Friday, October 2, 2020

உ.பி. மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை;நீதி கேட்கச் சென்ற ராகுல்காந்தி மீது தாக்குதல்! வைகோ கண்டனம்!

பா.ஜ.க. ஆட்சி நடத்துகின்ற உத்திரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில், ஊரில் வயல்வெளியில் வேலை பார்த்துவிட்டு தனது தாயுடன் சென்றுகொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் இது குறித்து வெளியே கூறிவிடக்வடாது என்பதற்காக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள், அந்தப் பெண்ணை துடிக்கத் துடிக்க நாக்கை அறுத்துள்ளனர். மேலும் கடுமையாகத் தாக்கி, முதுகெலும்பை உடைத்துவிட்டு, சாலை ஓரத்தில் விசி எறிந்துவிட்டுப் போய்விட்டனர்.

குற்றுயிரும் குலைஉயிருமாக மீட்கப்பட்ட அந்தப் பெண், அலிகாரில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 28 ஆம் தேதி டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடிய அந்தப் பெண் செப்டம்பர் 30 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்காமல், உத்திரப்பிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்று எரித்து இருக்கின்றனர்.

நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் இத்தகைய கொடூரத்தைச் செய்திருக்கின்ற வெறியர்களை சுதந்திரமாக உலவவிட்ட உ.பி. மாநில பா.ஜ.க. காவல்துறை கூடுதல் இயக்குநர் மூலம் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்று அறிக்கைவிடச் செய்திருப்பது பாலியல் கொடுமையைவிடக் கொடியது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இக்கொடுமையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்க ஹத்ராஸ் பகுதிக்கு இன்று சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா இருவரும் சென்ற வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதனையடுத்து ராகுல்காந்தி காரிலிருந்து இறங்கி நடைப்பயணமாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அதனை மீறி புறப்பட்ட ராகுல்காந்தியை சீருடையில் இருந்த உத்திரப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கீழே தள்ளி உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சர்வாதிகார பாசிச ஆட்சி நடத்தி வருகிறார்.

இளம் பெண் பாலியல் வன்முறைக்கு நீதி கேட்கச் சென்ற ராகுல்காந்தி தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது.

அதற்குள் இன்னொரு கொடிய நிகழ்வாக 22 வயது மற்றொரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட துயச் செய்தி வந்திருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்திரப்பிரதேசம் மாறி வருகிறது என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, சமூகத்தில் வாழத் தகுதியற்ற, கொடூர குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
01.10.2020

No comments:

Post a Comment