Wednesday, January 13, 2021

என் பாசமிகு பெரியவரை இழந்துவிட்டேன்! ஒமான் மதிமுக இரங்கல்!

ராமநாதபுரம் சாதிக் அலி ஐயா இன்று 13-01-2021 பூவுலகை விட்டு பிரிந்தார்.

வாய் நிறைய பாசத்துடன் மைக்கேல் நல்லா இருக்கீங்களா என பாசம் காட்டுவார்.

அலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் அன்பை அளவில்லாது பொழிவார். அண்ணா சொன்ன குடும்ப பாசம் தலைவர் வைகோ வழியிலே நமக்கு கிடைத்ததனால்தானே மைக்கேல் நாமெல்லாம் இவ்வளவு பாசமாக இருக்கிறோம் என்பார்.

திராவிட இயக்கத்தில், மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் ஒரு மாவட்ட அவைத் தலைவர் என்ற ஒரு சிறு பெருமை கூட இல்லாமல் பாசம் காட்டுபவர்.

அண்ணன் மல்லை சி.ஏ.சத்யா Mallai C E Sathya அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். என்னிடத்தில் பேசின பல தடவைகளில் அண்ணன் சத்யா அவர்களை தலைவருக்கு நல்ல தம்பி கிடைத்திருக்கிறார் என்று மனதார மகிழ்வார்.

கண் பார்வை மங்கி இருக்கிறது மைக்கேல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தலைவர்தான் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் மூலம் ஏற்பாடு செய்தார் என்றார். அண்ணன் தி.மு.ரா பற்றி, இவ்வளவு உதவுவார், அறுவை சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார் என எதிர்பார்க்கவேயில்லை மைக்கேல் என அண்ணனை பற்றி பேசி மகிழ்ந்தார். கண் சரியாகிவிட்டது. அடுத்த கண் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது அதையும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். வயசாகிவிட்டதால் பார்வை குறைகிறது என்றார். அதையும் அறுவை செய்து சரி செய்துவிடலாம் ஐயா கவலை வேண்டாம் என்று சொல்வேன். ஆம் மைக்கேல் செய்துடலாம் என்று சொன்னார்.

அதற்கான நேரத்தில் கொரொனா கொடுமை தாண்டவமாடியது. வீட்டிலேதான் இருக்கிறேன் மைக்கேல். நீங்களும் ஒமானில் கவனமாக இருங்க என அவ்வளவு பாசம் காட்டுவார்.

நான் தனியாக ஒமானில் இருந்த போது மைக்கேல் எப்படியாவது குடும்பத்தோடு இருக்க முயலுங்கள் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். கடைசியாக எப்படியோ குடும்பம் ஒமான் வந்ததும் அவர் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். தன் மகனிடம் எவ்வளவு பாசம் காட்டுவாரோ அவ்வளவு அன்பாயிருந்தார்.

2020 அக்டோபர் 17 ஆம் தேதி எனக்கு மகள் பிறந்த செய்தியை 18 ஆம் தேதி ஐயாவுக்கு அழைத்து சொன்னேன். எனக்கு பேத்தி பிறந்திருக்கிறாரா. ரொம்ப சந்தோசம். நல்லா இருங்க மைக்கேல். நீங்க நல்லா இருக்கணும் என்றே ன்னார். இந்த வார்த்தைகள் அவர் எப்போதும் என்னிடம் கூறும் வார்த்தைகள்.

அப்போது கூட கண் பற்றி பேசும்போது சீக்கிரம் அடுத்த கண்ணும் அறுவை சிகிச்சை செய்துடுவேன் மைக்கேல் என்றார்.

மதிமுக இணையதள உறவுகள் அனைவரிடத்திலு மிக நெருக்கமானவர். அனைவரையும் அரவணைத்து வயதானவர் என்ற சோர்வில்லாமல் இளைஞரை போல எல்லாரிடத்திலும் பழகினார். அனைவரும் அவரிடமும் அவ்வளவு பாசமாக இருந்தோம்.

ஆருயிர் சகோதரர் ஈரோடு Somasundaram Loganathan திருமணத்தில் கலந்துகொண்டு இணையதள கண்மணிகளோடு சிறப்பாற்றி அவ்வளவு அன்பை பொழிந்தவர்.

அண்ணன் Ammapet G Karunakaran பற்றி இணையத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி பம்பரமமாக சுழலுகிறார் என்று சிலாகித்திருக்கிறார். 2016 கழக இணையதள மாநாட்டில் கலந்துகொண்டு வரும்போது ராமநாதபுரம் வீட்டுக்கு போய்விட்டு போகலாம் என்று அன்போடு அழைத்தார்.

ஒரு முறை மண்டபம் சென்றபோது அவர் வீட்டுக்கு செல்ல இயலாமல் போனது. அது ஒரு விரைவு பயணமாக குடும்பமாக சென்றிருந்ததால் எங்கும் செல்ல இயலாத சூழலில் அவர் கண்டிப்பாக வீடு வரவேண்டும் என்று அழைத்தும் செல்ல இயலாமல் போனது.

இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் அவருடன் பழகிய நாட்களாக இருந்தன. இணையத்திலே எனக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

கழகத்தினர் அனைவரது திருமண நிகழ்விலும், குடும்ப நிகழ்விலும் கலந்துகொண்டவர்.

கழக அரசியல் போராட்டம் ஆர்ப்பாடம் என கலந்துகொண்டு கைதாகி விடுதலையானவர்.

தேர்தல் நேரங்களில் இணையதளம் சார்பாக தேர்தல் பிரச்சாரங்களை ஊர் ஊராக இளைஞனாக சென்று பம்பரத்திற்கு வாக்கு சேகரித்தவர்.

எனது சுக துக்கத்தில் சில வருடங்களாகவே ஆறுதலாக இருந்தவர். அவரது இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்றாலும், கழக இணையதள கண்மணிகளுக்கும் பேரிழப்பாகும்.

அதைவிட அவர் நேசித்த தலைவர் வைகோ எம்பி அவர்களுக்கு பேரிழப்பு, மதிமுகவிற்கு பேரிழப்பு.
மதிமுக இணையதள அணிக்கு பேரிழப்பு. மதிமுக இருக்கும் வரை ஐயாவின் புகழ் நிலைத்து நிற்கும்.

கண் அறுவை சிகிச்சை செய்து நலமாகிவிடுவார் என்ற நினைத்த நேரத்தில்தான் நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருக்கிறது. நவம்பரில்தான் கண்டுபிடித்தார்கள். கடைசி கட்டமாகிவிட்டதால் காப்பாற்ற இயலாமல் மரணமடைந்துவிட்டார் என்று அவரது இரண்டாவது மகன் சொன்னதுமே உடைந்துவிட்டேன்.

எப்படி ஆறுதல் சொல்ல, வார்த்தைகளை தேடி தேடி பேசி ஆறுதல் சொல்லி வைத்தேன் அலைபேசியை...

நல்லா இருக்கணும், நல்லா இருப்பீங்க மைக்கேல் என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் ஐயாவின் அந்த வார்த்தைகளை என்று கேட்பேனோ என்ற வேதனையோடு கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment