மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 01.10.2020 அன்று காலை, கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
மத்திய பா.ஜ.க. அரசு, செப்டம்பர் 18, 2020 அன்று மக்களவையிலும், செப்டம்பர் 20 இல் மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றி உள்ள மூன்று சட்டத் திருத்தங்கள் வேளாண் தொழிலையே முழுமையாகச் சீரழித்து, விவசாயிகள் வாழ்வையே சூறையாடும் ஆபத்தை உருவாக்கி இருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020, விவசாய விளைபொருட்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்டம் - 2020 விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் - 2020 ஆகிய மூன்று சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் வெடித்திருக்கிறது.
இந்தியாவில் விவசாயிகளை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளை பொருள், வணிகம் மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்தியாவின் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களிடம் ஒப்டைக்கும் விதத்தில் மேற்கண்ட மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
வேளாண்மைதான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனை உடைத்து எறிய முனைந்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை முறியடிக்க விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு அறப்போராட்டத்தைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. அறைகூவல் விடுக்கிறது.
தீர்மானம் 2:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை ரூ.9 ஆயிரம் கோடியில் செயல்படுத்த கர்நாடக பா.ஜ.க. அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறது. இத்திட்டம் குறித்து செப்டம்பர் 11, 2020 இல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோல் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மேகேதாட்டு அணை கட்டும் திட்ட அறிக்கை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்ட அறிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர 22 ஆம் தேதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தமிழக எல்லைக்கு முந்தைய மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து விரைவில் பெற்றுவிடுவோம். கர்நாடகத்தின் பாசனப் பரப்பைப் பெருக்குவதுதான் தமது அரசின் இலட்சியம் என்று அறிவித்து இருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் கிடைப்பது கானல் நீராகப் போய்விடும்.
கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு இருப்பதால், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புதல் வழங்கிவிடும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருதுகிறார். மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3:
மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ‘இந்தியக் கலாச்சார’ தோற்றுவாய் 12 ஆயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் அறிவித்தார். மத்திய அரசு அமைத்துள்ள இக்குழுவில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவில் தமிழகத்திலிருந்து எவரும் இடம் பெறாததும், சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகத்தினர் ஒருவர்கூட சேர்க்கப்படாததும் பா.ஜ.க. அரசின் நோக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் வரலாற்றை எழுதினால் அதனைத் தொன்மையான நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் காவிரி ஆற்றங்கரையிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருப்பது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில், கீழடி அகழ்வு ஆய்வில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் தமிழர்களின் நாகரிகம் மிகப் பழமையானது என்பதற்கு அண்மைக் காலச் சான்று ஆவணம் கீழடி என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்துத்துவ கலாச்சாரம்தான் இந்தியாவின் ஒரே கலாச்சாரம் என்று வரலாற்றுப் புரட்டுகளைச் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். சனாதன சங் பரிவார் கூட்டத்தின் கருத்தியலைத் திணிப்பதற்கு இந்திய கலாச்சார ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, அதில் சங்பரிவாரங்களின் சிந்தனையாளர்களை இடம்பெறச் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இக்குழுவை கலைத்துவிட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் வேறொரு குழுவை அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4:
வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவை ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஆரிய சனாதன ஒற்றைப் பண்பாட்டைத் திணிப்பதற்கு பா.ஜ.க. அரசு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றது. அதில் ஒன்றுதான் “ஒரே நாடு; ஒரே கல்வி முறை” என்பதைச் செயல்படுத்த கொண்டுவரப்பட்டதுதான் தேசிய கல்விக் கொள்கை -2020 ஆகும்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைக் கடந்த ஆண்டு 2019 மே 31 ஆம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது. ஜூலை 29, 2020 அன்று மத்திய அமைச்சரவை தேசியக் கல்விக் கொள்கை -2020 ஐ நடைமுறைப்படுத்திட ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாட்டின் எதிர்கால தலைமுறையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வித்துறையில் மாற்றம் செய்து. புதிய கல்விக் கொள்கையை வரையும்போது, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், பாசிச பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
பொதுப் பட்டியலின் கீழ் கல்வித் துறை இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்தமாக கல்வித்துறையில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு தட்டிப் பறித்து வருவது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது ஆகும்,
பல்வேறு மொழி, பண்பாடுகளைக் கொண்டுள்ள இந்தியாவில், தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து, ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இந்தி, சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைவதை ஏற்கவே முடியாது.
மழலையர் பள்ளியிலிருந்து ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுவது அநீதியாகும். நவீன மனுதர்ம குலக்கல்வித் திட்டத்தை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை - 2020 திரும்பப் பெறப்பட வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எடப்பாடி பழனிச்சாமி அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும். இதனைத் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5:
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி 2017, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இரு சட்ட முன்வரைவுகளை குப்பைக் கூடையில் வீசி விட்டது.
நீட் தேர்வால் ஏற்படும் மன உளைச்சலில் இந்த ஆண்டு தமிழகத்தில் அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதிதுர்கா, கோவை சுபஸ்ரீ. தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும் என்பதை மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6:
பன்னாட்டுப் பெரும் குழுமங்களும், இந்திய பெரு நிறுவனங்களும் பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள திட்டங்கள் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும், இயற்கை சமனிலையைச் சீர்குலைப்பதாகவும் இருப்பதால், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, பா.ஜ.க. அரசு சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை -2020 என்பதை தயாரித்துள்ளது.
இதன் விதிமுறைகளில் மூன்று முக்கியமான தளர்வுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கிறது.
இரண்டாவதாக குறிப்பிட சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவை இல்லை. மூன்றாவதாக நாட்டின் பாதுகாப்பு, சுரங்கம், கணிமவளத் திட்டங்கள் உள்ளிட்ட முகமையானத் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த மூன்று திருத்தங்கள் மூலம் மத்திய அரசு விரும்புகின்ற எந்தத் திட்டத்தையும், எந்த மாநிலத்திலும் எத்தகைய அனுமதி இன்றியும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆய்வகம், சேலம் -சென்னை எட்டுவழிச் சாலை, இரசாயன முதலீட்டு மண்டலம் அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்திருப்பதால் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை -2020 திருத்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்து விளைவிக்கும். இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் திட்டவட்டமாக தெரிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடி பணிக் குழுக்கள், முகவர்களை நியமிக்கும் பணிகளை விரைந்து முடித்து, நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஒன்றியம், நகரம், மாநகராட்சி பகுதிகளில் வாக்குச் சாவடி முகவர் கூட்டங்களை நடத்தி முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் - கழக நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020
No comments:
Post a Comment