மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 25.06.2020 அன்று கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 23 பேர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15, 2020 நள்ளிரவில் சீனப் படையினர் ஊடுருவியதால், ஏற்பட்ட இந்திய -சீன இராணுவ மோதலில், எல்லையைக் காக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட 20 இந்திய வீரர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
கொரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மனிதநேயக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2:
தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளத்தில் அலைபேசி விற்பனையகம் நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்து இருப்பதாகக் கூறி, கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தந்தை மகன் இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர். பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, மறுநாள் 20 ஆம் தேதி காலையில் கோவில்பட்டி அழைத்துச் சென்று கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி இரவு மகன் பென்னிக்ஸ் இதயவலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ஜூன் 23 ஆம் தேதி காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்துள்ளார். கோவில்பட்டி கிளைச் சிறையில் சட்ட விதிகளை மீறி காவலில் வைக்கப்பட்ட இருவரையும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் கொடூரமாக சித்ரவதை செய்ததால், உயிரிழந்திருக்கிருக்கின்றார்கள். இதில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். காவல்துறையினரின் கொலைவெறிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
தமிழக காவல்துறையினர் நடத்தி வரும் இதுபோன்ற பச்சைப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இக்கொடூர நிகழ்வின் உண்மை நிலையை வெளிக்கொணர பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஜூன் 24 ஆம் தேதி நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் இதுவரையில் 14,576 உயிரிழப்புகள் நடந்துள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 67,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 45,814 பேர் ஆவர். 866 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 28,836 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜூன் 24 ஆம் தேதி வரையில் 9 இலட்சத்து 712 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகையில் மிக மிக சொற்பமான அளவுக்குக் கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.
கொரோனா தொற்று பரவலை முழுமையாக தடை செய்வதற்கும், பாதிப்பைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை அதிகரிப்பது இன்றியாமையாதது ஆகும். அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கும் மேல் பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி, பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ரூ. 9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிட ரூ.4 ஆயிரம் கோடி என மொத்தம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி இருந்தது. ஆனால், மத்திய அரசு வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி ஆகும். தமிழ்நாட்டிற்கு கொரோனா சிறப்பு நிதி அளிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு இதுவரை முன்வராதது வேதனை தருகிறது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் 40 ஆவது கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையில், 2017-18 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை ரூ.4073 கோடி, 2018-19 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.553.01 கோடி மற்றும் 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.1101 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை உட்பட மொத்தம் ரூ.5727.62 கோடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஏனெனில் மாநில அரசுகளின் நிதி வருவாய் ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்து, அந்த நிதி ஆதாரம் முழுவதும் மத்திய அரசின் கருவூலத்தில் வெள்ளமெனப் பாய்கிறது. எனவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5:
கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் மாநிலங்களின் மூலம் இறக்குமதி செய்வதற்குக் கூட அனுமதி இல்லை. மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள சுகாதாரத்துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துச் சென்றிருக்கிறது. பொதுப் பட்டியலின் கீழ் கொண்டு செல்லப்பட்டதால், கல்வித் துறையும் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.
பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், மத்திய நிதித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் மாநிலங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய முகமையான பிரச்சனைகளை மத்திய அரசு வெறும் அறிவிப்பின் மூலம் செயல்படுத்த முனைவது அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும்.
நகராட்சிகளைப் போல் மாநிலங்களைக் கருதும் மத்திய பா.ஜ.க. அரசின் மனப்பான்மை கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, மத்திய அரசின் ஏகபோக ஏதேச்சதிகாரத்திற்கு வழி அமைப்பதாகும். இதே நிலைமை தொடருமானால் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதை இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் 6:
மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது, பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காட்டை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக புறக்கணித்து, சமூக நீதியைப் புதைகுழிக்கு அனுப்பி வருகிறது.
நடப்பு ஆண்டு உள்ளிட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவப் படிப்புக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42 ஆயிரத்து 842. இதில் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு புதிதாக உருவாக்கியிருக்கும் இடஒதுக்கீடான பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழ்நாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைகளைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2020 மே 13 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜூன் 11 ஆம் தேதி அளித்த உத்தரவில், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று குறிப்பிட்டதுடன், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஜூன் 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் பல்வேறு கட்சிகளும் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு, மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்படும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. எனவே மத்திய அரசு மருத்துவப் படிப்புகளில் முறையான இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டில் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கடந்த 4 ஆண்டுகளாகப் பறிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்குவதற்கும், சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கவும் வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 40 டாலர் அளவுக்கு சரிந்துள்ள நிலையிலும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரசு, மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக 82 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தபோதும் அதன் பயன் பொதுமக்களுக்குக் கிடைக்காமல் இருக்க மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது.
கடந்த மார்ச் 14, 2020 அன்று பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.3 உயர்த்தப்பட்டது. மீண்டும் மே 5 ஆம் தேதி கலால் வரி பெட்ரோலுக்கு13 ரூபாய் என்றும், டீசலுக்கு 10 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது.
தமிழக அரசு தன் பங்குக்கு மே 2 ஆம் தேதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து அதிகரித்து வருகிறது. 18 நாட்களில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 41 காசுகளும், டீசல் விலை 9 ரூபாய் 58 காசுகளும் அதிகரித்துள்ளது.
இதனால் பெட்ரோல் விலை ரூ.83.09 ஆகவும், டீசல் விலை 76.77 ஆகவும் உயர்ந்துள்ளன.
கொரோனா கொள்ளை நோயால் மக்கள் பெரும் துயரத்தில் இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது அக்கிரமம் ஆகும். மத்திய, மாநில அரசுகள் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையை 30 விழுக்காடு குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 8:
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த முடியாத சூழல் இருப்பதால் இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி முதன் முதலில் அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் கவனத்திற்கு செய்தியாளர்கள் கொண்டு சென்றபோது, வைகோ அவர்களின் கருத்தை முதல்வருடன் கலந்தாய்வு செய்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் தமிழக முதல்வர் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று அறிவித்தது மட்டுமின்றி, ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மே 13 மற்றும் ஜூன் 8 ஆம் தேதிகளில் 10 ஆம் வகுப்புத் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தினார்.
மேலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரி அறப்போராட்ட அறிவிப்பை வெளியிட்டன.
தமிழக அரசு ஜூன் 9 ஆம் தேதி 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை இரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. முதன் முதலில் இக் கருத்தை முன் வைத்து, கொரோனா பேரிடர் நேரத்தில் இலட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் கவலையிலிருந்து மீட்கச் செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 9:
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது.
நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்படி பகுதி 1 - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2 - ஆங்கிலம், பகுதி 3 முக்கியப் பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம் இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என்றும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்த மதிப்பெண்கள் 600க்கு பதில், இனி 500 ஆக இருக்கும் என்றும் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வி பயில விரும்பும் படிப்பிற்கான பாடப்பிரிவு தேர்வினை 11 ஆம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொள்வதன் மூலம் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கின்றோம் என்ற போர்வையில் பாடத் திட்டங்களில் தமிழக அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளவற்றைப் பார்த்தால், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் கொடும் செயலாகவேத் தெரிகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.
ஏனெனில் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் போடவே முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக ஆக்கி உள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்வி கனவையும் தகர்க்கும் நிலையைத் திட்டமிட்டே தமிழக பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
எனவே தமிழக அரசு 11 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 10
கொரோனா நெருக்கடியால் நாடு சிக்கியிருக்கும் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளின் கருத்துகளைக்கூட கேட்காமல், ஏதேச்சாதிகாரமான அவசரச் சட்டங்கள் கொண்டுவந்து, வேளாண்மைத் தொழிலையே வினாக்குறி ஆக்கி இருக்கின்றது.
மின்சார சட்டத் திருத்த மசோதா -2020, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் -1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் -2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம் -2020 போன்ற அவசரச் சட்டங்கள் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானவை ஆகும்.
மின்சார சட்டத் திருத்தம், விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சார உரிமையைப் பறிக்கிறது.
மேலும் ஜூன் 3, 2020 இல் மத்திய அரசு பிறப்பித்துள்ள மூன்று சட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் - 1955 திருத்தச் சட்டம், தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் இவற்றின் விலையை நிர்ணயிக்கும் பெரு நிறுவனங்கள், பதுக்கல்காரர்களால் விலையேற்றம் நடக்குமே தவிர, விவசாயிகளுக்குப் பயன் இல்லை.
வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் -2020, ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை என்று கூறுகிறது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வர்த்தகர்கள், பெரு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யலாம் என்று இச்சட்டம் அனுமதி அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழு சட்டங்கள் வேளாண் கொள்முதலை இனி கட்டுப்படுத்த முடியாது. தனியார் கொள்முதல் நிலையங்கள் விலையைத் தீர்மானிக்கும்.
விவசாயிகள் (அதிகாரப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசர சட்டம் -2020, ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் வணிக நிறுவனங்கள் மற்றும் பெருவர்த்தக நிறுவனங்கள் வேளாண் உற்பத்தியைத் தீர்மானிக்க வழி செய்கிறது.
வேளாண்மைத் தொழிலை வர்த்தக நிறுவனங்கள், பெரு வணிக குழுமங்களிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 11:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான். இவைதான் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 28 சதவீத பங்கு வகிக்கிறது. அதேபோல் நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த முழு ஊரடங்கானது இத்தொழில் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிறுவனங்கள் பாதிப்புகளிலில் இருந்து மீண்டு வரவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், ஆத்ம நிர்யர் பாரித் என்ற ஊக்குவிப்புக் கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 13.05.2020 அன்று ரூபாய் 3 இலட்சம் கோடியினை ஒதுக்கீடு செய்தது.
இத்திட்டமானது கடன் பெறும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 29.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள கடனுக்கு 20 சதவீதம் கடனாக அசையா சொத்துக்களை அடமானம் ஏதும் வைக்காமல் பெறலாம் என்றும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை அந்நிறுவனங்கள் வர்த்தகம் செய்யவும் 24.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் 25 கோடிக்கு மிகாமல் கடன் நிலுவையில் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இத்திட்டத்தின் முழுப் பலன்களையும் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட செயல்வடிவத்தின் படி கீழ்க்கண்ட சிறிய திருத்தங்களைச் செய்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்திடவும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
1) ரூபாய் 100 கோடிக்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 29.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நிலுவைக் கடன் தொகை 25 கோடிக்கு அதிகமாக இருக்குமேயானால் அந்நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 25 கோடிக்கு 20 சதவீதமாக ரூபாய் 5 கோடி கடன் வழங்க வேண்டும்.
2) இத்திட்டமானது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு மத்திய அரசால் 100 விழுக்காடு கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என்று அறிவிப்பு இருக்கையில், வங்கிகள் தங்களிடம் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் நிறுவனங்களை ஏற்கனவே வங்கிகளிடம் அடமானம் வைக்கப்பட்ட அசையா சொத்துக்கள் மீது வழங்கப்பட்ட பழையக் கடன் தொகையினையும் இப்புதிய திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொகையினையும் சேர்த்து ஏற்கனவே பதிவுத்துறை பத்திரப் பதிவு அலுவலகத்தில் முத்திரைத் தீர்வையைச் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணப் பதிவை மீண்டும் ஒருமுறை தற்போது உள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகைக்கு முத்திரைத் தீர்வை செலுத்தி செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணமாக்க வேண்டும் என்று வங்கிகள் நிபந்தனை விதிக்கின்றன.
இம்முறையானது கடன் பெறும் நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் மீண்டும் தேவையற்ற ஒரு செலவினை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. எனவே வங்கிகள் புதிதாக ஆவணப் பதிவு செய்யத் தேவையில்லை என்ற ஆணையை மத்திய அரசு வழங்கம் வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12:
கொரோனா தீநுண்மி பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏழை எளிய உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சேவை புரியும், உதவிகளை வழங்கும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிவித்து இருந்தார். பொதுச்செயலாளரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முழுவதும் மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் சக்திக்கு மீறிய வகையில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி அறப்பணி ஆற்றி உள்ளனர். இத்தகைய மனிதநேயப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு சேவை செய்த கழகத்தின் கண்ணின் மணிகள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 13:
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா தீநுண்மி துயரம் எப்போது தீரும்? என்று கணிக்க முடியாத சூழலில், கொரோனா தடுப்புப் பணிகளிலும், கொரோனா பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடையறாது சேவை புரியும் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 25-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழகம்