Sunday, February 28, 2021

சூழும் அணு உலை ஆபத்து - வைகோ MP கண்டனம்!

தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம்.

இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலருக்கு அனுப்பி உள்ளார்.

அந்த அரசு ஆணையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால்,

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் இணைந்து, கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள, உலகப் புராதனச் சின்னமாக ஐநா மன்றத்தால் அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும், புகழ் வாய்ந்த, பல்லவர்களின் மாமல்லபுரம், டச்சுக்காரர்களின் பழமையான துறைமுகமாக திகழ்ந்த சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம், ஆகிய 14 க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில்,

மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மக்கள் ஆட்சிக்கு எதிரான சர்வாதிகாரம் ஆகும். உயிர்களைப் பலிகொடுத்து விட்டு, கல்லறைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் அணு உலைகள் தேவையில்லை. அதை இழுத்து மூட வேண்டும்.

இந்த அரசு ஆணையின் காரணமாக, கதிர்வீச்சைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்களை நிலம் அற்றவர்களாக மாற்றி, உள்நாட்டு அகதிகளாக வெளியேற்ற மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் மக்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஆக அணு உலைகள் பேராபத்து என்பது இதன் மூலம் தெரிகிறது.

எனவே மக்கள் சக்தியும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணைநிற்கும். 

உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம் என்று கட்சிகளும், மக்களும் நடைபெற உள்ள 2021 தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனத் திரும்பி இருக்கும் நிலையில் சந்தடி சாக்கில் இந்த அரசாணையை வெளியிட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே உடனடியாக இந்த அரசாணையை திரும்பப் பெற்று, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இல்லை என்றால் அணுக்கதிர் வீச்சைப் போன்ற பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.02.2021

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021 மறுமலர்ச்சி தி.மு.க.பேச்சுவார்த்தைக் குழ!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கீழ்காணும் குழு நியமிக்கப்படுகின்றது. 

1. திரு மல்லை சி.ஏ. சத்யா
(கழகத் துணைப் பொதுச்செயலாளர்)

2. திரு மு. செந்திலதிபன்
(கழக ஆய்வு மையச் செயலாளர்)

3. வழக்குரைஞர் கு. சின்னப்பா
(கழக உயர்நிலைக்குழு உறுப்பினர்)

4. திரு ஆவடி அந்திரிதாஸ்
(கழகத் தேர்தல் பணிச் செயலாளர்)

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.02.2021

Friday, February 26, 2021

பொது உடைமைப் போராளி தா.பாண்டியன் மறைந்தார். வைகோ MP இரங்கல்!

தம் வாழ்நாள் முழுமையும், பொது உடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு வந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

தோழர் தா.பா. அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகர் அற்ற சொற்பொழிவாளர்; ஆற்றொழுக்குப் போல, தங்கு தடை இன்றி, தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர்; மிகச்சிறந்த எழுத்தாளர்; இலக்கியவாதி. எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவா அவர்களின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக சிறப்பாகப் பணி ஆற்றினார். பொது உடைமைக் கட்சி நடத்திய அத்தனைப் போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர். தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராகப் பணிபுரிந்தார். 

பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதற்கு முன்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தார். வழக்கு உரைஞர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைத்தார். அரிய கருத்து உரைகளை நிகழ்த்தினார். 

கடந்த சில ஆண்டுகளாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடைசியாக, கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள், மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து கேட்டேன்.

என் கையும் காலும்தான் சரியாக இல்லை; ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது; பொது உடைமைக் கொள்கை வென்றே தீரும்; அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

அவரது மறைவு,  பொது உடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அவரை நேசிப்பவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
26.02.2021

Thursday, February 25, 2021

தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக வட்டங்களில் விடுபட்ட மற்றும் தற்போது பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக. தமிழக அரசுக்கு சு.துரைசாமி வேண்டுகோள்!

தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் 50000ற்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் களப்பணியாளர்கள் பணியிடங்கள் மட்டும் 20000ற்கும் அதிகமாக உள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையுடன் தற்போதுள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அடிப்படைப் பணிகளான மின்கம்பம் நடுதல், மின்தடைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாவதால், பொது மக்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது போன்ற பணிகளை மேற்கொள்ள களப்பணியாளர்கள் பணி என்பது முக்கியமானது.

தற்போது கேங்க்மேன் பதவிகளுக்கு 9613 பேரை புதிதாக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இ.பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 1999 ஆம் ஆண்டிற்குப்பிறகு அனல்மின் நிலையங்களில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. வாரியத்தின் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில், நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக மின் உற்பத்திக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், தங்களது இளமைக்காலம் முழுவதையும் வாரியத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, பணி நிரந்தரத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

அது போலவே மின்வினியோக வட்டங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படாத கிட்டத்தட்ட 2000 ஒப்பந்தப் பணியாளர்களும், அதற்குப் பின்பாக தற்போது பணியாற்றி வரும் 4000 ஒப்பந்தப் பணியாளர்கள் என மின்வாரியத்தின் பணி நிரந்தரத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை தாக்கிய பல புயல் பேரிடர் காலங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள். 

ஏற்கனவே எங்களது மறுமலர்ச்சி தொழிற்சங்கம் சார்பில் கடந்த 02.02.2021 அன்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தியுள்ளோம்.

எனவே தமிழக அரசும், மின்வாரியமும் அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் வினியோக வட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் என 9000 பேரையும் பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைளை காலம் தாழ்த்தாது உடனடியாக எடுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திருப்பூர் சு.துரைசாமி
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி
‘தாயகம்’
சென்னை - 8
25.02.2021

Wednesday, February 24, 2021

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை! வைகோ MP அறிக்கை!

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றுவதற்காக இத்திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில், புதுடில்லியில் இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பேசும்போது, “காவிரி ஆற்றின் மிகை நீரைப் பயன்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகா பா.ஜ.க. அரசின் முதலமைச்சர் எடியூரப்பா, “தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதை தடுத்து நிறுத்துவோம்” என்று கொக்கரித்துள்ளார்.

அதைப்போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் பங்குக்குத் தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் கர்நாடக அரசு, 9ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரியின் குறுக்கில், மேகேதாட்டு தடுப்பு அணை அமைக்க முனைந்துள்ளது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைச் சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கும், அணை நீரைப் பயன்படுத்தி 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீறி 1965 ஆம் ஆண்டிலிருந்து அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்துவிட்டது.

ஸ்வர்ணவதி, ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், வருணா கால்வாய், யாகச்சி போன்ற அணைகள் கட்டியும், நீர்ப் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்த கர்நாடக மாநிலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை புதிதாக உருவாக்கி பாசனப் பரப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

1974 இல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு வெறும் 6.8 இலட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991 இல், அளித்த இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக் கூடாது என்று தெரிவித்தது. ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியது.

2007 இல் நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தபோது, பாசனப் பரப்பு 18.8 இலட்சம் ஏக்கராக உயர்ந்துவிட்டது. அதன்பின்னர் தற்போது 13 ஆண்டுகளில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 21 இலட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது. இதனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 30 இலட்சம் ஏக்கராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதில் ஒரு பகுதியாக மேகேதாட்டு அணைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன? 1971 இல் காவிரிப் படுகைப் பகுதிகளில் 25.03 ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு, தற்போது 16 இலட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
24.02.2021

Monday, February 22, 2021

புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை! வைகோ MP கடும் கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றது. அருணாசலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்ற எதிர்க்கட்சி அரசுகளை, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கவிழ்த்தனர்; பாஜக அரசு அமைத்தனர். இத்தகைய கேடு கெட்ட அரசியலுக்கு, ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர்.  

அந்த வரிசையில், புதுச்சேரி மாநிலத்தில், தி.மு.கழக ஆதரவுடன், பெரும்பான்மை பலத்துடன் இயங்கி நாராயணசாமி தலைமையிலான காங்கிரÞ அரசை, மிகக் கேவலமான முறையில் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பு ஏற்ற நாள் முதல், நாராயணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். மக்கள் ஆட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்தார். அதனால், புதுச்சேரி மக்களின் கடுங்கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளான கிரண் பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி,  ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்து இருக்கின்றனர். 

இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டு விட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். அடிமை அ.இ.அ.தி.மு.க., கை கட்டி, வாய்பொத்திச் சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.02.2021

Sunday, February 21, 2021

சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர். வைகோ MP கடும் கண்டனம்!

‘பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது.

முப்பால் வழங்கிய செந்நாப் போதார் திருவள்ளுவரை, ‘சீவலப்பர்’ என்று பெயர் சூட்டிய இக்கூட்டம், திருக்குறளையே ‘ஆரியச் சித்தாந்தச்’ சிமிழுக்குள் அடக்கிவிட ஆயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்தது.

சமஸ்கிருத தர்ம சாத்திரம்தான், முப்பாலில் ஒன்றாகிய அறத்துப்பால் என்றும், அர்த்தசாஸ்திரம்தான் பொருட்பால் என்றும், காம சூத்திரம்தான் இன்பத்துப்பால் என்றும் கதை கட்டிப் பார்த்தது. திருக்குறள் உரை ஆசிரியர்களுள் ஒருவரான பரிமேலழகர் தம் ஆரியக் கருத்துகளைத் திணித்தார். 

ஆனால், சனாதனக் கூட்டம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், காலப்போக்கில் முனை மழுங்கிப் போய்விட்டன. 

புகழ்பெற்ற ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப் படத்திற்குத்தான், தமிழக அரசு ஏற்பு அளித்து இருக்கின்றது. அந்தப் படம் வரைந்ததற்கான விளக்கம் அளித்து, வேணுகோபால் சர்மா அவர்கள் வழங்கிய கருத்தை, சென்னை பல்கலைக் கழகம் ஒரு சிறிய வெளியீடாகக் கொண்டு வந்தது.

“திருவள்ளுவர் கருத்து உலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி, அறிவு ஒளி மட்டும் இருக்குமாறு உருவம் வரையப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டது. உச்சிக்குடுமியும், வெட்டப்பட்ட சிகையும் பல இனக்குழுக்களுக்கு அடையாளம் ஆகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது” என்று, ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றார். 

இன்று அரசியல் அதிகாரத்தைக் கைக்கொண்டு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற திருவள்ளுவரை ஒரு கருவி ஆக்கத் துடிக்கின்றன.கடந்த 2019 நவம்பரில், தமிழக பா.ஜ.க. ‘ட்விட்டர்’ பக்கத்தில் காவி உடையில் விபூதி அணிந்த திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார்கள். 

இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அ.தி.மு.க. அரசு, கடந்த 2020, டிசம்பரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தமிழகமே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சி.பி.எஸ்.இ. 8 ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை ‘உச்சிக் குடுமி’யுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

திருவள்ளுவர் படம் வரைந்து, நாகேஸ்வரபுரத்தில் ஒரு இல்லத்தில் வேணுகோபால் சர்மா வைத்து இருந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் கலைஞர் உள்ளிட்டத் தலைவர்கள் பார்வையிட்டுப் பாராட்டினார்கள். அந்த உருவப்படம், 1964 மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசைன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழக  அரசால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம், தமிழக அரசு அலுவலகங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் இடம் பெறச் செய்யப்பட்டது என்பதுதான் வரலாறு. திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும். 

மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.02.2021

Friday, February 19, 2021

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை!

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டு கொல்
என்று கண்ணகி நீதி கேட்டபொழுது,
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்
என்று கூறி உயிர்துறந்து, நீதியை நிலைநாட்டிய நெடுஞ்செழிய பாண்டியன் ஆட்சிபுரிந்த மதுரை மாநகரில், ‘நீதி வேண்டும், நலிந்து அழிந்து கொண்டு இருக்கின்ற தமிழகத்திற்கு நீதி வேண்டும்’ என்று குரல் எழுப்புவதற்காக, இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டின் தலைவர், தமிழ் மாநிலக் குழுச் செயலாளர், என் ஆருயிர்த் தோழர் முத்தரசன் அவர்களே,
அனைத்து இந்தியப் பொதுச் செயலாளர் ஆருயிர்த் தோழர் டி. இராஜா அவர்களே,
தியாகத் தழும்பு ஏறிய மூத்த தலைவர், என்னுடைய பேரன்பிற்கு உரிய அண்ணன் நல்லகண்ணு அவர்களே, உடல் நலிந்தாலும், வீர முழக்கம் புரிந்து விடை பெற்றுச் சென்ற தோழர் தா.பாண்டியன் அவர்களே, தோழர் மகேந்திரன் அவர்களே,
மற்றொரு நிகழ்ச்சியின் காரணமாக, இங்கே முன்னதாகவே உரை ஆற்றி விடைபெற்றுச் சென்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாளை நடைபெறப் போகும் தேர்தலில் வெற்றி பெற்று, மணிமுடி தரிக்க இருக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
இந்த மாநாட்டில் பங்கேற்று இருக்கின்ற, தோழமைக் கட்சிகளின் மதிப்புமிக்க தலைவர்களே,
முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே,
செங்கொடி ஏந்தி வெள்ளமெனத் திரண்டு இருக்கின்ற வீரர்களே,
தாய்மார்களே, பெரியோர்களே, ஏடுகளின் செய்தியாளர்களே, ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களே, வணக்கம்.
பிப்ரவரி 18. இந்த நாள், வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாள். இதே நாளில், 1860 ஆம் ஆண்டு, சற்றே வசதி வாய்ப்புகள் உள்ள ஒரு செம்படவக் குடும்பத்தில் பிறந்தவர்தான் தென் இந்தியாவின் முதல் மார்க்சிய சிந்தனையாளர், முதல் பொது உடைமையாளர் சிங்காரவேலர். 1922 இல் கயா காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று உரை ஆற்றியபோது, காம்ரேட்ஸ்-தோழர்களே என விளித்து வியக்க வைத்தார்; அப்போதைய சென்னை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றபோது, மனசாட்சியின்படி பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்; ஆங்கிலப்புலமை மிகுந்தவர் என்றாலும், தன்னுடைய கன்னி உரையைத் தமிழில் நிகழ்த்திய சிங்காரவேலரின் பிறந்த நாளில், நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதற்குப் பிறகு, அனைத்து இந்திய அளவில் முதல் மாநாடு, 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்றது.
பம்பாயில் கூடிய இளைஞர்கள் மாநாட்டில் பேசிய பி.சி. ஜோஷியும், பி.டி. ரணதிவேயும், ‘இனி போலீஸ் நம்மைத் தாக்கினால், திருப்பித் தாக்குவது’ எனப் பேசினர். அதனால், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
1948-49-50 களில் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான தோழர்கள், சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார்கள். நகக்கண்களில் ஊசி ஏற்றினார்கள்; துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
மதுரையில் தோழர் மணவாளன் தெருப்பாடல்கள் எழுதினார். மதுரையின் மா சே துங் என்று, தன்னைத்தானே அறிமுகம் செய்து கொள்வார். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களுடைய தந்தையார் பழனியப்பன், ஒருநாள் மணவாளனைத் தெருவில் சந்தித்தபோது, என்ன மணவாளன், உன்னைச் சுட்டுக் கொல்வதற்கு, போலீஸ் தேடிக்கொண்டு இருக்கின்றது; ஆனால், நீ இப்படித் தெருவில் உலவிக்கொண்டு இருக்கின்றாயே என்று கேட்டபொழுது, எந்த நொடியிலும் சாவதற்கு நான் ஆயத்தமாகவே இருக்கின்றேன் என உறுதியோடு சொன்னவர்தான் மணவாளன்.
மதுரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வைத்தியநாத ஐயர், மணவாளன் தாயார் தேவரம்மாளைச் சந்தித்து, மணவாளன் உயிரை முடிக்கக் காவல்துறை திட்டம் வகுத்து விட்டது; எனவே, குடும்ப சூழ்நிலை காரணமாக, நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கின்றேன் என, மணவாளனிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல் என்று சொன்னார்.
அதேபோல, தேவரம்மாளும், மணவாளனிடம் கேட்டார். அப்பொழுது மணவாளன் சொன்னார்: அம்மா, நீங்கள் சொல்வதை மறுப்பதாகக் கருதி, நீங்கள் வருத்தப்படக் கூடாது; ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடைக் குறிப்புகளை நான் படித்து இருக்கின்றேன்; அதைப்போல நான் சாக விரும்புகின்றேன் என்று, தம் கையாலேயே எழுதிக்கொடுத்து, இதைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுங்கள் என்று கொடுத்து அனுப்பினார்.
உடுப்பி ஓட்டலில் உணவு அருந்திவிட்டு, மாரி, மாரிமுத்து, சண்முகம் போன்ற தோழர்களைச் சந்திப்பதற்காக வந்துகொண்டு இருந்தபொழுது, துரோகி ஒருவன் காட்டிக் கொடுத்ததால், அனந்தராமன் என்ற காவல்துறை ஆய்வாளர், மணவாளனைப் பிடித்து, தம் கைத்துப்பாக்கியால், அவரது இடது மார்பில் சுட்டார். குண்டுகள் பாய்ந்தன; செங்குருதி கொப்பளித்த நிலையிலும், ‘கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்’ என முழங்கியவாறே மணவாளன் மண்ணில் சாய்ந்தார். அதன்பிறகு, மற்ற தோழர்களையும் காவல்துறை வேட்டையாடியது. மாரியையும் பிடித்துச் சுட்டுக் கொன்றார்கள். அவரும், கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத் என்றே முழங்கினார். அத்தகைய மணவாளனும், மாரியும் உலவிய மதுரை மண்ணில் நடைபெறுகின்ற மாநாட்டில் பேசுகின்றேன். அவர்கள் சிந்திய செங்குருதி, பொது உடைமைக் கொள்கைகளைப் பாதுகாக்கும்.
அத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள், பொது உடைமைத் தோழர்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய இரண்டாவது மாநாடு, 1948 ஆம் ஆண்டு, கல்கத்தாவில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் இந்த மா மதுரைதான்.
இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இந்தியா முழுமையும் இருந்து 299 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 1953 டிசம்பர் 27 முதல் 1954 ஜனவரி 4 வரை ஒன்பது நாள்கள் நடைபெற்றது. எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். ஜோதிபாசு தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட மேலாண்மைக் குழு தேர்ந்து எடுக்கப்பட்டது. பி. இராமமூர்த்தி, அஜாய் கோஷ், சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி பங்கேற்றனர். தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.
அதேபோலத்தான், இன்றைக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. இங்கே தீர்மானங்களை வாசித்தார்கள். அதில் ஒரேயொரு தீர்மானத்தில் மட்டும், 500 திருத்தங்கள் செய்ததாகச் சொன்னார்கள். அந்த அளவுக்கு, கொள்கைத் தெளிவு மிக்க தோழர்கள், பொது உடைமைக் கொள்கைகளில் ஊறித் திளைத்து இருக்கின்றார்கள்; கருத்து உரிமைக்கு மதிப்பு அளிக்கின்றார்கள் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள். சிறையில் இருந்தவாறே தோழர் பி. இராமமூர்த்தி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.டி.கே. தங்கமணி, ஜானகி அம்மையார் போல, கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் ஏராளம்.
அன்றைக்கு இருந்தது போன்ற அடக்குமுறை, இன்றைக்கு மீண்டும் தலைதூக்கி விட்டது. எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் அதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள்.
சிந்தனையாளர்களான, 80 வயது கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்பிளே, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத மாற்றுத் திறனாளி பேராசிரியர் பேராசிரியர் சாய் பாபா, மனித உரிமை செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரைக் கைதுசெய்து, இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ளனர்.
கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக்கொன்று விட்டார்கள்.
ஈவு இரக்கம் அற்ற, கொடூர சிந்தனை கொண்ட, மனசாட்சி அற்ற ஒரு அரசை நரேந்திர மோடி நடத்திக்கொண்டு இருக்கின்றார். குடி உரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய 52 பேர் பலியாகி இருக்கின்றார்கள். அதைப்போல, மூன்று வேளாண் பகைச்சட்டங்களை எதிர்த்து, இலட்சக்கணக்கான விவசாயிகள், உறைய வைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றிக் கவலைப்பட்டாரா நரேந்திர மோடி? இல்லை. அவர் கார்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார். அதானிக்காக, அம்பானிக்காக ஆட்சி நடக்கின்றது.
வான் ஊர்தி நிலையங்களைத் தனியாரிடம் கொடுக்கின்றார்கள்; தொடரிகளைக் கொடுக்கின்றார்கள்; பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தையும்,தனியாரிடம் விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்து விட்டார். அத்தகைய நரேந்திர மோடிக்கு நடைபாவடை விரிக்கின்ற, அடிவருடி அரசியலைத்தான், எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டு இருக்கின்றார்.
காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்றார் எடப்பாடி. அதை ரசாயன மண்டலமாக அறிவித்து, அங்கே பல திட்டங்களுக்கு, நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகின்றார்.
நீட் தேர்வுக் கொடுமையால், 13 உயிர்கள் பலியாகின. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தில் 13 பேரைக் கொன்றார்கள். அவர்கள் சிந்திய செங்குருதிக்கு, எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியாக வேண்டும். லஞ்சம் ஊழலில் ஊறித் திளைக்கின்றது அண்ணா தி.மு.க. அரசு. கொள்ளை அடிக்கின்ற, கொலைகார அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அத்தகைய வெற்றிக்காக நாம் அனைவரும் பாடுபடுவோம். காலத்தின் அருமை கருதி, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்து கொள்கின்றேன்.
வெல்க செங்கொடி; வெல்க நமது கூட்டணி. நன்றி, வணக்கம்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.02.2021

