Monday, August 31, 2020

பிரணாப் முகர்ஜி மறைவு! வைகோ இரங்கல்!

இந்தியக் குடி அரசின் முன்னாள் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர்.பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரால் அரசியலில் அறிமுகம் பெற்றார். 1969 ஆம் ஆண்டு, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். 1973 ஆம் ஆண்டு, தொழில்வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஆனார். 

1975, 81,93,99 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.   

1980 ஆம் ஆண்டு,. மாநிலங்கள் அவை முன்னவர் ஆனார். 

1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திரா அம்மையார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்தில், அவரது நம்பிக்கைக்கு உரிய மூத்த அமைச்சராகத் திகழ்ந்தார்.1982 முதல் 1984 வரை நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தார். 

கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்திற்கு, மிகவும் நெருக்கமாமன குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, தாகூர் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டு இருந்தார். அதனால், இவரும் இலக்கியவாதி ஆனார்.சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். மேற்கு வங்க மண்ணின் மைந்தராக, வங்க மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். 

,1970 ,ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் அவர் பங்கேற்று உரை ஆற்றியதைக் கேட்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டு இருந்தார். 

1978 ஆம் ஆண்டு, நான் முதன்முறை மாநிலங்கள் அவை உறுப்பினர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், அதே அவையில் அவர் மூத்த உறுப்பினர். எனவே, நாள்தோறும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று இருந்தேன். விவாதங்களில் பங்கேற்று உரை ஆற்றுகின்றபோது, பலமுறை பாராட்டி இருக்கின்றார். 

1981 ஆம் ஆண்டு, மாருதி கார் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் நான் பேசிய உரையை, பிரதமர் இந்திரா அம்மையார் பாராட்டியதாக, ஒரு துண்டுச்சீட்டில் எனக்கு எழுதி அனுப்பினார். 

என் மீது மிகுந்த  அன்பு கொண்டு இருந்தார். எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் மறுக்காமல் உடனே வரச் சொல்லுவார். 

பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு, நாட்டுக்கு ஒரு இழப்பு. அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
31.08.2020

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்! வைகோ அறிக்கை!

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்.ஐ.சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

64 ஆண்டுகளில், 13 ஆவது திட்டக் காலத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ள நிதி ஏழு லட்சம் கோடிக்கு மேல் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது எல்.ஐ.சி நிறுவனம் மட்டும்தான் தனியார் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது.

எல்.ஐ.சி தொடங்கப்பட்ட காலத்தில் பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்கள் மூன்று முக்கியமான நோக்கங்களைப் பிரகடனம் செய்தார்.

ஒன்று, காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இரண்டாவதாக, நுகர்வோருக்கு தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவது.

இந்தக் குறிக்கோள்களை 64 ஆண்டுகளாக எல்.ஐ.சி நிறுவனம் உறுதியோடு நிறைவேற்றி வருவதால்தான் இன்று 42 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கி, காப்பீட்டுத் துறையில் முன்னணி முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் ஊழியர்கள் மற்றும் அனைத்துத் தரப்புப் பணியாளர்கள், முகவர்கள் அனைவருக்கும் இதயமார்ந்த வாழ்த்துக்களை இந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

32  லட்சம் கோடி ரூபாய்  அளவுக்கு சொத்து மதிப்பைப் பெற்றிருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தை முழுமையாக தனியாருக்குத் தாரைவார்த்திட, பங்குகள் விற்பனைக்கு மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுத்து வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.

மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

நூற்றாண்டு கடந்தும் எல்.ஐ.சி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
31.08.2020

இங்கிலாந்தில் பென்னிக் குயிக் கல்லறை சேதம்! வைகோ கண்டனம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிக் குயிக், தென் மாவட்ட மக்களின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் உதவும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி, தமிழக மக்கள் மனதில் போற்றத்தக்க இடத்தைப் பெற்றவர்.

தனது சொத்துகளை விற்று, முல்லைப் பெரியாறு அணை எழுப்பியவர். இலண்டனிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரிம்லின் என்னும் ஊரில் உள்ள அவரது கல்லறையின் மீது இருந்த 3 டன் எடை கொண்ட சிலுவைக் கல் உடைக்கப்பட்டுள்ளது. தனி மனிதனால் உடைக்கும் வாய்ப்பு இல்லை. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

அருகில் உள்ள மற்ற கல்லறைகளை எதுவும் செய்யாமல், பென்னிக் குயிக் அவர்களின் கல்லறையை உடைக்க முயன்ற பின்னணி என்ன? என்ற கோணத்தில் இங்கிலாந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் அவரது கல்லறையைப் பாதுகாக்க அரசிடம் கோரிக்கை வைத்தும் அது நிறைவேறாமல் அப்படியே இருக்கிறது.

தமிழக அரசும், இந்திய அரசும் பிரித்தானிய அரசோடு தொடர்புகொண்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லறைக்கு உரிய பாதுகாப்புக் கொடுக்கவும், வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
31.08.2020

Sunday, August 30, 2020

ஒமானில் மறைந்த கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் நினைவேந்தல் நிகழ்வு!

கலிங்கப்பட்டி திரு.வெங்கட்ராமன் அவர்கள் கொரோனா கோவிட் 19 பாதிப்பால், 03-08-2020 திங்கள் கிழமை ஒமான் நேரப்படி காலை 6 மணி அளவில் மறைந்தார். அவரது முகம் கண்டிப்பாக நாங்கள் பார்க்க வேண்டுமென்று குடும்பத்தார் வேண்டுகோள் வைத்ததால், உடலை தாயகம் கொண்டு செல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களின் வழிகாட்டுதலில், தமிழர் மறுமலர்ச்சி பேரவை வளைகுடா அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களின் ஆலோசனையின் படி, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் திரு.மைக்கேல் செல்வ குமார், ஒமான் புரைமியில் உள்ள திரு.அர்ஜூன் அவர்களுடன் இணைந்து, திரு.வெங்கட்ராமன் அவர்களது உடலை தனி விமானத்தில் தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தும், அவரது உடல் கொரானா பாதிக்கப்பட்டிருந்ததால், தாயகம் கொண்டு செல்ல ஒமான் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகவே திரு.வெங்கட்ராமன் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களும், அவரது தம்பி திரு.வை.ரவிசந்திரன் அவர்களும், தமிழர் மறுமலர்ச்சி பேரவை வளைகுடா அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களும் பல மணி நேரம் பேசி ஒமான் சட்டம் அனுமதிக்காததை எடுத்து கூறி குடும்பத்தார் உடலை ஒமானிலே தகனம் செய்ய ஒப்புதல் பெற்றார்கள். தொடர்ந்து இந்திய தூதரகம் மஸ்கட்டில் குடும்பத்தார் ஒப்புதல் கடிதம் கொடுத்து வெங்கட்ராமன் அவர்களது உடலை ஒமானிலே தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு இறப்பு சான்றிதள் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு, ராயல் ஒமான் போலீஸ் அனுமதியும், முனிசிபாலிட்டு அனுமதியும் பெறப்பட்டது. உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய ஒமான் சோஹாரில் உள்ள இந்து மகாஜன சபா நிர்வாகிகளை திரு.அர்ஜூன் மூலம் தொடர்பு கொண்டு இந்து முறைப்படி புது துணிகள், சந்தண கட்டை, மலர் வளையம், தங்க காசு, பட்டாடை மற்றும் ஏனைய பொருட்கள் வைத்து இந்து முறைப்படியே சோஹார் இந்து மகாஜன சபா மயானத்தில் 05-08-2020 ஒமான் நேரம் மாலை 3.15, இந்திய நேரம் மாலை 4.45 மணி அளவில் திரு.வெங்கட்ராமன் உடல் மரக்கட்டைகள் அடுக்கபப்ட்டு எரியூட்டப்பட்டது. அந்த நிகழ்வுகள் zoom இணைய காணொலி மூலம் குடும்பத்தாருக்கு காண்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பிலும் குடும்பத்தாருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. திரு.வெங்கட்ராமன் அவர்களது நினைவை போற்றும் வகையில், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வு zoom இணைய காணொலி மூலம் 28-08-2020 ஒமான் நேரம் மாலை 5.00, இந்திய நேரம் மாலை 6.30 மணி அளவில் தொடங்கி 2 மணி நேரம் திரு.வெங்கட்ராமன் அவர்களது நினைவலைகளை பகிர்ந்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. செயாலளர் மைக்கேல் செல்வ குமார் தலைமையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் ஒமான் கழக உறுப்பினர் கலிங்கப்பட்டி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தொடக்க உரை முடிந்ததும், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் மைக்கேல் செல்வ குமார் மூலம், திரு.வெங்கட்ராமன் அவர்களது திருஉருவபடம் திறந்துவைக்கப்பட்டு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் திரு.வெங்கட்ராமன் அவர்களது நண்பர்களாக, முனைவர் இளங்குமரன், பட்டிமன்ற நடுவர் திருமதி தனமணி வெங்கட், சிறுவன் ராகேஷ், திரு.ரவி கோமதி, திரு.சீனிவாசன் ஆதிமூலம், குடும்பத்தின் சார்பில் திரு.வெங்கட்ராமன் அவர்களின் மாப்பிள்ளை திரு. பாஸ்கரன், மற்றும் மூத்த அண்ணனும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வகுப்பு தோழனுமாகிய திரு.சுப்பாராம் அவர்களும், திரு.வெங்கட்ராமன் அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்தார்கள். மகன் இந்திரகுமார் தந்தை இறப்புக்கு பின்னர் ஒமான் சோஹாரில் தகனம் வரை உதவிய அனைவருக்கும் உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தார். வளைகுடா நாடுகளின் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் திரு.தாயகம் சுரேஷ், அமைப்பாளர் திரு.வல்லம் பசீர், ஆகியோர் இறந்த உடல்களை தலைவர் தாயகம் கொண்டு வர மேற்கண்ட பணிகளை பட்டியலிட்டு நினைவுகளை பகிர்ந்தார்கள். அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் அவரது இறப்பு முதல் தகனம் வரை தலைவர் வைகோ அவர்களின் பங்களிப்பு பற்றி நடந்த நினைவுகளை நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினார். தென்காசி மதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் அவர்கள் வெங்கட்ராமன் அவர்களின் மாவட்ட கழக பங்களிப்பு, அன்பு காட்டும் குணம் பற்றி புகழுரைத்தார்கள். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி சார்பில் செயலாளர் மைக்கேல் செல்வ குமார் நெறியாளுகையுடன், ஒமானில் இணையதள அணியாக மதிமுக அமைப்பை தொடங்கி, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையாக வளர்ந்ததில் திரு.வெங்கட்ராமன் அவர்களுடனான பங்களிப்பு பற்றிய நினைவுகளை பகிர்ந்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. நினைவேதல் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில், ஒமான் கழக கலிங்கப்பட்டி சீனிவாசகம் அவர்கள் நன்றியுரைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் முடிவாக, தமிழர்களின் இதய துடிப்பு, உலகின் எந்த மூலையில் தமிழனுக்கு துயரம் என்றால் ஓடோடி வந்து தோள் கொடுக்கும், மனிதாபிமானத்தின் மணி மகுடம், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்பி அவர்கள், தனது தாயார் அன்னை மாரியம்மாள் அவர்களுடனான திரு.வெங்கட்ராமன் அவர்களின் பாச பிணைப்பு, மதுக்கடை ஒழிப்பில் பங்கு, உதவும் குணம், ஊர் பாசம், தன் மீதுள்ள பற்று, கழகத்தின் மீதான கொள்கை பிடிப்பு போன்றவற்றை நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். நினைவேந்தல் கூட்டத்தில் 100 பேர் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை 28-08-2020

Friday, August 28, 2020

எச்.வசந்தகுமார் MP மறைவு! வைகோ இரங்கல்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் - அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அவர்கள், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணி செய்து வந்தார்.

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்.

வசந்தகுமார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
28.08.2020

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக! வைகோ அறிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் என்ற ஊர் சங்ககாலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அழகன்குளம் பகுதியில் 1986இல் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1990 தொடங்கி 2015 வரை ஏழு கட்டங்களாக அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகளின் மூலம் தொல்பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள், இரும்புக் கருவிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவையும், மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை உறுதி செய்யும் அரியவகை மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 2016 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பகுதியில் விரிவான அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

அதன்படி அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் பயன்படுத்திய அரியவகை பொருள்கள் கிடைத்தன. கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பழங்கால பொருட்களைவிட தொன்மை சிறப்பு மிக்க பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் அழகன்குளம் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகள் அமைந்துள்ளதால் இலக்கியங்களில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கிய பாண்டியர்களின் துறைமுகமான மருங்கூர்பட்டினமாக இருக்கக்கூடும் என்றும் கருதப் படுகிறது.

அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13000 பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று தொல்லியல் துறை  அறிவித்துள்ளது.

பழங்கால சிறப்புகளை மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அழகன்குளம் ஆற்றங்கரை பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து மீத்தேன் எரிவாயு ஆய்வு மேற்கொள்ள முனைந்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த முகத்துவாரத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆய்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா காலத்தில் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மத்திய அரசின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி மீண்டும் இந்தப் பகுதியில் மீத்தேன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முனைந்திருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டு வாழ்க்கையையும், கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் நடத்திய வணிகத்தையும் பறைசாற்றும் ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் அழகன்குளம் பகுதியை ஓஎன்ஜிசி எரிவாய்வு ஆய்வுப் பணிகள் மூலம் சிதைத்து விட ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

மேலும் கடலோடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வுப் பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

அழகன்குளம் ஆற்றங்கரை பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
28.08.2020

Thursday, August 27, 2020

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன் மறைவு! வைகோ இரங்கல்!


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் உயர்வின் மீதும் எல்லையற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் புகழ்மிக்கத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். முல்லைப் பெரியாறு பென்னி குயிக் அணையின் வலிமை குறித்தும், தமிழ்நாட்டின் உரிமைகள் குறித்தும் ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் அவர்கள் தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைத்தபோது, தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன் நியமிக்கப்பட்டார்.
கடுமையாக உழைத்து, ஆவணங்களை எல்லாம் ஆய்வு செய்து தமிழ்நாட்டின் உரிமை குறித்தும், அணை வலுவாக இருக்கிறது என்றும், புதிய அணை கட்டத் தேவை இல்லை என்றும் அவர் கொடுத்த அறிக்கைதான் தமிழ்நாட்டுக்கு நீதியை நிலைநாட்டியது.
தமிழ் மொழி மீதும், இலக்கியங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இலக்கிய மாநாடுகளில், விழாக்களில் பங்கேற்று உரையாற்றுவார்.
என் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். பலமுறை அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து உரையாடி இருக்கிறேன். காரைக்குடி கம்பன் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இருமுறை கம்பன் விழாவுக்கு என்னை அழைத்துப் பேச வைத்தார்.
அவரும், அவரது துணைவியார் திருமதி மீனாட்சி ஆச்சி அவர்களும் இணைபிரியாத இலட்சியத் தம்பதிகள் ஆவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆகஸ்டு 25 ஆம் தேதி, அவரது துணைவியார் மீனாட்சி ஆச்சி மறைந்தார்கள். அந்தப் பிரிவைத் தாங்க முடியாத அதிர்ச்சியால் அவரது இதயம் இன்று செயலிழந்துவிட்டது.
ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து தாங்க முடியாத துக்கத்தில், வேதனையில் துடிக்கும் அவரது மகன் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துயரத்துடன் எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.08.2020

அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

சமூகநீதி இலட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும்.

அன்றைய தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும்; அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
27.08.2020

Tuesday, August 25, 2020

பொது முடக்கத்தை நீக்குங்கள்; போக்குவரத்துத் தடையை விலக்குங்கள்! வைகோ அறிக்கை!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது.

வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானது இல்லை. 

அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டது. அதனால் ஏழை எளிய அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.

மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு வழங்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.

குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன் அலைபேசி வசதிகள் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு திறன் அலைபேசிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

அப்படி, தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசிடம் அதற்கான நிதி இல்லை கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்து விட்டது அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது.

கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது. 

நடுவண் அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்து விட்டது.

தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தில்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அரசுப் பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்; செப்டம்பர் 1 முதல் தொடரிகள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்; அயல்நாடுகளில் இருந்து வான் ஊர்திகள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

சமூக விலகலைக் கடைபிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
25.08.2020

Saturday, August 22, 2020

இந்தி தெரியவில்லை என்றால் யோகா வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்: மத்திய ஆயுஷ் அதிகாரி மிரட்டல்! வைகோ கண்டனம்!

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர்களை “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள். மேலும் கேள்வி கேட்டால் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திமிரோடும், மமதையோடும், ஆணவத்தோடும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே மிரட்டியுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவைப் பரப்புவதற்காக, யோகா படிப்பு முடித்த 1,25 இலட்பேம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமிக்கத் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 38 மருத்துவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்புகளின் கடைசி நாளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கலந்துகொண்டு இந்தியில் பேசியுள்ளார். அப்பொழுது தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், “எங்களுக்கு இந்தி தெரியாது. நீங்கள் பேசுவது புரியவில்லை. யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறை என்று இருக்கும்போது, நீங்கள் யோகாவை மட்டும் கூறுகிறீர்கள். இயற்கை மருத்துவத்தை எதிர்க்கிறீர்களா?”  என்று ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர். “ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த ராஜேஷ் கோட்சே, “எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என்றால், ஆன்லைன் வகுப்பிலிருந்து விலகுங்கள்” என்று கோபமாகப் பேசியதோடு, பயிற்சி வகுப்பையே உடனடியாக இரத்து செய்து, இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.

தனக்கு எதிராகப் பேசியவர்கள் பெயர் பட்டியலைத் தயார் செய்து, “மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று மிரட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களுக்கு இவர் வேண்டிவர் என்பதால், ஓய்வு பெற்றதற்குப் பின்னரும் பணி நீட்டிப்புச் செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரு சித்த மருத்துவ ஆலோசகர் பதவியையும் இப்போது நீக்கிவிட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக 75 பாரம்பரிய சித்த மருத்துவ மூல நூல்களை அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்கப் போராடி வருகின்றது. இன்றுவரை நடக்கவில்லை.

உலகம் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறது. இந்தியாவின் வலிமையே அதன் பன்முகத்தன்மையும், ஒருமைப்பாடுத்தான். மரபு மருத்துவத் துறையில் சித்தம், ஆயுர்வேதம், யோகம், யுனானி, ஓமியோபதி என அனைத்திலும் தனித்துவங்களும், பயனும் ஏராளமாய் உள்ளன. இவை ஒருங்கிணைந்து பணியாற்றினால் மிகுந்த பயன் கிடைக்கும். ஆனால் பாரபட்சமான முறையில் சித்தா போன்ற துறைகளை ஓரவஞ்சனையாய் நடத்துவதும் மிகவும் தவறான போக்காகும்.

இந்த அமைச்சகத்தின் பெயரே ஆயுஷ் என்று வைத்திருக்கிறார்கள். அதற்கு பொருள் தரும் ஆங்கில வார்த்தை கிடையாது. மத்திய அரசால் இந்தித் திணிப்பு உச்சகட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு நடந்த சம்பவம் சரியான சாட்சியமாகும்.

மத்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். கோட்சேயை அந்தப் பதவிலிருந்து நீக்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
22.08.2020

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களும் கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!

கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்க்கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம், ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு உள்ள மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையேல், இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதோடு, கட்டணம் செலுத்தாவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களின்  (Ph.D.,) பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

என்.ஆர்.ஐ, சி.ஐ.டபிள்யூ.ஜி.சி (NRI, CIWGC) ஒதுக்கீட்டின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சி.இ.ஜி, எம்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் வெளிநாடுவாழ் தமிழக மாணவர்கள், நடப்பு ஆண்டிற்கான ( 2020 - 2021) கல்விக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விவகாரங்களுக்கான மையம், 
நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ, கடந்த கல்வி ஆண்டுக்கான (2019 - 2020) பாக்கி கட்டணத்  தொகையையோ செலுத்த மாணவர்களையும், பெற்றோர்களையும் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்த தாமதமானால் அபராதத் தொகை வசூலிப்பது சட்டவிரோதம் ஆகும். மேற்கண்ட, உத்தரவை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. 

கோவிட் - 19 நுண்ணுயிர் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகள் கல்விக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகின்ற நிலையில், 
தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி  நிறுவனங்கள் கட்டாய கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்கு உரியதும், மனிதாபிமானம் அற்ற செயலுமாகும். 

பெரும்பாலான பெற்றோர்கள், கூலி வேலை செய்தும், குறைந்தபட்ச ஊதியத்தை பெறும் பணிகளில் ஈடுபட்டும் தான் தங்களது பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகின்றார்கள். 

தங்களது வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகி இருக்கிற நிலையில், பெற்றோர்களையோ, மாணவர்களையோ மொத்தமாக கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது. 

பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்விக் கட்டண குறைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களும் குறைந்தபட்சம் தவணை முறையிலாவது கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும். 

கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானால் எந்தவிதமான அபராதத் தொகையையும் வசூலிக்க கூடாது என, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை – 8
22.08.2020

Thursday, August 20, 2020

முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைவுக்கு வைகோ இரங்கல்!

முன்னாள் அமைச்சர், என் இனிய நண்பர் ரகுமான்கான் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன்.

மாணவர் இயக்கத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மிகச் சிறந்த இலட்சியவாதி ஆவார்.

தலைசிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, குறிப்பாக தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சரம் சரமாக கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்.

ரகுமான்கான் அவர்களும், துரைமுருகன் அவர்களும், க.சுப்பு அவர்களும் சட்டமன்றக் கதாநாயகர்களாகத் திகழ்ந்தார்கள்.

சட்டக் கல்லூரியில் அவர் பயின்ற நாட்களிலிருந்து என் மீது பாசமும் நட்பும் கொண்டிருந்தார். டாக்டர் கலைஞர் அவர்களை உயிரினும் மேலாகப் போற்றினார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகளில் அனல் தெறிக்கும்; புனல் பாயும், ஆணித்தரமான கேள்விகள் அடுக்கடுக்காக வரும். பல நாட்டு வரலாறுகளையும், இலக்கியங்களையும் மேற்கோள் காட்டுவார்.

ரகுமான்கான் அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.

பாசமும், நேசமும் கொண்டு நான் அவருடன் பழகிய நாட்கள் பசுமையாக மனதில் எழுந்து வாட்டுகின்றன.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
20.08.2020

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆரம்பம் முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் வைகோ அவர்களே நேரில் ஆஜராகி வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால், வைகோ அவர்கள் தன்னுடைய கருத்தைக் கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ரிட் மனுக்களை தாக்கல் செய்து, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எல்லா வழக்குகளிலும் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
சென்னை -8
 ‘தாயகம்’
20.08.2020

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை: பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்-வைகோ கண்டனம்!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசு பணியிடங்களை நீரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வு கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே தகுதித் தேர்வை நடத்தி, மத்திய அரசின் பணி இடங்களை நிரப்ப தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே தகுதித் தேர்வு என்பது மத்திய அரசுப் பணிகளில் சேர விழைவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றலாம்.

ஆனால், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து, பா.ஜ.க. அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி போன்ற தொழில்நுட்பம் சாராத பணி இடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை பொதுத் தகுதி தேர்வை நடத்தும். இதில் பெறும் மதிப்பெண்களை தற்போது செயல்பட்டு வரும் ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மூன்று தேர்வாணையங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.

அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் மத்திய பணியாளர் தேர்வு முகமையின் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதில்தான் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் ஒளிந்திருக்கிறது. இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் நியமனங்கள் செய்வது அடியோடு ஒழித்துக்கட்டப்படும்.

வடநாட்டுத் தேர்வு மையங்களில் எப்படித் தேர்வுகள் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு முறைகேடாக நடத்தப்படும் தேர்வுகள் மூலம் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டின் பணியில் அமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறைப் பணியிடங்களிலும் வடநாட்டைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கும் வழி ஏற்பட்டுவிடும்.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் வகையில் அரசுப் பணியிடங்களில் வடநாட்டு இந்திக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்பதை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் மிகுமின் நிறுவனம், என்.எல்.சி., இரயில்வே மற்றும் வங்கிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக வடநாட்டு இந்திக்காரர்கள் பணி நியமனம் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கும், தமிழக இளைஞர்களுக்கு 90 விழுக்காடு மத்திய அரசு நிறுவனங்களின் பணிகளில் முன்னுரிமை அளிக்க மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
20.08.2020

Tuesday, August 18, 2020

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! வைகோ அறிக்கை!

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

2018 மே 22 ஆம் தேதிக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலையை தமிழ்நாடு அரசு எடுக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருக்காது. 13 பேர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

13 பேர் சிந்திய இரத்தம், அவர்களின் உயிர்த் தியாகம் நீதியைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் அவர்களை மனித வேட்டையாடிய காவல்துறையினர் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, அந்தப் படுகொலைக்கு மாநில அரசே முழு காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இப்போதாவது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினரை பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

இந்த வழக்கும் தமிழ்நாடு அரசு காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு கிணற்றில் போட்டக் கல்லாக இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை மனித உரிமை ஆணையத்திலும் தாக்கல் செய்துள்ளனர்.

ஹென்றி திபேன் குழுவினர் அறிக்கை சி.பி.ஐ.யிடமும் கொடுக்கப்பட்டது.

மக்கள் உள்ளம் எரிமலையானதைக் கண்டு, தன்னுடைய நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொண்டு, நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர் நிலை எடுத்தது.

சுற்றுச் சூழலைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எந்தச் சூழலிலும் அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. கொள்கை முடிவாக அறிவிக்கவும் இல்லை. இப்போதாவது தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, அம்மாதிரியான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. ஆனால் 13 பேர் படுகொலைக்கு ஒரு சதவிகிதம்கூட நீதி கிடைக்கவில்லை. இதற்கு மாநில, மத்திய அரசுகளைக் குற்றம் சாட்டுகிறேன்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26 ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

துளியளவும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் மக்கள் மன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நானே வாதங்களை எடுத்துவைத்துள்ளேன்.

இது நீதிக்குக் கிடைத்த வெற்றி; மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை -8

18.08.2020

Saturday, August 15, 2020

பஹ்ரைனுக்கு வான் ஊர்தி ஏற்பாடு வைகோவிடம் அமைச்சர் உறுதி!

வந்தே பாரத் திட்டத்தின்கீழ், வளைகுடா நாடுகளில் இருக்கின்ற இந்தியர்களை மீட்டு வருவதற்கு வான்ஊர்திகள் அறிவிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதுவும், சென்னைக்குக் குறைந்த அளவிலேயே வருகின்றன. அதுபோல, கடந்த நான்கு மாதங்களாக, சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வான் ஊர்திகள் இல்லை. குறிப்பாக, பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த, அங்கே பணிபுரிகின்ற 800 க்கும் மேற்பட்டவர்கள், சென்னையில் இருக்கின்றனர். அவர்களுள் பலரது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனவே, அவர்கள் பஹ்ரைன் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.


சென்னையில் இருந்து வான் ஊர்திகளை இயக்குவதாக, கல்ஃப் ஏர் வான் ஊர்தி நிறுவனம், பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 


இதுகுறித்து, பஹ்ரைன் வாழ் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களுக்கும், வியாழக்கிழமை அன்று மின்அஞ்சல் வழியாகத் தெரிவித்து இருந்தார். 


நேற்று பிற்பகல், அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்கள், அலைபேசியில் வைகோ அவர்களுடன் பேசினார். அப்போது வைகோ அவர்கள் நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அதற்கு அமைச்சர், விரைவில்,, பஹ்ரைன் நாட்டுக்கு வான் ஊர்தி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். 


ஜப்பானில் இறந்த இளைஞர் உடல், இன்று சென்னை வருகின்றது.


திருத்தணியைச் சேர்ந்த மாதவ் கிருஷ்ணா என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் ஜூலை 29 ஆம் நாள் ஜப்பானிலேயே இயற்கை எய்தினார். 


ஜப்பான் நாட்டுச் சட்டப்படி, அவரது உறவினர்கள் யாரேனும் ஜப்பானுக்கு வந்து, உடலை அடையாளம் காட்டி, பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஜப்பான் காவல்துறையினர் கூறினர். 


இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு வான் ஊர்திகள் இல்லை என்பதைக் கூறி, அவருடைய நண்பர்கள் உடலை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அவர்களிடம் ஒப்படைக்குமாறும் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஜப்பான் காவல்துறையினர் ஏற்கவில்லை. 


இது தொடர்பாக, வைகோ அவர்கள், அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டார். 


தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, உடலைத் தருவதற்கு, ஜப்பான் காவல்துறையினர் இசைவு தெரிவித்தனர். 


மாதவ் கிருஷ்ணா உடல், நேற்று டோக்யோவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் வான் ஊர்தியில் ஏற்றப்பட்டு, கத்தார் நாட்டின் தலைநகர் டோகா போய்ச் சேர்ந்தது. இன்று (15.8.2020) மாலை 7 மணிக்கு வந்து சேரும் என, அயல் உறவுத் துறை அமைச்சகம், வைகோ அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இருக்கின்றது. 


மாதவ் கிருஷ்ணாவின் உடல் இன்று இரவு சென்னைக்கு வருகிறது. அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை -8

15.08.2020

Friday, August 14, 2020

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுத்திடுக! வைகோ அறிக்கை!

ரஷ்யாவில் வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள, வோல்கோகிராட் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன், விக்னேஷ் ராமு ஆகிய மாணவர்கள் மருத்துவம் பயின்று வந்தனர்.

கடந்த வார இறுதியில், 09.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, வார விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க வோல்கா நதிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும், எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டிய மாணவர்களின் எதிர்பாராத உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்து போன நான்கு தமிழக மாணவர்களின் உடல்களையும் விரைந்து தமிழகம் கொண்டுவர, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன்.
பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று, தங்களின் பிள்ளைகளை சிறந்த மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என்றக் கனவோடு வெளிநாட்டிற்கு மருத்துவம் படிக்க அனுப்பி வைத்த பெற்றோர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிற வகையில், தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை -8
14.08.2020

Wednesday, August 12, 2020

மறைந்த ஆட்டோராஜ் குடும்பத்துக்கு மதிமுக நிதியுதவி!

மறைந்த கழகத் தோழர் ஆட்டோ ராஜ் அவர்களின் குடும்பத்திற்கு, அவருடைய மகள்களின் கல்வி உதவிக்காக, அம்மாபேட்டை கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் கழகத் தோழர்களும், இணையதள உறவுகளும் வழங்கிய ரூபாய் இரண்டு லட்சத்து தொண்ணூற்றி இரண்டு ஆயிரத்து எண்ணூறு (₹2,92,800/-)

இன்று 12-08-2020 மாலை, அன்பு தலைவர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வைத்து ஆட்டோ ராஜ் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

அதுபோது திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.சு.ஜீவன், இணையதள தோழர் அம்மாபேட்டை கருணாகரன், கொளத்தூர் பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி.ஞானம், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் திரு.விக்டர் எபிநேசர், இளைஞர் அணி செயலாளர் திரு.அவெஞ்சர் ஜெய் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, August 11, 2020

பெண்களுக்குச் சொத்து உரிமை; உச்சநீதிமன்றத் தீர்ப்பு! வைகோ வரவேற்பு!

இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகின்றது என, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

தற்போது இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து, இன்று வழங்கி இருக்கின்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என, நீதிபதி அருண் மிஸ்ரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என, உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது.
1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன்பின்னர் 1989 இல் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார்.
இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் சம உரிமை பெற 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
11.08.2020

Monday, August 10, 2020

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம்!வைகோ அறிக்கை!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா நடவடிக்கைகள் குறித்து, கனிமொழி அவர்களிடம் இந்தி மொழியில் உரையாடி இருக்கிறார். அதற்குக் கனிமொழி எம்.பி., எனக்கு இந்தி புரியவில்லை. எனவே தமிழ் அல்லது ஆங்கில மொழியில் பேசுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் அதிகாரி கனிமொழியைப் பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

இந்த நிகழ்வை கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியதால், சமூக வலைதளங்களில் சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி மீது கண்டனக் கணைகள் பாய்ந்தன.

இந்தி புரியவில்லை என்று கனிமொழி கூறியதால் நீங்கள் இந்தியரா? என்று பாதுகாப்புப் படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியது தற்செயலானது என்றோ, தெரியாமல் கேட்டுவிட்டார் என்றோ கடந்து போய்விட முடியாது.

இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் டெல்லி ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எதேச்சாதிகார தன்மைதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. அந்த அதிகரி மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவது இல்லை. ஒட்டுமொத்த மத்திய அரசும் இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி நாள், அதாவது ‘இந்தி திவாஸ் நாள்’ கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், “இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால் நமது நாடு  முழுவதற்கும் ஒரே மொழி இருப்பது அவசியமாகும். அப்போதுதான் உலகளவில் இந்தியாவின் அடையாளம் இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும் என்றால், அதிகமாகப் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.”

அமித்ஷாவின் இக்கருத்துக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், ட்விட்டர் பதிவு குறித்து மழுப்பலான விளக்கம் அளித்தார்.

பா.ஜ.க. அரசு இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே, மத்திய அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவுகள் போடப்பட்டன.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு பல்வேறு வகைகளில் இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதற்கும் பா.ஜ.க அரசு ஆணைகள் பிறப்பித்தது.

இந்தி மொழிப் பாடத்திட்டங்களைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் 10 ஆம் வகுப்பு முடிய இந்தி மொழி பயிலுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மொழிப் பாடம் ஆக்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயலாற்ற வேண்டும்.

இந்தி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் தேர்வு எழுதவும், நேர்முகத் தேர்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்தி மொழி அறிந்திருந்தால், அவர்கள் இந்தி மொழியில் மட்டுமே பேசவும், அறிக்கைகள் வெளியிடவும் வேண்டும்.

மத்திய அரசின் இரயில்வே தேர்வுகளை இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே எழுத வேண்டும்.

இரயில்வே அலுவலர்கள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும். தமிழ் மொழியில் பேசக் கூடாது.

இரயில்வே துறை, விமான போக்குவரத்துத் துறை, வெளிவிவகார மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு இந்தி மொழிதான் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை வலிந்து நிலைநாட்ட பா.ஜ.க. அரசு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதன் உச்சமாக தற்போது இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையைப் புதிதாக அறிவித்து இருக்கின்றது.

பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதையும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்ப்பது பன்பமுகத்தன்மைதான் என்பதையும் உணராமல், பா.ஜ.க. அரசு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முயன்றால், அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கு தமிழகம் சர்வபரி தியாகத்திற்கும் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை -8

10.08.2020

Saturday, August 8, 2020

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்கிடுக! வைகோ அறிக்கை!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச் மாதம் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது.

அதன் விளைவாக 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு 2019 டிசம்பரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 14,949 நபர்கள், 2020 மார்ச் 15 இல் எழுத்துத் தேர்வு எழுதினார்கள். அதன் முடிவுகள் 2020 மே மாதம் தரவரிசைப் பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் வெளியிட்டு மூன்று மாதங்கள் கடந்தும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவில்லை.

இல்லாமையாலும், வறுமையாலும் வாடும் அவர்களுடைய நிலைமையை எண்ணி, தகுதி அடிப்படையில் மின்சார வாரியம்  விரைவில் பணி ஆணை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை -8

08.08.2020

Friday, August 7, 2020

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி; இரங்கல்!

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தியைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கின்றார். அங்கே ஊழிக் காற்று வீசுவதால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாது என்றும், சாலைகள் அனைத்தும் அடைபட்டுக் கிடப்பதாலும் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி இருக்கின்றார். எப்படியும் தான் அங்கே போய்விடுவேன் என்று அவர் தெரிவித்து இருப்பதுடன், மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற ஆவன செய்திருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.

கேரள மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருக்கின்ற குடியிருப்புகள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்த நிலச்சரிவு படம்பிடித்துக் காட்டி இருக்கின்றது.

எனவே இனியாவது தேயிலைத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் குடியிருப்பைப் பாதுகாப்பான இடங்களில் அமைத்திட வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த வகையிலும் ஆறுதல் கூறி தேற்ற இயலாது. அந்தக் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட கேரள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 07-08-2020 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் மறைவுக்கு வைகோ இரங்கல்!

சென்னை உயர் நீதிமன்ற மூத்த செய்தியாளர்  பி.எஸ்.எல்.பிரசாத் உடல் நலக்குறைவால் நேற்று இரவு  காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு வயது 65.

மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய பிரசாத், தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.

1970-களில் வடசென்னை பகுதி நிருபராக தன் பணியை தொடங்கியவர், பின்னர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த செய்தி சேகரிக்கும் நிருபராக, நேர்த்தியாக செய்தி சேகரிப்பு பணியைச் செய்துவந்தார்.

சுமார் 40 ஆண்டுகால செய்தியாளர் பணியில், 23 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

மூவர் தூக்கு வழக்கு, ஸ்டெர்லைட் வழக்கு, சீமைக் கருவேல வழக்கு, கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கக் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வாதாடச் சென்றபோது மிகவும் ஆர்வத்தோடு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட இவர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 07-08-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, August 6, 2020

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் வெற்றிபெற்றவர்களை பாராட்டுகிறேன்; பேரும் புகழும் பெற வாழ்த்துகின்றேன். வைகோ அறிக்கை!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட, நடுவண் அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கன்னியாகுமரி கணேஷ் பாஸ்கர், இந்திய அளவில் 7 ஆம் இடம், ஆர்.ஐஸ்வர்யா 47 ஆம் இடம், எஸ்.பிரியங்கா 68 ஆம் இடம் பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கின்றனர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணி (பரிமளம் மகள் வழிப் பேத்தி), அனைத்து இந்திய அளவில் 171 ஆவது இடத்தைப் பெற்ற செய்தி அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். நேற்று அவரைத் தொடர்பு கொண்டு பேசி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். குடும்பத்தினர் அனைவரோடும் பேசினேன்.

பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருவர் வெற்றி பெற்று இருப்பது தன்னம்பிக்கையைத் தருகிறது. அவர்களில் பூர்ணசுந்தரி அனைத்து இந்தியா அளவில் 286 இடத்தைப் பெற்று வெற்றி பெற்று இருப்பது பெரும் ஊக்கம் அளிக்கின்றது.

கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே, ஆட்சிப் பணிகளில், இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகின்றது.

நாடு விடுதலை அடைந்தபோது, நடுவண் அரசின் ஆட்சிப்பணிகளில், பெருமளவில் தமிழர்கள் இடம் பெற்று இருந்தனர். உயர் அதிகாரிகளாக, பல்வேறு சாதனைகளைப் படைத்தனர்.

அது மட்டும் அன்றி, அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுகளிலும் Staff Selection Commission தமிழகத்து இளைஞர்கள் பெருமளவில் வெற்றி பெற்று வந்தனர். பின்னாட்களில், அந்தத் தேர்வுகளில் தமிழகத்து இளைஞர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.

படிப்படியாகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆட்சிப் பணிகளில் தமிழகத்தின் பங்கு ஏற்பைத் திட்டமிட்டுக் குறைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுப் பணிகளில், பெருமளவில் வட இந்தியர்களைக் கொண்டு வந்து புகுத்துகின்றனர்.

மேலும், தமிழகத்து இளைஞர்கள், மருத்துவம், பொறிஇயல் மற்றும் ஆராய்சித் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதால், ஆட்சிப் பணித் தேர்வுகளில் வெற்றி விழுக்காடு குறைந்து வருகின்றது.

காலப்போக்கில், இது தமிழகத்திற்குக் கேடாக அமையும். அரசின் திட்டங்களை வகுக்கின்ற அதிகார மையத்தில், தமிழகத்தின் பங்கு வெகுவாகக் குறைந்து விடும்.

எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில், ஆட்சிப் பணித் தேர்வுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, உரிய இடங்களைத் தமிழகம் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் இளைய தலைமுறையினர் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இம்முறை வெற்றி பெற்று இருக்கின்றவர்கள், தங்கள் துறைகளில் புதிய சாதனைகளைப் படைத்து, பேரும் புகழும் பெற்றிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்றைய 06-08-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 5, 2020

கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள், கொரொனா கோவிட் 19 தொற்றால், ஒமான் புரைமியில் மறைவு! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் தெரிவித்து, வைகோ அவர்களின் கண்காணிப்பில், வெங்கட்ராமன் அவர்களின் உடல் ஒமான் சோஹாரில் தகனம்!

03-08-2020 திங்கள் கிழமை காலை ஒமான் நேரப்படி 10.15 மணி அளவில் பேராசிரியர் Dr.இளங்குமரன் அவர்கள் எனக்கு முகநூலில் கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள் கோவிட் 19 பாதிப்பால் மறைந்தார் என்ற செய்தி சொல்லி அர்ஜூன் என்பவர் அலைபேசி எண்ணையும் கொடுத்தார். இறந்த செய்தியை அண்ணன் கலிங்கப்பட்டி ராதாகிருஷ்ணன் அவர்களிடத்தில் உறுதி செய்தேன்.

விபரம் கேட்க, அர்ஜூன் என்பவரிடத்தில் உடனே தொடர்பு கொண்டேன். அர்ஜூன் என்பவர் வெங்கட்ராமன் அவர்கள் இபோது வேலை செய்வதற்கு முன் வேலை செய்த கம்பெனி ஓணர் மகன். அவரிடத்தில் பேசிய போது, அண்ணன் வெங்கட்ராமன் இறந்த செய்தியை தற்போதைய கம்பெனி ஓமானி ஓணர், பழைய ஓணரான அர்ஜூனின் அப்பாவிற்கு பழக்கமானவர் என்பதால் அவரிடத்தில் சொல்லி குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்க சொல்லியிருக்கிறார். பழைய ஒணருக்கு பழக்கமான பேராசிரியர் Dr.இளங்குமரன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ராதாகிருஷ்ணன் பற்றி பழைய ஓணருக்கும் தெரியுமாதலால், அவரது அலைபேசி எண் வாட்சப் குழு மூலம் எடுத்து ராதாகிருஷ்ணனுக்கும் தகவல் சொல்லியிருக்கிறோம் என்றார்.

வெங்கட்ராமன் அவர்கள் 11 நாட்களாக கொரொனா கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கடைசி 7 நாட்கள் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெற்றிருக்கிறார் அதில் கடைசி 3 நாட்கள் இரவு நேரத்தில் மூச்சு திணறல் இருந்திருக்கிறது காலையில் சரியாகியிருக்கிறது என்றும், மூச்சு திணறலால் மறைந்திருக்கிறார் என்றும் புதிய ஓணர் சொன்னதாக செய்தியை சொன்னார்.

இந்த செய்தியை அண்ணன் பாலன் அவர்களுக்கு அலைபேசி அழைத்து தகவல் தெரிவித்தேன். அப்போது அந்த தகவல் அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு தெரியும், தலைவர் வருந்தியதாக அண்ணன் பாலன் சொன்னார். அண்ணன் அருணகிருக்கும் தகவல் சொல்லியிருந்தேன். அவருக்கும் தகவல் தெரிந்திருந்தது.

அவசர அவசரமாக இறந்த தகவல் சேகரித்து, தலைவருக்கு தகவல் சொல்லி முடிக்கவும், மதிமுக வளைகுடா அமைப்பாளர் அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் எனக்கு அழைத்தார். அண்ணனுக்கு முழு விபரம் கொடுத்தேன். பின்னர் சிறுது நேரம் கழித்து மீண்டும் அழைத்து உடல் கொண்டு வர சாத்திய கூறுகளை தேட சொன்னார். அர்ஜூன் அவர்களிடத்தில் பேச இயலுமா என்று கேட்டு, நான் அர்ஜூன் அலைபேசி எண் கொடுத்ததும், ஒமானிலிருக்கும் அர்ஜூனிடத்திலும் நேரடியாக பேசி விளக்கம் பெற்றார்.

அடுத்த வேலையாக அவர் மறைந்த பிறகு இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்து, இறப்பு சான்றிதழில் கொரொனோ கோவிட் 19 தொற்று இருந்ததால் மரணம் என்று சான்றிதழ் கிடைக்கப்பெற்றோம். உடனே அண்ணனுக்கு அனுப்பினோம். மருத்துவமனையினர், கொரொனா பாதித்த இறந்த உடலை இங்கு அடக்கம் செய்ய முனிசிபாலிட்டியிடம் ஒப்படைப்போம் என்றார்கள். உடலை ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறோம் என்று பேசியிருந்தோம்.

அவரது உடலை தாயகம் கலிங்கப்பட்டி அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று, நாள் முழுதும் முயன்றோம். ஒமானில் இருக்கிற பெரிய ட்ராவல்ஸ் முதல் சிறிய ட்ராவல்ஸ் வரையிலும், மற்றும் நேரடியாக ஏர்லைன்ஸிடமும் முயற்சி செய்தும் கொரொனா கோவிட் 19 தொற்று பாதித்த இறந்த உடல் அனுப்புவதில்லை என்ற பதிலே அனைத்து ட்ராவல்ஸ் மற்றும் ஏர்லைன்ஸிடமிருந்து கிடைத்தது. உடனே அந்த தகவல்களை அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டேயிருந்தேன்.

முனிசிபாலிட்டியும் இங்கு இறுதி சடங்கு செய்யுங்கள், இந்தியா கொண்டு செல்ல இயலாது என்றிருக்கும் வேளையில், உடல் ஊருக்கு கொண்டு வர இயலவில்லையென்றால், அங்கு தகனம் செய்ய குடும்பத்தாரிடம் பேசுகிறேன் என்றார்.

அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் காலையில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக குடும்பத்தாரிடம் பேசியும், குடும்பத்தார், பாடியை நாங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தாலும், ஒமான் அரசு அனுமதி கிடைக்காது என்று அதிகம் எடுத்துக்கூறியும், ஒமானில் வெங்கட்ராமன் அவர்கள் உடலை தகனம் செய்ய, குடும்பத்தார் சம்மதிக்காததாலும், அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, தனி விமானம் ஏற்பாடு செய்தாவது இறந்த உடலை கலிங்கப்பட்டி கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய ஆயத்தமானோம்.

கொரொனா காலத்தில் சாட்டர் விமான ஏற்பாடு செய்து இந்தியர்களை அனுப்பிக்கொண்டிருக்கிற கிம்ஜி ட்ராவல்ஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது மொத்த தொகை இந்திய ரூபாய் 3600000-4000000 ஆகும், இந்தியாவிலும் அனுமதி கிடைக்காது என்றார்கள். இந்தியாவில் தலைவர் வைகோ அவர்கள் மூலம் அனுமதி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில், ஒமான அரசு அனுமதி பெறுங்கள், இந்தியாவில் அனுமதி சிக்கல் ஏற்ப்பட்டால் நாங்கள் வைகோ எம்பி அவர்கள் மூலம் அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றோம். அவர்கள் அவ்வளவு முக்கியமான ஆளா என்று வியந்தார்கள். ஆம் அவர் வைகோ எம்பி அவர்களுக்கு மிக நெருக்கமானவர் என்று சொன்னதுமே நான் அன்பு தலைவர் வைகோ அவர்களுக்கு தெரிந்த நபர் என்று புரிந்துகொண்டார்கள், அச்சமயம் என்னுடைய மதிப்பே வேறு லெவலில் இருந்ததை அவர்களது பேச்சிலே உணர்ந்தேன். தலைவர் விசாரித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொண்ட கிம்ஜி ட்ராவல்ஸ் நிர்வாகம் (இந்தியர்கள்) எவ்வளவோ முயன்றும், கிம்ஜி ட்ராவல்ஸ் க்கும் ஒமான் அரசே அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு ட்ராவல்ஸ் தரும் பதிலையும், பதில் தராவிட்டால் அவ்வப்போது ட்ராவல்ஸ்க்கு அழைத்து, தகவல்களை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும் சொல்லிக்கொண்டே இருந்தோம்.

அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் பல முறை அண்ணன் வெங்கட்ராமன அவர்கள் குடும்பத்தாரிடம் ஒமானில் இறுதி சடங்கு செய்வோம் என்று பேசியும் சம்மதிக்காத நிலையில், வெங்கட்ராமன் அவர்கள் மகனிடமும் விளக்கமாக பேசி, உடலை இங்கு கொண்டு வர லட்சங்கள் செலவு செய்தும், தாயகம் கொண்டு வந்தாலும், தமிழக அரசு கொரொனா பிரச்சினையால், அவரது முகம் திறக்க அனுமதிக்காது, உடல் பக்கத்தில் கூட செல்ல முடியாமலும் போய்விடும், தாயகம் கொண்டு வர அனுமதியும் கிடைக்கவில்லை என்ற ஒமான் அரசின் அனுமதி கிடைக்காததை எடுத்து கூறிய பின் சம்மதம் தெரிவித்தனர். அன்பு தலைவர் வைகோ அவர்களும், ரவி அண்ணாச்சி அவர்களும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசியிருந்ததால் சம்மதம் தெரிவித்தார்கள் அன்று சாயங்காலம்.

அந்த தகவலை அர்ஜூன் அவர்களுக்கு தெரிவித்து, ஒமானில் இறுதி சடங்கு செய்ய ஒப்புதல் கடிதத்திற்கான பார்மேட் பெற்றோம். இந்து மஹாஜன சபாவிற்கும் இறந்த ஆவணங்களை அனுப்பி, அன்று சாயங்காலமே ஸ்டாலின் அண்ணனுக்கு பார்மேட் அனுப்பி, இறந்த உடலை, சோஹார் இந்து மஹாஜன சபா மூலம் தகனம் செய்யவேண்டும் என்ற வாக்கியம் இணைத்து இந்திய ரூ 100 பத்திரத்தில் கடிதம் தயாரித்து இரண்டாம் நாள் காலையில் ஸ்டாலின் அண்ணன் ஒமானில் தகனம் செய்ய குடும்பத்தார் எழுதிய ஒப்புதல் கடிதத்தை அர்ஜூன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த கடிதம் இந்து மகாஜன சபை மூலம் இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு ஒமான் விதிமுறைகளுக்குட்பட்டு மத நெறிமுறைகளின் படி தகனம் செய்வதற்கான தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டது. மேலும் அன்றைய தினம் முடிவதற்குள் ஒமானில் அடக்கம் செய்ய ராயல் ஒமான் போலீஸ் (ROP) அனுமதியும் பெறப்பட்டது.

இன்று 05-08-2020 காலை உடல் வைக்கப்பட்டிருந்த புரைமி மருத்துவமனையிலிருந்து அனுமதி பெற்று, லோக்கல் முனிசிபாலிட்டி மூலம் இந்து மஹாஜன சபா மூலம் தகனம் செய்ய அனுமதியும் பெறப்பட்டது.

இறந்த வெங்கட்ராமன் அவர்கள் உடல், ஆம்புலன்ஸ் மூலமாக ஒமான் புரைமையிலிருந்து 120 கிமீ தொலைவிலுள்ள சோஹார் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்து மஹாஜன சபா தகனம் செய்யும் இடத்தில் இந்து முறைபடி மலர் வளையம், புது வேட்டை, சட்டை, சந்தண கட்டை, தங்க காசு மற்றும் சில பொருட்கள் வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறந்த வெங்கட்ராமன் அவர்களை கடைசி நேரத்தில் காண முடியாத சோகத்தில் இருந்த குடும்பத்தாருக்கு, எப்போதுமே செல்பி எடுக்கும் பழக்கமுள்ள வெங்கட்ராமன் அவர்கள் முகப்படம் எடுத்து வைத்திருப்பார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையிலிருந்து அவரது அலைபேசி கிடைக்கப்பெற்றால் அவரது முகப்படத்தை குடும்பத்தாருக்கு அனுப்பி அவகளை ஆறுதல் அடைய செய்யலாம் என்று அர்ஜூன் அவர்கள் மூலம் எவ்வளவோ முயன்றும் மருத்துவமனை நிர்வாகம் அவரது பொருட்களை தர இயலாத சூழல் ஏற்பட்டது.

ஆகவே அவரின் இறுதி நிகழ்வான தகனம் செய்யும் நிகழ்வையாவது அவரது குடும்பத்தாருக்கு காண்பித்துவிட வேண்டுமென்று, வளைகுடா அமைப்பாளர் அண்ணன் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த zoom இணைய செயலி மூலம் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு குடும்பத்தார், உறவினர்கள் அனைவருக்கும் லிங் பகிரப்பட்டது. தகனம் செய்த நிகழ்ச்சியை நேரலையில் குடும்பத்தார், உறவினர்கள் உட்பட ஏராளமானோர் பார்த்து அழுத காட்சி கண்கலங்க வைத்தது.

அந்த இறுதி நிகழ்வின் முடிவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கழக துணை நிலை அமைப்பான, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய உதவியாயிருந்த இந்து மகாஜன சபா நிர்வாகிகள், நண்பர்கள், ஒமான் அரசு நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மறைந்த வெங்கட்ராமன் அவர்களது உடைமைகள் புரைமி மருத்துவமனையிலே இருக்கிறது. அதை பெற்றுக்கொள்ள ஒப்புதல் கடிதம் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் பெறப்பட்டுள்ளது. கலிங்கப்பட்டி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது முழு அடைப்பு ஒமானில் நிலவுவதால், வருகிற ஞாயிறு முதல் சகஜ நிலைக்கு வரும்போது மஸ்கட்டிலிருந்து புரைமி சென்று உடமைகளை பெற்றுக்கொள்வார்.

இறுதி சடங்கு முடிந்ததும், குவைத்திலிருந்து பாஸ்கரன் (வெங்கட்ராமன் அவர்களின் மனைவியின் சகோதரர்) என்பவர் வாட்சப் வீடியோ காலில் அழைத்து zoom meeting மற்றும் ஏனைய ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். அன்பு தலைவர் வைகோ அவர்கள்தான், வெங்கட்ராமன் அவர்கள் இறந்த நாள் முதல் சற்று முன் வரை தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் மூலம் கேட்டுக்கொண்டேயிருந்தார் என்ற தகவலையும் சொன்னேன். நன்றி தெரிவித்தார்.

நமது கழகத்தின் இதய துடிப்பு, கழகத்தின் கண்மனிகளுக்கு துயரம் என்றால் ஓடோடி வந்து தோள் கொடுக்கும், மனிதாபிமானத்தின் மணி மகுடம் குரலற்றவர்களுக்கான குரல் மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ MP அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
05-08-2020