Wednesday, September 28, 2022

அக்டோபர் 2 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மறுமலர்ச்சி தி.மு. கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை!

02.10.2022 அன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்த திட்டமிட்டுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தினை மறுமலர்ச்சி தி.மு. கழகம் வரவேற்று ஆதரவு அளிக்கிறது.


இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி மக்களை வர்ணாசிரம அடிப்படையில் பிளவுபடுத்தும் சங் பரிவார் சக்திகள் அண்மைக்காலமாக தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது.


இப்படிப்பட்ட சூழலில் உத்தமர் காந்தியார் பிறந்த நாள் - பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் ஆகிய சிறப்பிற்குரிய அக்டோபர் 2, அன்று நடைபெற உள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மறுமலர்ச்சி தி.மு. கழகம் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழகத் தோழர்களுடனும், நிர்வாகிகளுடனும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

28.09.2022

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வைகோ கடிதம்!

மனித உரிமைப் பேரவையில் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச குற்ற இயல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தரவும், சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யவும், ஈழத்தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்ப ஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரவும் வேண்டுகோள் விடுத்து இந்தியாவின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று 26.09.2022 எழுதியுள்ள கடிதத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.09.2022

Dear Prime Minister Hon’ble Narendra Modi ji!

Vanakkam.

I am writing this for your kind consideration, with reference to the current 51st session of the UN Human Rights Council at Geneva, in which the Sri Lankan Tamils’ issue is under consideration, and requesting the Government of India to involve itself proactively in favour of the Tamil’s seeking justice against the international crimes of genocide, war crimes and crimes against humanity as borne out by various UN reports and the periodic reports submitted by the UN High Commissioners for Human Rights.                      

The outgoing UN High commissioner for Human rights has on September 6 submitted her Report on the Human rights situation in Sri Lanka, in which she has reiterated her position that Sri Lanka may be referred to the International Criminal Court and member states may apply the principle of universal jurisdiction to prosecute the perpetrators.

The Core Group on Sri Lanka has proposed a draft at the UNHRC for Resolution No. 51/1 which is mostly a replica of the earlier Resolution 46/1. The Resolution is slated to be voted on in the first week of October.

The stand taken by our Hon’ble Minister for External Affairs Mr. Jayashankar at the UN  Security council against impunity for war crimes in the context of the Ukraine-Russia war is a welcome sign which gives us hope that India would apply the same yardstick to the Sri Lankan war, too.

In this background I request you to consider the following considered demands of the Tamil people:

1)   India should support the upcoming Resolution 51/1 with amendments in favour of the demands of the Tamils for (a) referring the Sri Lankan state to the International Criminal court, (b) instituting an international independent criminal investigation into the international crimes committed by Sri Lanka against Tamils based on the OISL Report, 2015 and Resolution 30/1 of UN Human Rights Council and (c) calling for a UN sponsored Referendum on the Political solution to the Tamil national question.

India should on no account oppose or abstain from voting on the upcoming Resolution 51/1

2)   India should provide financial help to the Office of the UN High Commissioner for Human Rights in setting up an Evidence Collecting mechanism as ordained by Resolution 46/1 and reiterated by the upcoming Resolution.

The Tamils of Eelam, of Tamil Nadu and all over the world earnestly request you to take the lead at the UNHRC for bringing justice, reconciliation and peace to the suffering people.

Thanking You,

Yours sincerely
Vaiko

Sunday, September 25, 2022

அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சைக் கண்டித்து மறுமலர்ச்ச்சி தி.மு.க. ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்! வைகோ MP அழைப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களின் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், மீண்டும் 06.10.2022 அன்று மாலை நடைபெற உள்ளது.


அமித்ஷாவின் இந்தி வெறி பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 06.10.2022 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு என்னடைய தலைமையில் நடைபெற்ற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்களையும், கழகத் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

25.09.2022

Saturday, September 24, 2022

இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ MP கண்டனம்!

அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இசுலாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.


எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.


ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன.


இந்த அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக்கொண்டு வருகிறது.


இந்த அமைப்புக்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும், நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.


இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது. அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

24.09.2022

Friday, September 23, 2022

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க! வைகோ MP கோரிக்கை!

சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆட்பட்டு வருகின்றார்கள்.


கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கப்பல் மூலமாக கனடாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சிங்கள இந்திய ஏஜென்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாயைப் பெற்றுக் கொண்டு, 38 ஈழத் தமிழர்களை இலங்கையில் இருந்து படகில் ஏற்றி வந்து, கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏமாற்றி விட்டு விட்டு சென்று விட்டனர்


 அதற்கு பின்னர் 10.06.2021அன்று  இவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்து, மங்களூர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய புலனாய்வுப் பிரிவு இவர்களை விசாரணை செய்து, இவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஏமாற்றப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்யலாம் என்று 8.9.2021 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.


அதற்கு பின்னர் அவர்கள் பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் கொண்டு வந்து சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.


மீண்டும் இதுகுறித்து தேசிய புலனாய்வு பிரிவு 30.10.2021 அன்று மறு உத்தரவு பிரபித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது.


இதன்பின்னும் தங்களை விடுவிக்காததைக் கண்டித்து இவர்கள் அறவழியில் போராடியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் திரு மஞ்சுநாத் அவர்கள் இவர்களில் 10 பேரை மட்டும் நீலமங்கலம் சிறப்பு முகாமுக்கு மாற்றம் செய்து உள்ளார்கள். அங்கேயும் சுகாதாரம் இல்லாமல் 10+10 அளவுள்ள சிறிய அறைக்குள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேரும் பரப்பன அக்ரகார சிறையிலேயே சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.


எனவே, பெங்களூர் பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப் பட்டுள்ள தமிழர்களை ஒன்றிய அரசு  உடனடியாக விடுதலை செய்து, இலங்கை தூதரகம் மூலம் அவர்கள் தாய் நாடு திரும்ப   ஆவன செய்திட வேண்டுகிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

23.09.2022

Wednesday, September 21, 2022

பேரதிர்ச்சி. அண்ணன் முராத் புகாரி மறைவுக்கு ஒமான் மதிமுக ஆழ்ந்த இரங்கல்!

தென் மாவட்ட கழக செயலாளர்கள் பிரிந்து சென்ற பிறகு எழுச்சியாக அடுத்த கூட்டம் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


வேகமாக கூட்டபட்ட கூட்டம். போதிய நேரமின்மையிலும் மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து கொண்டு வந்தார். அதற்கு நன்றி தெரிவிக்க அண்ணன் Muradbuhari அவர்களுக்கு அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென்று அழைத்தேன்.

இவ்வளவு பேருக்கு வேகமாக உணவு தயாரித்து கொடுத்திருக்கிறீர்களே அண்ணே எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவரது பதில் என்னெவென்றால் தலைவர் சொன்னால் செய்து முடிப்பதுதான் தம்பி என் கடமை என்று முடித்துவிட்டார்.

பின்னர் பரஸ்பரம் குடும்பம் பற்றி உரையாடி விடைபெற்றேன்.

அடுத்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினேன். அண்ணன் பேசும்போதெல்லாம் அன்பை பொழிந்தார். ஒமான் கழக நிகழ்வை பற்றி கேட்டு தெரிந்துகொள்வார்.

அண்ணன் முராத் முகாரி அவர்களுக்கு இது போன்ற எண்ணற்ற அன்பு தம்பிகள் இருப்பார்கள்.

உயிரற்ற உங்கள் உடல் உயிருள்ளது போலவே இருக்குணே...

இயற்கையை பரிசோதித்து விட்டு எழுந்து வாருங்கள் அண்ணே...

தலைவர் துடி துடித்து மாமா என்று கதறி அழைக்கிறார்.

நீங்கள் இல்லாதது பேரிழப்பு அண்ணே...

எத்தனை பேருக்கு பசியாற்றிருப்பீர்கள். அவர்களெல்லாம் எப்படி கலங்கி தவிக்கிறார்கள் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது.

இயற்கையோடு கலந்துவிட்டீர்கள்.

இளைப்பாறுங்கள்.

