Saturday, February 13, 2021

நேர்மையான அரசியல் நடத்தி இருக்கின்றோம்; அதனால் மக்கள் நிதி தருகின்றார்கள். நன்றி! திருநெல்வேலியில் வைகோ உரை!

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடிஎதிர்க்கும் ஆற்றல் அதுவே படை என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற, கழகத்தின் கண்மணிகளாகிய நீங்கள், அரும்பாடுபட்டு, எறும்பு சேகரிப்பதைப் போலச் சிறுகச்சிறுகச் சேகரித்த நிதியை வழங்குகின்ற இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து, முன்னின்று பணிகளை மேற்கொண்ட, நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர், கண்ணியத்திற்குரிய கே.எம்.ஏ. நிஜாம் அவர்களே,

கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான, என் பாசத்திற்கு உரிய ஆருயிர்ச் சகோதரர் ஆர்.எம்.எஸ் அவர்களே,
முன்னிலை வகிக்கின்ற குமரி மாவட்டச் செயலாளர், வழக்குஉரைஞர் தம்பி வெற்றிவேல்,
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் தம்பி ஆர்.எஸ். ரமேஷ்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்புச் சகோதரர் புதுக்கோட்டை செல்வம், அதிக நிதி தந்து அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கிய தென்காசி மாவட்டச் செயலாளர் ஆருயிர்த் தம்பி திருமலாபுரம் இராசேந்திரன், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர், பாசத்திற்குரிய சகோதரர் ரைமண்ட், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், அருமைத் தம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்,
அருமைத் தங்கை ராணி செல்வின் ஆகியோருககும்,
ஒன்றிய நகரக் கழகங்களின் செயலாளர்கள், மாவட்டக் கழகங்களின் பொறுப்பாளர்கள், கிளைக்கழக, பேரூர்க்கழகங்களின் பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், அன்புச்சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏறத்தாழ, ஓராண்டுக்குப் பின்னர் உங்களை நான் சந்திக்கின்றேன்.
இந்த மண்டலத்தில் கழகத்திற்கு ஒரு பெரும் சோதனை வந்தபொழுது,
இனி இந்தக் கட்சி தேறாது என்று சிலர் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது,
இதே மண்டபத்திற்குக் கீழேதான், நம்முடைய நிஜாம் அவர்களின் ஏற்பாட்டின்பேரில், ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் திரண்டு வந்தார்கள். எத்தகைய சோதனைகளையும் கழகம் எதிர்கொள்ளும் என்பதை உணர்த்தினார்கள்.
ஆனால், இன்றைக்கு இவ்வளவு பேர் திரண்டு வருவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
காரணம்,
கொரோனா தாக்தலுக்குப் பிறகு, பொது முடக்கம் காரணமாக,
கடந்த ஓராண்டுக் காலமாக நாம் இயங்க முடியவில்லை.
2019 செப்டெம்பர் 15 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்குப் பின்னர், நான் தோழர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், ஜூம் காணொளிக் காட்சிகளின் வழியாக சில நிகழ்வுகளில் பங்கேற்றாலும் கூட, நேரடியாகச் சந்திக்க முடியவில்லை.
நமது கழகம் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை;
எந்த அதிகாரப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
சட்டமன்றத்தில் ஆறு உறுப்பினர்கள் இருந்தார்கள். இரண்டு பேர் விலகிப் போய்விட்டார்கள்.
எனவே, கழகம் அதிகாரத்தில் இருந்தது இல்லை; அந்தப் பொறுப்பிற்கு வரும் என்ற நம்பிக்கையோடு பாடுபட வேண்டும் என்றும் சொல்வதற்கு இல்லை.
இருப்பினும் கூட, நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது,
‘நிதி கிடைக்குமா?’ என நான் சந்தேகப்பட்டேன்.
இந்தக் கொரோனா காலத்தில்,
எந்தக் கட்சியும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிதி திரட்டவில்லை.
அப்படி நிதி திரட்ட வேண்டிய தேவை, பல கட்சிகளுக்கு இல்லை.
அவர்களிடம் நிதி குவிந்து இருக்கின்றது.
ஆனால், நமது இயக்கத்தில் இருக்கின்ற நீங்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
வசதி குறைந்தவர்கள்.
இந்த இந்தக் கட்சிக்குப் பணம் கிடையாது; பதவியும் கிடையாது;
எந்த அதிகாரமும் கிடையாது.
அடுத்த தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் கிடையாது;
இத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. மிகக் குறைந்த இடங்கள் கூடக் கிடைக்கலாம்.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் பாடுபடுகின்றீர்களே,
உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கும் வாய்க்க மாட்டார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த மாணிக்கக் கட்டிகளைப் போல,
வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்க மாட்டார்கள்.
ஆனால், நாம் இயங்கியாக வேண்டும்; தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதற்காக நிதி திரட்டியாக வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி,
நிதி திரட்ட வேண்டும என, தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வருகின்றது; தைப்பொங்கலும் வருகின்றது.
அதற்குப் பிறகு, பத்துப் பதினைந்து நாள்களில் நிதியைச் சேகரித்து,
இந்த அளவிற்குக் கொடுக்க முடியும் என்று சொன்னால்,
மக்கள் என் மீது வைத்து இருக்கின்ற நம்பிக்கை;
கொள்கையின் மீது நீங்கள் வைத்து இருக்கின்ற பற்று;
இலட்சியப் பிடிப்புதான் காரணம்.
தாய்த்தமிழகம் தழைக்க வேண்டும்;
தாய்த் தமிழகத்தின் நதி ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்;
காவிரிப் பிரச்சினையில் மீட்சி வேண்டும் என்பதற்காக,
நாம் களம் கண்டு போராடி இருக்கின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என,
இன்று பல கட்சிகள் புதிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்றால், இதற்கெல்லாம் முன்னோடி நாம்தான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அல்ல,
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்ல,
1997 ஆம் ஆண்டிலேயே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக,
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்துப் போராடத் தொடங்கியவர்கள் நாம்.
அந்தப் போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கின்றோம்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க விடாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொடுத்து இருக்கின்றோம்.
நியூட்ரினோ திட்டம் என்று சொல்லிக்கொண்டு,
மேற்குத்தொடர்ச்சி மலையையைக் குடைந்து, இலட்சக்கணக்கான டன் எடையுள்ள பாறைகளை வெட்டி எடுக்க முனைந்தபோது,
அதை எதிர்த்துப் போராடினோம்; உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்று இருக்கின்றோம்.
சோழ வளநாடு சோறு உடைத்து என்ற பழமொழியைப் பொய்யாக்குகின்ற வகையில், அங்கே மீத்தேன், ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டி, பெட்ரோலிய மண்டலமாக ஆக்க முயன்றதை எதிர்த்துப் போராடினோம்.
ஏழு பேர் விடுதலை பற்றி இன்றைக்கு எல்லோரும் பேசுகின்றார்கள். அவர்களுடைய விடுதலைக்காக,
78 இலட்சம் ரூபாய் செலவு செய்த கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
அதுவும், இன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்ததுபோல,
அன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்த நிதியைத்தான் செலவிட்டு, தூக்குக்கயிறில் இருந்து அவர்களைக் காப்பாற்றி இருக்கின்றோம்.
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குஉரைஞர் ராம்ஜெத்மலானியை அழைத்துக் கொண்டு வந்து வாதாடச் செய்து,
தூக்குக் கயிறின் முடிச்சை அவிழ்த்தோம். இல்லை என்றால், அவர்கள் எப்போதோ தூக்கில் இடப்பட்டு இருப்பார்கள்.
அதன்பிறகு, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் ஆஜராவதற்காக,
நானும், வழக்கு உரைஞர் தேவதாஸ் அவர்களும், எண்ணற்ற முறை தில்லிக்குச் சென்று விசாரணையில் பங்கேற்றோம்.
இப்படி அந்த ஏழு பேர்களுடைய விடுதலைக்காக எவ்வளவு பாடுபட்டு முடியுமோ, அவ்வளவு பாடுபட்டு இருக்கின்றோம்.
நன்றியை எதிர்பார்த்து அல்ல.
அதற்காக நாம் பாடுபடவில்லை;
அவர்கள் யாரும் நமக்கு நன்றி காட்டவும் இல்லை. நன்றி தெரிவிக்கவும் இல்லை. அப்படி ஒரு அடையாளத்தைக் கூட அவர்கள் காட்டவில்லை.
அப்படிப்பட்டவர்களைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போய்,
அங்கே ஒரு கூட்டத்தை நடத்தி, ராம் ஜெத்மலானி அவர்களை,
சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்காடச் செய்து, தூக்குக் கயிறு என்ற மரண தண்டனைத் தீர்ப்பை மாற்றி, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றிக் கொடுத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
(பலத்த கைதட்டல்).
இன்றைக்கு எல்லோரும் அதைப்பற்றிப் பேசுகின்றார்கள்; அவர்கள் சொல்வதுதான் ஏடுகளில் வெளிவருகின்றது.
நம்மைப் பற்றிய செய்திகளே வருவது இல்லை. மாலை முரசு ஏட்டில் போடுகின்றார்கள். தந்தியில் போடுகின்றார்கள். அவ்வளவுதான்.
மற்ற ஏடுகளில் எந்தச் செய்தியும் கிடையாது. ஆனாலும் கூட, மக்களிடம் போய் நிதி திரட்ட முடிகின்றது என்றால், என்ன காரணம்?
மக்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும்; இவர்களிடம் காசு கிடையாது என்பதுவும் தெரியும்.
நெஞ்சில் மாசு அற்றவர்கள்;
இவர்கள் இந்த நாட்டுக்காக உழைக்கின்றார்கள் என்பதனால்,
நீங்கள் கேட்டால் கொடுக்கின்றார்கள்.
ஒரு தொகுதிக்கு இருபது கோடி செலவிடப் போகின்றார்கள்.
அவர்களோடு நம்மால் போட்டி போட முடியுமா? முடியாது.
நம்மிடம் நிதி இல்லை.
ஆகக்கூடுதலாக ஒரு தொகுதிக்கு 30 இலட்சம் கூடச் செலவிட முடியாது.
ஆனால், நம்மால் போராட முடியும்;
அப்படிப் போராடி வென்று இருக்கின்றோம்.
இப்போது எத்தனையோ புதிய கட்சிகள் முளைத்து இருக்கின்றன.
அதற்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன; செய்திகள் வருகின்றன. நான், இதே திருநெல்வேலி மண்ணில், தி.மு.கழகத்திற்காக 29 ஆண்டுகள் உழைத்தேன்.
கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று,இதோ அருகில் இருக்கின்ற பாளையங்கோட்டைச் சிறையில் 24 முறை அடைபட்டுக் கிடந்து இருக்கின்றேன்.
கடந்த 27 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்ற நமக்கு, ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
நிலைமை இப்படியே நீடிக்காது;
உறுதியாக மாறும். மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
எனக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற ஒரு தொண்டன்கூட இந்தக் கட்சியில் இல்லை.
(பலத்த கைதட்டல்).
அதனால், இந்தக் கட்சி உயிர்த்தன்மையோடு இருக்கின்றது; உறுதியாகப் பாடுபடுகின்றது.
நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து போய் விட்டன.
இனிமேல் என்ன வரப்போகின்றது? சட்டசபையில் ஒரு இடம் கூடக் கிடையாது. ஊர் ஆட்சி மன்றங்களிலும் பெரிய அளவில் இல்லை.
ஆனாலும் கூட இந்த இயக்கத்தை, மக்கள் மன்றத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி இருக்கின்றோம்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, கழகத்தின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து இருக்கின்றேன்.
சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்து இருக்கின்றேன்.
சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்து இருக்கின்றேன். (கைதட்டல்). அடுத்த ஆண்டிலேயே நிலைமை மாறும்.
ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்து இந்தக் கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்கின்றேன்.
இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்தி உழைத்து இருக்கின்றேன்.
இந்தக் கட்சிக்கு அடுத்த கட்டத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதற்காகத் திட்டங்களை வகுத்து இருக்கின்றேன். ஏற்றுக்கொண்ட கொள்கைகள், இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்காக, இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலும் வாழ்ந்தான் வைகோ என்று பெயர் பெற வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். (கைதட்டல்). உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். நிலைமைகள் மாறுகின்றபொழுது, தானாக முன்வந்து செய்திகள் போடுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டோம்.
அதை அப்படியே தொடர்ந்து வந்து,
இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்திலும் அவர்களோடு இணைந்து செயல்படுவது எனத் தீர்மானித்து வேலை செய்கின்றோம்.
காரணம், சனாதன, வருணாசிரம சக்திகள், இந்தி, சமற்கிருதத்தைத் திணித்து, திராவிட இயக்கக் கொள்கைகளை ஒழித்துக் கட்டக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், அவர்களை முறியடிக்க வேண்டிய கடமையைக் கருதி நாம் செயல்படுகின்றோம்;
எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பக்கபலமாக இயங்கிக்கொண்டு இருக்கின்றோம். நமக்கு இருக்கின்ற வலிமையை வீணாக்கி விடக் கூடாது என்பதனால், இணைந்து செயல்படுகின்றோம்.
நமக்கு எத்தனை இடங்கள் என்பது பிரச்சினை இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கைதான் என்றாலும், அதற்காக முணுமுணுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
நான் பொடா சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால்,
ஐந்து இலட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று இருப்பேன். ஆனால், நான் போட்டியிடவே இல்லை. கழகத்தின் ஒரு தொண்டனை நிறுத்தி வெற்றி பெறச் செய்தேன்.
இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
அதற்கு முன்பு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, எனக்குக் கேபினெட் அமைச்சர் பதவி தருகிறேன் என்று வாஜ்பாய் சொன்னபோதும், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையே?
ஒருபோதும் பதவியை நாடி நான் அரசியல் நடத்தவில்லை.
தமிழ்நாட்டின் நன்மைக்காகப் பாடுபடுகின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக நாம் பேசியதை, இப்போது புதிதாக வந்த கட்சிகள் பேசத் தொடங்கி இருக்கின்றார்கள்.
மீனவர்கள் பிரச்சினை, ஈழத்தமிழர்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுகின்ற தகுதி, நம்மைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நாம் தியாகம் செய்து இருக்கின்றோம்.
சமூக வலைதளங்களில் என் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி மீம்ஸ் போட்டார்கள் என்பதைத் தாங்க முடியாமல், சிவகாசி ரவி, தீக்குளித்து மடிந்தான். அதேபோல, என் மனைவியின் அண்ணன் மகன் தீக்குளித்து இறந்துபோனான். அருமையான பையன்.
என்னுடைய குடும்பத்தில் ஒருவரைப் பலி கொடுத்து இருக்கின்றோம்.
நான் தியாகம் செய்து இருக்கின்றேன். என் குடும்பம் தியாகம் செய்து இருக்கின்றது. அதைச் சொல்லிப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை.
இலட்சியத்திற்காக வாழுகின்றோம்.
அந்த உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம்.
நீங்கள் இந்த அளவுக்கு நிதி திரட்டிக் கொடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இதே திருநெல்வேலி மாவட்டத்தில், தி.மு.கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக நாங்கள் செல்கின்ற இடங்களில் எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கின்றோம்.
கூச்சத்தோடுதான் போய்க் கேட்போம்.
ஒரு பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்றால், செல்வன் ஒலிபெருக்கிக்கு 5000 ரூபாய் கொடுத்துவிட்டு வேலைகளைத் தொடங்குவேன்.
வசூல் செய்யப் போவோம். ‘உங்களிடம் இல்லாத பணமா? எங்களிடம் ஏன் வருகின்றீர்கள்?’ என, முகத்தில் அடித்தாற்போலக் கேட்டு விடுவார்கள்.
ஆனால், இன்றைக்கு நம் கட்சியைப் பற்றி யாரும் அப்படிப் பேச மாட்டார்கள். அத்தகைய நேர்மையான அரசியல் நடத்தி வந்திருக்கின்றோம்.
இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் நீங்கள் மக்களைச் சந்தித்து நிதி திரட்டி இருக்கின்றீர்கள்.
உங்களுக்கு நிதி கொடுத்தவர்கள் ஒன்றும் டாடா, பிர்லா கிடையாது. அம்பானி, அதானி கிடையாது.
மோடி கண் சிமிட்டினால் போதும், கோடிகோடியாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள்.
அப்படி யாரும் நமக்கு இல்லை.
நமக்கு ஒரு இலட்சம் கிடைத்தால் அது பெரிய தொகை. 50 ஆயிரம், 25 ஆயிரம் என்பதே பெருந்தொகைதான்.
5000, 500 ம் கூடப் பெரிய தொகைதான். அப்படி நீங்கள் நிதி திரட்டிக் கொடுத்து இருக்கின்றீர்கள்.
அதற்காக நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
பதவிகளை எதிர்பார்த்து வந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
ஆனால், நமக்கு இடங்கள் குறைவாகக் கிடைத்தால்,
நமது வீடுகளிலேயே கூடக் கேலி செய்வார்கள்.
தெருக்களில் கேலி செய்வார்கள். அதற்காகக் கவலைப்படக்கூடாது.
நீங்கள் வருத்தப்பட்டால், அதைவிடப் பலமடங்கு நான் வேதனைப்படுவேன்.
நமது இயக்கத்தில் தகுதி வாய்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
அவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை. கொடுக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாது.
இந்தச் சூழ்நிலையில் யாரைத் தேர்ந்து எடுப்பது எனத் திகைத்துக்கொண்டு இருக்கின்றேன்.
எத்தனை பேருக்குக் கிடைக்கின்றது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொண்ட கொள்கைகளைக் காக்க உழைப்போம்.
இலட்சியங்களை நிறைவேற்றப் போராடுவோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
நிதி திரட்டிக்கொடுத்த உங்கள் கைகளைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொள்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.02.2021

No comments:

Post a Comment