தம் வாழ்நாள் முழுமையும், பொது உடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு வந்த தோழர் தா. பாண்டியன் அவர்கள் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தோழர் தா.பா. அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகர் அற்ற சொற்பொழிவாளர்; ஆற்றொழுக்குப் போல, தங்கு தடை இன்றி, தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர்; மிகச்சிறந்த எழுத்தாளர்; இலக்கியவாதி. எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவா அவர்களின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக சிறப்பாகப் பணி ஆற்றினார். பொது உடைமைக் கட்சி நடத்திய அத்தனைப் போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர். தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளராகப் பணிபுரிந்தார்.
பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதற்கு முன்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தார். வழக்கு உரைஞர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைத்தார். அரிய கருத்து உரைகளை நிகழ்த்தினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடைசியாக, கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள், மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாட்டில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து கேட்டேன்.
என் கையும் காலும்தான் சரியாக இல்லை; ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது; பொது உடைமைக் கொள்கை வென்றே தீரும்; அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
அவரது மறைவு, பொது உடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், கட்சிகளின் எல்லைகளைக் கடந்து அவரை நேசிப்பவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
26.02.2021
No comments:
Post a Comment