இன்று 18.11.2019 மாநிலங்கள் அவையில், மறைந்த உறுப்பினர்கள் அருண்ஜெட்லி, ராம்ஜெத்மலானி, ஜெகநாத் மிஸ்ரா, சுக்தேவ்சிங் இப்ரா, குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட ஐந்து பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களில் சிலர் இரங்கல் உரை ஆற்றினர்.
வைகோ ஆற்றிய இரங்கல் உரை வருமாறு:-
எல்லை காண முடியாத காலப் பெருவெளியில் வாழ்க்கை என்பது கண நேரத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழி ஆகும் என்றார் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.
மனிதர்கள் வருவார்கள் போவார்கள், நான் நிரந்தரமாகச் சென்றுகொண்டே இருப்பேன் என்று ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் தன்னுடைய புருக்ஸ் என்ற கவிதையில் சொன்னார்.
கவிதை மட்டும் சொல்லவில்லை, காலமும் அதைத்தான் சொல்லுகிறது.
மறைந்த அருண்ஜெட்லி அவர்கள் நட்புக்கு இலக்கணமானவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்தவர். நான் அவரோடு மிகுந்த இனிய நட்பு கொண்டிருந்தேன்.
கம்யூனிஸ்டு கட்சித் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள் தலைசிறந்த நாடாளுமன்ற மேதை. அவரையும் என்னுடன் அழைத்துக்கொண்டு, அன்றைய தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து, மே தினத்தை மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்குமாறு நான் கேட்டுக்கொண்டபோது, அதனை ஏற்றுக்கொண்டு அறிவித்தார் வி.பி.சிங்.
70களின் நெருக்கடி நிலை காலத்தில் வழக்குரைஞர் கதாநாயகனான ராம்ஜெத்மலானி என் உயிரினும் மேலான நண்பர். என்னை உயிராக நேசித்தார்.
நான் இம்முறை மாநிலங்கள் அவையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டவுடன், அவர் இல்லத்துக்குச் சென்றேன். படுத்த படுக்கையில் இருந்த அவர், எனக்கு அன்பும் ஆசியும் வழங்கினார். மீண்டும் சில நாள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றேன் தழுதழுத்தக் குரலில் எனக்கு ஆசி கூறினார்.
அதன் பின்னர் அவரது உதவியாளர், உங்களிடம் அவர் பேசியதுதான்; கடைசியாகப் பேசியது என்று என்னிடம் தெரிவித்தார். அந்த நேசத்தை நினைத்து நான் கண்ணீர் சிந்துகிறேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் இரங்கல் உரையாற்றினார்.
No comments:
Post a Comment