Sunday, July 25, 2021

வைகோ MP கேள்விகள்; தொழில் வணிகத்துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 537

மாண்புமிகு தொழில் வணிகத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

1. முதன்முறை முயற்சியில் தொடங்கப்படுகின்ற நிறுவனங்கள் (Start up) என்ற திட்டத்தின் குறிக்கோள்கள் யாவை?

2. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ், வணிகர்கள், தொழில் முனைவோர்களுக்கு, நிதி உதவிகளும், ஊக்கத்தொகைகளும், எந்த வகைகளில் வழங்கப்பட்டன?

3. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிதி உதவி பெற்றோர் எத்தனை பேர்? அதுகுறித்த புள்ளி விவரங்கள் தேவை.

4. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் எவ்வளவு புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன?

தொழில் வணிகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் விளக்கம்

1. முதன்முறை முயற்சியாக புதிய நிறுவனங்களைத் தொடங்குதல் என்ற  (Start Up India) திட்டம், 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 26 குடியரசு நாளில் தொடங்கப்பட்டது.

வலுவான சூழலைக் கட்டமைப்பது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது,  முதன்முறையாகத் தொழில் முயற்சிகளைத் தொடங்குவோருக்கு உதவிகள்அளிப்பது ஆகிய நடவடிக்கைகளால், பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளைத் தோற்றுவித்து, நாட்டின் பொருள் ஆக்கத்தை வளர்ப்பது ஆகியவை, இந்தத் திட்டத்தின் முதன்மைக் குறிக்கோள்கள் ஆகும்.

2. இதற்காக, ரூ 10000 கோடி நிதியம் ஒன்றை, தொழில் மற்றும் உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கின்ற துறை ( Promotion of Industry and Internal Trade), 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம்   அறிவித்தது.

இந்தியாவில்  தொழில் வணிக வளர்ச்சிக்கு வலுவான சூழலைக் கட்டமைக்க, இந்த நிதி உதவிகள் மிகவும் தேவை. புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டுவது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது, வணிகம் வளர்ப்பது, பங்கு முதல் திரட்டுவது போன்றவை இதன் குறிக்கோள்கள் ஆகும்.

இந்த நிதியம், முதன்முறை முயற்சி தொழில் நிறுவனங்களில் நேரடியாக முதல் போடாது. ஆனால், செபியில் பதிவு பெற்ற, மாற்று முதல் நிதியங்களுக்கு (Alternate Investment Funds) நிதி உதவி அளிக்கும்.  சான்றாக, னுயரபாவநச குரனேள இல் முதல் போடும்போது, அவர்கள் அதற்கு மாற்றாக, இந்திய முதன்முறைத் தொழில் முனைவோரின் நிறுவனங்களில் பங்கு முதல் போடுவார்கள்.

தொழில் மற்றும் உள்நாட்டு வணிக ஊக்குவிப்புத்துறையில் (DPIIT- Department for Promotion of Industry and Internal Trade) பதிவு பெற்று, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்தத் திட்டத்தில் உதவிகள் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர்.

2021 ஜூன் 2 ஆம் நாள் நிலவரப்படி, செபியில் பதிவு பெற்ற, 72  மாற்று முதல் நிதியங்களுக்கு, சிட்பி (SIDBI) வங்கி, 5409.45 கோடி நிதி உதவி அளிக்க, ஒப்புக்கொண்டு உள்ளது. இந்த நிதியத்தில், 36,790 கோடி நிதி உள்ளது.

முதன்முறை தொழில் தொடங்குவோருக்கான நிதியில் இருந்து 1541 கோடி ரூபாய் எடுத்து, மொத்தமாக 5811 கோடி ரூபாய்கள், 443 முதன்முறை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

DPIIT ஊக்கத்தொகை விவரப் பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. DPIIT, முதல்முயற்சி தொழில் தொழில் நிறுவனங்களுக்கான விதை நிதியம் (Startup India Seed Fund Scheme -SISFS) ஒன்றைத் தோற்றுவித்து இருக்கின்றது. அதன் வழியாக, கருத்து உருவிற்கான சான்றுகளை ஆக்குவதற்கு, 945 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்; சான்றாக, முன்னோடி வளர்ச்சி (Prototype develoment), சோதனைகள், சந்தை நுழைவு, வணிகமயம் ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள்.

இத்தகைய முயற்சிகள், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்; முதலீட்டாளர்களை ஈர்ப்பது, முதல் திரட்டுவது, பிற வணிக நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது போன்ற வழிமுறைகளைக் கற்றுத் தரும். இந்தத் திட்டம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 3600 தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும்.

2021 ஜூலை 15 ஆம் நாள் நிலவரப்படி, தொழில் முனைவோருக்கான விதை நிதியத்தின் திறன்ஆய்வு அறிஞர்கள், 2 தொழில் முனைவோருக்கு, ரூ 8 கோடி நிதி உதவி அளிக்கத் தேர்வு செய்துள்ளனர்.

3. 2021 ஜூலை 7 ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2408 முதல் முயற்சி தொழில் நிறுவனங்கள், DPIIT ஊக்கத் தொகை பெறத் தகுதி பெற்று உள்ளன. ஆண்டுவாரியான விவரப் பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

4. அதேபோல, 2021 ஜூலை 7 ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், DPIIT பதிவு பெற்ற முதல் முயற்சித் தொழில் நிறுவனங்களில், 26327 பேர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளளனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.07.2021

No comments:

Post a Comment