ஒமான் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
21-09-2022

மறுமலர்ச்சி திமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு! நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது, என் உடம்பெல்லாம் நடுங்கியது. கழகத்தின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.


ஒவ்வொரு ஆண்டும் இசுலாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார்.


ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தன்றும் நண்பகல் உணவைத் தயாரித்துக் கொண்டுவந்து தருவார்.


அழகான தோற்றம் கொண்டவர். மலர்ந்த முகத்தோடு, மாறாத புன்சிரிப்போடு அவர் உலவுகின்ற காட்சி என் கண்ணை விட்டும், நெஞ்சை விட்டும் அகலவில்லை.


நான் எத்தனையோ துக்கங்களைத் தாங்கி இருக்கிறேன். ஆனால் இது பேரிடி போல் என் தலையில் விழுந்துவிட்டது. எப்படி மறப்பேன் அந்த முகத்தை; அவர் பாசத்தை; அவர் காட்டிய எல்லையில்லாத அன்பை. இனி ஒருவரை அப்படிக் காண முடியாது நான்.


கழகத்தால் மூன்று நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும்.


ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும்.


யாரால் எனக்கு ஆறுதல் சொல்ல முடியும். நான் நொறுங்கிப் போய்விட்டேன். பொங்கி வரும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கழகத் தோழர்கள் இந்த அறிவிப்பின்படி துக்கம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

21.09.2022

Tuesday, September 20, 2022

மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக 60 தமிழர்கள்; விரைந்து மீட்பு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ MP வலியுறுத்தல்!

மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்தியப் பொறியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் முதலான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


தாய்லாந்து நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், ஒரு குற்றமும் செய்யாத நிலையில் இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.


அவர்களை மீட்டு, தாயகத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்.


வைகோ                         

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

20.09.2022

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்! வைகோ கடும் கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில்  பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மான முறையில் இறந்தார்.


மாணவியின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக் கொணர்வது பத்திரிக்கை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வந்தனர். தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள் முன் வைத்தார்.


இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.


அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் என தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியக் கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.


ஜனநாயக நாட்டில் பத்திரிக்கை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்

சென்னை - 8

20.09.2022

Saturday, September 17, 2022

சமுக நீதி நாள். தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாள் விழா இன்று 17.09.2022 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் தாயகத்தில் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மறுமலர்ச்சி திமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமித்ஷாவின் ‘இந்தி வெறி’ பேச்சைக் கண்டித்து மறுமலர்ச்சி திமுக ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்! வைகோ MP அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்த நாள் முதல், ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே நாடு என்ற முழக்கத்துடன், மாநிலங்களுக்கு எதிரான போக்கினை நாள்தோறும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.


இந்தி பேசாத மாநிலங்களின் மீது சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் மூர்க்கத்தனமாகத் திணித்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்திற்கு தலைமை வகித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றும்போது, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உரையாற்றினார்.


இந்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், வடகிழக்கு மாநிலங்களில் 22,000க்கும் அதிகமான இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அந்தக் கூட்டத்தில் ஆணவமாகப் பேசினார்.


நாடு முழுக்க கண்டனக் குரல் எழும்பியதும், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று சமாளித்து, மழுப்பி பின்வாங்கிக் கொண்டார் அமித்ஷா!


இப்பொழுது மீண்டும் இந்தியைத் திணிக்கும் ஆர்வத்தோடு, இந்திய வரலாற்றின் ஆன்மாவை கற்றுக்கொள்ள அனைவரும் இந்திமொழியைக் கற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.


“அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான்” என்றும் அமித்ஷா இந்தி வார விழாவில் கொக்கரிக்கிறார்!


தொன்மைவாய்ந்த நம் தமிழ்மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, உலகின் உயர்ந்த மொழி என்ற பொய்த் தோற்றத்தை அமித்ஷா புனைய முனைவது, இந்தி ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பாட்டிற்கும் நேர் எதிரானது ஆகும் இது!


சமஸ்கிருத வளர்ச்சிக்கும், இந்தி மொழி வளர்ச்சிக்கும் மலை அளவு நிதி ஒதுக்கி, தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் கடுகளவு நிதி ஒதுக்கும் பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்தி பேசாத மக்களிடம் புகுத்தும் பா.ஜ.க. அரசு, “ஒருமைப்பாடு” என்பதைக் காட்டி, இந்தியை நம்மீது மீண்டும் திணிக்கும் அபாய எச்சரிக்கையாகவே அமித்ஷாவின் பேச்சை நாம் கவனிக்க வேண்டும். இதனைக் கண்டித்து தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.


அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு காரணமாக மைசூரு நகரில் இந்திநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்திநாள் கொண்டாட்டத்திற்கு எதிராக, விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது!


எனவேதான், அமித்ஷாவின் இந்திவெறிப் பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் அறப்போருக்கு அழைப்பு விடுக்கிறது.


24.9.2022 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்!


பெரியாரும் - அண்ணாவும் அரும்பணியாற்றிய - திராவிட இயக்கம் வேரூன்றி நிற்கும் தமிழ் மண்ணில், தமிழ் மொழி உணர்வு பட்டுப்போகாமல் செழித்து நிற்கிறது; போராட்ட போர்க்குணம் ஆழித்தீயாய் என்றும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை அகிலத்திற்கு பறைசாற்றிட, கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வாரீர்! வாரீர்!! என அழைக்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

17.09.2022

Friday, September 16, 2022

குவைத் நாட்டில் ஆர்.முத்துக்குமரன் படுகொலை! குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் வைகோவிற்கு கடிதம்!

குவைத் நாட்டில் இறந்த ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கை..! 


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் தனது பிழைப்புக்காக, 03.09.2022 அன்று, குவைத் நாட்டிற்கு சென்று உள்ளார். ஆர்.முத்துக்குமரன் அவர்களுக்கு விசா அனுப்பி வைத்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர் 07.09.2022 அன்று, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார்.


இந்தத் தகவல் 09.09.2022 அன்று, பிற்பகல் 4 மணியளவில், அவரது மனைவி மு.வித்யா அவர்களுக்கு தெரிந்ததோடு, அந்தத் தகவல் உண்மை எனவும் உறுதி செய்யப்பட்டது.


ஆர்.முத்துக்குமரன் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை ஆகும். எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரை கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தரவும், தனது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் சடலத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறு, திருமதி மு.வித்யா அவர்கள் 10.09.2022 அன்று தலைவர் வைகோ அவர்களுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதினார். 


தகவல் அறிந்த தலைவர் வைகோ அவர்கள் இது தொடர்பாக, 14.09.2022  இந்திய வெளியுறவுத்துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார். 


தலைவர் வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று, பதில் அளித்த குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம் எனவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மறைந்த முத்துக்குமரன் அவர்களின் உடல்  15.09.2022 அன்று மதியம் 02.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து அடையும் எனவும் தெரிவித்து இருந்தார்கள்.


தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்வும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் தலைவர் வைகோ அவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதற் கட்ட விசாரணை  துவங்கப்பட்டு உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்,

துரை வைகோ

தலைமைக் கழகச் செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.,

16.09.2022

அரசியல் வழி தமிழ், இலக்கியம், கலை பண்பாடு வளர்த்த மலேசிய ‘துன்’ சாமிவேலு மறைவு! வைகோ MP இரங்கல்!

மலேசிய இந்தியர் காங்கிரசின் எழுபத்தாறு ஆண்டு கால வரலற்றில், அறுபது ஆண்டுகள்   அதனுடன் இணைந்து பயணித்தவர்; பணியாற்றியவர். முப்பது ஆண்டுகள் தலைமைத்துவம் வழங்கியவர் ‘துன்’ சாமிவேலு அவர்கள் ஆவார். 8.3.1936 இல் பிறந்த அவர் நேற்று 15.09.2022 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.


கட்டடக் கலை அலுவலகத்தில் ஓடும்பிள்ளையாக, அலுவலகத் தம்பியாகப் பணியைத் தொடங்கிய சாமிவேலு அவர்கள், பின்னர் அதே துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.


1950 ஆம் ஆண்டுகளில் அகில மலாயா தமிழர் சங்கம் நடத்திய தமிழர் திருநாள் விழாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்


1974ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 1978ஆம் ஆண்டு துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.


பின்னர் 1979ஆம் ஆண்டு அமைச்சரவையில் இடம் பெற்றார்.  அன்றிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.


ம.இ.கா. தலைமைத்துவத்தை ஏற்றிருந்தபோது  இந்திய சமுதாயத்தை உருமாற்றம் செய்ய முயற்சிகள் பல மேற்கொண்டார்.


எம்.ஐ.இ.டி. என்ற கல்வி இயக்கத்தின்வழி பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை பாட்டதாரிகளாக்கினார்.


இந்தியர்களுக்காக உலகத்தரம் வாய்ந்த ஏய்ம்°ட் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.


மலேசிய அரசியல்வாதிகளுள் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்தவர் சாமிநாதன் அவர்கள்தான்.  அதற்கு ஈடான புகழைச் சுமந்தவரும் இவர்தான்.


மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்த  இந்தியர் என்கின்ற சிறப்பு இவருக்கு உண்டு. அதேவேளையில், மலேசிய இந்தியர் காங்கிர° எனும் இந்தியர்களின் அரசியல் கட்சியில் நீண்ட காலம் தலைவர் பதவியை வகித்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எந்தச் சூழலிலும் எந்தக் களத்தையும் சந்திக்க தயங்காதவர்.  அரசியல்வாதியாக இருந்தாலும் கலை, இலக்கியம், சமயம், பண்பாடு என எல்லா முன்னெடுப்புகளுக்கும் துணை நின்றவர்.


தமிழ் நூல் வெளியீடுகளுக்கு புதிய இலக்கணம் கண்டார். குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு நிழலாக இருந்தவர். புத்தக வெளியீடுகளில்  கலந்துகொண்டு கணிசமான தொகையைக் கொடுத்து எழுத்தாளர்களுக்கு ஆதரவளித்தார். அதேவேளையில், தன் அரசியல் சகாக்களை நூல் வெளியீடுகளுக்கு உதவச் சொல்லி  எழுத்தாளர்களுக்கு உதவியவர்.


பேரறிஞர் அண்ணா அவர்கள் மலேசியாவிற்கு சென்றபோது, அந்த ஏற்பாட்டுக் குழுவிலும், பின்னர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது அதன் ஏற்பாட்டுக் குழுவிலும் இருந்து பணியாற்றியவர்.


கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும், ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்தியவர்.


மலேசியாவின் முதன்மையான விருதாக விளங்கும் ‘துன்’ விருதை சம்மந்தன் அவர்களுக்குப் பிறகு இரண்டாவதாகப் பெற்ற இந்திய வம்சாவளி தலைவர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர்.


அப்பேர்பட்ட ‘துன்’ சாமிவேலு அவர்களின் மறைவு மலேசியத் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.


அவரது மறைவால் துயருரும் அவரது குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

16.09.2022

Thursday, September 15, 2022

மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா!

சென்னை அண்ணா கலையரங்கில் மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு 2022 செப் 15 ஆம் நாள் நடைபெற்றது.

தென்சென்னை கிழக்கு மாவட்ட கழக ஏற்பாட்டில் நடந்த மாநாடு சிறப்பாக இருந்தது. மேலும் வடசென்னை கிழக்கு மாவட்டம், வடசென்னை மேற்கு மாவட்டம், தென்சென்னை மேற்கு மாவட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் அயராத பணி பாராட்டத்தக்கது.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் அரங்கினுள்ளும் வெளியிலும் கழக கண்மணிகளும், பொதுமக்களும் அமர்ந்திருந்து உரை கேட்டனர்.

Wednesday, September 14, 2022

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில், நட்டம் ஏற்பட்டதால் கடையை மூடிவிட்டார்.


வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.


குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.


இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து, அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவலைத் தெரிவித்து, முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.


ஒன்றிய வெளியுறவுத்துறை இதில் உடனடியாகத் தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், குவைத் நாட்டிடமிருந்து முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு உரிய நட்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


இது தொடர்பாக இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சரிடமும் தொடர்புகொண்டு வலியுறுத்த இருக்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

14.09.2022

Friday, September 9, 2022

நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவ கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். வைகோ வேண்டுகோள்!

சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.


இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மன உளைச்சலில், கடந்த ஜூன் மாதம் தன்னால் முடியவில்லை என்று குரல் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த அமுதா, ஆவடியை அடுத்த பாண்டே°வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் லக்சனா சுவேதா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பிலிப்பைன்° நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை இணையத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்து வந்தார்.


எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-ஆவது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் “நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.


நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெனி என்ற ஜெயசுதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


நீட் நுழைவுத்தேர்வு  திணிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் ,நேற்று மாணவி லக்சனா சுவேதா  தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.


தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால். தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது.


பா.ஜ.க அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது.


ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.


நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள் ,தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.


மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

09.09.2022

Sunday, September 4, 2022

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும்! வைகோ MP அறிக்கை!

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், கன்னித் தமிழ் வளர்த்த கவிஞர் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் திரு. உலகநாதன், பரமாயி அம்மையாருக்கும் 1872 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.

ஒட்டப்பிடாரத்தில் பள்ளிப் படிப்பையும், தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியில் உயர்நிலை கல்வியையும், திருநெல்வேலி இந்து கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் திருச்சியில் சட்டம் பயின்று 1895இல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார்.

வழக்கறிஞர் தொழிலில் உயர்ந்து விளங்கினாலும், நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டு கிடப்பது பற்றியே அவரது சிந்தை முழுவதும் நிரம்பி இருந்தது.

1908ஆம் ஆண்டு நடந்த கோரல் நூற்பாலை நிறுவனத்தின் தொழிலாளிகள் முன்னெடுத்த 9 நாள் வேலை நிறுத்தம், ஆங்கிலேயர்களை நிலைகுலைய செய்தது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, மிகக் குறைந்த கூலி தருவது, விடுமுறை நாட்கள் தடுப்பது போன்ற பல தொழிலாளர் விரோத செயல்கள் கோரல் ஆலையில் நடைபெற்றன. உச்ச கட்டமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை வாங்கப்பட்டு, தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது. கையில் கைரேகை பார்க்க இயலும் காலை நேரம் முதல், மாலை நேரம் வரை நூற்பாலை ஓட்டியதால் ‘ரேகை பார்த்து ஓட்டுதல்’ என்றே இந்த கொடுமை அழைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார் வ.உ.சி.

9 நாள் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய நிதி திரட்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அளித்ததன் காரணத்தினால், அந்த வேலை நிறுத்தத்தின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொண்டார். வேலைநிறுத்தத்தினை தடுக்க இயலாத ஆங்கிலேய அரசு போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவின் செல்வ வளங்களை கொள்ளையடிக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்து பேசத்தொடங்கிய வ.உ.சி. அவர்கள், ‘பிரிட்டிஷ் இந்திய °டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற ஆங்கிலேய கப்பல் சரக்கு மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை எதிர்த்து ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் 2 கப்பல்களை வாங்கி இலங்கை இந்தியா இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். இது ஆங்கிலேய அரசுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசால் வ.உ.சி. அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அவரது கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் கொடுமையான தண்டனையாக மாடுகளால் இழுக்கப்படும் செக்கு ஒன்றை தனி மனிதராக இழுக்க வேண்டும் என்று கொடுமை படுத்தப்பட்டார்.

சிறை மீண்ட வ.உ.சி தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன்னை அர்ப்பணித்தார்.

நீதிக்கட்சியின் சமூகநீதி கொள்கையை ஆதரித்த வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாரின் இலட்சிய தோழராகவும் விளங்கினார்.

வீரத்தமிழர் வ.உ.சி. புகழ் கொடி விண்முட்ட என்றும் பறக்கும்.

தியாகத் தழும்புகளை பெற்ற வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது. வ.உ.சி யின் 151 ஆவது பிறந்த நாளில் அதற்கான உறுதியை எடுப்போம்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
04.09.2022

செப்டம்பர்-5 ,ஆசிரியர் தினம். வைகோ MP வாழ்த்து!

"குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்

அமைபவன் நூலுரை ஆசிரியன்னே"

என்று நன்னூல் ஆசிரியர்க்கு இலக்கணம் வகுத்துள்ளது.

நிலம், மலை, நிறைகோல், மலர் போன்றவை உணர்த்தும் பொறுமை, உயர்வு, நடுவுநிலைமை, அனைவராலும் மதிக்கக்கூடிய பண்பு ஆகியவை கைக்கூடியவராக ஆசிரியருக்கு மேன்மை தருவனவாகும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த ஆசிரியர்களை போற்றும் வகையில் ,ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய இந்திய குடியரசு முன்னாள் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம்.

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.

மாணவர்களை பட்டைத் தீட்டி வைரமாக ஒளிர செய்ய ஒரு சிறந்த ஆசிரியரால் தான் முடியும். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
04.09.2022

Friday, September 2, 2022

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவு. வைகோ MP இரங்கல்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்’ எனும் அமைப்பை, அவரது மறைவுக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்திய க.கா.ரா. லெனின் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தது பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்.

காவிரிப் படுகையில் மீத்தேன். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகவும், சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தைக் கைவிடக் கோரியும் லெனின் அவர்கள் தலைமையிலான பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் விவசாயிகளையும், பொது மக்களையும் திரட்டி போராடியது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அதற்கு நான் தடை ஆணை பெற்றபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையிலிருந்து கம்பம் வரை நான் தொடங்கியபோதும், தேனி மாவட்டத்தில் கிராமம் கிராமமாக பரப்புரைப் பயணம் நடத்தியபோதும் என்னோடு பங்கேற்றவர் லெனின் அவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் லெனின் அவர்கள் கலந்து கொண்டு களத்திற்கு வந்தார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக காவிரிப் படுகை மாவட்டங்களில் 2014-ஆம் ஆண்டு நான் மக்கள் சக்தியை திரட்ட விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டபோது பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் லெனின் அவர்களும் பேராதரவு தந்தார்.

லெனின் நடத்திய போராட்டங்கள், பேரணி, உண்ணாவிரத அறப்போராட்டம், பொதுக் கூட்டங்கள் அனைத்திற்கும் என்னையும் அழைத்து பங்கேற்கச் செய்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் தொடங்கி இராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலிப் போராட்டத்தை ஜூன் 23, 2019 அன்று அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியதும் லெனின் தலைமையிலான பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்தான்.

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதற்கும் நம்மாழ்வார் உருவாக்கிய பேரியக்கம்தான் அடித்தளமிட்டது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வலதுகரமாக விளங்கிய லெனின் அவர்கள், பொதுவுடமைக் கொள்கையில் உறுதியாக நின்றவர். தமிழர் நலனுக்காக போராட்டக் களத்தில் நின்ற உயர்ந்த இலட்சியவாதி அவர். அவர் ஓர் இயற்கை மருத்துவரும் ஆவார்.

லெனின் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். லெனின் அவர்கள் எந்த இலட்சியங்களுக்காகப் போராடினாரோ அவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
02.09.2022

Thursday, September 1, 2022

வாழ்க மாமன்னர் பூலித்தேவர் புகழ்! வைகோ அறிக்கை!

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வீர வாளை உயர்த்தி, மூன்று போர்க்களங்களில் வெள்ளையரை தோற்கடித்து வெற்றிக் கொடி ஏற்றியவர் நெற்கட்டும்செவல் மாமன்னர் மாவீரர் பூலித்தேவர் ஆவார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முலில் கழுகுமலைக்கு அருகில் அருக்கு 1990 ஆம் ஆண்டு சிலையும், மண்டபமும் எழுப்பியது அடியேனும், என் தம்பி இரவிச்சந்திரனும் தான்.

மாவீரர் பூலித்தேவரின் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நுழைந்த பூலித்தேவர் அப்படியே மறைந்துவிட்டார். அவரது தியாகமும், வீரமும் வணக்கத்திற்கு உரிவை.

வாழ்க மாமன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
01.09.2022