திராவிட இயக்கம் இம்மண்ணில் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்வதற்கு ஆதார சுருதியாக இருந்து நம்மை வார்ப்பித்தும், வளர்த்தும் வருபவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களுடன் கை கோர்த்து, பல்வேறு களம் கண்டு, அதுவரை சாமானியனுக்கு வாய்க்காத அதிகார அரசியலை எளியவர்க்கு வழங்கி தமிழர் ஏற்றம் பெற மாற்றம் கண்ட வித்தகத் தலைவர் அறிஞர் அண்ணா.
இத்தகைய வியத்தகு மாற்றத்தை மண்ணில் விதைத்து மூட நம்பிக்கை என்னும் முடை நாற்றத்தை மூட்டைக் கட்டி வீசியதும், ஆண்டான் அடிமை, பெண்ணடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வர்க்க பேதத்தை தகர்த்தெறிவதற்கு தன்மான இயக்கமாய் சுடர் விட்டு வளர்ந்தது திராவிட இயக்கத்தின் சாதனையன்றோ.
திராவிட இயக்கம் என்ன சாதித்துவிட்டது என ஏகடியம் பேசுவதும், பெரியார் சிலைகளை தமிழகம் முழுவதும் அப்புறப்படுத்துவோம் என்ற வெற்றுக்குரல் பிரீட்டு வருவதும், திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, புத்தியக்கங்கள் எனும் பெயரில் போலிகள் புறப்பட்டு வரும் காலத்தில், அடிமை மோகத்தில் இருந்து தமிழரை மீட்டெடுக்கவும், மானமும், அறிவும் மனிதனுக்குத் தேவை என்று தடி உயர்த்தியவர் தந்தை பெரியார்.
இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மீட்டது மட்டுமின்றி, தாய்த் தமிழரையும் மீட்டெடுத்து கோட்டை முற்றத்தில் திராவிட இயக்கக் கொடி பறப்பதற்கு அகரம் தீட்டிய சிகரமன்றோ அண்ணா.
அத்தகைய தகைமைக்குரிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்தம் வரலாற்றை இளைய தலைமுறை கற்றுத் தெளியவும், நூறாண்டு கண்ட திராவிட இயக்கம் இன்னும் ஆயிரமாண்டு வளர்ந்து செழிக்கவும்.
மறுமலர்ச்சி திமுக ஈரோடு மாநகரத்தில் செப்டம்பர் 15-ல் நடத்த உள்ள பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா, கட்சியினரின் தொடர் வலியுறுத்தல் காரணமாக ஒத்துக் கொள்ளப்பட்ட எனது பொதுவாழ்வுப் பொன் விழா, இயக்கத்தின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாட்டை முன்னிட்டு, கழக மாணவர் அணி முன்னின்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டியை நடத்துவதாக அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் அணியினர் அழைப்புக் கடிதம் அனுப்பி, ஜீலை மாதம் 22-ந் தேதி நாற்பது மாவட்டங்களில் நடந்த மாவட்டப் போட்டிகளில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் பங்கேற்று பெரியார்-அண்ணா பெருமைகள் குறித்து மூரி முழங்கினார்கள்.
மாவட்டத்தில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 120 மாணவர்கள் பங்கேற்ற மண்டலப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வென்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை-புரசைவாக்கம், கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிறைவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில், மண்டலப் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட, மண்டலப் போட்டிகளில் பின்பற்றிய விதிகளின் அடிப்படையில் கட்சி சாராத நடுவர் பெருமக்களைக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.
அன்றைய தினமே முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
நிறைவுப் போட்டி மற்றும் மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் நானும், கழக முன்னணியினரும் பங்கேற்க உள்ளோம். எழுச்சி சங்கநாதமென இளம் தலைமுறையாம் மாணவக் கண்மணிகள் உரை முழக்கம் செய்யும் பேச்சுப் போட்டி நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் என 31-08-2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment