வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்துகொண்டு இருக்கின்றது. நான் பிறந்த ஊராகிய கலிங்கப்பட்டியில் வழக்கம் போல ஜனநாயகக் கடமையாகிய வாக்களிக்கும் கடமையைச் செய்திருக்கிறேன். எல்லோரும் மலர்ந்த முகத்தோடு வாக்குச் சாவடியில் நிற்கின்றார்கள்.
இம்முறை தேர்தல் களத்தில் மத்திய அரசின் அனைத்து அதிகார அமைப்புகள் குறிப்பாக புலனாய்வுத் துறையையும், அமலாக்கத் துறையையும் ஆளும் கட்சி பயன்படுத்தி ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்துகிறார்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை இரத்து செய்தார்கள். இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் அவர்களது மகன் வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களுக்கும் வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை இரத்து செய்வதாக இருந்தால், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் இரத்து செய்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆகவே மாநில அரசுக்கு உதவுகின்ற விதத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சகோதரி கனிமொழி போட்டியிடுகிறார். நிறைவுப் பிரச்சாரத்தில் நானும், தங்கை கனிமொழியும் கலந்துகொண்டோம். அன்று இரவு கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனையிடுகிறார்கள். அங்கு எந்தவிதமான ஆதாரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில், ஓட்டுக்கு 2,000 முதல் 5,000, 10,000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகின்ற தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பணம் வெள்ளமாகப் பாய்கிறது என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் செய்திகள் வருகின்றன. அந்தப் பகுதியில் ஏன் சோதனையிடவில்லை? தேனியில் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த மேடையிலேயே அவரது காலைத்தொட்டு வணங்கினார் வேட்பாளர் ரவீந்திரநாத்குமார். அதிகார வர்க்கம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது.
ஆனால் பணம் கொடுப்பதையும் மீறி, நடைபெறுகின்ற தமிழகம் - புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ஒரிசா முதலமைச்சர் சென்று இறங்கிய ஹெலிகாப்டரில் சோதனை செய்கிறார்கள். கர்நாடகா முதலமைச்சர் பயன்படுத்திய ஹெலிகாப்டரில் சோதனையிடுகிறார்கள். ஆக, ஜனநாயகத்திற்கு விரோதமான எதேச்சாதிகாரப் போக்கில் மத்திய அரசும், மத்திய அரசு நினைப்பதைச் செயல்படுத்துகின்ற தமிழக அரசு போன்ற மாநில அரசுகளும் செயல்படுகின்றன.
இரண்டாம் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகிற, ஜனநாயகமா? பாசிசமா? என்ற தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறும் என்று நான் நம்புகின்றேன்.
வைகோ அவர்களுடன் அவரது தம்பி வை.இரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வரிசையில் சென்று வாக்களித்தனர்.
இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்