குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (5.2.2020) மாநிலங்கள் அவையில் ஆற்றிய உரை வருமாறு:-
“குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தில், கருத்துகளைத் தெரிவிப்பதற்காகக் கிடைத்த வாய்ப்பிற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதிர்ச்சி தரத்தக்க வெறுக்கத்தக்க ஒரு கருத்து, 16ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் எழுந்தது.
நிக்கோலோ மாக்கியவெல்லி எழுதிய இளவரசன் என்ற நூலில், மூன்று கட்டளைகளை வகுத்து இருந்தார்.
1. முடிவுகள், வழிமுறைகளை நியாயப்படுத்தி விடுகின்றன.
2. தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, எந்த விதிகளும் இல்லை.
3. வலிமையே சரி; வலுத்தது வாழும்.
இந்தக் கருத்துக்கள் இத்தாலியில் பாசிஸ்டுகளுக்கும், ஜெர்மனியில் நாஜிகளுக்கும் வழிகாட்டும் வேத புத்தகங்கள் ஆயின.
ஆனால், இந்த அழிவுக் கொள்கைகளுக்கு நேர்மாறாக, தமிழ்மறை தந்த வான்புகழ் வள்ளுவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார்;
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
அதாவது, உன்னைப் பெற்ற தாய் பசியோடு இருந்தாலும், அவருக்கு உணவு தருவதற்காக, முன்னோர்கள் சான்றோர்கள் பழிக்கின்ற, அறத்திற்குப் புறம்பான எந்தச் செயலையும் செய்யாதே என்பது இதன் பொருள்.
ஆனால் மிகவும் கொடூரமான அதிர்ச்சி என்னவென்றால், மாக்கியவல்லி எழுதிய இளவரசன் என்ற அந்தப் புத்தகம்தான், இன்று இந்த அரசாங்கத்திற்கு வேதப் புத்தகமாக ஆகி இருக்கின்றது.
கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரை, பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டு இருக்கின்ற மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுமையும் முஸ்லிம்களுக்கு எதிராக, கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. அவர்களுடைய உள்ளம் கொதிக்கின்றது. இனி தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கருதுகின்றார்கள்.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிராக, தான்தோன்றித்தனமாக, அரசு அமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கியதும், 35 ஏ பிரிவைத் திருத்தி இருக்கின்றீர்கள்.
காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்த, மாற்ற முடியாத உறுதிமொழி, ஆயிரம் அடி ஆழத்திற்குள் புதைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆறு மாதங்களாக, எந்தவிதக் காரணமும் இன்றி, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர்கள், டாக்டர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றீர்கள்.
2019 ஆகஸ்ட் ஐந்தாம் நாள், இந்திய வரலாற்றிலேயே கருப்பு நாள். அது, இந்துத்துவ சக்திகளால் நன்கு திட்டம் வகுத்து மேற்கொள்ளப்பட்ட கூட்டுச்சதி.
மக்களுடைய மனங்களில் வெறுப்பை விதைத்து இருக்கின்றீர்கள்; கோபக்கனலை மூட்டி இருக்கின்றீர்கள்; இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கை இன்மையை விதைத்து இருக்கின்றீர்கள்; குறிப்பாக மாணவர்களை, அரசு அமைப்பின் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்து இருக்கின்றீர்கள்.
குடி உரிமை திருத்தச் சட்டத்தில், ரோகிங்யா முஸ்லிம்கள், அகமதியா முஸ்லிம்கள், குறிப்பாக, இலங்கையின் சிங்கள இனவெறி அரசால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்த ஈழத்தமிழ் அகதிகளைச் சேர்க்காமல் தண்டித்து இருக்கின்றீர்கள்.
நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை ஏற்க முடியாது என 11 மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்து விட்டன. கேரளா, பஞ்சாப், இராஜஸ்தான்,மேற்கு வங்கம்ஆகிய 4 மாநிலச் சட்டமன்றங்கள் ஏற்க மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.
இந்திய விடுதலைக்குப் பிறகு, நடுவண் அரசுக்கு எதிராக இத்தனை மாநிலங்கள் அணிவகுத்து இருப்பது, இதுவே முதன்முறை.
சீனப்பெருஞ்சுவர் போல, கேரள மாநிலத்தில், முதன்முறையாக, 75 இலட்சம் மக்கள், கைகளைக் கோர்த்து நின்று மனிதச் சங்கிலியாக அணிவகுத்து இருக்கின்றார்கள். குடிஉரிமை திருத்தச்சட்டம், 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்து நின்றார்கள்.
தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து நடத்திய பேரணிகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அடுத்து, ஒரு கோடி கையெழுத்துகளைப் பெறுகின்ற இயக்கம் நடத்தி வருகின்றோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நானும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு இடங்களில் கலந்துகொண்டோம்.
குடி உரிமை திருத்தச் சட்டம், 370 ஆவது பிரிவு நீக்கத்தை எதிர்த்து, உலக நாடுகள், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் மன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பி இருக்கின்றன.
இந்த அரசு, தமிழர்களுக்கு எதிரான அரசு என நான் குற்றம் சாட்டுகின்றேன். நமது பிரதமருக்கு திடீரென தமிழ் இலக்கியங்கள் மேல் காதல் ஏற்பட்டு இருக்கிறது திருக்குறளில் இருந்தும், அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டுவதால் மட்டுமே, தமிழர்களை ஏமாற்றி விட முடியாது.
இலங்கையின் சிங்கள இனவெறி அரசால், 1.5 இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகத்தை, தங்களுடைய இரண்டாவது தாயகமாகக் கருதி இங்கே வந்து இருக்கின்றார்கள். ஆனால், குடி உரிமை திருத்தச் சட்டத்தில் அவர்களைப் புறக்கணித்து விட்டீர்கள். இன்றைக்கும்கூட, சிங்கள இனவெறி அரசோடு கொஞ்சிக் குலவிக் கொண்டு இருக்கின்றீர்கள்.
இப்பொழுது நாடாளுமன்றத்துக்கு வருகின்ற வழியில் நான் பார்த்தேன், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன்பு இலங்கை தேசியக் கொடிகள் பறக்கின்றன. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொடியவன் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வந்திருக்கின்றார்.
இனப்படுகொலை நடைபெற்ற காலங்களில், இலங்கையின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த கோத்தபாய இராஜபக்சே, இன்று அந்த நாட்டின் குடிஅரசுத் தலைவர் ஆகி இருக்கின்றார்.
அந்தக் கொலைகாரனை, முதல் பயணமாக, இந்தியாவுக்கு அழைத்து வருகின்றீர்கள். சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றீர்கள். இது தமிழர்களுக்கு எதிரான வஞ்சகம்.
காணாமல் போன 20000 தமிழர்கள் இறந்து விட்டார்கள் என்று, கோத்தபாய இராஜபக்சே, ஐ.நா. அதிகாரியிடம் கூறி இருக்கின்றார்.
எவ்வளவு திமிர்? எத்தகைய ஆணவம்?
ஆனால், நீங்கள் இலங்கையின் முப்படைகளை வலுப்படுத்துவதற்காக, 360 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள்.
இன்று இலங்கையில் தமிழர்கள் மூன்றாந்தரக் குடிமக்களாக, அடிமைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.
தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள்.
காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள். மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும், 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு உரிமம் அளித்து இருக்கின்றீர்கள். மீத்தேன், சேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, நிலத்தை உடைத்துத் துளைத்துப் பிளக்கின்றீர்கள். (Hydro Fracturing) இது காவிரி பாசனப் படுகையை அழித்து விடும். இத்தகைய முறை, அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலும் தடை செய்து இருக்கின்றார்கள்.
வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, ஹைட்ரோ கார்பான் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை இல்லை; மக்களிடம் கருத்துக் கேட்கவும் மாட்டோம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து இருக்கின்றார். இது தான்தோன்றித்தனமானது.
மற்றொரு புறத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாக அறிவித்து இருக்கின்றது. அதற்காக, 5900 கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கி இருக்கின்றார்கள்.
மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், அதன்பிறகு மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது.
இந்தி, சமற்கிருத மொழிகளை இந்தியா முழுமையும் திணிப்பதற்காக வஞ்சகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றீர்கள் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? இந்தி மட்டுமே உள்ள இந்தியா வேண்டுமா?
இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது. பல்வேறு சமயங்கள், நூற்றுக்கணக்கான மொழிகள், மாறுபட்டு பண்பாடு, பழக்கவழங்கங்கள் நிலவுகின்றன.
அசோகர் காலம் தொடங்கி அவுரங்கசீப் காலம் வரையிலும், இந்தியா என்ற நாடு ஒருபோதும் இருந்தது இல்லை என்பதை, இந்த அவையில் ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கின்றேன். எனவேதான், இந்த நாட்டை, இந்திய நாடுகளின் ஒன்றியம் (United States of India) என அழைக்க வேண்டும் என்கிறேன். மீண்டும் சொல்கிறேன் இது இந்திய நாடுகளின் ஒன்றியம்தான்.
இந்தி, சமற்கிருத மொழிகளை நீங்கள் வலிந்து திணித்தால், சோவியத் ஒன்றியம் சிதறியதைப் போன்ற நிலைமை இங்கேயும் ஏற்படும். 2047 இல், விடுதலையின் நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற வேளையில், இந்திய நில வரைபடம் மாறி விடும்.”
வைகோ அவர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதன் பிறகு வைகோ அவர்களின் உரையை தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
உங்களுக்கு ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? அல்லது இந்தி மட்டுமே இருக்கின்ற இந்தியா வேண்டுமா? என்று வைகோ கேட்டபோது, சுப்பிரமணியசுவாமி எதிர்ப்புக்குரல் கொடுத்தார். உடனே பா.ஜ.க. உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைகோவுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் வைகோ உரையை வெகுவாகப் பாராட்டினார் (Excellent Speech).
No comments:
Post a Comment