Thursday, February 4, 2021

உத்திரமேரூர் வெடி விபத்து! வைகோ இரங்கல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, மாத்தூர் கிராமத்தில், ஒரு தனியார் கல் குவாரியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது, வெடி வைத்ததன் காரணமாக மண் சரிந்து விழுந்ததில், சுமார் 40 பேர் சிக்கிக் கொண்டனர்; நான்கு பேர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

பொதுவாக, குவாரிகளில் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது, தொழிலாளர்கள் அனைவரையும் அந்த இடத்தை விட்டு வெகு தொலைவிற்கு அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் இங்கே, வெடி வெடிக்கும்போதும், தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுள்ளனர். அப்படிச் சென்ற ஒரு லாரி மீது பாறைகளும், மணலும் சரிந்து விழுந்து மூடி விட்டது. அந்த வண்டியில் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டனர். பாதை அடைபட்டு விட்டது. எனவே, மற்றவர்களால் உடனே அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை. மண்ணை அகற்றாமல், உள்ளே இறங்க முடியாது, முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற முடியவில்லை. வெடியினால் ஏற்பட்ட பொறி பறந்து சென்று, வெடி மருந்து சேமிப்புக் கிடங்கின் மீதும் விழுந்ததாகத் தெரிகின்றது. எனவேதான், விபத்தின் கடுமை தீவிரம் ஆகி இருக்கின்றது. 

எனவே, குவாரிகளில் வெடி வைக்கும் நடைமுறைகள் குறித்த கட்டுப்பாடுகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை, தமிழக அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பெரிய அளவில் வெடி வெடிக்கும்போது, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து விட வேண்டும். 

இந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பு ஈடு வழங்க வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் முழுமையாகக் கிடைத்திடவும், அவர்களுக்கும் தகுந்த இழப்பு ஈடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.02.2021

No comments:

Post a Comment