காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
பத்து இலட்சம் ஏக்கரில் நடுவை நட்டு, உரம் இட்டு, ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து வளர்த்த நெற்பயிர்கள் பொதிப்பருவத்தில் உள்ளன. இன்னும் குறைந்தது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால்தான் விளைச்சலைக் காண முடியும். இல்லையேல், அறுவடை என்பது கானல் நீராகும்; பயிர்கள் கருகி சாவியாகிப் போகும்.
தற்போது மேட்டூர் அணையில் 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் குடிநீர்த் தேவைக்கு அவசியம் என்ற நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால்தான் நெற்பயிரைக் காப்பாற்ற முடியும். தமிழக அரசு கோரியபடி 15 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும்; அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களும், ஜனவரி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டு உள்ளன.
தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. எனவே, இந்தப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்கும்.
ஜனவரி 28 ஆம் தேதியன்று நான் தஞ்சாவூரில் போராட்டத்தில் பங்கேற்கின்றேன். அறப்போர் நடைபெறுகின்ற மற்ற இடங்களில், ஆங்காங்குள்ள கழகத் தோழர்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்று, அறப்போரை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்றூ 24-01-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment