டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களை வீட்டுக் காவலில் இருந்து மீட்க. உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது. இன்று 16-09-2019 விசாரணை நடைபெற்றது. அப்போது வைகோ சார்பில். வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் வாதாடினார்.
இது குறித்து செய்தியாளரிடம் வைகோ தெரிவித்ததாவது:-
டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களை வீட்டுக் காவலில் இருந்து மீட்க உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. எனது சார்பில் வழக்குரைத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள், அற்புதமான-அசைக்க முடியாத ஆதாரங்களோடு நீதிபதிகளே திகைக்கின்ற விதத்தில் வாதங்களை எடுத்து வைத்தார்.
அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு விட்டன. ~பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார் என்று, ஒரு தரப்பு அரசுப் பிரிவு சொல்கின்றது. அவர் வீட்டுச் சிறையில் இல்லை என்று மற்றொரு தரப்பு அரசு பிரிவு கூறுகின்றது. அப்படி என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரைப் போய் சந்திப்பார்களா? ~பருக் அப்துல்லா அவர்களின் 40 ஆண்டுக்கால உயிர் நண்பர் வைகோ. அதனால்தான் ம.தி.மு.க. மாநாட்டுக்கு அழைத்தார். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்புகொள்ள முடியவில்லை. நெருக்கடி நிலை காலத்தைப் போல அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டுவிட்டனவா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது என்று வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதங்களை வைத்தார்.
அவரது விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், 30 ஆம் தேதிக்குள் அரசு இதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள். இதை மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
செய்தியாளர்: இரத்த சொந்தங்கள் தவிர்த்து மற்றவர்களுக்குத் தகவல் தர இயலாது. அதற்கான ஆட்கொணர்வு மனுவாக இதைப் பார்க்க முடியாது என்று மத்திய அரசின் வழக்கறிஞர்கள் தெரிவித்து இருக்கின்றார்களே?
வைகோ: நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. கேள்விகளுக்கெல்லாம் 30 ஆம் தேதி பதில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது.
செய்தியாளர்: முக்கியத் தலைவராக இருக்கின்ற பரூக் அப்துல்லா அவர்களுக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருக்கின்றது. காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றி நீங்கள் நேரில் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா?
வைகோ: காஷ்மீர் ஒரு சிறைக்கூடம் ஆக்கப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்கள் முதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும். அதுதான் முதல் நோக்கம். உரிய நேரத்தில் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்திப்பேன்.
செய்தியாளர்: தற்போது 30 ஆம் தேதி என்ன மாதிரியான தீர்ப்பை எதிர்பார்க்கின்றீர்கள்? மத்திய அரசிடம் இருந்து சரியான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?
வைகோ: உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
செய்தியாளர்: பரூக் அப்துல்லா மட்டும் அல்லாமல், பல தலைவர்கள் வீட்டுச் சிறையில் இருப்பதாகவும், தற்போது தகவல் வந்துகொண்டு இருக்கின்றது. அதைப் பற்றிய கவனம் இதன் மூலமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?
வைகோ: டாக்டர் பரூக் அப்துல்லா வழக்குதான் இன்றைக்கு பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு. என்ன மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment