Tuesday, February 2, 2021

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள்; தமிழ் ஈழம் அமைந்திடப் பொது வாக்குப் பதிவு நடத்துங்கள். உலக நாடுகளின் தலைவர்களுக்கு, வைகோ வேண்டுகோள்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி சேன்சலர் ஆங்கெலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர், இந்திய அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் அயல் உறவுத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு:
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கி வருகின்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் பொதுச்செயலாளராகிய நான், 26 ஆண்டுகளாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் பொறுப்பு வகித்து வருகின்றேன். தமிழ் ஈழம் அமைவதற்காகக் கடமை ஆற்றி வருகின்றேன்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைத் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருவதற்கு, அசைக்க முடியாத ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன.
2009 மே மாதம், மூன்று இலட்சத்து 30 ஆயிரம் மக்களை, முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குள் சுற்றி வளைத்தனர். அந்த வேளையில், செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களை முடக்குவதற்காக, பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து, வெள்ளை வேன்களில் ஆள் கடத்தி, அவர்களைக் காணாமல் போகவும் செய்தனர்.
பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை கோரி, இலங்கைத் தீவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டக் களத்தின் முன்னணியில் தமிழர்கள் இருந்தனர். 1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள், பிரித்தானியர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது, ஆட்சி அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். அதன்விளைவாக, தமிழ் மக்கள், இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.
அதன்பிறகு, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கத் தொடங்கினர் சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறையினரின் உதவியோடு, தமிழர்களின் வழிபாட்டு இடங்கள், கோவில்கள், தேவாலயங்களை, சிங்களக் காடையர்கள் தாக்கித் தகர்த்தனர். தமிழர்கள் மீது சிங்களவர்கள் எப்போதும் வெறுப்பு உணர்வுடனேயே இருந்து வருகின்றனர்; அவ்வப்போது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும், மத வழிபாட்டு இடங்களையும் அழித்து வருகின்றனர். தமிழர்களின் தாயகப் பகுதிகளில், எத்தனையோ இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கி விட்டனர். இலங்கை அரசே இதை ஒப்புக்கொண்டு இருக்கின்றது.
1993 ஆம் ஆண்டு வரையிலும், 1479 இந்துக் கோவில்கள் தாக்கி அழிக்கப்பட்டு இருப்பதாக, அந்த நாட்டின் மத, பண்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருக்கின்றது. இன்னும் 128 இந்துக் கோவில்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஒட்டுமொத்தமாக இலங்கையில் உடைக்கப்பட்ட இந்துக் கோவில்களின் எண்ணிக்கை 2076 ஆகும்.
எப்போதெல்லாம் சிங்களவர்ளுக்கு வெறி ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்களைத் தாக்குவதும், தமிழர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவதும் அவர்களது வாடிக்கை. இத்தகைய கொடுமைகளால், தமிழர்கள், தங்களுக்கெனத் தனிநாடு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
1976 மே 14 ஆம் நாள், ஒரு வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்தது. தந்தை செல்வா அவர்களுடைய தலைமையில், அனைத்துத் தமிழ் அமைப்புகளும், வட்டுக்கோட்டையில் ஓரணியாகத் திரண்டு, தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைத் தீர்மானமாக வடித்தனர்.
அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற, பல்வேறு தேசிய இனங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியதை வரலாறு பதிவு செய்து இருக்கின்றது. இது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை என்பதை, யாரும் மறுக்க முடியாது. அதே வழியில்தான், பிரபாகரன் அவர்களும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்; வரலாற்றில், இதற்கு முன்பு யாரும் காணாத வீரஞ்செறிந்த போராட்டங்களை, விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்தியது.
இலங்கை அரசு, இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
விலை மதிப்பு அற்ற, தமிழர்களின் கருவூலமாகிய யாழ்ப்பாண நூலகத்தை, 1981 ஆம் ஆண்டு, தீ வைத்து எரித்துச் சாம்பல் ஆக்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 ஆம் ஆண்டு, இனப்படுகொலைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர்; ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தனர். மிகக் கொடூரமான தாக்குதல், வெளிக்கடைச் சிறையில் நிகழ்ந்தது. அங்கே அடைக்கப்பட்டு இருந்த, வீரத்தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 58 தமிழர்களை, கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைகள்தான், உலகம் முழுமையும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் கோபத் தீயை மூட்டியது.
1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், இலங்கை அரசுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் இடையே, பூடான் நாட்டின் தலைநகர் திம்புவில், அமைதிப்பேச்சுகள் நடைபெற்றன. அப்போது, கீழ்காணும் நான்கு கோரிக்கைகளைத் தமிழர்கள் முன்வைத்தனர்.
1. தமிழர்களை, தனித் தேசிய இனமாக ஏற்க வேண்டும்.
2. தமிழர்களின் தாயக உரிமை, அதன் எல்லைகள், இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3. தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கு உரிமை உண்டு.
4. அனைத்துத் தமிழர்களுக்கும் குடி உரிமை வழங்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை அரசுகள் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன.
1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள், சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரபாகரன், ‘சிங்கள இனவாத பூதம், இந்த உடன்படிக்கையை விழுங்கி விடும்’ என எச்சரித்தார்.
எத்தனையோ போராட்டங்களாலும், தியாகத்தாலும், அவர்கள் கட்டி எழுப்பிய விடுதலைப் போராட்டத்தை, அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு வல்லாதிக்க அரசு தகர்க்க முனைந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதிப்புமிக்க தளபதிகளுள் ஒருவரான திலீபன், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். சொட்டுத் தண்ணீரும் பருகாமல் 12 நாட்கள் அந்த அறப்போர் நீடித்தது. 1987 செப்டெம்பர் 26 ஆம் நாள், அந்த தியாக தீபம் அணைந்தது. அவரது மரணம், தமிழர்களின் உள்ளங்கள் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது.
உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தை போப் இரண்டாம் ஜான் பால், ‘துன்பத்தில் பரிதவிக்கின்ற ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்’, என உலக சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.நா.மன்றத்தின் அப்போதைய செயலர் புத்ரோஸ் புத்ரோஸ் காலி அவர்களும், அதேபோன்று வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பிறகு, நோர்வே அரசு தலையிட்டு, அமைதிப்பேச்சு நடத்த ஏற்பாடு செய்தது. அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதற்கு ஒப்புக்கொண்டார்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே, முதல் சுற்று அமைதிப்பேச்சுகள், 2002 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 16,17,18 ஆகிய மூன்று நாள்கள், தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.
இரண்டாவது சுற்று பேச்சுகள், மீண்டும் தாய்லாந்து நாட்டில், அக்டோபர் 31, நவம்பர் 1,2,3 ஆகிய நான்கு நாள்கள் நடைபெற்றது.
மூன்றாவது சுற்று பேச்சுகள், நோர்வே தலைநகர் ஓஸ்லோவில், 2002 டிசம்பர் 2,3,4 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன.
ஆனால், இலங்கைக் குடியரசுத் தலைவரான சந்திரிகா குமாரதுங்கே, இந்தப் பேச்சுகளை முனைமுறித்தார். அதன்பிறகு, மிகக் கொடுமையான ஒரு படுகொலை அரங்கேறியது. 2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் நாள், செஞ்சோலை என்ற இடத்தில், ஆதரவு அற்ற குழந்தைகள் காப்பகத்தின் மீது, இலங்கை வான்படை குண்டுகளை வீசியதில், 61 குழந்தைகள் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர்; 170 குழந்தைகள், கை, கால்களை இழந்தனர்.
இந்தப் படுகொலைகள், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இலங்கை நாடாளுமன்றத்தின் நான்கு தமிழ் உறுப்பினர்கள், அடுத்தடுத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில், மட்டக்களப்பு புனித மேரி ஆலயத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு இருந்த, ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை, அந்த ஆலயத்திற்கு உள்ளேயே சுட்டுக்கொன்றனர். 2006 நவம்பர் 16 ஆம் நாள், நடராஜா ரவிராஜா என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள், வாகறை என்ற இடத்தில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கொழும்பு நகரில் உள்ள யூனிசெப் அலுவல் அகத்திற்கு முன்பு ஒரு அமைதிப் பேரணி நடத்தியதற்காக, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம், 1,47,000 தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கியது.
2009 ஆம் ஆண்டு, நோர்வே, ~பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே, ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு, அவர்கள் பெரும் ஆதரவு ஆதரவு அளித்தனர்.
2011 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, அரசு அமைப்புச் சட்டத்தின்படி, இலங்கை அரசு தீர்வு காணத் தவறியது; இலங்கை விடுதலை பெற்ற நாள் முதல், தமிழர்களை ஒடுக்குவதற்கும், முற்றுமுழுதாக அழிப்பதற்கும், தமிழ் ஈழத் தாயத்தை இல்லாமல் ஆக்குவதற்கும் திட்டம் வகுத்து, தமிழர்களைப் பெரும் அளவில் கொன்று குவித்தது; மனித உரிமைகள் நசுக்கப்பட்டன; போர் முடிவுற்ற பின்னரும்கூட, மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன; செய்தியாளர்கள் மிரட்டப்படுகின்றார்கள்; தாக்கப்படுகின்றார்கள் என, ஐ.நா. அறிக்கை கூறுகின்றது. எனவே, இலங்கை அரசு மீது, இந்திய அரசு பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்; அவர்களை, போர்க்குற்றவாளிகள் என அறிவிக்கும்படி, ஐ.நா. மன்றத்தில் கோர வேண்டும்; விடுதலைப்புலிகள் உட்பட, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அனைத்திற்கும் மேலாக, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து, தனித்தமிழ் அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என,
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது.
இலங்கை வடக்கு மாகாண மன்றம், 2015 ஆம் ஆண்டு, பிப்ரவரி 10 ஆம் நாள் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி,
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்; சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்; தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.
பரிந்துரைகள்:
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து, கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும் என, நாங்கள் கோருகின்றோம்.
1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2. 2015 பிப்ரவரி 10 ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும்.
3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4 இன்படி, சிறப்பு ஆணையர் (Special Rapporteur) ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
அந்த ஆணையர்,
அ) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;
ஆ) தொடர்பு உடைய உறுப்பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்;
இ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்;
ஈ) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும்; அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
சென்னை – 8
‘தாயகம்’
02.02.2021

No comments:

Post a Comment