Thursday, November 28, 2019

விசாரணை சிறைக் கைதிகளின் விடுதலை எப்போது? வைகோ கேள்விகளும், உள்துறை அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 354
கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) நாடு முழுமையும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற விசாரணைக் கைதிகள் குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
(இ) தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின்படி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்கள் எத்தனைப் பேர்?
(ஈ) நாடு முழுமையும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற குழந்தைகள் எத்தனைப் பேர்?
(உ) நீதிமன்றங்களில், விசாரணைக் கைதிகளுடைய வழக்குகளை விரைவுபடுத்த, அரசு மேற்கொண்ட நடவடிக்கைககள் யாவை?
(ஊ) கடுமையான குற்றமாக இல்லாத நிலையில், அவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?
உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள விளக்கம்
அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
தேசிய குற்றப் பதிவு ஆவணங்களில் (National Crime Records Bureau-NCRB) பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், அந்த அமைப்பின், இந்தியச் சிறை புள்ளிவிவரங்கள் (Prison Statistics India) என்ற இதழில் வெளியிடப்படுகின்றன.
அவ்வாறு, 2017 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்படி, 13,143 பேர், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
கேள்வி ஈ குறித்த விளக்கம்:
நாடு முழுமையும், விசாரணைக் கைதிகளாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் அரசிடம் இல்லை.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பட்டியல் இரண்டு, உட்பிரிவு 4 இன்படி, சிறைகள் மற்றும் அவற்றில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் குறித்த அதிகாரங்கள் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டவை. எனவே, சிறைகளை ஆள்வதும், மேலாண்மை செய்வதும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
எனினும், விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவதற்காக, நடுவண் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதற்காக, குற்ற நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலில் (Code of Criminal Procedure) 436 ஏ என்ற பிரிவு, புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, புனையப்பட்ட குற்றத்திற்காகக் கிடைக்கக்கூடிய ஆகக் கூடுதலான தண்டனையில், மூன்றில் ஒரு பங்கு காலம் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவருக்கு, பிணை விடுதலை வழங்கலாம். (ஆகக்கூடுதலாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்ற வழக்குகளைத் தவிர).
மின்சிறை (E-prisons Portal) என்ற இணையதளத்தில் தரப்பட்டு உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, மாநில சிறை அதிகாரிகள், சிறைவாசிகள் குறித்த புள்ளி விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்; அதன்படி, விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டு, மறு ஆய்வுக் குழுக்களின் விசாரணைக்கு அவர்களுடைய வழக்கை உட்படுத்தலாம்; அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மாநில சட்டப் பணிகள் ஆணையம் (State Legal Services Authority), சட்ட உதவி மையங்களை (Legal Service Clinics) ஏற்படுத்தி உள்ளது.
அதன் வழியாக, தேவைப்படுவோருக்கு, கட்டணம் இல்லாமல் சட்ட உதவிகள் கிடைத்திட, பகுதி நேர, தன்னார்வ சட்ட உதவியாளர்கள், காவல் நிலையங்கள், முன் அலுவலகங்கள் (குசடிவே டீககiஉநள), சிறைகள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் செயல்பட ஏற்பாடு செய்து இருக்கின்றது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (National Legal Services Authority-NALSA), விசாரணைக் கைதிகள் குறித்து, ஒரு நிலையான செயல்திட்ட வழிகாட்டுதலை (Procedure-SOS) வரைந்து இருக்கின்றது.
இந்த வழிகாட்டுதல்கள், 2019 பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 2016 ஆம் ஆண்டு வரையப்பட்ட மாதிரி சிறைக் கையேடு (The Model Prison Manual) அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சட்ட உதவி என்ற உட்பிரிவில், விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்படக்கூடிய சட்டத் தற்காப்பு, வழக்குரைஞர்களுடன் சந்திப்பு, வழக்கு ஆவணங்களில் கையெழுத்து இடுதல், நீதிமன்றங்களில் விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை, அரசின் செலவிலேயே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சிறைகளில் நிலவும் நெருக்கடியைத் தடுப்பது, விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவது குறித்து, உள்துறை அமைச்சகம், சீரான இடைவெளிகளில், மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றது. இதுகுறித்த தகவல்களை, https://mha,gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம் என 28-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment