சென்னையில் இருந்து வான் ஊர்திகளை இயக்குவதாக, கல்ஃப் ஏர் வான் ஊர்தி நிறுவனம், பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுகுறித்து, பஹ்ரைன் வாழ் தமிழர்கள் விடுத்த வேண்டுகோளை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களுக்கும், வியாழக்கிழமை அன்று மின்அஞ்சல் வழியாகத் தெரிவித்து இருந்தார்.
நேற்று பிற்பகல், அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்கள், அலைபேசியில் வைகோ அவர்களுடன் பேசினார். அப்போது வைகோ அவர்கள் நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அதற்கு அமைச்சர், விரைவில்,, பஹ்ரைன் நாட்டுக்கு வான் ஊர்தி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
ஜப்பானில் இறந்த இளைஞர் உடல், இன்று சென்னை வருகின்றது.
திருத்தணியைச் சேர்ந்த மாதவ் கிருஷ்ணா என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் ஜூலை 29 ஆம் நாள் ஜப்பானிலேயே இயற்கை எய்தினார்.
ஜப்பான் நாட்டுச் சட்டப்படி, அவரது உறவினர்கள் யாரேனும் ஜப்பானுக்கு வந்து, உடலை அடையாளம் காட்டி, பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஜப்பான் காவல்துறையினர் கூறினர்.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு வான் ஊர்திகள் இல்லை என்பதைக் கூறி, அவருடைய நண்பர்கள் உடலை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அவர்களிடம் ஒப்படைக்குமாறும் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஜப்பான் காவல்துறையினர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக, வைகோ அவர்கள், அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டார்.
தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, உடலைத் தருவதற்கு, ஜப்பான் காவல்துறையினர் இசைவு தெரிவித்தனர்.
மாதவ் கிருஷ்ணா உடல், நேற்று டோக்யோவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் வான் ஊர்தியில் ஏற்றப்பட்டு, கத்தார் நாட்டின் தலைநகர் டோகா போய்ச் சேர்ந்தது. இன்று (15.8.2020) மாலை 7 மணிக்கு வந்து சேரும் என, அயல் உறவுத் துறை அமைச்சகம், வைகோ அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இருக்கின்றது.
மாதவ் கிருஷ்ணாவின் உடல் இன்று இரவு சென்னைக்கு வருகிறது. அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
15.08.2020
No comments:
Post a Comment