Wednesday, February 17, 2021

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா? வைகோ எம்பி கண்டனம்!

வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருகின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள், திரைக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்தான் சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க், பிப்ரவரி 4 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். 

வேளாண் பகைச் சட்டங்கள் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளின் கட்டுப்பாடான, திட்டமிடப்பட்ட அறவழிப் போராட்டம் குறித்தும் ஆவணமாக்கி உள்ள சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க், அதனை 'டூல்கிட்' எனப்படும் 'தகவல் தொகுப்பாக' தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனால் உலக அளவில் இந்திய விவசாயிகள் போராட்டம் ட்ரெண்ட் ஆகிவிட்டது. உடனே இந்திய அரசு அவர் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்தது.

இச்சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் சூழலியலாளர் திஷா ரவி என்ற பெண், சுவிடன் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் 'தகவல் தொகுப்பை' டுவிட்டரில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதற்காக, திஷா ரவி மீது 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தை ஏவிய டெல்லி காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த அடக்குமுறையைக் கண்டித்து மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜாக், மூத்த வழக்கறிஞரும் - அரசியல் சட்ட நிபுணருமான ராகேஷ் திவேதி, மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

திஷா ரவி போன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் விமானப் பொறியாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான சாந்தனா முலக் ஆகியோரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்ய மத்திய அரசு முனைந்துள்ளது.

ஜனவரி 26, குடியரசு நாளன்று, டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி நடத்திய பேரணியில் வன்முறை திட்டமிட்டு ஏவப்பட்டதை ஆதாரங்களுடன் பத்திரிகை, ஊடகங்களில் செய்தி வெளியிட்டதற்காக, மிருணால் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் சூகா, பரேஷ் நாத் மற்றும் அனந்த நாத் ஆகிய ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது மக்களாட்சி கோட்பாடுகளுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.

மத்திய அரசின் செயற்பாடுகளை விமர்சனம் செய்தாலும், விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தாலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பெங்களூரு திஷா ரவி மீது ஏவப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும். இன்னும் சிலரையும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’ 
சென்னை -8 
17.02.2021

Tuesday, February 16, 2021

சமையல் எரிவாயு விலை ஏற்றம்; மக்களை கசக்கிப் பி,ழியும் மத்திய அரசு! வைகோ கண்டனம்!

கொரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளை விலையை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது.

பிப்ரவரி 4 ஆம் தேதிதான் சமையல் எரிவாயு விலை ரூ 25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ரூ 50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ 785 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போன்று சமையல் எரிவாயு உருளையின் விலையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ 125 அதிகரித்து உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. 

மக்களை கசக்கிப் பிழிந்து வரும் மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100ஐ நெருங்கிவிட்டது. டீசல் விலை ரூ 85 ஆக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கொரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருக்கின்றார்.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு காரணம் சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61 விழுக்காடு வரி விதிக்கிறது. மாநில அரசு 56 விழுக்காடு வரியைத் தன் பங்காக விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையை குறைக்க முடியும். ஆனால் மக்கள் விரோத மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதில் போட்டி போடுகின்றன.

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8 
16.02.2021

Monday, February 15, 2021

தமிழ்நாட்டில் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் குறித்து, வைகோ எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 1385, (12.02.2021)

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், கீழ்காணும் வினாக்களுக்கு, விளக்கம் அளிப்பாரா?
அ) அழுகும் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்க, தமிழ்நாட்டில் எத்தனை குளிர்பதனக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன?
ஆ) மாவட்ட அளவில், இத்தகைய குளிர்பதனக் கூடங்கள் பற்றாக்குறை இருக்கின்றதா?
இ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;
ஈ) புதிய குளிர்பதனக் கூடங்கள் அமைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் இராமேஸ்வர், எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கம்:
அ) 1.45 மெட்ரிக் டன் திறன் உள்ள குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதற்காக, 62 திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
வேளாண் துறையின், ஒருங்கிணைந்த தோட்ட வளர்ச்சித் திட்டம் (MIDH) மற்றும் பிரதமரின் உழவர்கள் நலத்திட்டங்களின் கீழ், உணவு பதப்படுத்துதல் துறை, 2014 முதல் 2021 வரை, இந்தத் திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றது.
ஆ,இ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
முழுமையும் அரசுப் பொறுப்பில், இத்தகைய குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது இல்லை. தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர்களின் தேவைக்கு ஏற்றவாறு, குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன.
ஈ) தொழில் முனைவோர் மற்றும் அதற்கான உதவிகளைச் செய்பவர்களிடம் இருந்து, புதிய குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் திட்டங்களை அரசு வரவேற்கின்றது; தேவையான உதவிகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றது.
இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை -8 மறுமலர்ச்சி தி.மு.க.
15.02.2021

Sunday, February 14, 2021

பெருமழையால் அழுகிய பயிர்களுக்கு இழப்பு ஈடு தருவீர்களா என வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்து மூலம் அமைச்சர் விளக்கம்!

பெருமழையால் அழுகிய பயிர்களுக்கு இழப்பு ஈடு தருவீர்களா? வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு, எழுத்து மூலம் அமைச்சர் விளக்கம் (12.12.2021)

கேள்வி எண்: 1285
கீழ்காணும் கேள்விகளுக்கு, வேளாண் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
அ) அண்மையில் பெய்த பெருமழையால், தமிழ்நாட்டின் காவிரிப்படுகை வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியதால், உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து, அரசுக்குத் தெரியுமா?
ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;
இ) இதுகுறித்த விவரங்களைச் சேகரிக்க, ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா?
ஈ) உழவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்பை ஈடு கட்ட, ஏதேனும் உதவிகள் அல்லது பயிர்க் காப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படுமா?
உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;
ஊ) இல்லை என்றால், அதற்கான காரணம் தருக?
நடுவண் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,
எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கம்:
அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
அண்மையில் பெய்த பெருமழையில், வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியது குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு சேகரித்து அனுப்பி இருக்கின்றது.
தஞ்சாவூர் : 1,06,997.26 ஹெக்டேர்
திருவாரூர் : 50,151.00 ஹெக்டேர்
திருச்சி : 10,821.00 ஹெக்டேர்
நாகப்பட்டினம் : 20,580.40 ஹெக்டேர்
மயிலாடுதுறை : 16,351.90 ஹெக்டேர்
கடலூர் : 45,621.00 ஹெக்டேர்
புதுக்கோட்டை : 43,976.00 ஹெக்டேர்
அரியலூர் : 25,060.34 ஹெக்டேர்
கரூர் : 3,780.11 ஹெக்டேர்
ஈ முதல் ஊ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
ஆம். பிரதமரின் பயிர்க் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியல் இடப்பட்டுள்ள பயிர்களுக்கு, பயிர் அறுவடை சோதனையின் (Crop Cutting Experiment) அடிப்படையில், இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு, நடுவண் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
14.02.2021

Saturday, February 13, 2021

நேர்மையான அரசியல் நடத்தி இருக்கின்றோம்; அதனால் மக்கள் நிதி தருகின்றார்கள். நன்றி! திருநெல்வேலியில் வைகோ உரை!

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடிஎதிர்க்கும் ஆற்றல் அதுவே படை என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற, கழகத்தின் கண்மணிகளாகிய நீங்கள், அரும்பாடுபட்டு, எறும்பு சேகரிப்பதைப் போலச் சிறுகச்சிறுகச் சேகரித்த நிதியை வழங்குகின்ற இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து, முன்னின்று பணிகளை மேற்கொண்ட, நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர், கண்ணியத்திற்குரிய கே.எம்.ஏ. நிஜாம் அவர்களே,

கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான, என் பாசத்திற்கு உரிய ஆருயிர்ச் சகோதரர் ஆர்.எம்.எஸ் அவர்களே,
முன்னிலை வகிக்கின்ற குமரி மாவட்டச் செயலாளர், வழக்குஉரைஞர் தம்பி வெற்றிவேல்,
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் தம்பி ஆர்.எஸ். ரமேஷ்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்புச் சகோதரர் புதுக்கோட்டை செல்வம், அதிக நிதி தந்து அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கிய தென்காசி மாவட்டச் செயலாளர் ஆருயிர்த் தம்பி திருமலாபுரம் இராசேந்திரன், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர், பாசத்திற்குரிய சகோதரர் ரைமண்ட், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், அருமைத் தம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்,
அருமைத் தங்கை ராணி செல்வின் ஆகியோருககும்,
ஒன்றிய நகரக் கழகங்களின் செயலாளர்கள், மாவட்டக் கழகங்களின் பொறுப்பாளர்கள், கிளைக்கழக, பேரூர்க்கழகங்களின் பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், அன்புச்சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏறத்தாழ, ஓராண்டுக்குப் பின்னர் உங்களை நான் சந்திக்கின்றேன்.
இந்த மண்டலத்தில் கழகத்திற்கு ஒரு பெரும் சோதனை வந்தபொழுது,
இனி இந்தக் கட்சி தேறாது என்று சிலர் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது,
இதே மண்டபத்திற்குக் கீழேதான், நம்முடைய நிஜாம் அவர்களின் ஏற்பாட்டின்பேரில், ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் திரண்டு வந்தார்கள். எத்தகைய சோதனைகளையும் கழகம் எதிர்கொள்ளும் என்பதை உணர்த்தினார்கள்.
ஆனால், இன்றைக்கு இவ்வளவு பேர் திரண்டு வருவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
காரணம்,
கொரோனா தாக்தலுக்குப் பிறகு, பொது முடக்கம் காரணமாக,
கடந்த ஓராண்டுக் காலமாக நாம் இயங்க முடியவில்லை.
2019 செப்டெம்பர் 15 ஆம் நாள், சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்குப் பின்னர், நான் தோழர்களைச் சந்திக்கவில்லை. ஆனால், ஜூம் காணொளிக் காட்சிகளின் வழியாக சில நிகழ்வுகளில் பங்கேற்றாலும் கூட, நேரடியாகச் சந்திக்க முடியவில்லை.
நமது கழகம் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை;
எந்த அதிகாரப் பொறுப்பிலும் இல்லை. ஆனால், இரண்டு பேருக்கு மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
சட்டமன்றத்தில் ஆறு உறுப்பினர்கள் இருந்தார்கள். இரண்டு பேர் விலகிப் போய்விட்டார்கள்.
எனவே, கழகம் அதிகாரத்தில் இருந்தது இல்லை; அந்தப் பொறுப்பிற்கு வரும் என்ற நம்பிக்கையோடு பாடுபட வேண்டும் என்றும் சொல்வதற்கு இல்லை.
இருப்பினும் கூட, நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது,
‘நிதி கிடைக்குமா?’ என நான் சந்தேகப்பட்டேன்.
இந்தக் கொரோனா காலத்தில்,
எந்தக் கட்சியும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிதி திரட்டவில்லை.
அப்படி நிதி திரட்ட வேண்டிய தேவை, பல கட்சிகளுக்கு இல்லை.
அவர்களிடம் நிதி குவிந்து இருக்கின்றது.
ஆனால், நமது இயக்கத்தில் இருக்கின்ற நீங்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
வசதி குறைந்தவர்கள்.
இந்த இந்தக் கட்சிக்குப் பணம் கிடையாது; பதவியும் கிடையாது;
எந்த அதிகாரமும் கிடையாது.
அடுத்த தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் கிடையாது;
இத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. மிகக் குறைந்த இடங்கள் கூடக் கிடைக்கலாம்.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் பாடுபடுகின்றீர்களே,
உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கும் வாய்க்க மாட்டார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த மாணிக்கக் கட்டிகளைப் போல,
வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்க மாட்டார்கள்.
ஆனால், நாம் இயங்கியாக வேண்டும்; தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதற்காக நிதி திரட்டியாக வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி,
நிதி திரட்ட வேண்டும என, தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு வருகின்றது; தைப்பொங்கலும் வருகின்றது.
அதற்குப் பிறகு, பத்துப் பதினைந்து நாள்களில் நிதியைச் சேகரித்து,
இந்த அளவிற்குக் கொடுக்க முடியும் என்று சொன்னால்,
மக்கள் என் மீது வைத்து இருக்கின்ற நம்பிக்கை;
கொள்கையின் மீது நீங்கள் வைத்து இருக்கின்ற பற்று;
இலட்சியப் பிடிப்புதான் காரணம்.
தாய்த்தமிழகம் தழைக்க வேண்டும்;
தாய்த் தமிழகத்தின் நதி ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்;
காவிரிப் பிரச்சினையில் மீட்சி வேண்டும் என்பதற்காக,
நாம் களம் கண்டு போராடி இருக்கின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என,
இன்று பல கட்சிகள் புதிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்றால், இதற்கெல்லாம் முன்னோடி நாம்தான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அல்ல,
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்ல,
1997 ஆம் ஆண்டிலேயே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக,
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்துப் போராடத் தொடங்கியவர்கள் நாம்.
அந்தப் போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கின்றோம்.
முல்லைப்பெரியாறு அணையை உடைக்க விடாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொடுத்து இருக்கின்றோம்.
நியூட்ரினோ திட்டம் என்று சொல்லிக்கொண்டு,
மேற்குத்தொடர்ச்சி மலையையைக் குடைந்து, இலட்சக்கணக்கான டன் எடையுள்ள பாறைகளை வெட்டி எடுக்க முனைந்தபோது,
அதை எதிர்த்துப் போராடினோம்; உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்று இருக்கின்றோம்.
சோழ வளநாடு சோறு உடைத்து என்ற பழமொழியைப் பொய்யாக்குகின்ற வகையில், அங்கே மீத்தேன், ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டி, பெட்ரோலிய மண்டலமாக ஆக்க முயன்றதை எதிர்த்துப் போராடினோம்.
ஏழு பேர் விடுதலை பற்றி இன்றைக்கு எல்லோரும் பேசுகின்றார்கள். அவர்களுடைய விடுதலைக்காக,
78 இலட்சம் ரூபாய் செலவு செய்த கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
அதுவும், இன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்ததுபோல,
அன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்த நிதியைத்தான் செலவிட்டு, தூக்குக்கயிறில் இருந்து அவர்களைக் காப்பாற்றி இருக்கின்றோம்.
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குஉரைஞர் ராம்ஜெத்மலானியை அழைத்துக் கொண்டு வந்து வாதாடச் செய்து,
தூக்குக் கயிறின் முடிச்சை அவிழ்த்தோம். இல்லை என்றால், அவர்கள் எப்போதோ தூக்கில் இடப்பட்டு இருப்பார்கள்.
அதன்பிறகு, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் ஆஜராவதற்காக,
நானும், வழக்கு உரைஞர் தேவதாஸ் அவர்களும், எண்ணற்ற முறை தில்லிக்குச் சென்று விசாரணையில் பங்கேற்றோம்.
இப்படி அந்த ஏழு பேர்களுடைய விடுதலைக்காக எவ்வளவு பாடுபட்டு முடியுமோ, அவ்வளவு பாடுபட்டு இருக்கின்றோம்.
நன்றியை எதிர்பார்த்து அல்ல.
அதற்காக நாம் பாடுபடவில்லை;
அவர்கள் யாரும் நமக்கு நன்றி காட்டவும் இல்லை. நன்றி தெரிவிக்கவும் இல்லை. அப்படி ஒரு அடையாளத்தைக் கூட அவர்கள் காட்டவில்லை.
அப்படிப்பட்டவர்களைத் தில்லிக்கு அழைத்துக்கொண்டு போய்,
அங்கே ஒரு கூட்டத்தை நடத்தி, ராம் ஜெத்மலானி அவர்களை,
சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்காடச் செய்து, தூக்குக் கயிறு என்ற மரண தண்டனைத் தீர்ப்பை மாற்றி, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றிக் கொடுத்தது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
(பலத்த கைதட்டல்).
இன்றைக்கு எல்லோரும் அதைப்பற்றிப் பேசுகின்றார்கள்; அவர்கள் சொல்வதுதான் ஏடுகளில் வெளிவருகின்றது.
நம்மைப் பற்றிய செய்திகளே வருவது இல்லை. மாலை முரசு ஏட்டில் போடுகின்றார்கள். தந்தியில் போடுகின்றார்கள். அவ்வளவுதான்.
மற்ற ஏடுகளில் எந்தச் செய்தியும் கிடையாது. ஆனாலும் கூட, மக்களிடம் போய் நிதி திரட்ட முடிகின்றது என்றால், என்ன காரணம்?
மக்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும்; இவர்களிடம் காசு கிடையாது என்பதுவும் தெரியும்.
நெஞ்சில் மாசு அற்றவர்கள்;
இவர்கள் இந்த நாட்டுக்காக உழைக்கின்றார்கள் என்பதனால்,
நீங்கள் கேட்டால் கொடுக்கின்றார்கள்.
ஒரு தொகுதிக்கு இருபது கோடி செலவிடப் போகின்றார்கள்.
அவர்களோடு நம்மால் போட்டி போட முடியுமா? முடியாது.
நம்மிடம் நிதி இல்லை.
ஆகக்கூடுதலாக ஒரு தொகுதிக்கு 30 இலட்சம் கூடச் செலவிட முடியாது.
ஆனால், நம்மால் போராட முடியும்;
அப்படிப் போராடி வென்று இருக்கின்றோம்.
இப்போது எத்தனையோ புதிய கட்சிகள் முளைத்து இருக்கின்றன.
அதற்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன; செய்திகள் வருகின்றன. நான், இதே திருநெல்வேலி மண்ணில், தி.மு.கழகத்திற்காக 29 ஆண்டுகள் உழைத்தேன்.
கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று,இதோ அருகில் இருக்கின்ற பாளையங்கோட்டைச் சிறையில் 24 முறை அடைபட்டுக் கிடந்து இருக்கின்றேன்.
கடந்த 27 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்ற நமக்கு, ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
நிலைமை இப்படியே நீடிக்காது;
உறுதியாக மாறும். மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
எனக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கின்ற ஒரு தொண்டன்கூட இந்தக் கட்சியில் இல்லை.
(பலத்த கைதட்டல்).
அதனால், இந்தக் கட்சி உயிர்த்தன்மையோடு இருக்கின்றது; உறுதியாகப் பாடுபடுகின்றது.
நமக்கு வர வேண்டிய சோதனைகள் எல்லாம் வந்து போய் விட்டன.
இனிமேல் என்ன வரப்போகின்றது? சட்டசபையில் ஒரு இடம் கூடக் கிடையாது. ஊர் ஆட்சி மன்றங்களிலும் பெரிய அளவில் இல்லை.
ஆனாலும் கூட இந்த இயக்கத்தை, மக்கள் மன்றத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி இருக்கின்றோம்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, கழகத்தின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து இருக்கின்றேன்.
சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்து இருக்கின்றேன்.
சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்து இருக்கின்றேன். (கைதட்டல்). அடுத்த ஆண்டிலேயே நிலைமை மாறும்.
ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்து இந்தக் கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்கின்றேன்.
இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்தி உழைத்து இருக்கின்றேன்.
இந்தக் கட்சிக்கு அடுத்த கட்டத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதற்காகத் திட்டங்களை வகுத்து இருக்கின்றேன். ஏற்றுக்கொண்ட கொள்கைகள், இலட்சியங்கள் வெற்றி பெறுவதற்காக, இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலும் வாழ்ந்தான் வைகோ என்று பெயர் பெற வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன். (கைதட்டல்). உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். நிலைமைகள் மாறுகின்றபொழுது, தானாக முன்வந்து செய்திகள் போடுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டோம்.
அதை அப்படியே தொடர்ந்து வந்து,
இந்தச் சட்டமன்றத் தேர்தல் களத்திலும் அவர்களோடு இணைந்து செயல்படுவது எனத் தீர்மானித்து வேலை செய்கின்றோம்.
காரணம், சனாதன, வருணாசிரம சக்திகள், இந்தி, சமற்கிருதத்தைத் திணித்து, திராவிட இயக்கக் கொள்கைகளை ஒழித்துக் கட்டக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், அவர்களை முறியடிக்க வேண்டிய கடமையைக் கருதி நாம் செயல்படுகின்றோம்;
எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் பக்கபலமாக இயங்கிக்கொண்டு இருக்கின்றோம். நமக்கு இருக்கின்ற வலிமையை வீணாக்கி விடக் கூடாது என்பதனால், இணைந்து செயல்படுகின்றோம்.
நமக்கு எத்தனை இடங்கள் என்பது பிரச்சினை இல்லை. மிகக்குறைந்த எண்ணிக்கைதான் என்றாலும், அதற்காக முணுமுணுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
நான் பொடா சிறைவாசத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால்,
ஐந்து இலட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று இருப்பேன். ஆனால், நான் போட்டியிடவே இல்லை. கழகத்தின் ஒரு தொண்டனை நிறுத்தி வெற்றி பெறச் செய்தேன்.
இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.
அதற்கு முன்பு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, எனக்குக் கேபினெட் அமைச்சர் பதவி தருகிறேன் என்று வாஜ்பாய் சொன்னபோதும், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையே?
ஒருபோதும் பதவியை நாடி நான் அரசியல் நடத்தவில்லை.
தமிழ்நாட்டின் நன்மைக்காகப் பாடுபடுகின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக நாம் பேசியதை, இப்போது புதிதாக வந்த கட்சிகள் பேசத் தொடங்கி இருக்கின்றார்கள்.
மீனவர்கள் பிரச்சினை, ஈழத்தமிழர்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுகின்ற தகுதி, நம்மைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. நாம் தியாகம் செய்து இருக்கின்றோம்.
சமூக வலைதளங்களில் என் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி மீம்ஸ் போட்டார்கள் என்பதைத் தாங்க முடியாமல், சிவகாசி ரவி, தீக்குளித்து மடிந்தான். அதேபோல, என் மனைவியின் அண்ணன் மகன் தீக்குளித்து இறந்துபோனான். அருமையான பையன்.
என்னுடைய குடும்பத்தில் ஒருவரைப் பலி கொடுத்து இருக்கின்றோம்.
நான் தியாகம் செய்து இருக்கின்றேன். என் குடும்பம் தியாகம் செய்து இருக்கின்றது. அதைச் சொல்லிப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை.
இலட்சியத்திற்காக வாழுகின்றோம்.
அந்த உணர்வோடு தொடர்ந்து பாடுபடுவோம்.
நீங்கள் இந்த அளவுக்கு நிதி திரட்டிக் கொடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இதே திருநெல்வேலி மாவட்டத்தில், தி.மு.கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக நாங்கள் செல்கின்ற இடங்களில் எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கின்றோம்.
கூச்சத்தோடுதான் போய்க் கேட்போம்.
ஒரு பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்றால், செல்வன் ஒலிபெருக்கிக்கு 5000 ரூபாய் கொடுத்துவிட்டு வேலைகளைத் தொடங்குவேன்.
வசூல் செய்யப் போவோம். ‘உங்களிடம் இல்லாத பணமா? எங்களிடம் ஏன் வருகின்றீர்கள்?’ என, முகத்தில் அடித்தாற்போலக் கேட்டு விடுவார்கள்.
ஆனால், இன்றைக்கு நம் கட்சியைப் பற்றி யாரும் அப்படிப் பேச மாட்டார்கள். அத்தகைய நேர்மையான அரசியல் நடத்தி வந்திருக்கின்றோம்.
இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் நீங்கள் மக்களைச் சந்தித்து நிதி திரட்டி இருக்கின்றீர்கள்.
உங்களுக்கு நிதி கொடுத்தவர்கள் ஒன்றும் டாடா, பிர்லா கிடையாது. அம்பானி, அதானி கிடையாது.
மோடி கண் சிமிட்டினால் போதும், கோடிகோடியாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள்.
அப்படி யாரும் நமக்கு இல்லை.
நமக்கு ஒரு இலட்சம் கிடைத்தால் அது பெரிய தொகை. 50 ஆயிரம், 25 ஆயிரம் என்பதே பெருந்தொகைதான்.
5000, 500 ம் கூடப் பெரிய தொகைதான். அப்படி நீங்கள் நிதி திரட்டிக் கொடுத்து இருக்கின்றீர்கள்.
அதற்காக நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
பதவிகளை எதிர்பார்த்து வந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
ஆனால், நமக்கு இடங்கள் குறைவாகக் கிடைத்தால்,
நமது வீடுகளிலேயே கூடக் கேலி செய்வார்கள்.
தெருக்களில் கேலி செய்வார்கள். அதற்காகக் கவலைப்படக்கூடாது.
நீங்கள் வருத்தப்பட்டால், அதைவிடப் பலமடங்கு நான் வேதனைப்படுவேன்.
நமது இயக்கத்தில் தகுதி வாய்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
அவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை. கொடுக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாது.
இந்தச் சூழ்நிலையில் யாரைத் தேர்ந்து எடுப்பது எனத் திகைத்துக்கொண்டு இருக்கின்றேன்.
எத்தனை பேருக்குக் கிடைக்கின்றது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக்கொண்ட கொள்கைகளைக் காக்க உழைப்போம்.
இலட்சியங்களை நிறைவேற்றப் போராடுவோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
நிதி திரட்டிக்கொடுத்த உங்கள் கைகளைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொள்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.02.2021