தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி அன்று காவல்துறையினர் கொலைவெறியுடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இதுவரை நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தமிழரசன் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது இல்லை. புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த இவர் திருமணம் ஆகாத இளைஞர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் உடலைக் காணச் சென்ற அவரது ஒன்றுவிட்ட அண்ணனையும் காவல்துறையினர் கைது செய்துவிட்டு, தமிழரசனின் உடலை வாங்காவிட்டால் அவரது அண்ணனையும் சுட்டுக்கொல்வோம் என்று குடும்பத்தாரிடம் மிரட்டினர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரசனின் அண்ணன் ஸ்டெர்லைட் போராட்டங்களிலும் எங்கள் இயக்க நடவடிக்கைகளிலும் ஆதரவாக இருந்தவர். இவர் ஏற்கனவே நோய்வாய்பட்டு காலமாகிவிட்டார்.
தமிழரசன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்ற என்னிடம் அக்குடும்பத்தினர் அரசாங்கத்தின் நிதி எங்களுக்கு வேண்டாம்; ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்; துப்பாக்கிச் சூடு நடத்தி கோராமாக 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் உண்மை கண்டறியும் குழுவினர் தூத்துக்குடிக்குச் சென்று பொதுமக்களிடம் 22 ஆம் தேதி சம்பவம் குறித்த விவரங்களையும், செய்திகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று (ஜூன் 1 ஆம் தேதி) இரவில் அந்தக் குழுவில் இருந்த 8 பேரையும் காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்து, எவரும் அறிய முடியாத இடத்தில் கொண்டுபோய் அடைத்து வைத்துள்ளனர்.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மதுரை வழக்கறிஞர் சரவணக்குமார், கல்லுப்பட்டியைச் சேர்ந்த முருகன், மணி, சமயன், அருப்புக்கோட்டை கோவேந்தன், தூத்துக்குடி வன்னிபெருமாள் ஆகிய எட்டு பேரும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள். காவல்துறையினர் யாரைக் கைது செய்தாலும் உடனடியாக அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதோடு, வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்க வேண்டியது கடமை ஆகும்.
இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் வாங்க வேண்டும் என்று அச்சுறுத்தும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட நிரபராதிகளான எட்டுப் பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காவல்துறையின் ஜனநாயக விரோதமான அடக்குமுறைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 1-6-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment