இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது அணித்தரமான வாதத் திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்குப் பெருமை சேர்த்தவர் சோம்நாத் சட்டர்ஜி ஆவார்.
2009 முதல் 2014 வரை நாடாளுமன்ற மக்கள் அவையின் சபாநாயகராக நடுநிலை தவறாது சபையை நடத்தி, அந்தப் பதவிக்குப் புகழைச் சேர்த்தார். நாடாளுமன்ற அவைகளின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர்கள் தங்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார்.
அவரது தந்தையார் நிர்மல் சந்திர சட்டர்ஜி உச்சநீதிமன்றத்தில் தலைசிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். அகில பாரதிய இந்து மகா சபையை நிறுவியவர்களில் ஒருவராக இருந்தபோதும், 1948 இல் கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டதையும், கம்யூனிஸ்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டததையும் எதிர்த்து அகில இந்திய குடிமை உரிமைகள் சங்கத்தைத் தொடங்கி, கம்யூனிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யப் போராடினார். அரவது மகனான சோம்நாத் சட்டர்ஜி அவர்களும் உச்சநீதிமன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் தலைவரான ஜோதிபாசு அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய மிக நெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.
2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது, அதனை ஆதரிக்க மறுத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து அவர் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் ஐம்பது ஆண்டுகள் ஆற்றிய உன்னத சேவைக்காக சட்டமன்றத்தில் பொன் விழா நடத்தப்பட்டபோது, அந்த விழாவில் பங்கேற்று பெரும் சிறப்பு சேர்த்தார்.
பல ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பை நான் பெற்றேன். சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கும்போது, அவர்களை ஊக்குவிக்கின்ற அரிய பண்பு மிக்கவர் ஆவார்.
அன்னாரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை உளமாற நேசிக்கும் பொதுஉடைமைத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment