Wednesday, February 3, 2021

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவரும் பா.ஜ.க. பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்க! வைகோ அறிக்கை!

இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த பா.ஜ.க. அதை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இலட்சக்கணக்கான இசுலாமியர்கள் பெண்கள், வீதிக்கு வந்துப் போராடிய போது, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.
தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பா.ஜ.வைச் சேர்ந்த கல்யாணராமன் என்கின்ற பேர்வழி, கோடிக்கணக்கான மக்கள் போற்றி வணங்கும் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.
இந்தப் பேர்வழி தந்தை பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மதவன்முறைகளைத் தூண்டவும், அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுடனும் கல்யாணராமன் போன்ற இழி பிறவிகளை ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பல் பின்னணியில் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
02.02.2021

No comments:

Post a Comment