Wednesday, February 12, 2020

தத்துவக் கவிஞர் குடியரசு நினைவு நாளில் வைகோ புகழஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று 12.02.2020 காலை தாயகத்தில் கவிஞர் குடியரசு அவர்களின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் *வைகோ எம்பி* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், குடியரசு அவர்களின் மகன் இசைவாணன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை ப.சுப்பிரமணி, தீர்மானக்குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், உள்ளிட்ட கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

வேலைவாய்ப்புகளைப் பெருக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 425
கீழ்காணும் கேள்விகளுக்கு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்புத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த 3 ஆண்டுகளில், நாடு முழுமையும் வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் எத்தனை பேர்? மாநில வாரியாகப் பட்டியல் தருக.
(ஆ) கடந்த 3 ஆண்டுகளில், கிராமப்புற வேலைவாய்ப்பு இழப்பு, மாநில வாரியாகப் பட்டியல் தருக.
(இ) திடீரென வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து, அமைச்சகம் ஆய்வு செய்ததா?
(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம்;
(உ) நகர்ப்புறங்களில் தகுதியான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன?
துறையின் இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் அளித்த விளக்கம் (5.2.2020)
அ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
தொழில் தரவு நிறுவனம் (Labour Bureau), 2016 ஏப்ரல் மாதம், சீரமைக்கப்பட்ட, காலாண்டுக்கான வேலைவாய்ப்புக் கணக்குப் பதிவைத் தொடங்கியது. அடுத்தடுத்த காலாண்டுகளில், வேலைவாய்ப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பதிவு செய்வதே அதன் குறிக்கோள்.
வேளாண்மை சாராத தொழில்துறை பொருளாதாரம் என்பது, 8 பெரிய வணிகப்பகுதிகள் ஆகும்.
பொருள் ஆக்கம், கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மக்கள் நல்வாழ்வு, விடுதிகள் உணவகங்கள் மற்றும் கணினித்துறைகளில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் இடம் பெறுகின்றன.
மேற்கண்ட துறைகள் வாரியாக, 2016 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், தனி அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அதற்குத் தகுதியான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பது, இவ்விரண்டும் அரசின் முன்னுரிமைப் பணிகள் ஆகும்.
மேலும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது. தனியார் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது; முதலீடுகள் மற்றும் பொதுச் செலவினங்களைக் கூட்டுவதற்கான பல்வேறு விரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளின் கீழ், நுண்,சிறு,குறு தொழில் நிறுவனங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன்தயாள் உபாத்யாயா கிராமத் திட்டம் ஆகியவை, ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தீன்தயாள் கிராம வாழ்க்கை வசதிகள் மேம்பாடு சிறப்புத் திட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஆக்குவோம், திறன் இந்தியா, எண்ணியல் இந்தியா ஆகிய திட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கி வருகின்றன. அதற்காக, முத்ரா மற்றும் தொடங்குங்கள் (Start up) ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், தேசிய என்ற புதிய இணையதளத்தை அரசு தொடங்கி இருக்கின்றது. இதன் வழியாக, இந்தியா முழுமையும் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்; திறமைக்கு ஏற்ற பொருத்தமான வேலையைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இந்தத் தளம் ஒரு தகவல் களஞ்சியமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tuesday, February 11, 2020

வேளாண் விளைபொருட்களுக்குத் தரப்படுகின்ற ஆதரவு விலை மற்றும் ஊக்கத் தொகை என்ன? வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 684 (07.02.2020)
கீழ்காணும் கேள்விகளுக்கு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(
அ) அரிசி, கோதுமை, பருப்பு விவசாயத்திற்கு, அரசு ஏதேனும் ஊக்கத்தொகை அறிவித்து இருக்கின்றதா?

(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களையும், கடந்த 4 ஆண்டுகளில் அளித்த ஊக்கத்தொகை விவரங்களையும் தருக.
(இ) ஊக்கத்தொகை குறித்துத் தீர்மானிக்கின்றபோது, விளைவிப்பதற்கான செலவுடன் 50 விழுக்காடு கூடுதலாகச் சேர்த்துத் தர வேண்டும் என சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதா?
(ஈ) அவ்வாறு இருப்பின், மேற்கண்ட ஊக்கத் தொகை அறிவிப்புகளில், அந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா?
வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
22 விளைபொருட்களுக்கு அரசு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்து இருக்கின்றது.
மாநில அரசுகள், நடுவண் அமைச்சகங்கள், அரசுத்துறைகள் அளித்து இருக்கின்ற பரிந்துரைகளின் அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்து, விவசாயச் செலவுகள் மற்றும் விளைபொருட்களின் சந்தை மதிப்பு ஆணையம், (ஊடிஅஅளைளiடிn கடிச ஹபசiஉரடவரசயட ஊடிளவள & ஞசiஉநள) அளித்துள்ள பரிந்துரைகளின்படி, கரும்புக்கு உரிய விலை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
குறைந்த அளவு ஆதரவு விலை பெறுகின்ற விளைபொருட்கள்: அரிசி, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, துவரம் பருப்பு, பயத்தம்பருப்பு, உளுந்து, தோலுடன் கூடிய நிலக்கடலை, சோயா பீன், சூரியகாந்தி, எள், நைஜர் விதைகள், பருத்தி, ஆறு வகை ரபி பயிர்களான கோதுமை, பார்லி, கொள்ளு, மைசூர் பருப்பு, கடுகு, குசம்பு மற்றும் இரண்டு வகை பணப்பயிர்களான சணல் மற்றும் கொப்பரை.
கூடுதலாக, ஒருவகை பீர்க்கை, நார் உரிக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றுக்கு, கடுகு மற்றும் குசம்புக்குக் கொடுக்கப்படுகின்ற விலை தரப்படுகின்றது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தரப்பட்ட ஆதரவு விலை குறித்த பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
இ,ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் (National Commissiona on Farmers), விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, விளைவிக்க ஆன செலவுடன் கூடுதலாக 50 விழுக்காடு தர வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
2018-2019 நிதி நிலை அறிக்கையில், குறைந்த அளவு ஆதரவு விலை என்ற முன் தீர்மானிக்கப்பட்ட கொள்கையை அறிவித்து இருக்கின்றது. அதன்படி, கட்டாயமாக, கரீப் மற்றும் ரபி, பணப்பயிர்களுக்கு, குறைந்த அளவு ஆதரவு விலை 50 விழுக்காடு கூடுதலாகத் தரப்பட்டு இருக்கின்றது.
அந்த நடைமுறை,2019-20 ஆம் ஆண்டிலும் பின்பற்றப்பட்டது.
அதுகுறித்த விவரங்கள், இரண்டாவது அட்டவணையில் தரப்பட்டு இருக்கின்றது.

Monday, February 10, 2020

வளர்ச்சி இல்லை; வீழ்ச்சிதான்! வரலாறைத் திரிக்கும் முயற்சிதான்; வன்மையாக எதிர்க்கின்றேன்! நிதிநிலை அறிக்கை மீது வைகோ உரைத்த கருத்துகள்!

நிதிநிலை அறிக்கை மீது மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (10.02.2020) நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உரைத்த கருத்துகள் வருமாறு:-
நான், பெரியார் பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கின்றேன். தந்தை பெரியாரும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும்தான் இந்த நாட்டில் சமூக நீதி என்ற கருத்தை விதைத்தவர்கள். அந்த சமூக நீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கின்றது. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பது கட்டாயம் அல்ல; இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று கூறி இருக்கின்றது. இதுகுறித்து இந்த அரசு என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள விழைகின்றேன்.
அடுத்து நிதிநிலை அறிக்கை குறித்து என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.
நமது நிதி அமைச்சர் மீது, நான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில், தாமிரபரணி ஆற்றங்கரையில், ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல, நடுவண் அரசின் சார்பில், கீழடியிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தமிழர் நாகரிகம், உலகின் தொன்மையான நாகரிகம் என்பது, தொல்பொருள் மற்றும் அறிவியல் ஆய்வுகளின் வழியாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
உலக அளவில் நிலவுகின்ற வணிகத் தேக்கநிலை, வணிகப்போட்டியில் இந்தியா பின்தங்கி விடக் கூடாது. பொருள்களின் ஆக்கத்தில் மனித உழைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளில், 1991 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன தாராளமயத்தால் ஏற்பட்ட வளர்ச்சியில் இருந்து நாம் பின்தங்கி விடக் கூடாது.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், ஒரு நிதிநிலை அறிக்கையை வரைவது என்பது, எந்த ஒரு நிதி அமைச்சருக்கும் கடினமான பணிதான். அந்த வகையில், நமது நிதி அமைச்சருடைய தோள்களில் மீது பெருஞ்சுமை சுமத்தப்பட்டு இருக்கின்றது.
முந்தைய நிதி அமைச்சர்களிடம் இருந்து உள்வாங்கிக் கொண்டு, நமது நிதி அமைச்சர் வழங்கி இருக்கின்ற இந்த நிதிநிலை அறிக்கையில் அவர் சீர்திருத்த வேண்டிய குறைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மந்த நிலை, விவசாயிகளின் வேதனை, கிராமப்புற மக்களின் துயரம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், பங்குச்சந்தை எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் குறித்து, இந்த நிதிநிலை அறிக்கை, கருத்தில் கொள்ளவில்லை.
அடுத்த ஆண்டுக்கான செலவுகள் குறித்த உங்கள் கணக்கு, குறைந்த மதிப்பீடு ஆகும்; ஆனால், வரவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகம்; நிதிப்பற்றாக்குறை குறித்த விளக்கத்தை ஏற்பதற்கு இல்லை.
இந்த ஆண்டு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் ஆக்கத்தில் 4.6 விழுக்காடு அளவிற்குக் கடன் வாங்கப் போவதாகவும், அது அடுத்த நிதி ஆண்டில் 4.3 விழுக்காடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.
உண்மையில் இதுதான் பற்றாக்குறை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் 3.8 மற்றும்3.5 விழுக்காடு அல்ல.
எதனால் இந்தப் பற்றாக்குறை என்பதுதான் கவலை அளிக்கின்றது.
இந்த ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 2.4 விழுக்காடு; அடுத்த ஆண்டில் 2.7 விழுக்காடு எனக் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். இதன் பொருள், நீங்கள் வாங்குகின்ற கடனில் பெரும்பகுதி, ஆக்கத்திற்கான செலவுகள் அல்ல; முதலீடும் அல்ல.
பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு, 2 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கின்றது. உணவுப் பொருள்கள் மற்றும் உரத்திற்கான மானியத்தை நிறுத்தி விட்டீர்கள்.
தொடரித்துறைத் திட்டங்களில் தமிழகத்திற்கு மிகமிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது; தமிழகம் வஞ்சிக்கப்படுகின்றது.
இரயில்வே துறை நிதிநிலை அறிக்கையையும் பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்தது படு மோசமான நடவடிக்கை ஆகும். முன்பு இரயில்வே துறைக்கு தனியாக வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து வந்தார்கள். அது குறித்து மட்டுமே மூன்று அல்லது நான்கு நாட்கள் விவாதம் நடக்கும். உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பாக இருந்தது. ஆனால் இப்போது யாருமே அதைப் பற்றிப் பேசுவது இல்லை. எனவே இரயில்வே துறைக்கு வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
இன்று, இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் என்ன?
பொருள்களின் ஆக்கம் மற்றும் தொடர்பணிகள், தேவையை விட வெகுவாகக் குறைந்து விட்டது. விவசாயிகளின் வருமானம், உயர்வதற்குப் பதிலாக வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. விவசாயத் தொழிலாளர்களின் ஊதியமும் குறைந்து விட்டது.
இன்று நிலவுகின்ற பொருளாதார மந்த நிலைக்கும், மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும், இந்த அரசு, ஆம்; இந்த அரசு மட்டுமே பொறுப்பு ஆகும்.
பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, ரூ 1,45,000 கோடி அள்ளிக்கொடுத்து இருக்கின்றீர்கள். அதாவது, ஏழைகளின் பணத்தை எடுத்து, செல்வந்தர்களுக்குத் தருகின்றீர்கள். எனவே, ஏழைகள் மேலும் ஏழைகளாகத்தான் ஆவார்கள்; பணக்காரர்களிடம் மேலும் செல்வம் குவியும்.
1991 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன தாராளமயக் கொள்கையின்படி, இறக்குமதிக்கு மாற்று என்பது நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த அனைத்து அரசுகளும், இந்த அரசு உட்பட, 2015 வரை இந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்தன.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்தக் கொள்கை தலைகீழ் ஆகி விட்டது. அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் சுங்க வரி உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் ஆக்குவோம் (Make in India) என்ற திட்டம், பெருந்தோல்வி அடைந்து விட்டது.
அந்தத் திட்டத்தால் விளைந்த நன்மைகளை, இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டும். அதனால், ஏற்றுமதி பெருகி இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால், அது எந்த அளவிற்கு அயல்நாட்டுச் செலாவணியை ஈட்டித் தந்தது? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து விட்டீர்கள்.
உணவு மற்றும் உரத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து விட்டீர்கள். எனவே, இனி நீங்கள் உழவர்களிடம் இருந்து விளைபொருட்களைக் குறைந்த அளவு ஆதரவு விலையில், குறைந்த அளவே கொள்முதல் செய்வீர்கள்;
காரணம், அவர்களிடம் இருந்து பறிக்கின்ற நிதியைத்தான், நீங்கள் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றீர்கள்.
2022 ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று உறுதி அளித்து இருக்கின்றீர்கள். அதற்கு, வேளாண் துறை 15 விழுக்காடு வளர்ச்சியைக் காண வேண்டும்; ஆனால், இப்போது 2 அல்லது 3 மடங்கு வளர்ச்சிதான் இருக்கின்றது.
அதேபோல, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவதற்கு, ஆண்டுதோறும் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி காண வேண்டும்; ஆனால், இப்போது, 5 விழுக்காடு வளர்ச்சிதான் இருக்கின்றது.
இந்த ஆண்டு, குறைந்தது 5 விழுக்காடு வளர்ச்சி பெறும் என்பது உங்கள் கணிப்பு.
மேற்கண்ட இரண்டு குறிக்கோள்களும் அடைய இயலாதவை.
ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், எல்ஐசி நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதாக அறிவித்து இருக்கின்றீர்கள். பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்போகின்றீர்கள்.
எல்ஐசி பங்குகளை விலக்குவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். காரணம், அது மிகப்பெரிய ஆதாயத்தை ஈட்டித் தருகின்றது. அந்தப் பணம், சமூக வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
கஸ்தூரிரங்கன் குழு வகுத்த அளித்த புதிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்வது என்பது, இந்தி, சமஸ்கிருதத்தைப் புகுத்த வேண்டும் என்ற இந்துத்துவக் கொள்கையைத் திணிப்பதே ஆகும்.
பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த உங்கள் கொள்கை என்ன?
முதலில், அதற்கான கொள்கையை வகுத்திடுங்கள். எந்தெந்தப் பொதுத்துறை நிறுவனங்களை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்? எவற்றையெல்லாம் விற்கப் போகின்றீர்கள்?
இதை வரையறுத்து நீங்கள் அறிவிக்காதவரையிலும், நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.
நிதிநிலை அறிக்கை குறித்து ஆராய, பிரதமர் கூட்டிய கூட்டத்தில், நிதி அமைச்சர் பங்கேற்றாரா? இல்லை. அவரை அழைக்கவே இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல, 13 முறை நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களுக்கும் அவரை அழைக்கவில்லை. இது, தொழில் வணிகத் துறையினருக்குத் தவறான அறிகுறியைக் காட்டாதா? அரசில் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நிதி அமைச்சரை அவமதிக்கின்ற செயல் ஆகாதா?
சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை.
ஈராஸ் பாதிரியாரும், பல்வேறு வரலாற்று ஆய்வு அறிஞர்களும், மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பதை அறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த அரசு, வரலாறையும், பண்பாடு நாகரிகத்தையும் திரிக்க முயற்சிக்கின்றது.
இவ்வாறு வைகோ அவர்கள் கருத்து உரைத்தார்கள்.

பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பு ஆணையைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை!

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கான கருத்து உரு 2011 இல் வெளியிடப்பட்டபோது, அதற்கு முதன் முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் நினைவில் வாழும் இயற்கை அறிஞர் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்கள் ஆவார்.
அவரைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதன் முதலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நான் அறிக்கை வெளியிட்டேன்.
2012 ஏப்ரல் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒகேனேக்கலில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், விவசாயிகளைத் திரட்டி என் தலைமையில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முறியடிக்கவும், காவிரி படுகை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினோம்.
2014 நவம்பர் 22 இல் டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சாலை மறியல், இரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தஞ்சையில், என் தலைமையில் இரயில் மறியில் போராட்டம் நடைபெற்றது.
காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் நாசகாரத் திட்டங்களின் பேரழிவு ஆபத்துகளை எடுத்து உரைத்து விவசாயிகள், பொதுமக்களிடையே கருத்துப் பரவலுக்காக, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 2014 டிசம்பர் 14 தொடங்கி, ஒரு மாத காலம் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன். அதனால், பொதுமக்களும், விவசாயிகளும் போராடத் தலைப்பட்டவுடன், மீத்தேன் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்ரேஷன் நிறுவனம், தஞ்சையில் இருந்த தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியது.
காவிரிப் படுகை மாவட்டங்களில் நான் கட்சிக்கொடி கட்டாமல் மீத்தேன் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டபோது, அரசியல் கட்சிகளின் எல்லைக்கோடுகளைத் தாண்டி அனைவரும் ஆதரவு அளித்தனர்.
மீத்தேன் நாசகாரத் திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வாகனப் பரப்புரைப் பயணத்தில் நான் எடுத்து உரைத்தேன். பின்னர் இந்தக் கோரிக்கை விவசாயிகள், பொதுமக்களின் குரலாக ஒலித்தது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தின் திட்டத்தை முறியடிக்கவும், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலை மணலாக்கும் நாசகார மீத்தேன் திட்டத்தில் இருந்து சோழ மண்டலத்தைக் காப்பாற்றவும் 2015 ஜனவரி 20 ஆம் நாள், தஞ்சையில் என் தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் உருவானது. அதில் ஆளும் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூகநல இயக்கங்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்று, தஞ்சை பிரகடனம் தீர்மானமாக வெளியிடப்பட்டது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்கவும், மீத்தேன் நாசகாரத் திட்டத்தை விரட்டவும், 2015 பிப்ரவரி 18 ஆம் தேதி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கடலூர் ஆகிய காவிரியால் பயன்பெறும் 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தஞ்சையில் நடந்த முற்றுகைப் போரில் நான் பங்கேற்றேன்.
பின்னர் இதே கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் மத்திய அரசின் சுங்க அலுவலகம் முற்றுகைப் போராட்டம், 2015 மார்ச் 11 ஆம் நாள் எனது தலைமையில் எழுச்சியுடன் நடந்தது.
மீத்தேன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், 2015 ஏப்ரல் 7ஆம் தேதி தஞ்சையில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அதில் நானும் கைகோர்த்து மீத்தேன் திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினேன்.
தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களால் ஏற்படும் சூழலியல் கேடுகள் குறித்து, 2017 ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் வாதாடி வருகின்றேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அண்ணா பிறந்த நாள் விழா, 2012 கரூர், 2013 விருதுநகர், 2014 பூவிருந்தவல்லி, 2015 பல்லடம், 2016 திருச்சி, 2017 தஞ்சை, 2018 ஈரோடு, 2019 சென்னை என அனைத்து மாநாடுகளிலும் ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவகாற்று உள்ளிட்ட அழிவுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது; காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 2019 ஆண்டு ஜூன் 23 இல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். மரக்காணத்தில் நடந்த மனிதச் சங்கிலியில் நானும் தோழமைக் கட்சிகளின் முன்னணியினருடன் பங்கேற்றேன்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் மக்களின் இடையறாத போராட்டங்களால் காவிரிப் படுகை மாவட்டங்களில் மக்களின் பேரெழுச்சி பன்மடங்கு பெருகியது.
தமிழக மக்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று ஓ.என்.ஜி.சி., மற்றும் வேதாந்தா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது. அதுமட்டும் அன்றி, இத்திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவை இல்லை; சுற்றுச் சூழல் அனுமதியும் பெற வேண்டியது இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது.
கடந்த 2019 டிசம்பர் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் நாள், குடியரசுத் தலைவர் உரை மீதான கருத்துப் பரிமாற்றங்களின் போது,
“தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள்;
காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள்;
மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும், 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு உரிமம் அளித்து இருக்கின்றீர்கள்;
மீத்தேன், சேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, நிலத்தை உடைத்துத் துளைத்துப் பிளக்கின்றீர்கள். (Hydro Fracturing) இது காவிரி பாசனப் படுகையை அழித்து விடும். இத்தகைய முறை, அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலும் தடை செய்து இருக்கின்றார்கள்.
வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, ஹைட்ரோ கார்பான் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை இல்லை; மக்களிடம் கருத்துக் கேட்கவும் மாட்டோம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து இருக்கின்றார். இது தான்தோன்றித்தனமானது.
மற்றொரு புறத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாக அறிவித்து இருக்கின்றது. அதற்காக, 5900 கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கி இருக்கின்றார்கள்.மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், அதன்பிறகு மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது” எனத் தெரிவித்தேன்.
காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலம் ஆக்குவோம் என அறிவித்துள்ள முதல்வர்தான் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று இருந்தபோது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருக்கின்றார்.
எடப்பாடி அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணை (Notification)யில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region -PCPIRs) அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய பா.ஜக. அரசு தூக்கி எறிந்தது போல முதல்வரின் இந்த அறிவிப்பும் ஆகிவிடக் கூடாது.
எனவே, தமிழகச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் அன்றி, அதை செயல்படுத்திக் காட்டுவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும்.
காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கறை கொண்டு இருந்தால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு 2017 ஜூலை 19 இல் வெளியிட்ட அரசின் குறிப்பு ஆணையைத் (எண் 29) திரும்பப் பெற வேண்டும்.

Sunday, February 9, 2020

கழிப்பு அறைக் கிடங்குகள், கழிவுநீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழிப்பு அறைக் கிடங்குகள், கழிவு நீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 08.02.2020 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு:-
கீழ்க்காணும் கேள்விகளுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த மூன்று ஆண்டுகளில் கழிப்பு அறைக் கிடங்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் பணிகளின் போது இந்தியா முழுமையும், மாநில வாரியாக எத்தனை பேர் இறந்தனர்?
(ஆ) துப்புரவுப் பணிகளில் மனிதர்களுக்குப் பதிலாக, அதற்கு உரிய கருவிகளைக் கொண்டு செய்வற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
(இ) துப்புரவுக் கருவிகளை நகராட்சிகளுக்கு வழங்கும் திட்டம் ஏதும் அரசின் கவனத்தில் இருக்கின்றதா?
துணையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள விளக்கம்
(அ) மாநில வாரியாக இறந்தவர்கள் பட்டியல்
மாநிலம் 2016 2017 2018 2019 (நவம்பர் வரை) மொத்தம்
ஆந்திரா 3 2 9 2 16
பீகார் 0 6 6 0 12
சதீஸ்கர் 0 0 1 0 1
சண்டிகர் 0 3 0 0 3
தில்லி 1 13 10 6 30
கோவா 2 0 0 0 2
குஜராத் 7 7 2 14 30
ஹரியானா 0 11 6 14 31
கேரளா 2 1 0 0 3
கர்நாடகா 9 4 1 3 17
மத்தியப்பிரதேசம் 2 0 0 0 2
மராட்டியம் 4 4 7 12 27
பஞ்சாப் 2 4 2 4 12
இராஜஸ்தான் 5 6 2 4 17
தமிழ்நாடு 10 7 9 14 40
திரிபுரா 2 0 0 0 2
தெலுங்கானா 0 0 2 0 2
உத்தரப்பிரதேசம் 1 8 9 9 27
மேற்கு வங்கம் 0 7 0 2 9
மொத்தம் 282

ஆ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்
துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (National Safal Karmacharis Finance and Development Corporation-NSKFDC) அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்ததாரர்களுக்கு, கழிப்பு அறைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து வருகின்றது.
2018-19 ஆம் ஆண்டில் அவ்விதம் 458 பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
மேலும் இந்நிறுவனம், மின் துப்பரவுக் கருவிகளை வாக்குவதற்காக ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா 50 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்குகின்றது.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகிய இரு துறைகளும் இணைந்து 19.08.2019 அன்று அனைந்து இந்திய அளவில் ஒரு பயிற்சி அரங்கை நடத்தியது. அதில், கழிப்பு அறைக் கிடங்குகள் துப்புரவுப் பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். அதன் ஒரு பகுதியாக புதிதாக அறிமுகம் ஆகி உள்ள துப்புரவுக் கருவிகளின் கண்காட்சியும் இடம் பெற்றது. அதேபோல, 16.12.2019 அன்று, மண்டல அளவில், ஹைதராபாத் நகரில் ஒரு பயிற்சி அரங்கம் நடத்தப்பட்டது.
துப்புரவுப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைகோ அவர்களின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Saturday, February 8, 2020

இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தைக் குறைத்திடுங்கள் நாடாளுமன்றத்தில் வைகோ வேண்டுகோள்: அமைச்சர் விளக்கம்!

நாடாளுமன்றத்தில் நேற்று (7.2.2020) அன்று மாலையில் நடைபெற்ற விவாதத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடரித்துறை அமைச்சர் பியுஸ் கோயல் அவர்கள் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
வைகோ: அவைத்துணைத்தலைவர் அவர்களே, புத்தாண்டின் தொடக்க நாளில், ரயில் கட்டணங்களை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிவிப்பு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. குளிர்பதனம் அல்லாத சாதாரணத் தொடரிகளில், அனைத்து வகுப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. தொடரித்துறையைப் புதுப்பிப்பதற்கும், புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கும் பணம் தேவைப்படுவதாக அமைச்சர் சொல்கின்றார்.
அவைத்துணைத்தலைவர்: வைகோ அவர்களே, இது கேள்வி நேரம். நீங்கள் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கின்றீர்கள். உங்களுடைய துணைக்கேள்விகளைக் கேளுங்கள்.
வைகோ: நான் கேள்விகளுக்கு வருகின்றேன்.
தில்லியில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லுகின்ற தமிழ்நாடு, கிராண்ட் ட்ரங்க், கேரளா, கர்நாடகா விரைவுத் தொடரிகளில் என்ன வகையான பெட்டிகளை இணைக்கின்றீர்கள்?
அவைத்துணைத்தலைவர்: சுருக்கமாகக் கேளுங்கள்.
வைகோ: புறநகர்த் தொடரிகளின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதுபோல, குளிர்பதனம் அல்லாத இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான கட்டண உயர்வையும் விலக்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். அன்றாடக் கூலிகள், விவசாயிகள், கைத்தறித் தொழிலாளர்கள் போன்ற உழைப்பாளர்கள், இரண்டாம் வகுப்பைப் பயன்படுத்துகின்றார்கள். அதற்கான கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளுமா என்பதை மாண்புமிகு அமைச்சரிடம் இருந்து அறிய விரும்புகின்றேன்.
தொடரித்துறை அமைச்சர் பியுஸ் கோயல்: அவை துணைத்தலைவர் அவர்களே, இந்திய ரயில்வே துறை, பயணிகளுக்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றது. அதற்காக, இந்த ஆண்டு மட்டும் 55000 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே, இந்தக் கட்டண உயர்வு என்பது, கடலில் ஒரு துளியைப்போல மிகச்சிறிய உயர்வுதான். தேவையான நிதியைத் திரட்டுவதில், தொடரித்துறை முழுமையாகத் தன்னிறைவு அடைய வேண்டும். இல்லை என்றால், பயணிகளுக்குத் தேவையான புதிய வசதிகள் எதையும் செய்து தர முடியாமல் போய்விடும்.
வைகோ: மின் பயணச் சீட்டு (e-ticketing) வழங்குவதில் நடைபெறுகின்ற முறைகேடுகளால், தொடரித்துறைக்கு மாதந்தோறும் 10 முதல் 15 கோடி இழப்பு ஏற்படுவது, அண்மையில் தெரிய வந்துள்ளது. ஐஆர்சிடிசி கணினி முன்பதிவில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளால், பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் முறைகேடுகளைத் தடுக்கின்ற வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா?
பியுஸ் கோயல்: உறுப்பினர் வைகோ ஒரு அருமையான கேள்வி கேட்டு இருக்கின்றார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. ஐஆர்சிடிசி மற்றும் சிஆர்ஐஎஸ் ஆகியவை எங்களுடைய கைகளைப் போன்றது. எனவே, அவற்றிற்கான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகின்றோம்.
ஆனால், இதில் இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டும்.
உலகம் முழுமையுமே, கணினிகளில் ஊடுருவுகின்றவர்கள், தொழில்நுட்பத்தில் ஒரு படி முன்னேதான் இருக்கின்றார்கள். நீங்கள் ஒரு நெருப்பு வளையத்தை ஏற்படுத்தினால், அதற்கு எதிராக அவர்கள் மற்றொரு வகையில் ஊடுருவுகின்றார்கள். ஒரு தடையை நீங்கள் உடைத்தால், அவர்கள் மற்றொரு தடையை ஏற்படுத்துகின்றார்கள். அந்த அளவுக்கு, இன்றைய இளைஞர்கள்


கண்டுபிடிப்புகளில் முன்னேறி இருக்கின்றார்கள். ஆனால், அவை அனைத்தையும் நாங்கள் கடந்து வரும் என்று நம்புகிறேன். அதை இந்த அவைக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Friday, February 7, 2020

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண். 61
கீழ்காணும் கேள்விகளுக்கு, சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சர் (Environment, Forest & Climate Change Minister) விளக்கம் தருவாரா?
(அ) வரைமுறை இல்லாமல் மரங்களை வெட்டியதாலும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்ற தொழிற்கூடங்களை நிறுவியதாலும், காடுகளை அழித்ததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழல் கெட்டு இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய, அறிஞர்கள் குழு ஏதும் அமைக்கப்பட்டு இருக்கின்றதா?
(இ) அத்தகைய அறிக்கை ஏதேனும் பெறப்பட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதன் பரிந்துரைகள் என்ன?
(ஈ) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன?
துறையின் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ அளித்துள்ள விளக்கம்
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கான விளக்கம்:
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் அறிஞர்கள் குழுவை (Western Ghats Ecology Expert Panel-WGEEP), 4.3.2010 அன்று அமைத்தது.
அந்தக் குழுவினர், 31.8.2011 அன்று, தங்களுடைய ஆய்வு அறிக்கையை வழங்கினர்.
அவர்களுடைய பரிந்துரைகளின்படி, முனைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையில், உயர்நிலை செயல் ஆக்கக் குழு (High Level Working Group-HLWG) ஒன்றை, 17.8.2012 அன்று, அரசு அமைத்தது. அவர்கள், மாநில அரசுகள், நடுவண் அமைச்சகங்கள் மற்றும் தொடர்பு உடையவர்களிடம் கருத்துகளைப் பெற்று, நேர்மையோடும், நடுநிலைமையோடும் செயல்பட்டு, பரிந்துரை வழங்க வழி ஏற்பட்டது.
(இ) அந்த உயர்நிலை செயல் ஆக்கக் குழு, 15.4.2013 அன்று அறிக்கை வழங்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் மாநிலங்கள் வரையிலும், 59,940 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்டது. அதற்கு உள்ளே, அடர்த்தியான காடுகளும், அரியவகை செடி கொடிகளும் இருக்கின்றன; இடைவெளியுடன் கூடிய சிறிய காடுகள், குறைந்த அளவில் மக்கள் வாழும் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உலகப் பண்பாட்டு மையங்களும் இருக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கைச் சூழலைக் கெடுக்கின்ற எந்தவிதமான அழிவுப் பணிகளுக்கும் அரசு ஒப்புதல் தரக் கூடாது.
(ஈ) அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி,1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 13.11.2013 அன்று, அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சுற்றுச்சுசூழலைக் கெடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது.
மேலும், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கின்ற 56,825 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை, மிகவும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியாக, 10.03.2014 அன்று அறிவிக்கை வெளியிட்டது.
அதன்படி, அந்தப் பகுதியில் அழிவுப் பணிகள் எதையும் மேற்கொள்ள இயலாத அளவிற்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு, தொடர்பு உடையவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக, அந்த அறிவிக்கை, 04.09.2015, 27.02.2017 மற்றும் 03.10.2018 ஆகிய நாள்களில் மறுவெளியீடு செய்யப்பட்டது.

Thursday, February 6, 2020

வைகோ ஒரு உணர்ச்சிவயப்பட்ட மனிதர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நிறைவு உரைஆற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தலைவர் வைகோ அவர்கள் பேச்சைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தார்.
இன்று மாநிலங்கள்அவையில் உரைஆற்றிய பிரதமர் மோடி
3 உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

தலைவர் வைகோ பெயரை மட்டும் மூன்று முறை சொன்னார்.
Vaiko is an emotional man.
வைகோ ஒரு உணர்ச்சிவயப்பட்ட மனிதர் என்றார்.

தாய்லாந்து நாட்டில் இறந்த இளைஞரின் உடல் ஓரிரு நாள்களில் கரூர் வந்து சேரும் வைகோவுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

கரூர் மாவட்டம் கருப்பூர் மாயனூர் சங்கரன்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் நடராஜன், ஒரு பொறியாளர். 2017 ஆம் ஆண்டு, தாய்லாந்து நாட்டில் வேலைக்குச் சென்றார். 2018 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.
இது தொடர்பாக கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கபினி சிதம்பரம், ம.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் ஆகியோர், மறுமலர்ச்சி தி.மு,க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், வெளிஉறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மின்அஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டார். அமைச்சகத்தில் இருந்து தாய்லாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டனர்.
அதற்கு விளக்கம் அளித்து, பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனுப்பி உள்ள தகவல்:
இறந்தவருடைய குடும்பத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஏசியா ஒன் என்ற பொருள் போக்குவரத்துத் துறையினர், அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கான செலவுகளைக் குடும்பத்தினர் ஏற்க இயலாத நிலையைக் கருதி, இந்திய சமூக நல நிதியில் இருந்து ஈடுகட்ட, தூதர் ஒப்புதல் தந்துள்ளார். அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உடல் சென்னைக்கு வந்து சேரும். அங்கிருந்து, கரூருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தத் தகவலை வெளிஉறவு அமைச்சர் வைகோ அவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

குடியரசு நாள் அணிவகுப்பில், சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 36.
வைகோ: கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) 2020 ஜனவரி 26 குடியரசு நாள் அணிவகுப்பில், சில மாநிலங்களின் ஊர்திகளுக்கு இடம் மறுக்கப்பட்டதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதற்கான காரணங்கள், விளக்கம் தருக.
(இ) எந்த அடிப்படையில், ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றன?
(ஈ) கடந்த ஐந்து ஆண்டுகளில், இடம் மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களைத் தருக.
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்த விளக்கம்.
அ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கு ஏற்கின்ற ஊர்திகள் தேர்வு குறித்து, வழிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டு இருக்கின்றன.
அனைத்து மாநில அரசுகள், நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், நடுவண் அமைச்சரகங்கள், துறைகளின் சார்பில், பங்கு ஏற்க இருக்கின்ற ஊர்திகள் குறித்து விண்ணப்பம் பெறப்படுகின்றது.
ஊர்திகளைத் தேர்வு செய்ய, கலை, பண்பாடு, ஓவியம், சிற்பம், இசை, கட்டுமானம், நடனம் ஆகிய துறைகளில் தேர்ந்த அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஊர்திகள் வெளிப்படுத்தும் கருத்து, வடிவ அமைப்பு, கலை வேலைப்பாடுகள் குறித்து, அறிஞர்கள் குழு ஆய்வு செய்கின்றது. பங்கு ஏற்கத் தகுதியான ஊர்திகளைத் தேர்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை அனுப்புகின்றது. பேரணியின் நேரம் கருதி, அதற்கு ஏற்ற வகையில் ஊர்திகளை, அறிஞர்கள் குழு தேர்வு செய்கின்றது.
இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், மறுக்கப்பட்ட ஊர்திகள் குறித்த விவரங்களைத் தரவில்லை.

Wednesday, February 5, 2020

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்கள் அவையில் வைகோ ஆற்றிய உரை!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (5.2.2020) மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை வருமாறு:-
“குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தில், கருத்துகளைத் தெரிவிப்பதற்காகக் கிடைத்த வாய்ப்பிற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதிர்ச்சி தரத்தக்க வெறுக்கத்தக்க ஒரு கருத்து, 16ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் எழுந்தது.
நிக்கோலோ மாக்கியவெல்லி எழுதிய இளவரசன் என்ற நூலில், மூன்று கட்டளைகளை வகுத்து இருந்தார்.
1. முடிவுகள், வழிமுறைகளை நியாயப்படுத்தி விடுகின்றன.
2. தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, எந்த விதிகளும் இல்லை.
3. வலிமையே சரி; வலுத்தது வாழும்.

இந்தக் கருத்துக்கள் இத்தாலியில் பாசிஸ்டுகளுக்கும், ஜெர்மனியில் நாஜிகளுக்கும் வழிகாட்டும் வேத புத்தகங்கள் ஆயின.
ஆனால், இந்த அழிவுக் கொள்கைகளுக்கு நேர்மாறாக, தமிழ்மறை தந்த வான்புகழ் வள்ளுவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார்;
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
அதாவது, உன்னைப் பெற்ற தாய் பசியோடு இருந்தாலும், அவருக்கு உணவு தருவதற்காக, முன்னோர்கள் சான்றோர்கள் பழிக்கின்ற, அறத்திற்குப் புறம்பான எந்தச் செயலையும் செய்யாதே என்பது இதன் பொருள்.
ஆனால் மிகவும் கொடூரமான அதிர்ச்சி என்னவென்றால், மாக்கியவல்லி எழுதிய இளவரசன் என்ற அந்தப் புத்தகம்தான், இன்று இந்த அரசாங்கத்திற்கு வேதப் புத்தகமாக ஆகி இருக்கின்றது.
கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரை, பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டு இருக்கின்ற மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுமையும் முஸ்லிம்களுக்கு எதிராக, கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. அவர்களுடைய உள்ளம் கொதிக்கின்றது. இனி தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள்.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிராக, தான்தோன்றித்தனமாக, அரசு அமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியதும், 35 ஏ பிரிவைத் திருத்தி இருக்கின்றீர்கள்.
காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்த, மாற்ற முடியாத உறுதிமொழி, ஆயிரம் அடி ஆழத்திற்குள் புதைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆறு மாதங்களாக, எந்தவிதக் காரணமும் இன்றி, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர்கள், டாக்டர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றீர்கள்.
2019 ஆகஸ்ட் ஐந்தாம் நாள், இந்திய வரலாற்றிலேயே கருப்பு நாள். அது, இந்துத்துவ சக்திகளால் நன்கு திட்டம் வகுத்து மேற்கொள்ளப்பட்ட கூட்டுச்சதி.
மக்களுடைய மனங்களில் வெறுப்பை விதைத்து இருக்கின்றீர்கள்; கோபக்கனலை மூட்டி இருக்கின்றீர்கள்; இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கை இன்மையை விதைத்து இருக்கின்றீர்கள்; குறிப்பாக மாணவர்களை, அரசு அமைப்பின் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்து இருக்கின்றீர்கள்.
குடி உரிமை திருத்தச் சட்டத்தில், ரோகிங்யா முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள், குறிப்பாக, இலங்கையின் சிங்கள இனவெறி அரசால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்த ஈழத்தமிழ் அகதிகளைச் சேர்க்காமல் தண்டித்து இருக்கின்றீர்கள்.
நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை ஏற்க முடியாது என 11 மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து விட்டன. கேரளா, பஞ்சாப், இராஜஸ்தான்,மேற்கு வங்கம்ஆகிய 4 மாநிலச் சட்டமன்றங்கள் ஏற்க மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.
இந்திய விடுதலைக்குப் பிறகு, நடுவண் அரசுக்கு எதிராக இத்தனை மாநிலங்கள் அணிவகுத்து இருப்பது, இதுவே முதன்முறை.
சீனப்பெருஞ்சுவர் போல, கேரள மாநிலத்தில், முதன்முறையாக, 75 இலட்சம் மக்கள், கைகளைக் கோர்த்து நின்று மனிதச் சங்கிலியாக அணிவகுத்து இருக்கின்றார்கள். குடிஉரிமை திருத்தச்சட்டம், 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்து நின்றார்கள்.
தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நடத்திய பேரணிகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அடுத்து, ஒரு கோடி கையெழுத்துகளைப் பெறுகின்ற இயக்கம் நடத்தி வருகின்றோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நானும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு இடங்களில் கலந்துகொண்டோம்.
குடி உரிமை திருத்தச் சட்டம், 370 ஆவது பிரிவு நீக்கத்தை எதிர்த்து, உலக நாடுகள், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் மன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பி இருக்கின்றன.
இந்த அரசு, தமிழர்களுக்கு எதிரான அரசு என நான் குற்றம் சாட்டுகின்றேன். நமது பிரதமருக்கு திடீரென தமிழ் இலக்கியங்கள் மேல் காதல் ஏற்பட்டு இருக்கிறது திருக்குறளில் இருந்தும், அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டுவதால் மட்டுமே, தமிழர்களை ஏமாற்றி விட முடியாது.
இலங்கையின் சிங்கள இனவெறி அரசால், 1.5 இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகத்தை, தங்களுடைய இரண்டாவது தாயகமாகக் கருதி இங்கே வந்து இருக்கின்றார்கள். ஆனால், குடி உரிமை திருத்தச் சட்டத்தில் அவர்களைப் புறக்கணித்து விட்டீர்கள். இன்றைக்கும்கூட, சிங்கள இனவெறி அரசோடு கொஞ்சிக் குலவிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
இப்பொழுது நாடாளுமன்றத்துக்கு வருகின்ற வழியில் நான் பார்த்தேன், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன்பு இலங்கை தேசியக் கொடிகள் பறக்கின்றன. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொடியவன் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வந்திருக்கின்றார்.
இனப்படுகொலை நடைபெற்ற காலங்களில், இலங்கையின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த கோத்தபாய இராஜபக்சே, இன்று அந்த நாட்டின் குடிஅரசுத் தலைவர் ஆகி இருக்கின்றார்.
அந்தக் கொலைகாரனை, முதல் பயணமாக, இந்தியாவுக்கு அழைத்து வருகின்றீர்கள். சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றீர்கள். இது தமிழர்களுக்கு எதிரான வஞ்சகம்.
காணாமல் போன 20000 தமிழர்கள் இறந்து விட்டார்கள் என்று, கோத்தபாய இராஜபக்சே, ஐ.நா. அதிகாரியிடம் கூறி இருக்கின்றார்.
எவ்வளவு திமிர்? எத்தகைய ஆணவம்?
ஆனால், நீங்கள் இலங்கையின் முப்படைகளை வலுப்படுத்துவதற்காக, 360 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள்.
இன்று இலங்கையில் தமிழர்கள் மூன்றாந்தரக் குடிமக்களாக, அடிமைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.
தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.
காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள். மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும், 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு உரிமம் அளித்து இருக்கின்றீர்கள். மீத்தேன், சேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, நிலத்தை உடைத்துத் துளைத்துப் பிளக்கின்றீர்கள். (Hydro Fracturing) இது காவிரி பாசனப் படுகையை அழித்து விடும். இத்தகைய முறை, அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலும் தடை செய்து இருக்கின்றார்கள்.
வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, ஹைட்ரோ கார்பான் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை இல்லை; மக்களிடம் கருத்துக் கேட்கவும் மாட்டோம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து இருக்கின்றார். இது தான்தோன்றித்தனமானது.
மற்றொரு புறத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாக அறிவித்து இருக்கின்றது. அதற்காக, 5900 கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கி இருக்கின்றார்கள்.
மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், அதன்பிறகு மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது.
இந்தி, சமற்கிருத மொழிகளை இந்தியா முழுமையும் திணிப்பதற்காக வஞ்சகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றீர்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? இந்தி மட்டுமே உள்ள இந்தியா வேண்டுமா?
இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது. பல்வேறு சமயங்கள், நூற்றுக்கணக்கான மொழிகள், மாறுபட்டு பண்பாடு, பழக்கவழங்கங்கள் நிலவுகின்றன.
அசோகர் காலம் தொடங்கி அவுரங்கசீப் காலம் வரையிலும், இந்தியா என்ற நாடு ஒருபோதும் இருந்தது இல்லை என்பதை, இந்த அவையில் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கின்றேன். எனவேதான், இந்த நாட்டை, இந்திய நாடுகளின் ஒன்றியம் (United States of India) என அழைக்க வேண்டும் என்கிறேன். மீண்டும் சொல்கிறேன் இது இந்திய நாடுகளின் ஒன்றியம்தான்.
இந்தி, சமற்கிருத மொழிகளை நீங்கள் வலிந்து திணித்தால், சோவியத் ஒன்றியம் சிதறியதைப் போன்ற நிலைமை இங்கேயும் ஏற்படும். 2047 இல், விடுதலையின் நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற வேளையில், இந்திய நில வரைபடம் மாறி விடும்.”
வைகோ அவர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதன் பிறகு வைகோ அவர்களின் உரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? அல்லது இந்தி மட்டுமே இருக்கின்ற இந்தியா வேண்டுமா? என்று வைகோ கேட்டபோது, சுப்பிரமணியசுவாமி எதிர்ப்புக்குரல் கொடுத்தார். உடனே பா.ஜ.க. உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைகோவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் வைகோ உரையை வெகுவாகப் பாராட்டினார் (Excellent Speech).

Tuesday, February 4, 2020

வைகோ கோரிக்கை ஏற்பு! அமைச்சர் உறுதிமொழி!

இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவை சுழிய நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்றக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பிறகு அவைக்கு வந்த வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், உறுப்பினர் வைகோ அவர்களுடைய கோரிக்கையைக் கேட்டேன். அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. தேவைப்படுகின்ற இடங்களில் மேலும் புதிய கிளைகளை அமைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது என்றார்.

அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது நாடாளுமன்றத்தில் வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 04.02.2020 நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை:-
“அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியம், 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் நாள், சென்னையில் நிறுவப்பட்டது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தோஹா மாநாட்டில் திறமையாக வாதாடி, காப்பு உரிமைச் சட்டங்கள் குறித்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த, தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் அவர்களுடைய முயற்சியால், அந்த வாரியம் அமைந்தது.
1999 வணிக உரிமைக் குறிகள் (Trademarks Act) சட்டத்தின்படியும், 1999 புவிசார் குறியீடு, வணிகப்பொருள்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும் (Geographical Indication of Goods Registration and Protection Act) பதிவாளர் எடுக்கின்ற முடிவுகள் குறித்த மேல்முறையீடுகளை, கடந்த 16 ஆண்டுகளாக, வினைத் திட்பத்துடன் கேட்டு, தீர்ப்பு வழங்கி வருகின்றது.
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் சுற்று அமர்வுகள், மும்பை, தில்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், நடுவண் அரசு, இந்த வாரியத்தின் தலைமை அகத்தை, சென்னையில் இருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது. இதற்கான விருப்பத்தை, இந்திய அரசு வழக்குரைஞர் திரு கே.கே. வேணுகோபால், தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற அமர்வில் தெரிவித்து உள்ளார். இந்த வாரியத்தை, வட இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து, தொடர்பு உடைய துறைகளிடம் கருத்துக் கேட்பதற்காக, காலக்கெடு நீட்டிப்பு கேட்டு இருக்கின்றார்.
தற்போது இந்த வாரியத்திடம், 2800 வணிக உரிமைக் குறிகள் தொடர்பான வழக்குகளும், 600 காப்பு உரிமை வழக்குகளும் முறையீடு செய்யப்பட்டு உள்ளன. அமைவிடத்தால் அல்ல; மாறாக, வாரியத்தின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் மட்டுமே வழக்குகள் தேங்கி இருக்கின்றன. எனவே, வழக்கு தொடுத்தவர்களுடைய வசதிகளைக் கருதி, நாடு முழுமையும் பரவலாக புதிய கிளைகளை அமைக்க, நடுவண் அரசு முன்வர வேண்டும்.
மாறாக, தகுந்த காரணங்கள் எதுவும் இன்றி, வாரியத்தின் தலைமை அகத்தை இடம் மாற்றுவதற்காக நடுவண் அரசு மேற்கொண்டு இருக்கின்ற முயற்சிகள் நேர்மை அற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான வழக்கு உரைஞர்கள் சங்கத்தினர், அரசின் இந்த முயற்சிகளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கணினிகளின் வழியாகவே மேல்முறையீடு செய்ய முடியும் என்கின்ற நிலையில், தலைமை அகத்தை இடம் மாற்றுவதற்கான தேவை எதுவும் இல்லை.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் இருக்கின்ற அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.”
வைகோ அவர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

Monday, February 3, 2020

மதிமுக நடத்திய அண்ணாவின் 51-ம் ஆண்டு நினைவு நாள் அமைதிப்பேரணி!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் 03.02.2020 திங்கள் கிழமை மாலை சரியாக 4.00 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து அண்ணா துயில்கொள்ளும் மெரினா கடற்கரை வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் வந்தியதேவன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், கழக மாவட்டச் செயலாளர்கள், கே.கழககுமார், சு.ஜீவன், சைதை சுப்பிரமணி, டி.சி. ராஜேந்திரன், மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தில்லியில், பேரறிஞர் அண்ணா திருஉருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் வைகோ!

03-02-2020 பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருக்கின்ற அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி அவர்களும் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்து உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Monday, January 20, 2020

இலங்கை அரசின் இராணுவ பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா-வைகோ கடும் கண்டனம்!

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபரானதும் தனது முதல் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.
தற்போது இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்குச் சென்று, கோத்தபய ராஜபக்சேவைச் சந்தித்து, இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தொழில்நுட்பங்களை அளிக்க இந்தியா உறுதி அளித்துள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜித் தோவல் - கோத்தபய சந்திப்பு குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க இந்தியா ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பதாக அஜித் தோவல் உறுதி அளித்து இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே தனது சுட்டுரைப் பதிவில் “இந்தியாவின் பிரதிநிதி அஜித்தோவலிடம் கடல்சார் மற்றும் மண்டல ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினோம்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான கோத்தபய ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டிய நபர் ஆவார். அவரை இந்தியாவுக்கு அழைத்து சிவப்புக் கம்பளம் விரித்து தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய மத்திய பா.ஜ.க. அரசு, இலங்கை இராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை ஆகும்.
இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கைச் சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்து துன்புறுத்துவதும், மீன் பிடிப் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து 96 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியக் கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பலில் வந்த சிங்களக் கடற்படையினர் பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சுற்றி வளைத்து, நான்கு மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பொறுப்பு ஏற்றபிறகு, சிங்களக் கடற்படை எல்லைதாண்டி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதும், கைது செய்வதும் தொடர் நிகழ்வுகளாக இருக்கின்றன.
இலங்கையில், தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள், வீடுகள் உள்ளிட்ட உடைமைகளையும் பறித்து, இராணுவம் முகாம் அமைத்து, தமிழர்கள் 24 மணி நேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதைப் போன்று கட்டுக்காவல் ஏற்படுத்தி இருப்பதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து சிங்களக் கொலைகார அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இச்செயல் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் பா.ஜ.க. அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.
எனவே இந்திய அரசு, இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க ரூபாய் 355 கோடி நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-01-2020 தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் நாசகாரத் திட்டத்தைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்-மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.
கடந்த 2019 டிசம்பர் 5-ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பினேன்.
“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்திருக்கிறது?
அதற்காக மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது?
அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
அவ்வாறு தோண்டுகின்ற இடம் விளை நிலங்களா? அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா?” என்று கேள்விக் கணைகள் தொடுத்திருந்தேன்.
என்னுடைய கேளிவிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில்,
“காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது.
மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்,” என்று விளக்கம் அளித்தார்.
தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சாதிகாரமாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தின் உயிராதாரமான காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்கும் முயற்சி தொடர்ந்தால் சுமார் 56 இலட்சம் மக்கள் சொந்த மண்ணிலேயே வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமை நடக்கும். தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-01-2020 தெரிவித்துள்ளார்.

Sunday, January 19, 2020

தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழக்கு தமிழ் முறைப்படி நடத்துக! வைகோ வலியுறுத்தல்!

தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோவில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது.
நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது.
1010-ஆம் ஆண்டு மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
2010-ஆம் ஆண்டு, பெருவுடையார் கோவில் எழுப்பிய ஆயிரமாவது ஆண்டு விழா, அப்போதைய முதல்வர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களால் அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1996-ஆம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பிப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.
‘தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்’ என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்தபோது சிவனடியார்கள், சித்தர் வழி அமைப்பினர், சைவ சமய அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
‘தமிழில் குடமுழுக்கு’ எனும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23-ஆம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு அறிவித்தது. இந்த மாநாடு வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் சைவ நெறி, வைணவ நெறி மற்றும் குலத்தெய்வக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாமன்னர் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216.
சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12.
சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18.
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.
இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.