தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் பென்னிகஸ் மற்றும் அவரது 5தந்தை ஜெயராஜ்(56) காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கோவில்பட்டி கிளைச் சிறையில் பூட்டப்பட்ட நிலையில், நேற்று இரவு பென்னிகஸும், இன்று காலை அவரது தந்தை ஜெயராஜும் இறந்துவிட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடையை அடைக்கக் கோரி காவல்துறையினருக்கும், கடை உரிமையாளரான பென்னிகஸுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாலையில் வாக்குவாதம் எழுந்து இருக்கிறது. அதை ஒட்டி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்களும் சேர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று, காவலர்கள் சிலர் துணையோடு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதோடு, காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து, கைது செய்து, ஜூன் 20 அன்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். குற்றவியல் சட்டம் 176(1)(ஏ) பிரிவின்படி குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு எழுகிறது.
தாக்கப்பட்டவர்களை நேரில் பார்க்கமலேயே நீதிபதி ரிமாண்ட் செய்திருக்கிறார்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ் அவர்களின் ஆசானவாயில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே காவல்துறை தாக்குதலில் நிலைகுலைந்து இருந்த பென்னிகஸ் நேற்று 22 ஆம் தேதி மாலை கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இன்று ஜூன் 23 காலை அவரது தந்தையார் ஜெயராஜும் கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரும், காவல்துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம் சாட்டுகிறேன்.
சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதி ஆகிறது.
காவல்துறையினரின் இந்த அப்பட்டமான படுகொலைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.
காவல்துறையினரின் இதுபோன்ற கொடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இருவரது உடல்களையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்திட வேண்டும்.
இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 23-06-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment