Wednesday, November 27, 2019

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், தென்னிந்திய மக்கள், உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், தில்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்குரைஞர்கள் கட்டணம் போன்றவை, எதிர்கொள்ள முடியாத கேள்விகள்.
மேற்கண்ட காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்சநீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கின்றன.
உச்சநீதிமன்ற மேல் முறையீடுகளில், வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக, ஆகக்கூடுதலான வழக்குகள், தென் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிரந்தரக் கிளையை, தென்இந்தியாவில் நிறுவினால் மட்டுமே, நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்குரைஞர்களுக்கும் வசதியாக அமையும்.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.
2018 மே 4 ஆம் நாள் கணக்கின்படி, தற்போது உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.
எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

தக்க நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற அதிகாரத்தின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேச வேண்டியது இல்லை; கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. அவர் தாமாகவே முடிவு எடுத்துச் செயல்படலாம். ஆனால் அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்றக் கிளையை தென் இந்தியாவில், சென்னையில் நிறுவிட வேண்டும்.”
இவ்வாறு வைகோ 27-11-2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
வைகோவின் கோரிக்கைக்கு தி.மு.க. உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment