முன்னாள் அமைச்சர், என் இனிய நண்பர் ரகுமான்கான் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன்.
மாணவர் இயக்கத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மிகச் சிறந்த இலட்சியவாதி ஆவார்.
தலைசிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, குறிப்பாக தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சரம் சரமாக கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்.
ரகுமான்கான் அவர்களும், துரைமுருகன் அவர்களும், க.சுப்பு அவர்களும் சட்டமன்றக் கதாநாயகர்களாகத் திகழ்ந்தார்கள்.
சட்டக் கல்லூரியில் அவர் பயின்ற நாட்களிலிருந்து என் மீது பாசமும் நட்பும் கொண்டிருந்தார். டாக்டர் கலைஞர் அவர்களை உயிரினும் மேலாகப் போற்றினார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகளில் அனல் தெறிக்கும்; புனல் பாயும், ஆணித்தரமான கேள்விகள் அடுக்கடுக்காக வரும். பல நாட்டு வரலாறுகளையும், இலக்கியங்களையும் மேற்கோள் காட்டுவார்.
ரகுமான்கான் அவர்களின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.
பாசமும், நேசமும் கொண்டு நான் அவருடன் பழகிய நாட்கள் பசுமையாக மனதில் எழுந்து வாட்டுகின்றன.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
20.08.2020
No comments:
Post a Comment