செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்குளத்தூரில் 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிவானந்த குருகுலம் தலைவர் ராஜாராம் அவர்கள் நேற்று 18.02.2020 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருடன் கடந்த 15.02.2020 அன்று அலைபேசியில் பேசினேன்.
நீங்கள் செய்து வரும் மனிதநேயத் தொண்டு உங்களைப் பாதுகாக்கும். கூடிய விரைவில் நலம் பெறுவீர்கள். டில்லியிலிருந்து திரும்பிய பின் உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாக சிவானந்த குருகுலம் திகழ்ந்தது. மனித மனங்களில் வறண்டு போன அன்பு, கருணையை ஆதரவற்றோர் மீது மடைமாற்றம் செய்து, அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்தவர் ராஜாராம்.
அவரது மனிதநேய சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் சார்பில், குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். சிறந்த சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய ராஜாராம் அவர்களுக்கு சமூகம் பல்வேறு விருதுகள் வழங்கி பாராட்டியது.
என் மீதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் மாறாத அன்பு கொண்டவர் ராஜாராம். சிவானந்த குருகுலத்திற்குப் பலமுறை சென்று சென்று அவரிடமும், அங்கே இருக்கும் ஆதரவற்றோர்களிடமும் பேசி ஆறுதல் படுத்தியுள்ளேன். அது ஒரு உன்னதமான இளைப்பாறும் இடம்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்த டாக்டர் ராஜாராம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரின் இதய நேசிப்பிற்குரிய குருகுலத்தினருக்கும், ஆதரவற்றோர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 19-02-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment