Thursday, July 22, 2021

ஜிஎஸ்டி. இழப்பு ஈடு; மாநிலங்களுக்குத் தந்தது என்ன? வைகோ MP கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 198

கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. 2020-21, 2021-22 ஆம்  நிதி ஆண்டில், ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு ஈட்டுத் தொகை எவ்வளவு? மாநில வாரியாகப் பட்டியல் தேவை.

2. நடப்பு நிதி ஆண்டில், மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகையை, ஒன்றிய அரசு முழுமையாக வழங்கி விட்டதா?

3. இல்லை என்றால், வேறு ஏதேனும் மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்தீர்களா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள் தேவை.

4. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள், தாராள மருத்துவ உதவிகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனவா?

5. அவ்வாறு இருப்பின், அதற்கு ஒன்றிய அரசின் விளக்கம் என்ன?

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்திரி எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

மாநிலங்களுக்கு இழப்பு ஈடு வழங்குவது தொடர்பாக, 2017 ஜிஎஸ்டி சட்டத்தின் 8 ஆவது பிரிவின்படி, இழப்பு ஈட்டுத் தொகை, ஜிஎஸ்டி இழப்பு ஈட்டு நிதி என்ற தனிக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றது; அதே சட்டத்தின் பிரிவு 10(1) இன்படி, இது, பொதுக்கணக்கின் கீழ் வருகின்றது.

ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை, பிரிவு 10(2) இன்படி, ஒன்றிய அரசு ஈடு செய்யும்.

அதன்படி, 2017-18; 18-19; 19-20 ஆகிய நிதி ஆண்டுகளில், வழங்க வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கின்றோம். ஆனால், பொருளாதாரச் சூறாவளி காரணமாக, ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது; அதே வேளையில், கூடுதல் இழப்பு ஈட்டுத் தொகைக்கான தேவை ஏற்பட்டு விட்டது. 2020 ஏப்ரல் 20 முதல், 2021 மார்ச் முடிய, 91000 கோடி ரூபாய், மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், வருவாய் பற்றாக்குறை காரணமாக, முழுத்தொகை வழங்கப்படவில்லை. மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகை குறித்த விவரங்கள், இத்துடன் இணைப்பில் உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.

4,5 கேள்விகளுக்கான விளக்கம்:

ஜிஎஸ்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்ட இழப்புக்கு, 2017 ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஈடு கோரி, சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன; அத்துடன், ஃஎப்ஆர்பிஎம் வரையறையைக் கூட்ட வேண்டும்; மருத்துவக் கருவிகளை வாங்குவதற்குக் கூடுதல் நிதி தர வேண்டும்; மானியப் பகிர்வு குறித்து, பொதுவான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

ஒன்றிய அரசு அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது; இயன்ற அளவு உதவிகள் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பு ஈடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து, ஜிஎஸ்டி மன்றத்தின் 41 மற்றும் 42 ஆவது கூட்ட அமர்வுகளில், விரிவாகப் பேசி இருக்கின்றோம்.

2020-21 ஆம் நிதி ஆண்டில், இழப்பு ஈடு தருவதற்கான நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஒன்றிய அரசு, 1.1 இலட்சம் கோடி ரூபாய் கடன் திரட்டி, அந்தத் தொகையை மாநிலங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கி இருக்கின்றது.

ஜிஎஸ்டி மன்றத்தின் 43 ஆவது கூட்டத்தில் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆண்டைப் போலவே, நடப்பு நிதி ஆண்டில், மேலும் 1.59 இலட்சம் கோடி ரூபாயை, ஒன்றிய அரசு, பொதுச்சந்தையில் திரட்டி, அந்தத் தொகையை மாநில அரசுகள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கும். அதன்படி, 15.07.2021 அன்று, ரூ 75000 கோடி, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. கூடுதலாக, இழப்பு ஈட்டு நிதியில் உள்ள இருப்பைப் பொறுத்து, வழக்கமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகையையும், ஒன்றிய அரசு வழங்கும்.

மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு தர வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகை பட்டியல்படி, தமிழ்நாட்டுக்கு, ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை ரூ 6155 கோடியும்; 2021 ஏப்ரல் மே மாதங்களில் ரூ 3574 கோடியும், ஒன்றிய அரசு தர வேண்டும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2021

No comments:

Post a Comment