தமிழக அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டில் 8888 இரண்டாம் நிலைக் காவலர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டது.
நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டித் தேர்வில், 20 ஆயிரம் பேர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, அதில் மதிப்பெண்கள் அடிப்படையில் 8538 பணியிடங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
நடப்பு 2020-21 நிதி ஆண்டில், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி, மேலும் 10 ஆயிரம் இரண்டாம்நிலைக் காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.
கொடிய கொரோனா நோய்த் தொற்றால் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உடனடியாகக் காவலர்களை நியமித்திட வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டு உள்ளது. புதிதாக காவலர்களை நியமிக்க விண்ணப்பித்து, பல கட்டத் தேர்வுகளை நடத்தி, தேர்வு செய்வதற்கு உகந்த சூழ்நிலை தற்போது இல்லை.
எனவே ஓராண்டுக்கு முன்பு அனைத்துச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்று, காலிப் பணியிடம் இல்லாததால் பணியில் சேர இயலாமல் காத்திருக்கின்ற 20 ஆயிரம் பேரில், ஏற்கனவே தேர்வான 8538 பேரைத் தவிர்த்து, எஞ்சியுள்ள சுமார் 11,500 பேருக்கு மருத்துவத் தகுதி சான்றை மட்டும் உறுதி செய்து, அதில் தகுதியான 10 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, பணி ஆணை வழங்கிட முன்வருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இதற்கு முன்னரும் பல்வேறு ஆண்டுகளில், இதுபோன்ற முறையில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 01-08-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment