லடாக் எல்லையில், சீனப் படைகள் நடத்திய தாக்குதலில், இந்தியப் படை அதிகாரி ஒருவரும், வீரர்கள் இருவரும் உயிர் இழந்தனர், அவர்களுள் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பழநி என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அன்று, 1962 இல் இந்தியா நட்பு உறவை நாடிய சூழலில்தான், இந்தியாவைச் சீனா தாக்கியது.
அதைப் போலவே, தற்போதும் நேச உறவை வளர்க்கின்ற நோக்கத்தில்தான், சீனக் குடியரசுத் தலைவரை இந்தியா வரவேற்றது.
தமிழகம் சிறப்பான வரவேற்பு அளித்தது.
ஆனால், இப்போதும் சீனா தன் கைவரிசையைக் காட்டுகின்றது. கொரோனா வைரசைப் பரப்பியதான குற்றச்சாட்டுக் கணைகள், சீனாவை நோக்கிப் பாய்கின்ற நிலையில், உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப, இத்தகைய நடவடிக்கையில் சீனா இறங்கி இருக்கின்றது.
ஏற்கனவே லடாக் பகுதியில் 37000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டு, அக்சாய்சின் எனப் பெயர் சூட்டிக்கொண்ட சீனா,
மேலும் நிலத்தைப் பறிக்க முயல்கின்றது.
இந்த வேளையில், நாட்டின் எல்லையைக் காப்பதற்காகத் தன் இன்னுயிர் ஈந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.
தாக்குதல் நடைபெற்ற அன்று காலையிலும் பழநி தன் மனைவியோடு பேசி இருக்கின்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
22 ஆண்டுகள் பணிபுரிந்த பழநி, இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற இருந்த நிலையில், நாட்டுக்காகத் தன் உயிரை ஈந்திருக்கின்றார்.
பழநியின் தம்பியும், இந்தியப் படையில் கடமை ஆற்றி வருகின்றார் என்பது பெருமைக்கு உரியது.
வீரச்சகோதரன் பழநிக்குத் தலைவணங்கி கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது இரங்கல் அறிக்கையில் 16-06-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment