Friday, July 30, 2021

சென்னை வான்ஊர்தி நிலையப் பெயர்ப் பிரச்சினை; வைகோ MP க்கு, அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்!

கடந்த ஜூலை 17 ஆம் நாள், தில்லியில், வான்ஊர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ,எம்.பி., அவர்கள் நேரில் சந்தித்து, ஒரு கோரிக்கை விண்ணப்பம் அளித்து இருந்தார். சென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட, அண்ணா, காமராஜர் பெயர்ப்பலகைகளை, மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு, அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா விளக்கம் அளித்து, இன்று (28.07.2021) கடிதம் எழுதி உள்ளார். கடித விவரம்;

அன்புள்ள திரு வைகோ அவர்களுக்கு,

வணக்கம். சென்னை வான்ஊர்தி நிலையத்தின், அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையப் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டது குறித்து, ஜூலை 17 ஆம் நாள் தாங்கள் கடிதம் எழுதி இருந்தீர்கள்.

சென்னை வான்ஊர்தி நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பழைய உள்நாட்டு முனையக் கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. எனவே, காமராசர் உள்நாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அந்தப் பெயர்ப்பலகை மீண்டும் பொருத்தப்படும்.

அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை, வான்ஊர்தி நிலையத்தில் வான் ஊர்திகள் வந்து இறங்குகின்ற பகுதியிலும், பழைய பன்னாட்டு முனையத்தின் நகர்ப்புறப் பார்வைப் பக்கத்திலும், அதே இடங்களில் அப்படியே உள்ளது. எனினும்,  அடுத்த கட்ட விரிவாக்கத்திற்காக, அந்தக் கட்டடமும் இடிக்கப்பட உள்ளது; கட்டுமானப் பணிகளைத் தொடங்குகின்றபொழுது, அந்தப் பெயர்ப்பலகை அகற்றப்படும்; கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை, மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும்.

வான் ஊர்தி நிலையங்களைப் பராமரித்து வருகின்ற, இந்திய வான் ஊர்தி நிலையங்கள் ஆணையத்தின் வழக்கப்படி, இணையதளங்களில், காமராஜர் உள்நாட்டு முனையம் என்றோ, அண்ணா பன்னாட்டு முனையம் என்றோ குறிப்பிடுவது இல்லை; சென்னை பன்னாட்டு வான் ஊர்தி நிலையம் என்றே குறிப்பிடப்படுகின்றது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு, அமைச்சர் விளக்கம் எழுதி இருக்கின்றார்.

தலைமை நிலையம்
 மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8
29.07.2021

No comments:

Post a Comment