இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்; படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பெருந்தொகையை தண்டமாக வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த்தாக்குதல் தொடுத்து விடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டு கொள்வது இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.10.2020
No comments:
Post a Comment