Tuesday, January 16, 2018

நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் பொருள்கூடத்தை (கேண்டீன்) வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது-வைகோ அறிக்கை!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில் உள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினர் மாதந்தோறும் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி குடும்ப உபயோகத்திற்கான பல்வேறு பொருட்களை வாங்கும் கேண்டீன் இயங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு பகுதி என சுமார் 8,000 குடும்பங்கள் மாதந்தோறும் இப்பொருள்கூடத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்தக் கேண்டீன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லும் முன்னாள் இராணுவத்தினர், வயதான தாய்மார்கள் மற்றும் எல்லைபுறங்களில் தனியாகப் பணியில் உள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினர் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மாவட்டத்தின் மையப் பகுதியான பாளையங்கோட்டை பேருந்து நிலையைத்திற்கு அருகே அமைந்துள்ளது.

தற்போதைய நிர்வாகம் இக்கேண்டீனை சற்றும் பொருத்தமில்லாத வகையில் சுமார் 8 கி.மீ. தூரமுள்ள சங்கர் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வளாகத்திற்கு மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 05.01.2018 முதல் பொருட்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள இடமாற்றத்தை ஒருவரும் ஏற்க மாட்டார்கள். இது ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் பொருட்களைச் சுமந்து கொண்டு பல பேருந்துகளில் மாறி மாறி ஏறி இறங்குவதிலும் பல சிரமங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை இந்த இடமாற்றத்தைத் தவிர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன்.


நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இடமாற்றம் செய்வதற்கு இடைக்காலத் தடை ஆணை பெற்றுள்ளனர் என்றும், இவ்வழக்கு மீண்டும் நாளை (17.01.2018) விசாரணைக்கு வருகிறது என்றும் இச்சங்கத்தினர் என்னிடம் நேரில் தெரிவித்தனர்.



நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகத்திற்கும் சித்தமாக இருந்து கடமையாற்றிய, கடமையாற்றும் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலம் முழுவதும் சிரமமின்றி பொருட்கள் வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. எனவே, அனைவரும் விரும்புகின்ற வகையில் பாளையங்கோட்டை கேண்டீனை தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்படவும், உடனடியாக பொருட்கள் விநியோகத்தைத் தொடரவும் மத்திய-மாநில அரசுகளும், தென் பிராந்திய இராணுவத் தலைமையகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 16-01-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment