கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
கோமதியின் தந்தை மாரிமுத்து, 2016 ஆம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். 2016 ஆம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, மருத்துவம் பெற்றார்.
இத்தகைய சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட கோமதி, இன்று சாதனை படைத்து இருக்கின்றார்.
“அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதி கொண்டு இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி” என்கிறார் கோமதி. இன்று வருமானவரித்துறை அதிகாரியாகவும் திகழ்கின்றார்.
கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment