இந்தியக் குடி அரசின் முன்னாள் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர்.பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவரால் அரசியலில் அறிமுகம் பெற்றார். 1969 ஆம் ஆண்டு, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். 1973 ஆம் ஆண்டு, தொழில்வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஆனார்.
1975, 81,93,99 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1980 ஆம் ஆண்டு,. மாநிலங்கள் அவை முன்னவர் ஆனார்.
1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திரா அம்மையார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காலத்தில், அவரது நம்பிக்கைக்கு உரிய மூத்த அமைச்சராகத் திகழ்ந்தார்.1982 முதல் 1984 வரை நிதி அமைச்சர் பொறுப்பு வகித்தார்.
கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்திற்கு, மிகவும் நெருக்கமாமன குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, தாகூர் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டு இருந்தார். அதனால், இவரும் இலக்கியவாதி ஆனார்.சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார். மேற்கு வங்க மண்ணின் மைந்தராக, வங்க மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார்.
,1970 ,ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் அவர் பங்கேற்று உரை ஆற்றியதைக் கேட்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டு இருந்தார்.
1978 ஆம் ஆண்டு, நான் முதன்முறை மாநிலங்கள் அவை உறுப்பினர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், அதே அவையில் அவர் மூத்த உறுப்பினர். எனவே, நாள்தோறும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று இருந்தேன். விவாதங்களில் பங்கேற்று உரை ஆற்றுகின்றபோது, பலமுறை பாராட்டி இருக்கின்றார்.
1981 ஆம் ஆண்டு, மாருதி கார் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் நான் பேசிய உரையை, பிரதமர் இந்திரா அம்மையார் பாராட்டியதாக, ஒரு துண்டுச்சீட்டில் எனக்கு எழுதி அனுப்பினார்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் மறுக்காமல் உடனே வரச் சொல்லுவார்.
பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவு, நாட்டுக்கு ஒரு இழப்பு. அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
31.08.2020
No comments:
Post a Comment