Saturday, August 22, 2020

இந்தி தெரியவில்லை என்றால் யோகா வகுப்பிலிருந்து வெளியேறுங்கள்: மத்திய ஆயுஷ் அதிகாரி மிரட்டல்! வைகோ கண்டனம்!

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர்களை “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள். மேலும் கேள்வி கேட்டால் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திமிரோடும், மமதையோடும், ஆணவத்தோடும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே மிரட்டியுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவைப் பரப்புவதற்காக, யோகா படிப்பு முடித்த 1,25 இலட்பேம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமிக்கத் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 38 மருத்துவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்புகளின் கடைசி நாளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கலந்துகொண்டு இந்தியில் பேசியுள்ளார். அப்பொழுது தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட மருத்துவர்கள், “எங்களுக்கு இந்தி தெரியாது. நீங்கள் பேசுவது புரியவில்லை. யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறை என்று இருக்கும்போது, நீங்கள் யோகாவை மட்டும் கூறுகிறீர்கள். இயற்கை மருத்துவத்தை எதிர்க்கிறீர்களா?”  என்று ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர். “ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த ராஜேஷ் கோட்சே, “எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என்றால், ஆன்லைன் வகுப்பிலிருந்து விலகுங்கள்” என்று கோபமாகப் பேசியதோடு, பயிற்சி வகுப்பையே உடனடியாக இரத்து செய்து, இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.

தனக்கு எதிராகப் பேசியவர்கள் பெயர் பட்டியலைத் தயார் செய்து, “மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று மிரட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களுக்கு இவர் வேண்டிவர் என்பதால், ஓய்வு பெற்றதற்குப் பின்னரும் பணி நீட்டிப்புச் செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்த ஒரு சித்த மருத்துவ ஆலோசகர் பதவியையும் இப்போது நீக்கிவிட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக 75 பாரம்பரிய சித்த மருத்துவ மூல நூல்களை அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்கப் போராடி வருகின்றது. இன்றுவரை நடக்கவில்லை.

உலகம் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறது. இந்தியாவின் வலிமையே அதன் பன்முகத்தன்மையும், ஒருமைப்பாடுத்தான். மரபு மருத்துவத் துறையில் சித்தம், ஆயுர்வேதம், யோகம், யுனானி, ஓமியோபதி என அனைத்திலும் தனித்துவங்களும், பயனும் ஏராளமாய் உள்ளன. இவை ஒருங்கிணைந்து பணியாற்றினால் மிகுந்த பயன் கிடைக்கும். ஆனால் பாரபட்சமான முறையில் சித்தா போன்ற துறைகளை ஓரவஞ்சனையாய் நடத்துவதும் மிகவும் தவறான போக்காகும்.

இந்த அமைச்சகத்தின் பெயரே ஆயுஷ் என்று வைத்திருக்கிறார்கள். அதற்கு பொருள் தரும் ஆங்கில வார்த்தை கிடையாது. மத்திய அரசால் இந்தித் திணிப்பு உச்சகட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதற்கு நடந்த சம்பவம் சரியான சாட்சியமாகும்.

மத்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். கோட்சேயை அந்தப் பதவிலிருந்து நீக்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
22.08.2020

No comments:

Post a Comment