பொறி இயல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தகுதிப் பாடங்களின் பட்டியலில் இருந்து வேதி இயல் பாடத்தை நீக்கியதாக வெளியான செய்திகள் குறித்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசியதுடன், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு இயக்குநருக்குக் கடிதமும் (27.02.2020) எழுதி இருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்து, ஏஐசிடிஇ உதவி இயக்குநர், வைகோவுக்கு எழுதி இருக்கின்ற விளக்கக் கடித விவரம் (21.05.2020):
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம்.
பொறிஇயல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான தகுதிப்பாடுகளில், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு (All India Council for Technical Education) எந்தவித மாற்றமும் செய்யவில்லை.
2001 ஆம் ஆண்டு முதல், இத்தகைய படிப்புகளுக்கான தகுதிப் பாடங்களில், இயற்பியலும், கணிதமும் கட்டாயப் பாடங்கள் ஆகவும், அவற்றுடன் கூடுதலாக, வேதிஇயல், உயிரி தொழில்நுட்பம் (Biotechnology), உயிர்இயல், தொழில்நுட்பப் பாடங்கள் (Technical Vocational) ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடமும் படித்தாக வேண்டும் என்பதே அடிப்படைத் தகுதியாக இருக்கின்றது.
பொறிஇயல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட கூடுதல் பாடங்களுள், கீழ்காணும் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம், தகவல் நடைமுறைகள் (Informatic Practices), வேளாண்மை, பொறிஇயல் வரைகலை (Engineering Graphcs), வணிகக் கல்வி (Business studies).
எனவே, வேதிஇயல் பாடம் நீக்கப்பட்டதாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 04-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment