தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பூல்துரை (கடவுச்சீட்டு எண் N 0405562), மலையாங்குளம் கந்தசாமி (K 7500151) ஆகிய இருவரும், ஓமன் நாட்டில் சலாலா என்ற இடத்தில் உள்ள எலியா எலெக்ட்ரிகல் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் 2018 செப்டெம்பர் மாதம் மின்சார வேலைகளுக்காக பணியில் சேர்ந்தனர்.
2019 அக்டோபரில் தும்ரயாத் என்ற இடத்தில் கோழிக்கறி பதப்படுத்தும் அல் சபா நிறுவனப் பணிக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கு நிலவிய நாற்றம், இவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. உயர் மின் அழுத்தத்தில் பணிபுரிவதற்கான பாதுகாப்புக் கருவிகளும் இல்லை. இதுகுறித்துப் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும், எந்த மாற்றமும் இல்லை. எனவே, இவர்கள் தாங்களாகவே முந்தைய நிறுவனத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கே இவர்களை பணியில் சேர்க்காமல், நவம்பர் 4 ஆம் நாளிட்ட பணிநீக்கச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதில் இவர்கள் கையெழுத்து இடவில்லை. வேலைக்கும் செல்ல முடியவில்லை. 9 ஆம் தேதி நிறுவனம் இவர்களை அழைத்து, பணி நீக்கச் சான்றிதழில் குறிப்பிட்டு உள்ளதுபோல், விசா மற்றும் பயிற்சிக் கட்டணத்தைக் கட்டிவிட்டு, ஊருக்குச் செல்லுங்கள்; இல்லை என்றால், 4 மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். எங்களிடம் பணம் இல்லை; சம்பள பாக்கி, ஊருக்குச் செல்வதற்கான பயணச்சீட்டு கொடுங்கள் எனக் கேட்டு உள்ளனர். அதற்காக இவர்களை அடித்து உள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து, 2020 ஜனவரி 8 ஆம் நாள், நான் அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன். ஆவணங்களையும் இணைத்து அனுப்பி இருந்தேன். அதன்பிறகு, இந்தியத் தூதரகம் அழைத்து விசாரித்துள்ளது. நிறுவனத்தில் தங்களை அடித்தது குறித்து, இவர்கள் இருவரும் காணொளி பேசி, வலைதளத்தில் பரப்பி உள்ளனர். அதனால், அந்த நிறுவனம், இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றது. இவர்களும் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர். அதன்பிறகும் காலதாமதம் ஏற்பட்டது.
எனவே, நான் மீண்டும் பிப்ரவரி 11 ஆம் நாள் அமைச்சருக்கு நினைவூட்டுக் கடிதம் எழுதினேன்.
அதற்கு, அமைச்சகத்தில் இருந்து எனக்கு அனுப்பி உள்ள விளக்கக் கடிதத்தில், அந்த நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க இந்தியத் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் நாடு திரும்புவார்கள் எனவும் தெரிவித்து உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 17-02-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment