Wednesday, January 24, 2018

மரபு மீறிய காஞ்சிமட இளைய பீடாதிபதி செயலுக்கு வைகோ கண்டனம்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்களின் தந்தையார் மறைந்த பேராசிரியர் ஹரிகரன் எழுதிய ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (23.01.2018) நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும்.

கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துள்ள தந்தை பெரியார் அவர்கள்கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அதுபோன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட மரபுகளையும், நாகரிகப் பண்புகளையும் முறியடிக்கும் வகையில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொண்ட செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நடந்துவிட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிப்பதாக காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 24-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஜனவரி 28 ல் காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை!

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

பத்து இலட்சம் ஏக்கரில் நடுவை நட்டு, உரம் இட்டு, ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து வளர்த்த நெற்பயிர்கள் பொதிப்பருவத்தில் உள்ளன. இன்னும் குறைந்தது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால்தான் விளைச்சலைக் காண முடியும். இல்லையேல், அறுவடை என்பது கானல் நீராகும்; பயிர்கள் கருகி சாவியாகிப் போகும்.

தற்போது மேட்டூர் அணையில் 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் குடிநீர்த் தேவைக்கு அவசியம் என்ற நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால்தான் நெற்பயிரைக் காப்பாற்ற முடியும். தமிழக அரசு கோரியபடி 15 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும்; அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், ஜனவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டு உள்ளன.

தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. எனவே, இந்தப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்கும்.

ஜனவரி 28 ஆம் தேதியன்று நான் தஞ்சாவூரில் போராட்டத்தில் பங்கேற்கின்றேன். அறப்போர் நடைபெறுகின்ற மற்ற இடங்களில், ஆங்காங்குள்ள கழகத் தோழர்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்று, அறப்போரை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்றூ 24-01-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 23, 2018

வள்ளுவம்−சிலம்பு தலைப்பில் வைகோ உரை!

திருவண்ணாமலையில் மதிமுக பொதுச் செயலாளர் இலக்கிய மேதை வைகோ அவர்கள் வள்ளுவம்−சிலம்பு என்ற தலைப்பில் எதிர்வரும் 24.01.2018 அன்று மாலை உரையாற்றுகிறார்

இடம் - துளுவவேளாளர் திருமணமண்டபம் - திருவண்ணாமலை

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, January 22, 2018

அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

மறுமலர்ச்சி தி.மு.கழக மாநாடுகளில் தொண்டர்களின் பசி போக்கவும், தைப் பொங்கல் நாளில் அட்சய பாத்திரமாக விளங்கும் வெள்ளைமாளிகையாம் கலிங்கப்பட்டியில் அமைந்துள்ள தலைவரின் இல்லத்திற்கு வருகை புரியும் அனைவருக்கும் ருசியாக உணவு சமைத்து வழங்கும் அறுசுவை மன்னன் பெருந்துறை குமார் அவர்களின் மகன் ஹரிகரசுதன் -ஜெயசூர்யா திருமண விழாவில் 22-01-2018 ல் மதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஒளிப்படம் - அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, January 20, 2018

திரு.அய்யாகண்ணு வைகோ அவர்களுடன் சந்திப்பு!

20-01-2018 மாலை 6:20 மணியளவில் தாயகத்தில் திரு.அய்யாகண்ணு அவர்களின் தலைமையிலான விவசாய சங்கத்தினர் மக்கள் தலைவர் வைகோ அவர்களிடம் தங்களது போராட்டத்திற்கான ஆதரவைக் கோரினர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஜனவரி 31 மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்!

ஜனவரி 31 மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்!

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், இன்று (20.1.2018) காலை 11 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், வைகோ தலைமையில் கூடியது. செயலாளர் லெனின் இராஜப்பா, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கி.வே.பொன்னையன், மே 17 இயக்கத்தின் சார்பில் திருமுருகன் காந்தி, பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெற்றிச்செல்வன், மதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர். நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், திட்டத்தின் பாதிப்புகளை விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

தமிழகம் போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர் நிலைகளுக்கு அருகே இந்தத் திட்டத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளை, உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. மாதவ் கhட்கில், கஸ்தூரி ரங்கன் குழுவினர், உத்தமபாளையம் வட்டத்தை, ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலம்’ என அறிவித்துள்ளது. அருகில், மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருப்பதல், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வளவு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், பல்வேறு ஆய்வுகளை திட்ட முன்னெடுப்பாளர்கள் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு சாதாரணக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி போல, சுற்றுச்சூழல் அறிக்கைகள் எதுவும் இன்றி, அந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர்.

இதை எதிர்த்து, ‘பூவுலகு நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், அந்த அனுமதியை ரத்து செய்து, 2017 மார்ச் மாதம் 20 ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்னக அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற அணுவிசைத் துறையின் ஆய்வுக்கூட்டத்தில், ‘நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, இந்திய அரசின் தலைமைச் செயலர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என, பிரதமர் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு, மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எத்தகைய திட்டங்களை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின் உரிமை ஆகும். இதைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று, அவர்களாகவே முடிவு எடுத்துக் கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள்.

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை, சிறப்புத் திட்டமாக (one of) பிரிவு, ‘B’ திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆயத்தமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு செய்வது, சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது.

மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலிறுயுத்தி, ஜனவரி 31 ஆம் நாள் புதன்கிழமை தேனி மாவட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகின்றது.

(வைகோ)
தலைவர்

(க.கா.இரா.லெனின் இராஜப்பா)
செயலாளர்

(கி.வே.பொன்னையன்)
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
(திருமுருகன் காந்தி)
மே 17 இயக்கம்

(வெற்றிச்செல்வன்)
பூவுலகின் நண்பர்கள்

(எஸ்.சந்திரன்)
மாவட்ட செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
தேனி மாவட்டம்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஆவடி இராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலை தொழிற்சங்கத் தலைவர்கள் வைகோவுடன் சந்திப்பு!

ஆவடி இராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலை தொழிற்சங்கத் தலைவர்கள் வைகோவுடன் சந்திப்பு!

ஆவடி இராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலை அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள், தங்கள் வாழ்வாதார பிரச்சினைக்காக இன்று 20-01-2018 மாலை சந்தித்தனர்.

உடன் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் MLF மாநிலத் தலைவர் திரு.அந்தரிதாஸ் மற்றும் மாநில செயலாளர் திரு.ஜார்ஜ் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, January 19, 2018

ஞாநி குடும்பத்திற்கு வைகோ ஆறுதல்!

திரு. ஞாநி அவர்களின் குடும்பத்தினருக்கு மக்கள் தலைவர் வைகோ அவர்கள் 19-01-2018 நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

லண்டனில் பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிக்கவும், சிலை நிறுவிடவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-வைகோ கோரிக்கை!

லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் செயலர் சூ ஃபெரோ, மினிஸ்டர் சாரோன் பில்லிங் ஆகிய இருவரும் இன்று தாயகத்திற்கு வருகை தந்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர். இருவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து, மலர் மாலைகள், பூங்கொத்துகளை வழங்கி வைகோ வரவேற்றார்..

செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்தான், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக் அவர்களுடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, 100 ஆண்டுகள் கடந்து விட்டால், அந்தக் கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும். அதன்படி, பென்னி குயிக் அவர்களுடைய கல்லறை அகற்றப்பட இருக்கின்றது என்ற செய்தியை அறிந்து, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தன பீர் ஒலி, பென்னி குயிக் கல்லறையை அகற்றுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதற்கு, பென்னி குயிக் செய்த சாதனை, அதற்காக அவரைத் தமிழகத்து மக்கள் எந்த அளவிற்குப் போற்றிப் புகழ்கின்றார்கள் என்பதற்கான சான்று ஆவணங்களைத் தர வேண்டும். எனவே, அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த மேற்கண்ட இரண்டு நிர்வாகிகளும் தமிழகத்திற்கு வந்தனர். அவர்களை மதுரை வானூர்தி நிலையத்தில் வைகோ அவர்கள் வரவேற்றார்கள்.

இருவரும், முல்லைப்பெரியாறு பாசனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தனர். பொங்கல் திருநாளின் போது, முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பென்னி குயிக் அவர்களுக்குச் செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர்.

இதுகுறித்துத் தங்கள் தேவாலய நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பென்னி குயிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அதற்கான கடிதத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பி உள்ளனர்.

தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழக ஊடகங்களின் வாயிலாக, முல்லைப்பெரியாறு போராட்டக் களங்களையும், அணையைப் பாதுகஹ்க்க மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களையும் அவர்கள் காணொளிகளில் பார்த்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வைகோ அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், தொடர் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கஹ்கத் தாயகம் வந்தனர். வைகோ அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர். செய்தியாளர்கள் முன்னிலையில், நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர்களது வருகைக்கு வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், கலைஞர் முதல்வராக இருந்தபோது, மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பென்னி குயிக் அவர்களுக்குச் சிலை அமைத்தார்; ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, பென்னி குயிக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி, அவரது சிலையை நிறுவினார். தேனி பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டினார்.

எனவே, லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிப்பதற்கும், அங்கே அவருக்கு ஒரு சிலை அமைப்பதற்கும், தேனி பேருந்து நிலையம் முன்பும் ஒரு சிலை நிறுவிடவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, செய்தியாளர்கள் மூலமாக வைகோ வேண்டுகோள் விடுத்தார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 19-01-2018 தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, January 18, 2018

ஆலங்குடி நகரச்செயலாளர் K.K.D.தனபாலன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

இன்று 18-01-2018 காலை 10:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நகரச்செயலாளர் K.K.D.தனபாலன் அவர்களின் மகன் தர்மவேந்தன் மீனாட்சிபிரியா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். 

உடன் மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை!

Wednesday, January 17, 2018

ஏ.கே.எம்.காசிநாத தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!

திருவாரூரில் ஏ.கே.எம்.காசிநாத தேவர் அவர்கள் மறைந்ததையொட்டி அவரின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.


உடன் முன்னாள் எம்.எல்.ஏ, மா.மீனாட்சிசுந்தரம், கோ.பழனிச்சாமி மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன், மயிலாடுதுறை அழகிரி திருவாரூர் மாவட் செயலாளர் பாலசந்திரன், நாகை மாவட்ட செயலாளர் AS. மோகன் ஆரூர்.சீனிவான், கமலவேந்தன் சுமதி ஜெயராமன், கோட்டூர் சிவா கதிரவன், சன் சரவணன் மீனாட்சி சுந்தரம் மற்றும் கழகத்தின் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்கள்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து; உண்மை நிலை என்ன? வைகோ அறிக்கை!

சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மத அடிப்படையில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ‘ஹாஜிக்களுக்கு’ மத்திய அரசு எவ்வித மானியமும் அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை ஆகும். முஸ்லிம்களின் ஹஜ் பயணத்தில் இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கூறப்படுவதிலும் துளி கூட உண்மை இல்லை. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான் என்பதை மறுக்க முடியாது. ஹஜ் யாத்திரை செல்பவர்களை அரசின் ஹஜ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் அதற்கான கட்டணமாக ரூ. 1 இலட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும். சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 34 ஆயிரம் ஹாஜிகளிடம் ஜித்தாவில் இறங்கியவுடன் வழங்கப்படும். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை ரூ. 1 இலட்சத்து 46 ஆயிரம் ஆகும். இதில் விமானக் கட்டணம், மக்கா, மதினாவில் தங்கும் கட்டணம், ஹஜ் வழிகாட்டி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து ஹஜ் குழு மூலம் செலவிடப்படும் தொகை ரூ. 1 இலட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு ஹஜ் பயணியும் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகமாகச் செலுத்துகிறார்கள். இதில் எங்கிருந்து மானியம் கிடைக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால், பா.ஜ.க. அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை ஒதுக்குவதாகவும் அது இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறி இருக்கிறது. அப்சல் அமானுல்லா தலைமையிலான ஹஜ் யாத்திரைக்கான குழு, மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபரில் பரிந்துரை செய்து இருக்கிறது. விமானக் கட்டணத்தைவிட கப்பல் பயணச் செலவு குறைவு என்பதால், கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஹஜ் யாத்திரைக்குப் புதிய கொள்கையை அக்குழு தனது பரிந்துரையில் அறித்துள்ளது.

பா.ஜ.க. அரசு சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்பதையும்; மதச் சகிப்பின்மையால் கடந்த மூன்றாண்டுகளாக சங் பரிவார், இந்துத்துவா கூட்டம் நடத்துகின்ற வன்முறை ஆட்டங்களையும் நாடு சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது. எனவே, இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு ‘மானியம்’ என்பதை மத்திய அரசு கூறாமல் இருப்பதுதான் ஹாஜிகளுக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், இந்திய அரசின் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் மட்டுமே சவூதிக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் தளர்த்தினால் ஹாஜிகள் தங்கள் விருப்பப்படி மெக்கா புனிதப் பயணம் செல்லும் நிலை ஏற்படும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 17-01-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 16, 2018

நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் பொருள்கூடத்தை (கேண்டீன்) வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது-வைகோ அறிக்கை!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில் உள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினர் மாதந்தோறும் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி குடும்ப உபயோகத்திற்கான பல்வேறு பொருட்களை வாங்கும் கேண்டீன் இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு பகுதி என சுமார் 8,000 குடும்பங்கள் மாதந்தோறும் இப்பொருள்கூடத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்தக் கேண்டீன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லும் முன்னாள் இராணுவத்தினர், வயதான தாய்மார்கள் மற்றும் எல்லைபுறங்களில் தனியாகப் பணியில் உள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினர் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மாவட்டத்தின் மையப் பகுதியான பாளையங்கோட்டை பேருந்து நிலையைத்திற்கு அருகே அமைந்துள்ளது.

தற்போதைய நிர்வாகம் இக்கேண்டீனை சற்றும் பொருத்தமில்லாத வகையில் சுமார் 8 கி.மீ. தூரமுள்ள சங்கர் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வளாகத்திற்கு மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 05.01.2018 முதல் பொருட்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள இடமாற்றத்தை ஒருவரும் ஏற்க மாட்டார்கள். இது ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் பொருட்களைச் சுமந்து கொண்டு பல பேருந்துகளில் மாறி மாறி ஏறி இறங்குவதிலும் பல சிரமங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை இந்த இடமாற்றத்தைத் தவிர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன்.


நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இடமாற்றம் செய்வதற்கு இடைக்காலத் தடை ஆணை பெற்றுள்ளனர் என்றும், இவ்வழக்கு மீண்டும் நாளை (17.01.2018) விசாரணைக்கு வருகிறது என்றும் இச்சங்கத்தினர் என்னிடம் நேரில் தெரிவித்தனர்.



நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகத்திற்கும் சித்தமாக இருந்து கடமையாற்றிய, கடமையாற்றும் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலம் முழுவதும் சிரமமின்றி பொருட்கள் வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. எனவே, அனைவரும் விரும்புகின்ற வகையில் பாளையங்கோட்டை கேண்டீனை தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்படவும், உடனடியாக பொருட்கள் விநியோகத்தைத் தொடரவும் மத்திய-மாநில அரசுகளும், தென் பிராந்திய இராணுவத் தலைமையகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 16-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, January 15, 2018

ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்!

தலைசிறந்த எழுத்தாளரும் நடுநிலை தவறாத தொலைநோக்கு சமூகப் பார்வையுடன் கருத்துகளைத் தரும் விமர்சகருமான மரியாதைக்குரிய ஞாநி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

‘தீம் தரிகிட’ இதழின் ஆசிரியராக இருந்து அரிய கட்டுரைகளை வழங்கிய ஞாநி அவர்கள், இன்றைய கணினி யுகத்தில் நடுநிலை தவறாது தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் முக்கிய ஏடுகளான கல்கி, ஆனந்த விகடன், குமுதம் இதழ்களிலும் படைப்புகளாகத் தந்தார்.

‘பலூன்’ உள்ளிட்ட நாடகங்களை எழுதினார்.


‘பழைய பேப்பர்’, ‘மறுபடியும்’ ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தீட்டினார். 



தினமணி கதிர் ஏட்டின் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘மனிதன் பதில்கள்’ என்ற தலைப்பில் சுவையான சூடான விடைகளைத் தந்தார். 

இந்தியா டுடே இதழில் ‘கண்டதைச் சொல்லுகிறேன்’ என்ற கட்டுரைகளையும், முதலில் ஆனந்த விகடனிலும் பின்னர் கல்கி இதழிலும் ‘ஓ பக்கங்கள்’ என்ற தலைப்பில் அவர் சமுதாயத்தின் மனச்சாட்சியை உலுக்குகிற விதத்தில், சமூக அரசியல் கல்வி வாழ்வியல் குறித்து எழுதி வந்தது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.


எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை ஏடுகளில் எழுதவும் தொலைக்கhட்சி ஊடக விவாதங்களில் கேள்வியும் பதிலுமாகத் தருவதும் ஞாநி அவர்களின் இயல்பான ஆற்றல் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன்.பல நேரங்களில் மணிக்கணக்கில் உரையாடி இருக்கிறேன். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். 


இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இதழியலுக்கும் தொலைக்காட்சி ஊடகத் துறைக்கும் அரிய சேவை ஆற்ற வேண்டிய அன்புச் சகோதரர் ஞாநி சங்கரன் அவர்களின் மறைவு, பத்திரிகைத் துறைக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாகவே எண்ணி வருந்துகிறேன்.


‘கேணி இலக்கிய சந்திப்பு’ என்ற பெயரில் இலக்கிய நண்பர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து சந்திக்கச் செய்து கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வந்தார்.


ஆண்டுதோறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தனது ‘ஞானபானு பதிப்பக’த்தின் சார்பில் தனி அரங்கு அமைத்து நாள்தோறும் மக்களைச் சந்தித்து அரசியல் குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்டு வந்தார். இம்முறையும் நான்கு நாட்களாகப் புத்தகக் கண்கhட்சியில் வலம் வந்தார். 

நான்கு ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக்குச் சிகிச்சை பெற்று வந்தாலும் நேற்று வரையிலும் தமக்குப் பிடித்தமான புத்தகங்களுடன் சென்னை புத்தகக் கண்கhட்சியில் தனது நண்பர்கள் பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.


அவரது திடீர் மறைவினால் அதிர்ச்சியில் கலங்கி கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை மிகவும் நேசிக்கும் பத்திரிகை ஊடகத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் இன்று 15-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, January 14, 2018

கலிங்கப்பட்டியில் களை கட்டிய பொங்கல்!

வைகோ பிறந்த கிராமமான கலிங்கப்பட்டியில் பொங்கல் நிகழ்வுகள் 14-01-2018 சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அப்போது அவர் செய்தியாளர்களிடத்தில், 

எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து, மகிழ்ந்து வீர விளையாட்டுக்களை விளையாடி, உழுது தமிழர் நாகரீகத்தினுடைய பண்பாட்டின் விழாதான் தை பொங்கல் திருவிழா. நாங்கள் ஆண்தோறும் எங்கள் கிராமத்தில் மிகசிறப்பாக கொண்டாடுகிறோம்.

விளையாட்டு போட்டிகள் நடத்துகிறோம். வயது முதிர்ந்தவர்களில் இருந்து சின்னஞ்சிறு பிள்ளைகள் வரை விளையாட்டு போட்டிகள் நடத்துகிறோம். அதன்பிறகுந் நான் எல்லா தெருக்களுக்கும் செல்கிரேன். அரசியல் பேசுவதில்லை. எல்லா வீடுகளுக்கும் சென்று அவர்கள் வரவேற்பை பெற்று அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறேன். சிறு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்.

ஒற்றுமையாக இருக்கவேண்டும். சமூக ஒற்றுமை வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். காரணம் தமிழ்நாட்டிலே, எங்கள் கிராமத்திலே அத்தனை சாதி மக்களும் இருக்கின்றார்கள். சண்டை சச்சரவு இல்லாத ஒற்றுமை இவ்வளவு காலம் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதைதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தாக சொல்கிறேன். 

எங்கள் ஊரில் இருந்து படித்து ஏராளமான பொறியியலாளர்கள் படித்து வெளிநாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவரவர்கள் முயற்ச்சி செய்து முன்னேறி எங்கு இருந்தாலும் பொங்கலுக்கு தங்கள் ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.

தைபொங்கல் திருவிழாவில் தமிழ்நாட்டுக்கு இதே போல சாதி மத பூசல்கள் இல்லாத, வாழ்வாதாரங்கள் காக்கப்பட்ட தமிழகமாக, இயற்கைகள், சுற்றுசூழல்கள் அழிக்கப்படாத தமிழகமாக, சங்க காலத்தில் எவ்வளவு உண்மையான வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார்களோ, அத்தகைய வாழ்வை மேற்கொள்கிற தமிழ் சமுதாயத்தை காண்கிற தமிழகமாக திகழ வேண்டுமென்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ செய்தியாளர்களிடம் கலிங்கப்பட்டியில் தெரிவித்தார்.

மேள தாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது பொங்கல்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, January 13, 2018

பென்னி குக் குடும்பத்தை வரவேற்ற வைகோ!

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள, தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களுக்கு நீராதரமாக விளங்கும் முல்லை பெரியார் அணை கட்டிய பென்னி குக் குடும்பம் இங்கிலாந்தில் இருந்து 13-01-2018 அன்று மதுரை வந்தது. அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்று செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, January 12, 2018

தேசிய பேரிடர் மாவட்டமாக குமரியை அறிவிக்க மதிமுக போராட்டம்!

சூறாவளி புயல் தாக்கிய குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தக்கலை அருகே புலியூர் குறிச்சியில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு 11-01-2018 அன்று மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

ஒன்றிய மாவட்ட நகர மதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

சில்லரை வணிகத்தில் 100% அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடுக்கு வைகோ கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஜனவரி 10 ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை, ஒற்றை முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் 100 விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின்   நேரடி முதலீட்டுக்கு உரிமம் வழங்குவது என முடிவு செய்து இருக்கின்றது.

ஜனவரி 22 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார். பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் தங்கு தடையின்றி நுழைய இடம் அளித்து விட்டோம் என்று அந்த மாநாட்டில் பிரகடனம் செய்வதற்காகவே, இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

கடந்த 2014 ஆம் ஆண்டில், சில்லரை வணிகத்தில் 100 விழுக்காடு அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய இடம் அளிக்கப்பட்டு இருந்தாலும், 49 விழுக்காட்டுக்கு மேலே முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ஆனால், தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமலேயே 100 விழுக்காடு முதலீடு செய்ய முடியும்.

அயல்நாட்டு நிறுவனங்கள் பொருட்கள் தயாரிப்பின்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களை 30 விழுக்காடு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்ததையும் மத்திய அரசு தற்போது நீக்கி விட்டது. எனவே, அவர்கள் இனி உள்நாட்டுப் பொருட்களைக் கொள்முதல் செய்யத் தேவை இல்லை. வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விற்பனை செய்வதற்குக் கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியப் பெரு நிறுவனங்களும் சிறு வணிகர்களின்  வணிகத்தைத் தட்டிப் பறித்து விட்டன. அதனால், சுமார் ஏழு கோடி சிறு வணிகர்களும், அவர்களைச் சார்ந்த 21 கோடி பேரின் வாழ்வாதாரமும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது.

இந்நிலையில், சில்லரை வர்த்தகத்தில் ஒற்றை வணிக முத்திரைப் பொருட்கள் விற்பனையில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம்  அளிப்பதும்,  மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கடைகள் திறக்கலாம் என்பதும், கோடிக்கணக்கான வணிகர்களைப் பாதிக்கும்.
எனவே மத்திய அரசு ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என 10.01.2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 9, 2018

சட்டத்திற்கு புறம்பாக நியூட்ரினோ திட்டத்தை தொடங்க முயற்ச்சித்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்-வைகோ எச்சரிக்கை!

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்தி வந்தனர். தமிழகம் போராடிப்பெற்ற முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட 12 நீர்நிலைகளுக்கு அருகே இந்தத் திட்டத்தை அமைக்க முயற்சிக்கின்றார்கள். 
மேற்குத் தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ நிறுவனம், " பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலம்" என்று அறிவித்துள்ளது. மாதவ் காட்கில் மற்றும் கஸ்துரிரங்கன் குழுவும், உத்தமபாளையம் தாலுகாவை "பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலம்" என்று அறிவித்துள்ளது.அருகில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருப்பதால் "தேசிய வனவிலங்கு வாரியத்திடம்" அனுமதி வாங்க வேண்டும்.  

இவ்வளவு சூழல் முக்கியத்துவம் சார்ந்த விசயங்கள் உள்ள இடத்தில், பல்வேறு ஆய்வுகளை "திட்ட முன்னெடுப்பாளர்கள்" செய்து இருக்கவேண்டும், 

ஆனால் ஒரு சாதாரணக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி போல, சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை இன்றி, மக்களின் கருத்தைக் கேட்காமல் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அனுமதி வழங்கி இருந்தார்கள்.

எனவே, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வாங்காமல் திட்டப் பணிகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.  

பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் வாங்கப்பட்ட "சுற்றுச்சூழல்" அனுமதியை "தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின்" தென்னக அமர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. 

இந்த நிலையில் கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக. இந்திய அரசின் "தலைமைச் செயலரை" பொறுப்பாக நியமித்து இருப்பதாகச் செய்திகள் வந்தன. 

இந்திய அரசியல் அமைப்பு மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எந்த மாதிரியான திட்டத்தை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின்  அரசின் உரிமை ஆகும். இதைக்  கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலர்களின் கூட்டம் நடைபெற்று அவர்களாகவே முடிவு எடுத்துக் கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள். 

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை " சிறப்புத் திட்டமாக"(one of) பிரிவு "B" திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி,  "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது சட்டத்திற்குப் புறம்பான செயல் ஆகும். சட்டத்தை மதித்துக் கடைபிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது.   

நியூட்ரினோவுக்கு எதிராக மக்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள், இந்த நிலையில் மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் திட்டத்திற்கு அனுமதிவழங்கி பணிகளைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம் போராட்டக் களத்தில் இறங்குவோம்.   

இந்தத் தவறான போக்கைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகின்றேன். மத்திய அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து "திட்ட நிறுவுதல்" அனுமதியைத் தமிழக அரசு வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ 9-1-2018 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, January 8, 2018

ஆளுநர் உரை கவைக்கு உதவாத ஏட்டு சுரைக்காய்-வைகோ!

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆற்றிய உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை. தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ன ஆயிற்று? என்ற விளக்கம் இல்லை.

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழக அரசின் கடன் ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் கோடி என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டு நிதி மற்ற மாநிலங்களைவிட குறைந்திருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது ஏன்?

2011 ஆம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்களின் நிலைப்பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தால் உண்மை நிலை தெளிவாகி இருக்கும். அதே வெற்று அறிவிப்புகள்தான் இப்போதும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது.

காவிரிப் பாசனப் பகுதிகளை நாசமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது அதிமுக அரசின் கையறு நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.

கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை, விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை இல்லாமை குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 ஆகவும் தீர்மானிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருவதை அதிமுக அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர எந்த உத்தரவாதமும் ஆளுநர் உரையில் இல்லை.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சிறு, குறு தொழில்கள் பெரும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறன. இந்நிலையில், ஜப்பான் உதவியுடன் நான்கு தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது வெற்று அறிவிப்பாகவே இருக்கும்.

ஒக்கிப் புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை கடலோர காவல்படை டிசம்பர் 29 ஆம் தேதி நிறுத்திவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். ஆனால், ஆளுநர் உரையில், மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடப்பதாகக் கூறப்பட்டு இருப்பது முரணாக இருக்கிறது. காணாமல் போன மீனவர்கள் குறித்து முழுமையான விபரங்கள் அளிக்கப்படாததும் ஏமாற்றம் தருகிறது.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்தும், மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது பற்றியும் ஏன் குறிப்பிடவில்லை?

படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுத்த முன்வராதது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு மணல் குவாரிகளை மூட வேண்டும், வெளிநாட்டு மணல் இறக்குமதி, செயற்கை மணல் உற்பதிக்கு அனுமதி தர வேண்டும் என்று உத்தரவிட்டதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஆளுநர் உரையில் பதில் இல்லை.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது அதிமுக அரசின் அதிகார ஆணவத்தைக் குறிக்கிறது.

மத்திய அரசிடம் மாநில உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடகு வைத்து வரும் அதிமுக அரசு தயாரித்து, ஆளுநர் சட்டமன்றத்தில் படித்த உரை கவைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிறது என வைகோ 8-1-2018  அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, January 7, 2018

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட தீர்மானம்!

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட தீர்மானம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

டாக்டர் நடேசனார், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், தரவாட் மாதவன் நாயர்  ஆகிய முப்பெரும் தலைவர்கள் கால்கோள் அமைத்து, அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்டு, இலட்சக்கணக்கான தொண்டர்களின் உன்னதமான உழைப்பாலும் அளப்பரிய தியாகத்தாலும் பாதுகாக்கப்பட்டு, டாக்டர் கலைஞர் அவர்களின் சாதனைகளால், தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பல்வேறு சக்திகள் களம் இறங்கி வருகின்றன.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் தொலைநோக்கோடு அறிவித்த மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் வேலையில், மத்திய அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனவே, திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 2

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கம்பங்களுக்குப் புதிய வண்ணம் தீட்டி, கழகக் கொடிகளை ஏற்றுகின்ற வகையில், ஜனவரி 14 ஆம் நாள் முதல் 31 ஆம் தேதி வரை, மாவட்டச் செயலாளர்கள் அதற்குரிய திட்டங்களை வகுத்து, மாநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், பகுதிக் கழகங்கள், பேரூர்க் கழகங்கள் தோறும் கொடி ஏற்று விழாக்களை சிறப்பாக நடத்திடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 3

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் நடைபெறும் என்று தேர்தல்ஆணையம் அறிவித்தது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனைகளில் கிடைத்தது; எனவே தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழல் இல்லை என்று கூறி, தேர்தலை இரத்து செய்வதாக ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தலை, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது.

இந்த முறையும் வாக்காளர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் அள்ளி வீசப்பட்டதை நாடே பார்த்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதைத் தடுக்கவே முடியவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதிநீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 4

கடந்த நவம்பர் 29, 30, 2017 இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய வரலாறு காணாத ஒக்கி புயலால் அம்மாவட்டமே முற்றிலும் உருக்குலைந்துபோனது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்காமல் மத்திய - மாநில அரசுகள் அலட்சியம் காட்டியதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கிக் காணாமல் போனார்கள். பலர் சூறாவளிக்குப் பலியானார்கள்.

காணாமல் போன மீனவர்களைத் தேடுவதிலும் மத்திய - மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. இன்னமும் 623 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று குமரி மாவட்ட ஆட்சியர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. காணாமல் போன மீனவர்கள் பற்றிய முறையான கணக்கெடுப்பு நடத்தி, மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், மீனவர்களைப் பாதுகாக்க இந்திய அரசின் கப்பல் படை நிரந்தரமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் 2569 ஹெக்டேர் ரப்பர் மரங்கள், 2445 ஹெக்டேர் வாழை, 182 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு, 415 ஹெக்டேர் நெல் பயிர், 119 ஹெக்டேர் தென்னை மரங்கள் உள்ளிட்ட அனைத்துத் தோட்டப் பயிர்களும் முழுமையாக அழிந்து, மக்கள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் சாலைகள் பெருமளவில் சேதமுற்றுள்ளன. புயல் தாக்கி 5 வாரங்கள் கழித்துத்தான் மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பி, டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் சேதங்களை மதிப்பீடு செய்துள்ளது.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். ‘அரபிக் கடலில் இந்த நூற்றாண்டில் இல்லாத கொடிய புயல்’ என்று  கூறினார்.

ஆனால் தமிழக முதல்வரோ துளிகூட அக்கறையின்றி மெத்தனமாக இருந்தார். 12 நாள்கள் கழித்தே பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார்.

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு பிரதமரிடம் கோரியுள்ள 13520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 5

மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1590 எனவும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1550 எனவும் அறிவித்தது.

தமிழக அரசு நடப்பு 2017-18 ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையோடு சன்ன ரகத்திற்கு ரூ.70ம், பொதுரகத்திற்கு ரூ.50ம் உயர்த்தி, குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூ.1660 என்றும், பொது ரகம் ரூ.1600 என்றும் நெல் கொள்முதல் விலையைத் தீர்மானித்துள்ளது. இந்த விலை கட்டுபடியாகக் கூடியது அல்ல என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடுமையான கடன் சுமை, இயற்கை இடர்பாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு எஸ்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை ஏற்று, விவசாய விளைபொருள்கள் உற்பத்திச் செலவுடன், மேலும் 50 விழுக்காடு சேர்த்து கொள்முதல் விலை வழங்கினால்தான் கட்டுபடியாகும். எனவே, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம்: 6

தமிழகத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி வரும் நிலையில், நடப்புப் பருவத்திற்கு தமிழக அரசு இன்னமும் கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது ஆகும். நடப்பு கரும்புப் பருவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2550 என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000மாக தீர்மானிக்க வேண்டும் என்றும்; கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியை இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 7

வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்பட்டு வரும் டிராக்டர்களுக்கு இதுவரையில் வரி விதிப்பு இல்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 மட்டுமே செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயத்திற்குப்  பயன்படுத்தப்படும் டிராக்டரை வணிக பிரிவு வாகனமாக மாற்றி இருக்கின்றது. இதனால், வணிக வாகனங்களுக்கு இணையாக டிராக்டருக்கும் சாலை வரியாக ஆண்டுக்கு ரூ.650 விதிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் டிராக்டர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளைப் பாதிக்கும் இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 8

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முத்தலாக் கூறி திருமண விலக்கு பெறுவதைத் தடை செய்யும் சட்ட முன்வடிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கின்றது.

காவிரிப் பிரச்சினை உட்பட உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளைச் செயல்படுத்தாமல் உதாசீனம் செய்தவர்கள், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பதின் நோக்கத்தை நாடு நன்கு அறியும்.

முத்தலாக் குறித்து கடந்த ஆகஸ்டு 22, 2017 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று தனது தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனால், பா.ஜ.க. அரசு, இஸ்லாமிய இயக்கங்களின் கருத்தினை அறிய முற்படாமல், மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 9

உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் அதிமுக அரசு, தொகுதி வரையறை எனும் பெயரால் உள்ளாட்சி அமைப்புகளை சிதைக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

தமிழ்நாடு தொகுதி வரையறைச் சட்டம் 2017 இன் படி, உள்ளாட்சித் தொகுதிகளை வரையறை செய்யும் பணியை மாநில தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தொகுதி வரையறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 2ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் அதனை சரிபார்த்துக் கருத்துக் கூறலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் டிசம்பர் 28 ஆம் தேதி அறிவித்தனர்.

மூன்று நாட்கள் கால அவகாசம் என்பது போதுமானது அல்ல. தற்போது உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யும் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் விருப்பத்திற்கு ஏற்ப வார்டுகளைப் பிரித்தும், சேர்த்தும் வகைப்படுத்தி உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்துக்களைப் பெற ஜனவரி 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 10

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு துணைத் தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர்.

பண்டிகைகளின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளால் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகின்றது. இதனால் இத்தொழில் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றது.

உச்சநீதிமன்றமும் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்று, அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இவ்வாறு தொடர் அச்சுறுத்தல் ஏற்படுவதால், பட்டாசுத் தொழில் முடங்கும் நிலையும், பட்டாசு சார்ந்த 106 துணைத் தொழில்களும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக பட்டாசுத் தொழிலாளர்களும், உற்பத்தி நிறுவனங்களும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 11

தேனி மாவட்டத்தில், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்த நாள் முதல் அப்படி அமையும் ஆய்வுக் கூடம் தேனி மாவட்டத்துக்குப் பெரும் அழிவையும், குறிப்பாக பென்னிக் குயிக் கட்டிய முல்லை பெரியாறு அணையும், கேரளத்தில் உள்ள இடுக்கி அணையும் இடிந்துவிழும் அபாயமும் ஏற்படும். மேலும், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு பாசன நீரையும், குடிதண்ணீரையும் இழக்க வேண்டிய பெரும் விபரீதம் உருவாகும் என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியது.

சுற்றுச் சூழல் பாதுகாவலர் மேதாபட்கர் அம்மையாரை அழைத்து வந்து, மக்களிடைய விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தியது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்திற்கு இடைக்கால தடை ஆணையும் பெற்றார். இந்தப் பின்னணியில் தற்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பூவுலக நண்பர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து, திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்து வருவது மிகவும் கவலை அளிக்கின்றது. நியூட்ரினோ திட்டத்திற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கொடுக்கக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

‘தாயகம்’
தலைமைக் கழகம்
சென்னை - 8
மறுமலர்ச்சி தி.மு.க.,
07.01.2018

Saturday, January 6, 2018

மதிமுக உயர்நிலை குழு கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று 06.01.2017 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கருத்துரை வழங்கினார்.

கழகப் பொருளாளர் அ.கணேசமூர்த்தி, துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் புலவர் சே.செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், டாக்டர் க.சந்திரசேகரன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், வழக்கறிஞர் கு.சின்னப்பா, ஆர்.டி.மாரியப்பன், என்.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, January 5, 2018

வாழ்நாள் உறுப்பினர் விண்ணப்பம் மதிமுக தலைமை நிலையத்தில் கையளிப்பு!

வாழ்நாள் உறுப்பினர் விண்ணப்பம் மதிமுக தலைமை நிலையத்தில் கையளிப்பு!

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக சேர ஏற்கனவே கடந்த டிசம்பர் 2017 ல் விண்ணப்பித்திருந்தார்கள்.

அந்த 28 விண்ணப்ப படிவங்கள் சென்னையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைமை நிலையமான தாயகத்து நிர்வாகிகளிடத்தில் இன்று 5-1-2018 கையளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை மூலம் 35 பேர் வாழ்நாள் உறுப்பினர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது மாவட்ட செயலாளர் சைதை சுப்பிரமணி, கவிஞர் மணிவேந்தன், வைகோ தனிச்செயலர் அருணகிரி, தாயகம் ருத்ரன், ஸ்டாலின் சஹாயா, இணையதள நேரலை அம்மாபேஹ்ட்டை கருணாகரன், மதன், ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் மைக்கேல் செல்வ குமார் ஆகியோர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, January 2, 2018

வரலாறு படைத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் - தின தந்தியில் வைகோ கட்டுரை!

வரலாறு படைத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் - தின தந்தியில் வைகோ கட்டுரை!

தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!


இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, புதிதாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ எனும் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து இருக்கிறது.

இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து தவிடுபொடி ஆக்குவதற்காகவே மோடி அரசு ‘நிதி ஆயோக்’ எனும் சர்வ அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘நிதி ஆயோக்’ பரிந்துரைகள் அனைத்தும் மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைக் கொண்டு வரும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘நிதி ஆயோக்’ தயாரித்த ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவை பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்திருக்கிறது. ‘தேசிய மருத்துவ ஆணையம்’ தொடர்பான சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு வழிகோலுகின்றன.

இந்திய மருத்துவக் கவுன்சில் ஆங்கிலேயே அரசால் 1933 இல் உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னர் 1956 ஆம் ஆண்டு இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்வியை வழங்கும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குதல், கண்காணிப்பது உள்ளிட்டவற்றையும் மருத்துவக் கவுன்சில்தான் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் சட்டமன்றத்தின் மூலம் மாநில மருத்துவக் கவுன்சில்களை ஏற்படுத்தி, அவையும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்களைக் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சில்களைக் கலைத்துவிட்டு, மத்திய அரசின் ஏகபோக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக ‘தேசிய மருத்துவ ஆணைய’த்தை உருவாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்படுவர் என்றும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அமைச்சரவைச் செயலரின் கீழ் வரும் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்றும், இந்தச் சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும், 12 அரசு சாரா உறுப்பினர்களும் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் மருத்துவர்களாக இருக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் நாடு முழுவதும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான மருத்துவர்களுக்கு இந்த ஆணையத்தில் பிரதிநிதித்துவம் இருக்காது.

மருத்துவக் கல்லூரிகளை தரம் மதிப்பிடுதல், மருத்துவப் பயிற்சியாளர்களை பதிவு செய்தல், பொது நுழைவுத் தேர்வு, தகுதிச் சான்றுத் தேர்வு ஆகியவை மருத்துவ ஆணையத்தின் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முதுநிலை கல்வியைத் தொடங்கவும் அனுமதி பெறத்தேவை இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 40 விழுக்காடு இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசு நிர்ணயிக்கும். மற்ற 60 விழுக்காடு இடங்களுக்கான கட்டணத்தைக் கல்லூரிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வரைமுறையின்றி கல்விக் கட்டணம் வசூலிக்க வழி ஏற்படும். வசதி படைத்தவர்களுக்கு மருத்துவப்படிப்பு வாய்க்கும்; ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.

நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண கிராமப் புற ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்துவிட்டது மட்டுமின்றி, மாநிலங்களின் கல்வி உரிமையும் பறிபோய்விட்டது.

தற்போது கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ கொண்டுவர முயற்சிப்பதை அனைத்து மாநிலங்களும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்து வரும் பா.ஜ.க. அரசு, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 2-1-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை