இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, புதிதாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ எனும் அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து இருக்கிறது.
இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து தவிடுபொடி ஆக்குவதற்காகவே மோடி அரசு ‘நிதி ஆயோக்’ எனும் சர்வ அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘நிதி ஆயோக்’ பரிந்துரைகள் அனைத்தும் மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைக் கொண்டு வரும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘நிதி ஆயோக்’ தயாரித்த ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவை பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்திருக்கிறது. ‘தேசிய மருத்துவ ஆணையம்’ தொடர்பான சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு வழிகோலுகின்றன.
இந்திய மருத்துவக் கவுன்சில் ஆங்கிலேயே அரசால் 1933 இல் உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னர் 1956 ஆம் ஆண்டு இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை, மருத்துவர்களை நெறிப்படுத்துதல் போன்றவற்றை கடந்த 60 ஆண்டு காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்வியை வழங்கும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குதல், கண்காணிப்பது உள்ளிட்டவற்றையும் மருத்துவக் கவுன்சில்தான் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் சட்டமன்றத்தின் மூலம் மாநில மருத்துவக் கவுன்சில்களை ஏற்படுத்தி, அவையும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்களைக் கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சில்களைக் கலைத்துவிட்டு, மத்திய அரசின் ஏகபோக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக ‘தேசிய மருத்துவ ஆணைய’த்தை உருவாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்படுவர் என்றும், அதன் உறுப்பினர்கள் அனைவரும் மத்திய அமைச்சரவைச் செயலரின் கீழ் வரும் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்றும், இந்தச் சட்ட முன்வடிவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தில் தேர்வு செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும், 12 அரசு சாரா உறுப்பினர்களும் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் மருத்துவர்களாக இருக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் நாடு முழுவதும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கான மருத்துவர்களுக்கு இந்த ஆணையத்தில் பிரதிநிதித்துவம் இருக்காது.
மருத்துவக் கல்லூரிகளை தரம் மதிப்பிடுதல், மருத்துவப் பயிற்சியாளர்களை பதிவு செய்தல், பொது நுழைவுத் தேர்வு, தகுதிச் சான்றுத் தேர்வு ஆகியவை மருத்துவ ஆணையத்தின் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முதுநிலை கல்வியைத் தொடங்கவும் அனுமதி பெறத்தேவை இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 40 விழுக்காடு இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசு நிர்ணயிக்கும். மற்ற 60 விழுக்காடு இடங்களுக்கான கட்டணத்தைக் கல்லூரிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வரைமுறையின்றி கல்விக் கட்டணம் வசூலிக்க வழி ஏற்படும். வசதி படைத்தவர்களுக்கு மருத்துவப்படிப்பு வாய்க்கும்; ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.
நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண கிராமப் புற ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்துவிட்டது மட்டுமின்றி, மாநிலங்களின் கல்வி உரிமையும் பறிபோய்விட்டது.
தற்போது கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ கொண்டுவர முயற்சிப்பதை அனைத்து மாநிலங்களும் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்து வரும் பா.ஜ.க. அரசு, ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 2-1-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment