Sunday, September 15, 2019

பேரறிஞர் அண்ணா 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!

சென்னை YMCA திடலில் மதிமுக நடத்தும் அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் விழா மாநாடு கொண்டாடப்படுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானங்கள்
தீர்மானம் 1:
இந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்திருக்கும் திராவிட இயக்கம், தனித்துவமான கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்களை வகுத்துக்கொண்டு பீடு நடைபோட்டு வருகின்றது. ‘சமூக நீதி’ தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும், தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமைகளைக் காப்பதற்கு அரணாக இருப்பதும், திராவிட இயக்கம்தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மை ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் ஏற்றி வைத்த கொள்கைச் சுடர், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கின்றது.
அந்தத் தலைவர்கள் வகுத்த வழியில், தமிழ் இனம் தலைநிமிர உழைத்திட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் காட்டிய இலட்சியப் பயணத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கால் நூற்றாண்டுக் காலமாகப் பயணிக்கின்றது.
திராவிட இயக்கத்திற்கு எழுந்துள்ள அறைகூவலை முறியடிக்கவும், தமிழ்-தமிழர்- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி மேற்கொள்கின்றது.
தீர்மானம் 2:
தமிழ்நாட்டில், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட, அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்வதற்காக,
1916 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் நாள், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி உருவாகி, 103 ஆண்டுகள் ஆகின்றன. திராவிட இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், 2019 நவம்பர் 20 ஆம் நாள் மூன்று சிலைகள் நிறுவிட, இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
தீர்மானம் 3:
2019 ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், மதவாத சக்திகள் வடஇந்தியாவில் பெருவெற்றி ஈட்டியபோதும், தமிழ்நாட்டில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கரம் கோர்த்து வந்தபோதும், தமிழக மக்கள் தோல்வியைப் பரிசாக அளித்துப் பாடம் புகட்டி உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, 39 தொகுதிககளில், 38 தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று இருக்கின்றது. ‘தமிழ்நாடு’ பெரியார் மண், திராவிட இயக்க பூமி என்பதை, இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற வகையில், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.
தீர்மானம் 4:
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட தேர்தல் உடன்பாட்டின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மாநிலங்கள் அவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கி, சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு ஏற்க வழிவகை செய்த தி.மு.க. தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக மீண்டும் பொறுப்பு ஏற்று, திராவிட இயக்கப் போர் முரசம் அறைந்திடுகின்ற கழகப் பொதுச்செயலாளர், திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றது; பேருவகை கொள்கின்றது.
தீர்மானம் 5:
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் முதல் உரையை, 2019 ஆகஸ்டு 1 ஆம் நாள் நிகழ்த்தினார். அப்போது, 1962 ஏப்ரல் மாதம் மாநிலங்கள் அவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய கன்னி உரையைச் சுட்டிக் காட்டி உரை ஆற்றினார். “இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான்; ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை பா.ஜ.க. அரசு திணிக்க முற்படுகின்றது; அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது; உண்மையில் இந்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று, ‘இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India)’ என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முழங்கினார்கள்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் சமூக, மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்து, தனித் தனித் தேசிய இனங்களின் அடையாளங்களை நிலைநாட்ட இந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ (United States of India)’ என்றே அழைக்கப்பட வேண்டும்; அதுதான் ‘ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி’ என்ற இந்து ராஷ்டிர கூப்பாடு போடும் சனாதன சக்திகளின் கோட்பாட்டை முறியடிக்க வல்ல அரசியல் கருவி என, இம்மாநாட்டின் மூலம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனம் செய்கின்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் ‘உயில்’ எனக் கருதப்படும் ‘மாநில சுயாட்சி’ கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி, இந்தியாவில் கூட்டு ஆட்சித் தத்துவம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்திட, இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, இந்துத்தவ சனாதன சக்திகளின் ‘இந்து ராஷ்டிரா’ கருதுகோளை முறியடிக்கத் தேவையான அரசியல் முன்னெடுப்புகளை, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆதரவுடன், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் 6:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசு அமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அந்த மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும், பா.ஜ.க. அரசு, 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையிலும், ஆகஸ்டு 6 ஆம் தேதி மக்கள் அவையிலும் சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந்து நிறைவேற்றி இரத்து செய்து இருக்கின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன் வரைவுகளை நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 5 ஆம் தேதி தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக, குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கூறு போடப்பட்டு விட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீரும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் மாற்றப்பட்டு விட்டன.
காஷ்மீர் தேசிய இன மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை, மதவாதக் கண்ணோட்டத்துடன் பாரதிய ஜனதா கட்சி அரசு அணுகி உள்ள முறை, காஷ்மீரை, ‘கொசோவா-கிழக்குத் தைமூர் -தெற்கு சூடான்’ போன்று, இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கி இருக்கின்றது என்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாநிலங்கள் அவையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினார். காஷ்மீரை இணைத்துக்கொள்ளத் துடித்த பாகிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பியது. அவர்களது ஆதரவுடன், பக்டூனிஸ்தான் பழங்குடிகள் காஷ்மீருக்குள் ஊடுருவினர். வேறு வழி இன்றி மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையில் இருந்து இந்தியப் படைகளும், பாகிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டுப் படைகளும் காஷ்மீருக்குள் நுழைந்தன.
காஷ்மீரத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அதனை ‘சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று இந்தியாவும் கூறி வருகின்றன.
பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீரத்தின் மீது இரு நாடுகளும் உரிமை கொண்டாடியபோது, பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சில் கூடி, 21.04.1948 இல் தீர்மானம் (எண்.47) நிறைவேற்றியது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தி, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அதன் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு, ஒப்புக்கொண்டபடி பொதுவாக்கெடுப்பு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக, காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்ட, அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகள் உருவாக்கப்பட்டு காஷ்மீரத்துக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன.
அதனை இரத்து செய்யக் கோரி, ஜனசங்கத் தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம் சென்று போராட்டம் நடத்தினார். தற்போது நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பா.ஜ.க., தமது இந்துத்துவ செயல் திட்டத்தின் ஒரு பகுதியான காஷ்மீரத்தின் 370 ஆவது சட்டப் பிரிவை இரத்து செய்து, ஏதேச்சாதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.
காஷ்மீரைத் துண்டாடி விட்டு, கடந்த ஒன்றரை மாதங்களாகக் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு இருப்பதால், அங்கே தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயன்று வருவதை ஐ.நா. மன்ற நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
எழில் கொஞ்சும் காஷ்மீரை, பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்குத் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘வரலாற்றுப் பிழை’யைச் சரிசெய்து, காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 7:
மத்திய பா.ஜ.க. அரசு நியமித்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வரைந்துள்ள, புதிய கல்விக் கொள்கை முன்வரைவு -2019, ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பு இன்மை முதலான அரசியல் அமைப்புச் சட்ட மதிப்பீடுகளை முற்றிலும் புறந்தள்ளி இருக்கின்றது.
ஆரியப் பண்பாட்டு ஆதிக்க மொழியான சமஸ்கிருதத்தையும், அதன் வழிவந்த இந்தி மொழியையும் உயர்த்திப் பிடிப்பது, இந்தி இனத்தின் ஆதிக்கத்தை இதர தேசிய இனங்களின் மீது திணிப்பது, பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வித் துறையை முற்றிலும் மத்திய அரசின் ஏகபோக ஆதீக்கத்தின் கீழ் கொண்டுவந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, கல்வித் துறையில் தனியார் மயத்தை ஊக்குவிப்பது, பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் ‘கல்வித் தொழிலில்’ ஈடுபட உரிமம் அளிப்பது, பழங்காலப் பெருமை என்ற பெயரில் ஆரியப் பண்பாட்டைத் திணிப்பது, தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பது போன்ற கருத்துகள்தான், 484 பக்க புதிய கல்விக் கொள்கை -2019, வரைவு அறிக்கை முழுவதிலும் நிரம்பி வழிகின்றது.
விருப்பப் பாடம் என்ற பெயரில், இந்தி பேசாத மாநிலங்கள் மீது, இந்தி மொழியை மூன்றாம் வகுப்பில் இருந்தே திணிக்கின்றது.
நடைமுறையில் பள்ளிக் கல்வி என்பது, 1ஆம் வகுப்பில் இருந்து அதாவது 5 வயது முதல் தொடங்குவதை மாற்றி, மழலையர் பள்ளியில் இருந்தே பள்ளிக் கல்வி 3 வயதில் இருந்தே தொடங்கும் என்று இக்கல்விக் கொள்கை கூறுகின்றது. 9 வயதில் அதாவது 5 ஆம் வகுப்பில் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுத வேண்டும்.
3 ஆம் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வைப் புகுத்துவதற்கு வரைவு அறிக்கை கூறுகின்ற, 85 விழுக்காடு மூளை வளர்ச்சி அடைந்த நாடுகளின் புள்ளி விவரங்களை கல்வி வளர்ச்சி குறைந்த இந்தியாவில் பொருத்திப் பார்க்க முடியாது.
இந்த முன் மழலையர் வகுப்பில் இருந்து (Pre KG), பள்ளிக் கல்வி, கல்லுரிக் கல்வி, பல்கலைக் கழகக் கல்வி, உயர் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை அனைத்தையும் ‘தேசிய கல்வி ஆணையம் (National Education Commisiion)’ ‘ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆணையம்’ என்ற அதிகாரக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருகின்றது.
மழலையர் பள்ளியில் இருந்து உயர் ஆய்வு மையம் வரை மேலாண்மை செய்கின்ற இந்த ஆணையத்தின் தலைவராக பிரதமர் செயல்படுவார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், துணைத் தலைவராக இருப்பார். இந்த தேசியக் கல்வி ஆணையம்தான், இனி கல்வி குறித்த அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் உள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் அமைச்சர் தலைமையில் உருவாக்கப்படும் மாநிலக் கல்வி ஆணையம், பெயரளவில்தான் இயங்க முடியும். கல்விக் கொள்கைகள் பாடத் திட்டங்கள் உருவாக்குதல் போன்ற எதிலும் மாநில அரசுகள் இனி சுயேச்சையாகச் செயல்பட முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை.
இதன்மூலம், பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை, புதிய கல்விக்கொள்கை - முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாற்றுகின்றது.
மேலும் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் டில்லியில் குவிப்பதற்கு தேசியக் கல்வி ஆணையத்தின் கீழ்,
‘தேசியத் தேர்வு முகமை (National Testing Agency)’, ‘தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் (National Higher Eductaional Regulatory Authority -NHERA)’,
‘பொதுக் கல்விக் குழு (General Education Council)’
‘உயர் கல்வி நல்கைக் குழு (Higher Education Grants Commision)’,
‘தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation)’
ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இனி பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றில் இருந்து உயர்கல்வி, தொழில் கல்வி அனைத்திற்கும், ‘நீட்’ போன்று, அனைத்து இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் மாணவர்கள் பயில்வதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்கின்றது.
எல்லா மட்டங்களிலும் தகுதி, திறமை என்பதை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கையைப் புறந்தள்ளுகின்றது. முழுக்க முழுக்க கல்வித்துறை தனியாருக்குத் தாரை வார்க்கப்படும்போது, அவற்றில் இடஒதுக்கீடு என்று எதையும் கோர முடியாது என்பதை, புதிய கல்விக் கொள்கை உறுதிப்படுத்துகின்றது.
எனவே மாநில உரிமைகளுக்கு எதிராகவும், சமூக நீதித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும், ஆரியப் பண்பாட்டைத் திணித்து இந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுப்பதுமான புதிய கல்விக் கொள்கை -2019 வரைவு அறிக்கையை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 8:
இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் வீழ்ச்சி அடைந்து வருவதாக, பொருளாதார அறிஞர்கள் ரகுராம் ராஜன், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், நோபல் பரிசுப் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென் போன்றோர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பா.ஜ.க. அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் ‘நிதி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜீவ்குமார், இந்தியா தற்போது நிதித்துறையில் சந்திக்கும் நெருக்கடி கடந்த 70 ஆண்டுகளில் நாடு சந்தித்தது இல்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கின்றார்.
மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி இருப்பதற்கு முழுமுதற் காரணம் ஆகும். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., திவால் நடவடிக்கை ஆகியவை பொருளாதாரத் துறையில் பெருமளவில் தடுமாற்றத்திற்கு வழி வகுத்து இருக்கின்றன. நாட்டின் உற்பத்தித்துறை பெரும் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. குறிப்பாக வாகன உற்பத்தி தொழில்துறையில் ஏற்பட்ட சரிவு, தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுத்தியது மட்டும் இன்றி, பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையை உருவாக்கி விட்டது. சிறு குறு தொழில் நசிந்து வருவதால், இந்தியாவின் பொருளாதாரம் முடங்கி விட்டது.
முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வரியைக் குறைத்த போதும், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் கோடி முதலீடுகள் வெளியேறி இருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டே போகின்றது.
பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள்வதற்கு, ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் இருந்து 1.76 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியாது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
எனவே, இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்படுத்திட, சிறந்த பொருளாதார அறிஞர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை உருவாக்கி, அக்குழுவின் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 9:
தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று, தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கடந்த ஆண்டு தெரிவித்து இருக்கின்றார். 255 நூற்பு ஆலைகள் மூடப்பட்டதால், இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த ஆண்டில் 21 விழுக்காடு சரிந்து இருப்பதை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3.42 இலட்சம் கோடி முதலீடுகள் வருவதற்குக் கையெழுத்து ஆகி உள்ளன. இதன் மூலம் 10.50 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதி அளித்தபடி, முதலீடுகள் வரவில்லை. அதன்பிறகும், முதல்வர் எடப்பாடி அண்மையில் அயல்நாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய உடன்படிக்கைகள் செய்து இருக்கின்றார்.
எனவே, தமிழகத்தில் அயல்நாட்டு முதலீடுகள் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; தமிழ்நாட்டில் மூடப்பட்டுக் கிடக்கின்ற ஆலைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 10:
காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, சமூகத்தின் கீழான நிலையில் அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களின் விடியலுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் சமூக நீதிக்கொள்கை. வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை 1921 ஆம் ஆண்டில் பிறப்பித்து, சமூக நீதிக் கோட்பாட்டிற்கு முதன் முதலில் வாசலைத் திறந்தது, நீதிக் கட்சியின் ஆட்சி என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை ஆகும்.
இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின்னர்தான், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர் கல்வி பெறவும், அரசு வேலைவாய்ப்புகளைப் பெறவும் வழி பிறந்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி அரசு சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போகும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அரசியல் சட்டத்தில் எந்த வகையிலும் இடம்பெறாத பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீடு வழங்குவதற்காகத் திணித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் (124) கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஆண்டுக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் உயர்சாதி ஏழைகள் என்று வரையறை செய்து இருப்பதை நியாயப்படுத்த முடியாது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி டெல்லியில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார். ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி இயங்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதிக் கொள்கையைச் சீர்குலைக்க முயன்றால், கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையைச் சிதைக்கும் வகையில், உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் பா.ஜ.க. அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு இசைவு அளிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் 11:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காத கர்நாடக மாநிலம், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றது. கடந்த 2018 செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு, கர்நாடக அரசு அனுப்பிய வரைவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டுவில் ரூ.5912 கோடியில் தடுப்பு அணையும், சுமார் 400 மெகாவாட் திறன்கொண்ட நீர் மின்சார உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வளக் குழுமம், நவம்பர் 22, 2018 இல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக ஆய்வு அனுமதியை அளித்தது.
2018, டிசம்பர் 3 அன்று, டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில், கர்நாடகத்திற்கு வழங்கிய ஆய்வு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், அதன் பின்னர் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், நிபுணர் குழுவுடன் சென்று பார்வையிட்டு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதில் கர்நாடகம் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
2019 ஜூன் 20 இல் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கேட்டு அனுப்பிய திட்ட அறிக்கையில், அணை திட்ட மதிப்பீட்டுத் தொகை 9 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் நான்கு ஆண்டுகளுக்குள் அணை கட்டுமானம் நிறைவு அடையும் என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும் இந்த அணை கட்டுவதற்கு 5252 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது.
கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டினால், அதன்பிறகு மேட்டூருக்கு ஒரு சொட்டு நீர்கூட வராது, காவிரி பாசனப் பகுதிகளில் வேளாண்மைத் தொழிலை முழுமையாகக் கைவிட்டு, மக்கள் வெளியேறும் நிலைமை ஏற்பட்டுவிடும்.
எனவே, காவிரியில் கர்நாடக மாநிலம் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 12:
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு எதிராக, கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தமிழக மக்களின் எதிர்ப்புகளைத் துச்சமாகக் கருதி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி வழங்கி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைத்து இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவித்தும், வேளாண் சாகுபடி நிலங்களை மலடாக்கி நாசப்படுத்திய வேதாந்தா குழுமத்திற்கும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது.
ஹைட்ரோ கார்பான் திட்டங்களால் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போவதுடன், கடல் நீர் உட்புகும் ஆபத்தும் சுற்றுச் சூழல் நாசமாகும் நிலையும் ஏற்படும். மக்கள் குடிநீருக்குக் கூட வழி இன்றித் தவிக்கும் மோசமான சூழல் உருவாகும்.
நாட்டிற்கே உணவு அளிக்கும் நெற்களஞ்சியமான சோழ மண்டலத்தை பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி, கடந்த ஜூன் 23, 2019 இல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரையில் 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் கைகோத்து அணிவகுத்து நின்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. மரக்காணத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்றார்கள்.
காவிரிப் பாசனப் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு, காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 13:
ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால், உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், சுமார் 20 இலட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ ஆய்வகம் அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதனை எதிர்த்து, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதித்து 2015 மார்ச் 26 ஆம் நாள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, கேரளப் பகுதியில் உள்ள இடுக்கி அணை உள்ளிட்ட 12 நீர் நிலைகள் பாதிக்கப்படும். சுற்றுச் சூழல் சீர்கேடு அடைவதுடன், நீராதாரமும் பாதிக்கப்படும். பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமான மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும் சிதைவு அடையும்.
இத்திட்டத்தை எதிர்த்து, பூவுலகு நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில், எவ்வித ஆய்வுகளும் இன்றி அளிக்கப்பட்ட சுற்றுச் சூழல் அனுமதியை ‘தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்னக அமர்வு 2017 மார்ச் 20 இல் இரத்து செய்தது.
ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதை சிறப்புத் திட்டமாக, பிரிவு ‘பி’ திட்டம் என்று அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி சுற்றுச் சூழல் அனுமதி அளிக்க முடிவு செய்தது. இதற்காக பிரதமர் தலைமையில் நடந்த அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்தைச் செயல்படுத்த, இந்திய அரசின் தலைமைச் செயலாளரைப் பொறுப்பாளராக நியமித்துப் பணிகளைத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம் மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி மற்றும் வின்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.
தேனி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 14
வங்கக் கடலில் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் துயரம் ஒரு தொடர்கதையாக இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகினர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அண்மைக்காலமாக, தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை, இலங்கைக் கடற்படை பறித்துச் சென்று, இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து வருகின்றது. எவ்வளவோ கூக்குரல் எழுப்பியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில், மினோன், சிந்தாஸ், மதன், உமா கண்ணன், இலங்கேஸ்வரன், சசிகுமார் ஆகிய ஆறு மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.
எனவே, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற, இஸ்ரோ, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் மீனவ பிரதிநிதிகள் அடங்கிய மீனவர் மீட்பு மேலாண்மைக்குழு அமைக்க வேண்டும்; மீன்களைச் சந்தைப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்; ஒக்கி பேரிடரின் போது இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது போல, அண்மையில் இறந்த ஆறு மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 இலட்சம் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் 15
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட அணுஉலைகள் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) அணுக் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நிலக் கருவூலம் (Deep Geological Repository -DGR) ஆகிய இரண்டு விதமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
ஆனால், கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளைச் சரியாகக் கையாளாமலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் அணுமின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டுகின்றார்கள். இதனால் மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரையில், அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பூவுலகு நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில், அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு ஐந்து ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய அணுமின் கழகத்திற்கு 2013 இல் உத்தரவிட்டது.
ஆனால், 2018 மார்ச் மாதம் 5 வருட கால அவகாசம் முடிவு அடைந்த நிலையில், AFR தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல்கள் இருப்பதால், மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்று தேசிய அணுமின் கழகம் கோரியது.
பூவுலகு நண்பர்கள் அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் விதமாக, 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அணுக்கழிவுப் பாதுகாப்புப் பெட்டகத்தை அமைத்திட வேண்டும்” என்று 2018 ஆகஸ்டு 24-இல் உத்தரவிட்டு, அணுமின் உற்பத்தி தொடர அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே AFR பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கி அணுக்கழிவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ள தேசிய அணுமின் கழகம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. ஆனால், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை.
அணுக் கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க, உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (DGR) அமைப்பதற்கான இடமும், தொழில் நுட்பமும் இன்றுவரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், கூடங்குளத்தில் தற்காலிகமாக AFR பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் கூடங்குளம் அணுக்கழிவுகளை மட்டும் அன்றி, இந்தியாவில் இயங்கி வரும் மற்ற 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டு வந்து சேமிப்பது, தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு ஆகும்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டில் புகுஷிமா நகரில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அணுக் கழிவுகளால்தான் கதிர்வீச்சு உள்ளிட்ட மிகப் பெரிய பாதிப்புகள் உருவாகின. அணுகுண்டு போல எந்த நேரமும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இந்திய அரசிடம் இல்லை என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாகச் செயல் இழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணுஉலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
ஓர் அணு உலையை மூட 38 ஆயிரம் கோடி ரூபாயும், 40 முதல் 70 ஆண்டுகள் அவகாசமும் தேவைப்படும் என்று ஜப்பான் நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. ~புகுஷிமா விபத்துக்கு முன்பு ஜப்பானில் 60 அணு உலைகள் இயங்கி வந்தன. ஆனால், தற்போது, 9 அணு உலைகள்தான் இயங்கி வருகின்றன. தற்போது அந்நாட்டில் உள்ள 24 அணு உலைகளில் ~புகுஷிமாவில் உள்ள நான்கு உலைகள் உள்ளிட்டவற்றில் 40 விழுக்காடு அணு உலைகளை மூடிவிடத் தீர்மானித்துள்ளது.
எனவே, மத்திய அரசு, கூடங்குளத்தில் அணுக் கழிவு சேமிப்பகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 16
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்யப் பரிந்துரை செய்து, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு 2018, செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்கீழ், மாநில அரசின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்து உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும், தமிழக அமைச்சரவை தீர்மானம் அனுப்பி ஓர் ஆண்டு முடிந்த போதும், தமிழக ஆளுநர் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு இருக்கின்றார். 7 தமிழர்கள் விடுதலையில் மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது மக்கள் அறிந்ததே. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து, 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 17
வீட்டுவசதி, மகளிர் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகின்றது. அந்த வகையில், தமிழக அரசுக்கு 14-ஆவது நிதி ஆணையம் 2017-18 ஆம் நிதி ஆண்டில் 5920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை, குறிப்பிட்ட கால அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், மத்திய அரசுக்குத் திரும்பச் சென்று விடும். தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் 3676 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல், மத்திய அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதை மத்திய தணிக்கைத் துறையின் ஆய்வு அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கின்றது.
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்குவது இல்லை என்று தமிழக அரசு குறை கூறி வரும் நிலையில், மத்திய அரசு வழங்கிய நிதியில் 3676 கோடி ரூபாய் செலவழிக்காமல் திரும்ப ஒப்படைத்தது கண்டனத்துக்கு உரியது.
2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனபோது, தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ. 1,14,470 கோடியாக இருந்தது. கடந்த எட்டு ஆண்டுக்கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து விட்டது. 2017-இல் ‘இந்தியா ஸ்பெண்ட்’ மேற்கொண்ட ஆய்வின்படி தமிழகத்தில் ஒரு நபருக்கு சராசரியாக 28,778 ரூபாய் கடன் இருக்கின்றது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகம் மட்டுமின்றி நிதி நிர்வாகமும் சீர்கெட்டு இருப்பதையே இவை படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, எடப்பாடி பழனிசாமி அரசு நிதி நிர்வாகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 18
2016-ஆம் ஆண்டில் 26,995 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் ‘டாஸ்மாக்’ மதுபான வருமானம், இரண்டு ஆண்டுகளில் 31,157 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 3866-இலிருந்து 5152 ஆக உயர்ந்து இருக்கின்றது.
2016, மே மாதம் முதல்வர் பதவி ஏற்றவுடன், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர் பொறுப்பு ஏற்ற எடப்பாடி பழனிசாமி ஆட்சி, வரைமுறை இன்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகின்றது. தமிழகத்தை எல்லா வகையிலும் நாசப்படுத்தி வரும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 19
உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 விழுக்காட்டினை இந்தியா நிறைவு செய்கின்றது. பருத்தி நூல் தயாரிப்பில், தமிழகம் முன்னணியில் உள்ளது. நாட்டின் மொத்த பருத்தி நூல் உற்பத்தியில் 32 விழுக்காடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 27 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 விழுக்காடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகின்றது. வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டு, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), பருத்தி நூல் ஏற்றுமதி சுமார் 33 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் பாகிஸ்தானுக்கும் இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், இனி பாகிஸ்தானில் இருந்தும் சீனா தமது தேவைக்கான நூலை கொள்முதல் செய்துகொள்ளும். இதனால், இந்தியாவில் இருந்து சீனாவுக்கான நூல் ஏற்றுமதி மேலும் குறையும்.கடந்த சில மாதங்களாக நலிந்து வரும் நூற்பு ஆலைகளுக்கு இது மேலும் ஒரு பேரிடி ஆகும்.
எனவே, நூற்பு ஆலைகள் நலிவு அடைவதைத் தடுக்கவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமையைத் தவிர்க்கவும், ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய - மாநில அரசுகளுக்கான வரிகளைத் திரும்பப் பெறும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 20
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் நேரடித் தேர்வு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள்36 பேர் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.
தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்து இருப்பது, கண்டனத்திற்கு உரியதாகும்.
2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வு பெற வேண்டுமானால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை 2016, செப்டம்பர் 1 இல் சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணைய விதிகளில் திருத்தம் செய்தது அதிமுக அரசு.
இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி, தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பணி அமர்த்த வழிவகை செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது. அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 விழுக்காடு, அயல் மாநில இளைஞர்கள்.
அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.
பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோன்று, தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களைத் தேர்வு செய்து இருப்பது ஏற்கக் கூடியது அல்ல.
தமிழக அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால், அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று, தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 21
தமிழ் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று ஒழித்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன அழிப்பு செய்த சிங்களக் கொலைவெறி அரசின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், சர்வதேசச் சமூகம் மௌனத்தைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கின்றது.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்;
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்ற சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்; ஈழத் தமிழ் மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் சிங்கள இராணுவத்தின் துணைகொண்டு முறையற்ற வகையில் கபளீகரம் செய்த சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழர்களின் உடைமைகளைத் திரும்பக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, இலங்கை அரசு இதுவரை ஏற்கவில்லை.
தமிழ் ஈழ விடுதலைக்காக 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அமைதிவழி அறப்போராட்டங்களும், மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் வீரம் செறிந்த மறப் போராட்டமும் நடந்தது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தனர்.
இந்நிலையில், தமிழர்களுக்கு மாகாண கவுன்சில் போன்ற ஒப்புக்கு சில அரசு அதிகாரங்களை வழங்குவது எந்தவிதத்திலும் ஈழத்தமிழர் சிந்திய இரத்தத்திற்கு ஈடாகாது. எனவே, சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற பொதுவாக்கெடுப்பு ஒன்றை, ஈழத்திலும், உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களிடமும் நடத்த வேண்டும் என்று, 2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன் முதலாக எடுத்து உரைத்தார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்றிட, உலகத் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம் 22
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், படைக்கல வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 41 படைக்கலத் தொழிற்சாலைகள், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்குத் தேவையான போர் வாகனங்கள், கனரக பீரங்கிகள், இலகு ரக மற்றும் நடுத்தரத் துப்பாக்கிகள், வெடி பொருட்கள், பாராசூட் சிப்பாய்களுக்கு தேவையான படை உடைகள் மற்றும் இதர பொருட்களை தரமாகவும், உரிய நேரத்திலும் வழங்கி வருகின்றது.
இந்தத் தொழிற்சாலைகளில், நாடு முழுவதும் சுமார் 85,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். 41 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய படைக்கல வாரியம், ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.
யுத்த காலங்களில் இராணுவத்திற்குத் தேவையான அதிகப்படியான ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்களை படைக்கல தொழிற்சாலைகள் மிக விரைவாக வழங்கி வந்துள்ளது.
படைக்கலத் தொழிற்சாலைகள் இந்திய நாட்டுக்கு மிகப் பெரிய செல்வம் என்பதை முன்பு ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் நன்றாக உணர்ந்து இருந்தன.
தற்போது மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வரும் தவறான கொள்கை முடிவுகளால், ஆயுத தளவாட தொழிற்சாலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் படைக்கல தொழிற்சாலைகளை வணிக நிறுவனங்களாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். அரசுத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவது காலப்போக்கில் தொழிற்சாலைகளை நலிவடையச் செய்து, பெரும் மதிப்பு கொண்ட நிலம் உள்ளிட்ட சொத்துக்களைத் தனியாருக்கு தாரை வார்த்துப் படைக்கலத் தொழிற்சாலைகளை முற்றிலும் அழித்கு ஒழித்து விடும்
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், புதிய ஆயுத தளவாடங்களைக் கண்டுபிடித்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வது அரசு துறையால் மட்டுமே சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் செயற்கைகோள் ஏவப் பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்தபோது, இந்திய விஞ்ஞானிகள் தங்களது கடின உழைப்பால் ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து சாதனை படைத்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான சீனா ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில் உலகில் முதல் இடத்தில் இருந்தது. பொது வணிகத்தில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனா, அதற்கு நேர் மாறாக, ஆயுத உற்பத்தியில் அரசுத் துறைகளை மட்டுமே ஊக்கப்படுத்தி வருகின்றது. அதற்குக் கிடைத்த பலன், சீனா இராணுவம் அனைத்து நவீன ஆயுதத் தளவாடங்களிலும் தன்னிறைவு பெற்ற பலம் பொருந்திய இராணுவம் மட்டும் அன்றி, பிற உலக நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருவதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆயுதத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி 15 ஆண்டுகள் கடந்தபின்னரும், தனியார் நிறுவனங்கள் எவ்விதமான முன்னேற்றமும் காணவில்லை.
கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர்களாக பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஏ.கே.அந்தோணி, மனோகர் பரிக்கர் ஆகியோர், இந்திய படைக்கல தொழிற்சாலைகள் கார்ப்பரேஷன் அல்லது தனியார் மயம் ஆகாது என எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து இருக்கின்றார்கள். அந்த உத்தரவாதத்தை பாஜக அரசு மீறுவது கவலை அளிக்கின்றது. தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 6 படைக்கலத் தொழிற்சாலைகளில் 20,000 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். மறைமுகமாக பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகின்றனர். தனியார் மயம் ஆக்குவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
எனவே, படைக்கலத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுவிட்டு, தொடர்ந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23
2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருக்கின்றது. ஆனாலும், இரயில்வே துறை தனியார் மயம் ஆகாது என்று இரயில்வே அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் கூறி வந்தனர்.
கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்ற பின்பு, ‘100 நாள் செயல் திட்டம்’ என்ற பெயரில், இரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நெரிசல் இல்லா வழித் தடங்களிலும், சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-ஹௌரா, ஹௌரா-சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் தொடரிகளை ஓட்டுவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண இரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே இரயில்வேத் துறைக்குச் சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டு உள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், இரயில் பெட்டி தயாரிப்பு, இரயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், இரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க இரயில்வே துறை முனைந்துள்ளது.
இந்நிலையில், இரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு இரயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.
இரயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 இலட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 இலட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே இரயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பா.ஜ.க. அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை-தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, முன்பு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மறுமலர்ச்சி மாநாடு வலியுறுத்துகிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 15-09-2019 அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment