Saturday, June 30, 2018

வங்கிக் கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதா? இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் செயல்பாடு கண்டனத்துக்கு உரியது! வைகோ அறிக்கை!

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏ.ஆர்.சி. என்ற தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்து இருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் முகவர்கள், கடன் பெற்றுள்ளவர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று, கந்து வட்டிக் கும்பல் போல கடனை திரும்ப செலுத்தக்கோரி மிரட்டி வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ 4 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் தேவையில்லை. மேலும் கல்விக்கடனை 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடனேயே சென்று வங்கி முகவர்கள், கடனைத் திரும்பச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, கடன் வசூலிக்க நியமித்துள்ள ஏ.ஆர்.சி. முகவர்கள் மொத்தக் கடனை வசூலித்து அதில் 15 விழுக்காடு மட்டுமே வங்கிக்கு செலுத்தினால் போதுமானது. மீதிக் கடன் தொகையை முகவர்கள் தங்கள் சேவைக்கான (?) தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் முகவர்கள் குண்டர்களாக மாறி, கடன் பெற்றுள்ள மாணவர்களையும், விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டும் கொடுமை நடக்கிறது.

கடன் பெற்றுள்ளோர் முகவர்கள் போல அதே 15 விழுக்காடு தொகையை மட்டுமே செலுத்தினால் போதும் என்று இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அறிவித்தால் கடனை திரும்பிச் செலுத்திட மக்கள் தாமாகவே முன்வருவர். அதை விடுத்துவிட்டு கடன் பெற்றிருக்கும் மக்களை மிரட்டி பணிய வைக்க நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல.

இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ 9 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ 2.5 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இதில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 66 கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் வராக்கடன் செப்டம்பர் 2017 காலாண்டு முடிவில் 18,950 கோடி ரூபாய் என்று வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசு ஈவு இரக்கமற்ற ஈட்டிக்காரனாக மாறி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் குண்டர்கள் கூலிப்படையைப் போல பயன்படுத்தி, கடன் வசூலிக்கும் இந்த அராஜகம் ஜனநாயக நாட்டில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எனவே சாதாரண எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உடனடியாக கைவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையின் இன்று 30-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, June 29, 2018

கல்வித் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்க உயர் கல்வி ஆணையம் வைகோ கண்டனம்!

நாடாளுமன்றத்தில் 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக் கழக மானியக் குழுவின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ‘உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனை கூறும் குழு’ ஒன்றைப் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் அமைத்தது. யஷ்பால் குழு 2009 ஜூன் 24-இல் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. அதில் உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறிப்பாக, கல்வியில் தனியார் துறையை முறைப்படுத்துதல், பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல், ஆராய்ச்சிக் கல்வியைத் தரம் உயர்த்துதல் போன்றவற்றிற்குப் பரிந்துரைகள் கூறப்பட்டிருந்தன. இவற்றைச் செயல்படுத்த ‘தேசிய அறிவுசார் ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும் என்று யஷ்பால் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2011-இல் நாடாளுமன்றத்தில் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல், சட்ட முன்வடிவு ஒன்றைத் தாக்கல் செய்தார். 2014-இல் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் இதனைத் திரும்பப் பெற்றது.


ஆனால், புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் ஒரு புதிய குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை 2016-இல் மத்திய அரசிடம் அளித்தது.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. பல்கலைக் கழகக் கட்டுமானங்களில் மாற்றம் செய்தல்; பல்கலைக்கழக ஆட்சிமன்றங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறச் செய்தல்; உயர்கல்வி பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு ‘சந்தைக்கு ஏற்ப கல்விமுறை’ என்ற வகையில் அதைத் தனியாரிடம் ஒப்படைத்தல் போன்ற திருத்தங்களைச் செயற்படுத்த வேண்டும்.

மேலும், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்ற பெயரில் அவை குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பதைத் தடுத்து அவற்றை வணிக மயமாக்குவது, கல்லூரிகள் தமக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து நிற்பது போன்ற பரிந்துரைகள் மூலம் உயர்கல்விச் சூழலை முற்றிலுமாகத் தனியார் மயமாக்குவதற்கு டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு திட்டம் வகுத்துத் தந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் மிக முக்கியமான பிரச்சினை கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை; மேலும் தேவையான அளவுக்குக் கட்டுமான வசதிகள் இல்லாமல் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இயங்கி வருவது. இவை போன்ற பிரச்சினைகளில் அரசோ, நீதிமன்றங்களோ தலையிடக் கூடாது. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கல்விக்காகத் தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு போன்ற கல்வித்துறைச் சார்ந்த உயர் அமைப்புகள் இனி தேவை இல்லை என்றும் புதிய கல்விக் கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மோடி அரசால் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர மூன்று ஆண்டு செயல்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதிலும் ‘கல்வி மற்றும் திறன்’ வளர்ச்சியை மையமாகக் கொண்டு, உயர்கல்வித் துறையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (ஞஞஞ) அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று ‘நிதி ஆயோக்’ அறிவுறுத்தி இருக்கிறது.

இதன் அடிப்படையில்தான், பல்கலைக் கழக மானியக் குழுவை ஒழித்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கவும், அதனைத் தொடர்ந்து கல்வித் துறையில் ஏகபோக அதிகாரம் செலுத்தும் ‘ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை உருவாக்கவும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு திட்டமிட்டுள்ளது.

உயர்கல்வி ஆணையம் கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ளும்; கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு மானியம் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் பணிகளை இனி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமே மேற்கொள்ளும். புதிய உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், பல்கலைக் கழகங்களின் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேவையானவர்களைத் தேர்வு செய்தல் போன்றவற்றிற்கு ‘உயர்கல்வி ஆணையம்’ நெறிமுறைகளை வகுக்கும் என்று சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருக்கிறது.

பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டங்கள் உருவாக்கம்; உயர்கல்வி நிறுவனங்களை கண்காணித்தல்; உயர்பதவிகளுக்கு தகுதி மிக்கவர்களைத் தேர்வு செய்தல் போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உயர்கல்வி ஆணையம், ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை முழுமையாக பறித்துவிட்டு மத்திய அரசே கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது.


உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும் நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பெரிதும் ஆபத்தானவை; கண்டனத்திற்கு உரியது.

உயர்கல்வித் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலும் மாநில அரசுகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலும் ‘உயர்கல்வி ஆணையம்’ அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் இருந்து ‘கல்வியை’ மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-06-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, June 28, 2018

பண்ருட்டி வேல்முருகன் அவர்களை சந்தித்த குமரி மதிமுகவினர்!

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி சேதம் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களை இன்று 28/06/2018 வியாழன் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தார்.

அப்போது குமரிமாவட்ட மதிமுகவினர் சார்பில்‌ மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் தலைமையில் நகரசெயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் அவர்களின் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

உடன் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தராஜன், மாவட்ட பொருளாளர் பிச்சிமணி, மாநில மாணவரணி துணை செயலாளர் அண்ணன் ராஜ்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் அரிராமஜெயம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சுமேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் அஸ்வின், பீர்முகம்மது, தொண்டரணி பயிற்சியாளர் காஜாமைதீன், மாநில MLF செயலாளர் சந்திரன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் நெல்சன், தோவாளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நீலகண்டன், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் ராணிசெல்வின், தோவாளை ஒன்றிய செயலாளர் ராமய்யா ஆகியோர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது! வைகோவுக்கு தமிழக அரசு கடிதம்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். ( Petition No.MOEAF/P/2018/00216 dt. 02.05.2018) இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை, மறுமலர்ச்சி திராவிட முனனேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுப்பியுள்ளார். (Letter No.DEE/TTN/F-Comp..2439/1-Petition/dated 15.06.2018).


அக்கடித விவரம் வருமாறு :

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக்கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது. அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும், 23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

என்று தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை, மதிமுக தலைமை கழகம் தாயகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, June 27, 2018

மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! வைகோ அறிக்கை!

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்திற்கு, இந்தியா பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் பரிசுகளை அள்ளி வழங்குவதும் தொடர்கதையாக நடக்கின்றது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய அரசு, இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தை இலங்கைக்கு அனுப்பி, சிங்கள இராணுவத்தினர் 80 பேர்களை அழைத்துக் கொண்டு வந்து, புத்த கயா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதி, விபின் ராவத், நல்லெண்ணப் பயணம் என்று சொல்லிக் கொண்டு கொழும்புக்குச் சென்றபோது, சிங்கள இராணுவ தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்தாராம். அதை இந்தியத் தளபதி ஏற்றுக் கொண்டாராம். அதற்காகவே, சிறப்பு விமானத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளனர். அந்த இராணுவத்தினரும், அவர்கள் குடும்பத்தினரும், இந்திய விமானப் படையின் சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் இங்கே வந்துள்ளனர்.

2005 முதல் 2009 வரையிலும், சிங்கள இராணுவத்தினரோடு இந்திய இராணுவத்தினர் அடிக்கடிக் கொழும்பில் சந்தித்துக் கொண்டாடிக் கும்மாளம் போட்டதுபோல், மோடி ஆட்சியில் இன்னும் வீரியமாகத் தொடர்கின்றது.


இனப்படுகொலை செய்த சிங்களக் குற்றவாளிகளைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துப் பாராட்டும் இந்திய அரசை, மானத் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு விதைக்கின்ற வினைகளுக்கெல்லாம், உரிய அறுவடையைக் காலம் தீர்மானிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 27-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, June 26, 2018

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார். 25.06.2018-ஆம் நாள் அன்று அவர் ஆற்றிய உரை:

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவுடைய ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளேன்.

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழும் ஈழத் தமிழர்கள்தான் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. 1833 கோல்புரூக் ஆணையம் அளித்த அறிக்கையின்படி, தமிழர்கள் 26,550 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்தனர்.

1901-இல் பிரித்தானிய அரசு மாகhணக் கவுன்சில்களை வடிவமைத்தபோது 7,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைத் தமிழர்கள் சிங்களவர்களிடம் இழந்தனர். 1948 பிப்ரவரி 4-ஆம் தேதி பிரித்தானிய அரசு வெளியேறிய பின் சிங்களக் குடியேற்றத்தால், மேலும் 7500 சதுர கிலோ மீட்டரை தமிழர்கள் இழந்தனர். நாலாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். உரிமைகள் பறிக்கப்பட்டன. கhவல்துறை இராணுவ அடக்குமுறை ஏவப்பட்டது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்கhக அறவழியில் போராடினார்கள். சிங்கள இராணுவத்தின் கொடிய அடக்குமுறைக்கு ஆளானார்கள்.

சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. உச்சகட்டமாக 2009 ஏப்ரல் மே மாதங்களில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சேனல் 4 தொலைக்கhட்சி சாட்சியங்களோடு இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தபோது, மனிதகுலத்தின் மனசாட்சி நடுங்கியது. 2014 மார்ச் மாதத்தில், இதே மனித உரிமைகள் மன்றம், இலங்கை அரசு செய்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவித்தது. சிங்கள அரசு, இதனை ஏற்கவில்லை. எந்த விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியது. எனவே, மனித உரிமைகள் கவுன்சில், ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; சுதந்தித் தமிழ் ஈழத்திற்கhன பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றம் நடத்த வேண்டும்.

இந்த உரை முடிந்தபின், பிற்பகலில் மனித உரிமைகள் கவுன்சிலில் பக்க அரங்கத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அர்ஜூனராஜ் அவர்கள் பங்கேற்றார். அங்கு அவர் பத்து நிமிடங்கள் ஆற்றிய உரையில், திருக்குறளையும், நாலடியாரையும் மேற்கோள் கhட்டி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தந்து, அரசு என்பது மக்களைப் பாதுகhப்பதற்குத்தான்; கொல்வதற்கு அல்ல. ஆனால், தமிழர்களை இலங்கை அரசு இராணுவத்தின் மூலம் வேட்டையாடிக் கொன்றது. இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டியது ஐ.நா. மன்றம்தான்.

அதனால்தான், கிறித்துவர்கள் தேவாலயத்திற்குச் செல்வது போல், இÞலாமியர்கள் மசூதிக்குச் செல்வது போல், இந்துக்கள் கோவில்களுக்குச் செல்வது போல், நாங்கள் நீதிகேட்டு, ஐ.நா. மன்றத்தில் முறையிடுகிறோம். சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்; சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமும், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கhன பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பேசினார்.

இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அம்மையார், சிறந்த பேச்சு என்று பாராட்டினார்.

இதன்பின்னர், இந்த அவையில், குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த ஈழத்தமிழர்கள் தங்கள் அவலத்தைச் சொல்லும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஒரு ஈழத்தமிழ்ப் பெண், தன் மகனை சிங்கள இராணுவம் 2009 போருக்குப் பின்னர் கடத்திச் சென்றதாகவும், அவன் உயிரோடு இருக்கின்றானா என்பதே தெரியவில்லை என்றும் உருக்கமாகப் பேசினார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு சிங்களப் பிரதிநிதிகள், அந்தச் சகோதரிக்கு அருகில் சென்று, பேசக்கூடாது என்று ஆத்திரத்துடன் கத்தினார்கள். அதனை எதிர்த்து, திரு அர்ஜூனராஜ் அவர்களும், திருமுருகன் கhந்தி அவர்களும், இது முறையல்ல; சிங்களர்கள் செய்வது அக்கிரமம் என்று கூறினார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற அம்மையார், காவலர்களை அழைத்து, சிங்களப் பிரதிநிதிகளை வெளியேற்றினார்.

இந்தத் தகவல்களையும், உரையாற்றியதையும் அர்ஜூனராஜ் அவர்கள், பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் தெரிவித்தார் என மதிமுக தலைமை கழகம் 26-06-2018 செய்தி வெளியிடுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, June 25, 2018

ஆளுநரின் அறிக்கை ஆணவமா? அதிகார திமிரா? வைகோ கண்டனம்!

ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான்.

இந்தப் பெருமைமிகு மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற நாளிலிருந்து இங்கே நடைபெறும் மாநில அரசைத் துச்சமாகக் கருதி, உதாசீனம் செய்வதும், மாவட்ட வாரியாக அதிகார உலா செல்வதும், அமைச்சர்களைக் கூட அரங்கத்திற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பதும் அவரது அதிகார எல்லையைக் கடந்த செயலாகும்.

அமெரிக்க நாட்டில்தான் மாநில ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அத்தகைய அதிகாரம் இந்தியாவில் இல்லை என்பதை ஆளுநர் புரோகித் உணர வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் ஆளுநர்கள் பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகள் அனைத்தையும் மீறி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போக்கினைக் கண்டித்து, இந்திய அரசியல் சட்டம் வழங்கி உள்ள ஜனநாயக உரிமையின் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகம் அமைதி வழியில் கறுப்புக்கொடி அறப்போர் நடத்தி வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறார். இங்கே நடப்பது ஆளுநர் ஆட்சி அல்ல.

கொடூரமான நெருக்கடி நிலை அவசரச் சட்டத்தின் தாக்குதலையும், சிறைவாசத்தையும் அஞ்சாது எதிர்கொண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற காலங்களில்கூட, ஆளுநர்கள் இப்படி மாவட்ட வாரியாக வீதி உலா சென்றதும், அதிகார பேட்டிகள் தந்ததும் இல்லை.

சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டும் ஆளுநருக்கு நான் விடுக்கும் கேள்வி, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்கள் தன்னைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தாரே, இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு எந்தச் சட்டப் பிரிவின் கீழ் இருக்கிறது?

அதனால்தான் நான் பொதுமேடைகளில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தா? அல்லது தொழில்முனைவோர்களின் புரோக்கரா? என்று கேட்டேன்.

ஒரு மாபெரும் இயக்கத்தின் செயல் தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ஆளுநர் அறிக்கையில் பயன்படுத்தி இருக்கின்ற ‘அறியாமை’ என்ற சொல், அவரின் ஆணவத்தையும், அதிகாரம் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் மமதையையும், திமிரையும் காட்டுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் பவனிவந்த பன்வாரிலால் புரோகித்தின் மிரட்டலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

இத்துடன் தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாலர் வைகோ தனது அறிக்கையில் இன்று 25-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, June 24, 2018

மீனவர்களுக்கு கானல்நீரான ஆழ்கடல் மீன்பிடி திட்டம்-வைகோ அறிக்கை!

இலங்கை கடற்படை உள்ளிட்ட பிரச்சனைகளில் துன்பப்படும் பாக் சலசந்தி மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் 2016 இல் ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு இராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க வசதியாக 80 லட்சம் மதிப்பில் படகும், பரப்பு வலையும், தூண்டில், மீன்பிடி உபகரணங்கள் கொடுக்கப்படும் என்றும், திட்ட மதிப்பில் 50ரூ பணம் மத்திய அரசின் மானியமாகவும், 20ரூ மாநில அரசு மானியமாகவும், 20ரூ வங்கி கடனாகவும், 10ரூ மீனவர்கள் பங்களிப்பாகவும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீனவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புக்காட்டிய நிலையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எட்டா கனியாக பாரம்பரிய மீனவர்களுக்குத் தெரிகிறது.

ஏனெனில் விலைவாசி ஏற்றத்தின் நிமித்தம் அரசின் வழிகாட்டலின் கீழ் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் திட்டத்தின் இன்றைய மதிப்பு 1கோடியே 10 லட்சத்தைத் தொடுகிறது, அரசு இதுசம்மந்தமாக மீனவர்களையும், படகுகள் கட்டும் நிறுவனங்களையும் அழைத்து 27 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த நிலையான தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசின் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட 18 நிறுவனங்களும் அரசு கொடுத்துள்ள 80 லட்சம் திட்ட மதிப்பில் படகினை செய்யமுடியாது என கைவிரித்த நிலையில், எப்படியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற நோக்கில், மிகவும் ஆர்வமுள்ள பணபலம் உள்ள சிலரை அழைத்துப் பேசி அதிகாரிகள் சம்மதிக்க வைத்துள்ளார்கள்.

இப்போதுள்ள நிலவரத்தின்படி மீன்பிடி உபகரணங்கள் தவிர்த்து படகு மற்றும் இஞ்சின் உள்ளிட்டவைகள் மட்டுமே அரசின் திட்ட மதிப்பீடான 80 லட்சத்தில் செய்து தருவதாக படகு தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே மீன்பிடி வலைகளும், சாதனங்களும் மீனவர்களே சொந்தப் பணத்தில் வாங்கவேண்டிய நிலையில் உள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்த பட்சம் 5 டன் வலைகளாவது இருக்கவேண்டும். இதன் மதிப்பு 25 லட்சம் மற்றும் சூறைமீன் தூண்டில் உபகரணங்களுக்கு 5 லட்சம் வேண்டும். ஆக மொத்தம் மேற்கொண்டு 30 லட்சம் வரை மீனவர்கள் செலவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர். மொத்தத்தில் மீனவர் பங்களிப்பாக இந்தத் திட்டத்தில் வங்கிக் கடனாக 16 லட்சமும், திட்ட பங்களிப்பாக 8 லட்சமும், உபரி பங்களிப்பாக 30 லட்சமும் ஆக மொத்தம் 54 லட்சம் மீனவர்கள் முதலீடு செய்தால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலை உள்ளது.

இலங்கை கடற்படையால் தனது படகினையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்க்கும் பாரம்பரிய மீனவர்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது.

எனவே இந்தத் திட்ட மதிப்பினை 1 கோடியே 10 லட்சமாக உயர்த்த வேண்டும் அல்லது முன்பு இந்திய-நார்வே திட்டத்தின் கீழ் அரசாங்கமே படகுகள் கட்டி பாரம்பரிய மீனவர்களுக்கு கொடுத்தது போல் கொடுத்தால் மட்டுமே இந்தத் திட்டம் வெற்றிபெறும் என அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் மீனவர்கள் முறையிட்டு வருகிறார்கள்.

ஆனால் இதற்கு மாறாக இந்த திட்டத்தை நீங்கள் செயல்படுத்த முன்வரவில்லை என்றால், இந்த திட்டத்தை பிற இடங்களில் உள்ள வணிக ரீதியான மீனவர்களிடம் கொடுத்துவிடுவோம் என்று அதிகாரிகள் பாக் சலசந்தி பாரம்பரிய மீனவர்களை நெருக்குகிறார்கள்.

ஏற்கனவே இறால் பண்ணைகள், மீனவர்களுக்கான மாற்றுமுறை மீன்பிடிப்பு முறை என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று பெருமுதலாளிகள் மட்டுமே கடற்கரைகளைக் கைப்பற்றி இறால் பண்ணை தொழில் செய்துவருகிறார்கள்.

அதுபோன்றே தற்போது பாரம்பரிய மீனவர்கள் செயல்படுத்த முடியாதவாறு ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அறிவித்து விட்டு, அதை மீனவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்று கூறி பாரம்பரிய மீனவர் அல்லாத பெருமுதலாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளை கொடுக்க அரசு முனைப்புகாட்டி வருகிறது.

மத்திய அரசின் கொள்கை முடிவின் படி பாக் சலசந்தியில் இலங்கை கடற்படையால் துன்பப்படும் பாரம்பரிய மீனவர்களுக்கு மாற்றுமுறை மீன்பிடி வழிமுறை ஏற்ப்படுத்தவும், பாக் சலசந்தி பகுதியில் இழுவைப் படகுகளைக் குறைத்து, கடல்வளத்தை பாதுகாக்கவுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் பாரம்பரிய மீனவர்களைத் தவிர்த்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கின்ற உள்ளடி வேலைகள் விரைவாக நடக்கிறது.

எனவே மத்திய அரசு, பாரம்பரிய மீனவர்கள் பலன்பெறும் வகையில் திட்ட மதிப்பை 1கோடியே 10 லட்சத்துமாக மாற்றவேண்டும் அல்லது இந்திய-நார்வே மீன்பிடி திட்டத்தில் கொடுத்தது போல அரசே ஆழ்கடல் மீன்பிடி படகினைக் கட்டி மீனவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 24-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, June 23, 2018

குளச்சல் நகர மதிமுக சார்பில் 25 ஆம் வெள்ளி விழா பொதுக் கூட்டம்!

குமரிமாவட்டம் குளச்சல் அண்ணா சிலை அருகில் மதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா 23-06-2018 சனி மாலை நிகழ்ச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு மதிமுக மாநில மகளிரணி அமைப்பாளர் மருத்துவர் ரோஹையா ஷேக் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

23-06-2018 மதியமே நாகர்கோயில் வந்த மருத்துவர் ரோஹையா ஷேக் முகம்மது அவர்களை குமரிமாவட்ட மதிமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.

தொடர்ந்து நாகர்கோயில் நகர கழகத்தின் சார்பாக நாகர்கோவில் நகரில் முதல் வெள்ளிவிழா கொடிகம்பத்தை மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் Rohaiyaah Sheik Mohammed அவர்கள் கொடி ஏற்றி வைத்து பெயர் பொறிக்கப்பட்ட பளிங்கு பலகையை திறந்து வைத்து சிறப்பித்தார்.

மாலையில் குளச்சல் நகர பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் ஸ்டார்வின் தம்புராஜ், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், துணை செயலாளர் ஆனந்த ராஜ், அவைதலைவர், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய நகர செயலாளர்கள், குமரி மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குமரி மாவட்ட மதிமுக

Wednesday, June 20, 2018

பசுமைச் சாலையா? பசுமை அழிப்புச் சாலையா? வைகோ அறிக்கை!

மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 5790 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

சேலம் மாவட்டம், அரியானூரில் இருந்து சென்னை வண்டலூர் வரை அமைக்கப்படும் பசுமைச் சாலை 257 கி.மீ. விளை நிலங்களின் வழியாகவும், 13.30 கி.மீ. அடர்ந்த காடுகள் வழியாகவும் அமைய இருப்பதாகத் திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், இந்த வழியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பசுஞ்சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய 8 மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், இலட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இயற்கை வளங்களைச் சூறையாடி, பசுமையை அழித்து உருவாக்கப்படும் 8 வழிச்சாலைக்கு ‘பசுமைச் சாலை’ என்று மோசடியான பெயரை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சூட்டி இருப்பதுதான் முரண்பாடாக இருக்கின்றது.

சென்னை - சேலம் பசுமை வழி விரைவுச் சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டுள்ள மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படுகின்றதே என்று தன்னெழுச்சியாக இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள்.

கருத்துக் கேட்புக் கூட்டங்களைக் கண்துடைப்புக்காக நடத்திவிட்டு, மோடி அரசின் உத்தரவைச் செயல்படுத்த துடிக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களைக் கிள்ளுக் கீரையாகக் கருதி, அடக்குமுறை தர்பாரை ஏவி விட்டுள்ளது.

சேலத்தில் கஞ்ச மலை, திருண்ணாமலையில் கவுந்திமலை, தருமபுரி, அரூர் ஆகிய இடங்களில் உள்ள மலைகளிலுல், நிலத்திற்குக் கீழே புதைந்து கிடக்கும் கனிம வளங்களை வரைமுறையின்றிச் சூறையாடி, சென்னைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில்தான் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் ஆதாயத்திற்காக சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்று வெளிவரும் தகவல்கள் பொய்யானவை அல்ல.

விளைநிலங்களையும், வீடுகளையும் இழந்து, நாதியற்றவர்களாக குடும்பத்துடன் ஏதிலிகளாக சொந்த மண்ணில் அலையும் நிலை வருகின்றதே என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுது புரளும் மக்களை, குறிப்பாகப் பெண்களையும், வயதான முதியவர்களையும் மூர்க்கத்தனமாக காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதும், கிராமம் கிராமமாக நள்ளிரவில் வீடு புகுந்து மக்களைக் கைது செய்து சிறையில் பூட்டுவது, அச்சுறுத்தி மிரட்டுவது போன்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஏதேச்சாதிகார பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி.

பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல ஜூன் 11 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.

தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக அறப்போர் களத்தில் மத்திய, மாநில அரசுகளின் நாசகாரத் திட்டங்களை எதிர்த்துப் போராடும் போது காவல்துறை குண்டாந்தடி மூலம் அடக்கி, ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு நினைப்பது எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 5 மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ‘பசுமையை அழிக்கும்’ இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.

வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை கைது செய்து, சிறையில் அடைக்கும் கொடுமையை நிறுத்த வேணடும். இயற்கையைக் காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ந்டிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 20-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, June 15, 2018

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு-வைகோ!

ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சி நடந்தபோது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத் தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உட்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும்.

இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகம் பென்னி குயிக் அணையில் 142 அடி முதலில் தேக்கிக் கொள்ளலாம்; பின்னர் 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதற்கு எதிராகக் கேரள அரசு செயல்படக் கூடாது என்று கூறினர்.

உடனடியாகக் கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, கேரள மாநிலத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என்றும், அணைகள் குறித்து, மாநில அரசு எடுக்கும் முடிவில் எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாது என்றும் சட்டம் இயற்றியது.

பின்னாளில் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்தது.

இந்தப் பின்னணியில்தான், கேரள அரசுக்குச் சாதகமாகத் திட்டமிட்ட அதிகாரிகள், அணைப் பாதுகாப்பு மசோதா என்ற புதிய மசோதாவைத் தயாரித்தனர். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை குறித்து முடிவு எடுக்கும் முழு உரிமையும், கேரள அரசுக்கே உரியதாகி விடும் என்பதால், 2012 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நான் நேரில் சந்தித்து, ‘உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது; அரசியல் சட்டத்தின் 262 ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின் குறிக்கோளுக்கு எதிரான நிலைமை விளையும்; தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும்;. ஏனெனில், கர்நாடகமும் இப்படி ஒரு சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரைக் கொடுக்காது; ஆகவே, விபரீதமான நிலைமைகள் உருவாகும்; இந்த நிலை எழுந்தால், இந்திய ஒருமைப்பாடு எங்களுக்கு எதற்காக? சோவியத் ஒன்றியம் போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகின்ற நிலைமைக்கு வித்திட்டு விடாதீர்கள்’ என்று கூறியதை, அன்றைய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

அது மட்டும் அல்ல. அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த, மறைந்த ஜெயலலிதா அவர்கள், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன்.

வர இருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற நிம்மதியோடு இருக்கும் நிலையில், நம் தமிழ்நாட்டின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதைப் போல, அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வர நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்து, ஜூன் 13 ஆம் நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தந்து இருக்கின்றது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், மத்திய அரசு திட்டமிட்டே வஞ்சகம் செய்து, காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுத்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் நீக்கி, கர்நாடக அரசின் தயவில் தமிழகம் இருக்க வேண்டிய வகையில் அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கின்றது.

இந்த முடிவு வருவதற்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு நடுநிலை தவறிய பாரபட்சமான தீர்ப்பை வழங்கியது.

கேரளம், கர்நாடகம், பாலாற்றுப் பிரச்சினையில் ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் கொடுக்காமல் அநீதி விளைவிக்க, உத்தேசிக்கப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதா வழிவகுத்து விடும்.

‘இந்த அணை பாதுகாப்பு மசோதா குறித்த விவரங்கள் எதுவும் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி அவர்கள் கூறியதோடு, ‘மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது’ என்றும் தெரிவித்து இருக்கின்றார்.

எனவே, அணை பாதுகாப்பு மசோதாவின் முழு விவரங்களையும் மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

ஆனால், மூடு மந்திரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு இந்த மசோதாவைச் சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நதிநீர் உரிமைப் போராளிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 15-06-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, June 14, 2018

வைகோ ரமலான் வாழ்த்து!

உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

ஸல்லால்லாஹூ அலைஹூவ ஸல்லம் அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி, விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில்  திளைக்கின்றனர்.

அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். ஆனால், இந்த நாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ள மதச்சார்பு இன்மைக் கோட்பாட்டைத் தகர்க்கவும், வகுப்புத் துவேசத்தை வளர்க்கவும், அக்கறை உள்ள சக்திகள் திட்டமிட்டு அதிகார பலத்துடன் முயன்று வருவது மிகவும் அபாயகரமானது. இந்நிலையில், சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்‌ என மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து அறிக்கையில் இன்று 14-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐ திரும்பப் பெறுக-வைகோ அறிக்கை!

மத்திய அரசின் சுற்றுச் சூழல்துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை - 2018, மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருக்கின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை -1991 இல் வடிவமைக்கப்பட்டு, பின்னர் 2011 இல் மேலும் செம்மையாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கடற்கரைச் சுற்றுச் சூழலையும், உயிர் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், மீனவர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையில் 1991 இல் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை பிரகடனம் செய்யப்பட்டது.

மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது செயல்படுத்த முனைந்துள்ள சாகர்மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மாற்றி அமைக்கப்பட்டு, புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை நிலங்களையும், நீர் நிலைகளையும் (Coast Regulation Zone -CRZ) நான்கு மண்டலங்களாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப பாதுகாப்பதையும், பயன்படுத்துவதையும் அறிவுறுத்துகிறது. அதன்படி முதலாம் பிரிவில் (CRZ -1A) கடற்கரையின் சூழலைப் பாதுகாக்கும் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலான பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளைப் பாதுகாப்பதும், அவற்றில் தொழில் நிறுவனங்களுக்கானக் கட்டுமானப் பணிகள் எதுவும் கூடாது என்பதும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன. புதிய வரைவு அறிவிப்பாணையில் இது நீக்கப்பட்டு, சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள் அமைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கடல் அலைகள் தாக்கம் உள்ள பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள இரண்டாம் பிரிவில் (CRZ -1B) நீர் முகப்பு தேவைக்குரிய திட்டங்களான துறைமுகங்கள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடல் சுவர் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் புதிய வரைவு அறிவிப்பாணையில் சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்றே மற்ற மூன்று மண்டலங்களிலும் சாலைகள், தொடர் வண்டி இருப்புப் பாதைகள், தொழிற்கூடங்கள், விடுதிகள் அமைத்தல், துறைமுகங்களில் நிலக்கரி கிடங்குகள் மற்றும் எண்ணெய், எரிவாயு சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், நவீன நகரம் அமைவதற்கான கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்படும் என்று புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018 இல் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மோடி அரசு, இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் சாகர் மாலா திட்டம் எனும் பெரும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. இதற்காக தொடர் வண்டி மற்றும் சாலைப் போக்குவரத்து துறைமுகங்களுடன் இணைக்கப்படும் கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். கடற்கரைகளில் நவீன நகரம் எனும் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் சாகர் மாலா திட்டத்திற்காக இலட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர்நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும், கடற்கரை நிலங்களும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.

சாகர்மாலா திட்டத்திற்கான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மிகப் பெரும் நிறுவனங்களின் மூலதனம் மூலம் திரட்டப்படும் என்பதால், கடற்கரைகள், துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் தனியார் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.

சாகர்மாலா திட்டத்திற்கு தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011 தடையாக இருப்பதால்தான், புதிய அறிவிப்பாணையைக் கொண்டுவந்து, கடற்கரைகளில் காலம் காலமாக வாழும் மீனவர்களை விரட்டிவிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கவும், மத்திய அரசு துடிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச் சூழல் சீர்கேடுகள், பருவ கால மாற்றங்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துகள் பெரும் அழிவை உருவாக்கும்.

மீனவர் சமூகம் கொந்தளித்து அறப்போர் களத்தில் குதித்துள்ளதை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை, 2018ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 14-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை