நிதிநிலை அறிக்கை மீது மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (10.02.2020) நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உரைத்த கருத்துகள் வருமாறு:-
நான், பெரியார் பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கின்றேன். தந்தை பெரியாரும், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும்தான் இந்த நாட்டில் சமூக நீதி என்ற கருத்தை விதைத்தவர்கள். அந்த சமூக நீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கின்றது. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்பது கட்டாயம் அல்ல; இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று கூறி இருக்கின்றது. இதுகுறித்து இந்த அரசு என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள விழைகின்றேன்.
அடுத்து நிதிநிலை அறிக்கை குறித்து என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.
நமது நிதி அமைச்சர் மீது, நான் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில், தாமிரபரணி ஆற்றங்கரையில், ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல, நடுவண் அரசின் சார்பில், கீழடியிலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தமிழர் நாகரிகம், உலகின் தொன்மையான நாகரிகம் என்பது, தொல்பொருள் மற்றும் அறிவியல் ஆய்வுகளின் வழியாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
உலக அளவில் நிலவுகின்ற வணிகத் தேக்கநிலை, வணிகப்போட்டியில் இந்தியா பின்தங்கி விடக் கூடாது. பொருள்களின் ஆக்கத்தில் மனித உழைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளில், 1991 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன தாராளமயத்தால் ஏற்பட்ட வளர்ச்சியில் இருந்து நாம் பின்தங்கி விடக் கூடாது.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில், ஒரு நிதிநிலை அறிக்கையை வரைவது என்பது, எந்த ஒரு நிதி அமைச்சருக்கும் கடினமான பணிதான். அந்த வகையில், நமது நிதி அமைச்சருடைய தோள்களில் மீது பெருஞ்சுமை சுமத்தப்பட்டு இருக்கின்றது.
முந்தைய நிதி அமைச்சர்களிடம் இருந்து உள்வாங்கிக் கொண்டு, நமது நிதி அமைச்சர் வழங்கி இருக்கின்ற இந்த நிதிநிலை அறிக்கையில் அவர் சீர்திருத்த வேண்டிய குறைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மந்த நிலை, விவசாயிகளின் வேதனை, கிராமப்புற மக்களின் துயரம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், பங்குச்சந்தை எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் குறித்து, இந்த நிதிநிலை அறிக்கை, கருத்தில் கொள்ளவில்லை.
அடுத்த ஆண்டுக்கான செலவுகள் குறித்த உங்கள் கணக்கு, குறைந்த மதிப்பீடு ஆகும்; ஆனால், வரவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகம்; நிதிப்பற்றாக்குறை குறித்த விளக்கத்தை ஏற்பதற்கு இல்லை.
இந்த ஆண்டு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் ஆக்கத்தில் 4.6 விழுக்காடு அளவிற்குக் கடன் வாங்கப் போவதாகவும், அது அடுத்த நிதி ஆண்டில் 4.3 விழுக்காடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.
உண்மையில் இதுதான் பற்றாக்குறை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் 3.8 மற்றும்3.5 விழுக்காடு அல்ல.
எதனால் இந்தப் பற்றாக்குறை என்பதுதான் கவலை அளிக்கின்றது.
இந்த ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 2.4 விழுக்காடு; அடுத்த ஆண்டில் 2.7 விழுக்காடு எனக் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். இதன் பொருள், நீங்கள் வாங்குகின்ற கடனில் பெரும்பகுதி, ஆக்கத்திற்கான செலவுகள் அல்ல; முதலீடும் அல்ல.
பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு, 2 விழுக்காடு மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கின்றது. உணவுப் பொருள்கள் மற்றும் உரத்திற்கான மானியத்தை நிறுத்தி விட்டீர்கள்.
தொடரித்துறைத் திட்டங்களில் தமிழகத்திற்கு மிகமிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது; தமிழகம் வஞ்சிக்கப்படுகின்றது.
இரயில்வே துறை நிதிநிலை அறிக்கையையும் பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்தது படு மோசமான நடவடிக்கை ஆகும். முன்பு இரயில்வே துறைக்கு தனியாக வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து வந்தார்கள். அது குறித்து மட்டுமே மூன்று அல்லது நான்கு நாட்கள் விவாதம் நடக்கும். உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பாக இருந்தது. ஆனால் இப்போது யாருமே அதைப் பற்றிப் பேசுவது இல்லை. எனவே இரயில்வே துறைக்கு வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
இன்று, இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் என்ன?
பொருள்களின் ஆக்கம் மற்றும் தொடர்பணிகள், தேவையை விட வெகுவாகக் குறைந்து விட்டது. விவசாயிகளின் வருமானம், உயர்வதற்குப் பதிலாக வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. விவசாயத் தொழிலாளர்களின் ஊதியமும் குறைந்து விட்டது.
இன்று நிலவுகின்ற பொருளாதார மந்த நிலைக்கும், மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும், இந்த அரசு, ஆம்; இந்த அரசு மட்டுமே பொறுப்பு ஆகும்.
பெருந்தொழில் நிறுவனங்களுக்கு, ரூ 1,45,000 கோடி அள்ளிக்கொடுத்து இருக்கின்றீர்கள். அதாவது, ஏழைகளின் பணத்தை எடுத்து, செல்வந்தர்களுக்குத் தருகின்றீர்கள். எனவே, ஏழைகள் மேலும் ஏழைகளாகத்தான் ஆவார்கள்; பணக்காரர்களிடம் மேலும் செல்வம் குவியும்.
1991 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன தாராளமயக் கொள்கையின்படி, இறக்குமதிக்கு மாற்று என்பது நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த அனைத்து அரசுகளும், இந்த அரசு உட்பட, 2015 வரை இந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்தன.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்தக் கொள்கை தலைகீழ் ஆகி விட்டது. அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் சுங்க வரி உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் ஆக்குவோம் (Make in India) என்ற திட்டம், பெருந்தோல்வி அடைந்து விட்டது.
அந்தத் திட்டத்தால் விளைந்த நன்மைகளை, இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டும். அதனால், ஏற்றுமதி பெருகி இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால், அது எந்த அளவிற்கு அயல்நாட்டுச் செலாவணியை ஈட்டித் தந்தது? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்புத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து விட்டீர்கள்.
உணவு மற்றும் உரத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து விட்டீர்கள். எனவே, இனி நீங்கள் உழவர்களிடம் இருந்து விளைபொருட்களைக் குறைந்த அளவு ஆதரவு விலையில், குறைந்த அளவே கொள்முதல் செய்வீர்கள்;
காரணம், அவர்களிடம் இருந்து பறிக்கின்ற நிதியைத்தான், நீங்கள் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றீர்கள்.
2022 ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று உறுதி அளித்து இருக்கின்றீர்கள். அதற்கு, வேளாண் துறை 15 விழுக்காடு வளர்ச்சியைக் காண வேண்டும்; ஆனால், இப்போது 2 அல்லது 3 மடங்கு வளர்ச்சிதான் இருக்கின்றது.
அதேபோல, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவதற்கு, ஆண்டுதோறும் இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி காண வேண்டும்; ஆனால், இப்போது, 5 விழுக்காடு வளர்ச்சிதான் இருக்கின்றது.
இந்த ஆண்டு, குறைந்தது 5 விழுக்காடு வளர்ச்சி பெறும் என்பது உங்கள் கணிப்பு.
மேற்கண்ட இரண்டு குறிக்கோள்களும் அடைய இயலாதவை.
ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், எல்ஐசி நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதாக அறிவித்து இருக்கின்றீர்கள். பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்போகின்றீர்கள்.
எல்ஐசி பங்குகளை விலக்குவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். காரணம், அது மிகப்பெரிய ஆதாயத்தை ஈட்டித் தருகின்றது. அந்தப் பணம், சமூக வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
கஸ்தூரிரங்கன் குழு வகுத்த அளித்த புதிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்வது என்பது, இந்தி, சமஸ்கிருதத்தைப் புகுத்த வேண்டும் என்ற இந்துத்துவக் கொள்கையைத் திணிப்பதே ஆகும்.
பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த உங்கள் கொள்கை என்ன?
முதலில், அதற்கான கொள்கையை வகுத்திடுங்கள். எந்தெந்தப் பொதுத்துறை நிறுவனங்களை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்? எவற்றையெல்லாம் விற்கப் போகின்றீர்கள்?
இதை வரையறுத்து நீங்கள் அறிவிக்காதவரையிலும், நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.
நிதிநிலை அறிக்கை குறித்து ஆராய, பிரதமர் கூட்டிய கூட்டத்தில், நிதி அமைச்சர் பங்கேற்றாரா? இல்லை. அவரை அழைக்கவே இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல, 13 முறை நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களுக்கும் அவரை அழைக்கவில்லை. இது, தொழில் வணிகத் துறையினருக்குத் தவறான அறிகுறியைக் காட்டாதா? அரசில் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற நிதி அமைச்சரை அவமதிக்கின்ற செயல் ஆகாதா?
சிந்து சமவெளி நாகரிகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை.
ஈராஸ் பாதிரியாரும், பல்வேறு வரலாற்று ஆய்வு அறிஞர்களும், மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பதை அறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த அரசு, வரலாறையும், பண்பாடு நாகரிகத்தையும் திரிக்க முயற்சிக்கின்றது.
இவ்வாறு வைகோ அவர்கள் கருத்து உரைத்தார்கள்.
No comments:
Post a Comment