம்பரத்துக்காகத்தான் செய்கிறார் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஆட்சேபனை மனுவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த பதில் மனு பின்வருமாறு:-
நான் அரசியல் விளம்பரத்துக்காக வழக்கைத் தொடுக்கிறேன் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறி இருப்பது அடிப்படை அற்றதும், கண்டனத்துக்கு உரியதும் ஆகும். 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி வருகிறேன். 1997 ஜனவரி 1 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ளநான் தாக்கல் செய்த ரிட் மனு மீதுதான் ஆலையை மூடும் தீர்ப்பை 2010 செப்டம்பர் 28 இல் உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன் மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து அமர்வுகளிலும் நான் பங்கேற்றேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2013 ஏப்ரல் 2 இல் ஆலையை நடத்துவதற்கு அளித்த தீர்ப்பில், என்னுடைய பங்களிப்பை பொதுநலனுக்கான கடமை என்று பாராட்டினர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆலையை மூடுவதற்கு நான் தொடுத்த வழக்கில்தான் தமிழ்நாடு அரசு தன் கொள்கை முடிவை தெரிவித்தது. தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் வாழ்வு நாசமாகிவிடும் என்பதால்தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறேன்.
எனக்கு அரசியல் விளம்பரம் தேவை இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கிறேன். மிசா சிறைவாசம், பொடா சிறைவாசம் உள்ளிட்டு ஐந்தாண்டுகள் சிறையில் இருந்துள்ளேன். 1998 லும், 1999 லும் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எனக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோது, அதனை நான் ஏற்க மறுத்ததை இந்திய அரசியல் ஞானம் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள்.
என் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் என்று பதில் மனு தாக்கல் செய்த வைகோ, அதுகுறித்துப் பேச வாய்ப்புக் கேட்டபோது பின்னர் தரப்படும் என்று நீதிபதி கூறினார்.
இன்று இருதரப்பு வாதங்களும் நடைபெற்று, பத்து நாட்களுக்குள் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து கண்காணிப்புக் குழு அறிக்கை தர வேண்டும். அக்குழுவில் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதியும், ஸ்டெர்லைட் நிர்வாகப் பிரதிநிதியும் இடம் பெறுவார்கள் என்று கூறி, வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதில் வைகோ அவர்களுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், வழக்கறிஞர் ஆனந்தசெல்வமும் பங்கேற்றார்கள் என்ற தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் 09-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment