கேள்வி எண் 425
கீழ்காணும் கேள்விகளுக்கு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்புத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த 3 ஆண்டுகளில், நாடு முழுமையும் வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் எத்தனை பேர்? மாநில வாரியாகப் பட்டியல் தருக.
(ஆ) கடந்த 3 ஆண்டுகளில், கிராமப்புற வேலைவாய்ப்பு இழப்பு, மாநில வாரியாகப் பட்டியல் தருக.
(இ) திடீரென வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து, அமைச்சகம் ஆய்வு செய்ததா?
(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம்;
(உ) நகர்ப்புறங்களில் தகுதியான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன?
துறையின் இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் அளித்த விளக்கம் (5.2.2020)
அ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
தொழில் தரவு நிறுவனம் (Labour Bureau), 2016 ஏப்ரல் மாதம், சீரமைக்கப்பட்ட, காலாண்டுக்கான வேலைவாய்ப்புக் கணக்குப் பதிவைத் தொடங்கியது. அடுத்தடுத்த காலாண்டுகளில், வேலைவாய்ப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பதிவு செய்வதே அதன் குறிக்கோள்.
வேளாண்மை சாராத தொழில்துறை பொருளாதாரம் என்பது, 8 பெரிய வணிகப்பகுதிகள் ஆகும்.
பொருள் ஆக்கம், கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மக்கள் நல்வாழ்வு, விடுதிகள் உணவகங்கள் மற்றும் கணினித்துறைகளில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவில் இடம் பெறுகின்றன.
மேற்கண்ட துறைகள் வாரியாக, 2016 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், தனி அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அதற்குத் தகுதியான திறமையாளர்களைப் பயிற்றுவிப்பது, இவ்விரண்டும் அரசின் முன்னுரிமைப் பணிகள் ஆகும்.
மேலும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது. தனியார் துறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது; முதலீடுகள் மற்றும் பொதுச் செலவினங்களைக் கூட்டுவதற்கான பல்வேறு விரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளின் கீழ், நுண்,சிறு,குறு தொழில் நிறுவனங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன்தயாள் உபாத்யாயா கிராமத் திட்டம் ஆகியவை, ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தீன்தயாள் கிராம வாழ்க்கை வசதிகள் மேம்பாடு சிறப்புத் திட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஆக்குவோம், திறன் இந்தியா, எண்ணியல் இந்தியா ஆகிய திட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தத் திட்டங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கி வருகின்றன. அதற்காக, முத்ரா மற்றும் தொடங்குங்கள் (Start up) ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், தேசிய என்ற புதிய இணையதளத்தை அரசு தொடங்கி இருக்கின்றது. இதன் வழியாக, இந்தியா முழுமையும் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்; திறமைக்கு ஏற்ற பொருத்தமான வேலையைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இந்தத் தளம் ஒரு தகவல் களஞ்சியமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment