Tuesday, November 26, 2019

தொடரித்துறை பராமரிப்புப் பணிகள் தனியார் மயம் ஆகின்றதா? வைகோ கேள்விகளும், அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 771
கீழ்காணும் கேள்விகளுக்கு, தொடரித்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) தொடரிகளில் உணவுக்கூடங்களையும், கழிப்புஅறைகளின் பராமரிப்புப் பணிகளையும் கைவிட, தொடரித்துறை தீர்மானித்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள் தருக.
(இ) தொடரிப் பெட்டிகளின் தூய்மை, கழிப்பு அறைகளின் பராமரிப்பு குறித்து, எத்தனை பேர் குறைகளைத் தெரிவித்துள்ளனர்?
(ஈ) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
(உ) தொடரிப் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? ஓடுகின்ற தொடரிகளில் மூட்டைப் பூச்சிகள், கரப்பான், எலிகள் ஊர்வது குறித்துக் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா?
(ஊ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
தொடரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்:
(அ) இல்லை.
(ஆ) கேள்வி எழவில்லை.
இ,ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தொடரிப் பெட்டிகளின் தூய்மை குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து 60000 க்கும் மேற்பட்ட குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் கூறுகின்ற குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.
ஒப்பந்தப்படி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தூய்மைப் பணிகள் என்பது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
சில எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன்:
1. தொடரிப் பெட்டிகள், கழிப்பு அறைகளின் தூய்மைப் பணிகள் இரு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். தேவையான கருவிகளும் உள்ளன.
2. தலைநகர் விரைவுத் தொடரிகள் (இராஜ்தானி), நூற்றாண்டுத் தொடரிகள் (சதாப்தி) போன்ற முதன்மையான, நெடுந்தொலைவு ஓடுகின்ற 1090 விரைவுத் தொடரிகளில், இருமுனை வழிகளிலும், (எடுத்துக்காட்டு: மதுரை-சென்னை; சென்னை-மதுரை வைகை விரைவுத்தொடரி) வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே தூய்மைப் பணிகள் (Onboard House Keeping Service OBHS) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. கழிப்பு அறைகள் கழுவப்படுகின்றன. கதவுகள் துடைக்கப்படுகின்றன.
3. பெட்டி நண்பன் (கோச் மித்ரா) என்ற திட்டம் உள்ளது. அதன்படி, 1050 தொடரிகளில், இருமுனை வழிகளிலும், தூய்மைப் பணிகள், நோய்த்தொற்றுக் கிருமிகள் அழிப்பு, சணல் துடைப்பான்கள், விளக்குகள், குளிர்பதனப் பணிகள், தண்ணீர் நிரப்புதல் போன்ற, பயணிகளுக்கு உதவுகின்ற ஒற்றைச் சாளர இடைமுக ஏற்பாடுகள் (single window interface) செய்யப்படுகின்றன.
4. தூய்மையான தொடரி நிலையம் என்று ஒரு திட்டம் உள்ளது. இந்த நிலையங்களில், வண்டிகள் நிற்கும்போது செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள், உரிய கருவிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன.
5. மூட்டைப் பூச்சி போன்ற சிறுசிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற மருந்துகள், தொடர்ச்சியான இடைவெளிகளில் பெட்டிகளில் தெளிக்கப்படுகின்றன. அந்தப் பணிகளை, பயிற்சி பெற்ற, திறமையாகச் செயல்படுகின்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒட்டுண்ணி உயிரிகளைக் கட்டுப்படுத்தும் புகை மூட்டப் பணிகளும் (Fumigation) மேற்கொள்ளப்படுகின்றன.
6. முன்பு, குளிரிப் பெட்டிகளில் மட்டுமே குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது, அனைத்துப் பெட்டிகளிலும் வைக்கப்படுகின்றன.
7. தொடரிப் பெட்டிக் கழிப்பு அறைகளின் மனிதக் கழிவுகள், முன்பு தொடரித் தடங்களிலேயே கொட்டப்பட்டு வந்தது. இப்போது, பெட்டிகளிலேயே சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றன.
8. ஏதேனும் குறைகள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அது தொடர்பான அலுவலர்கள், மேற்பார்வையாளர்களது நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன.
9. தொடரிப் பெட்டிகளின் தூய்மைப் பணிகளுக்கு, பயணிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்ற வகையில், போதிய விழிப்பு உணர்வுப் பரப்புரைகளும் செய்யப்படுகின்றன என 26-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment