புதிய தலைமுறை தொலைக்காட்சி வட்டமேஜை விவாதத்தை கோவையில் முறையாக நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கெடுத்து, அவரவர் கருத்துக்களைக் கூறினார்கள். பாரதிய ஜனதா கட்சியும், தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை விஷமிகள் என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போராட்டக்காரர்கள்தான் காரணம் என்றும் தவறான கருத்தைப் பதிவு செய்தது.
தமிழகத்தை நாசம் செய்யும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதே தவறு என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க. அநியாயமான கருத்தைப் பதிவுசெய்கிறபோது அங்கு எந்தவிதமான குழப்பமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி மற்றவர்களை விமர்சிக்கிறபோது, மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
பருத்திவீரன் போன்ற மிகச் சிறந்த விருது படங்களை இயக்கிய இயக்குநர் அமீர் ஒரு தமிழ் உணர்வாளர், தமிழீழ உணர்வாளர். அவர் எந்தக் கருத்தையும் சுதந்திரமாகச் சொல்லக்கூடியவர். ஆனால் அவர் சொல்லத் தொடங்குவதற்கு முன்னரே, பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து முன்னணியினரும் அவரைத் தாக்குவதற்காக மேடையை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?
இதைவிடக் கொடுமை என்னவென்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தின் பிரதிநிதியாக அங்கு விவாதம் நடத்தச் சென்ற சுரேஷ்குமார் அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத 123ஏ குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
பத்திரிக்கைச் சுதந்திரத்தை, தொலைக்காட்சி ஊடகங்களின் சுதந்திரத்தை நீங்கள் பறிக்க வேண்டாம் என்று அரசுக்கு எச்சரிக்கிறேன். உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா? உங்கள் அரசைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். இந்த வழக்கினால் புதிய தலைமுறை தொலைக்காட்சி மிரண்டுவிடாது.
புதிய தலைமறை மீது வழக்குப் பதிந்த அக்கிரமத்தை எதிர்த்து ஒட்டுமொத்தமாக அனைவரும் கண்டனம் தெரிவித்து, போராட வேண்டும். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் திரும்பப் பெறவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 10-06-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment