சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.
எங்கள் ஊருக்குப் பத்துக் கிலோமீட்டர் தொலைவில், பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம். பட்டதாரி ஆகி, வேலை வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வின் மூலம் நிதித்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
பாலச்சந்தர் அவர்களுடைய நாடகங்களில் பங்கேற்று நடித்து, அப்படியே அவர் வழியாகவே மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான முறையில் வளர்ந்து, திரைத்துறையில் தடம் பதித்தார்.
தமிழ்த்திரை உலகில், நகைச்சுவைக் கருத்துகள் மூலம், மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த கலைவாணரின் வழித்தோன்றல்களாக, நடிகவேள் எம்.ஆர். இராதா, சந்திரபாபு, டி.எஸ். பாலையா, சுருளிராஜன், மணிவண்ணன், சத்தியராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று ஒரு மிகப்பெரும் பட்டாளம், நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைக் கூறியதோடு, குணச்சித்திர நடிகர்களாகவும் திகழ்ந்து இருக்கின்றார்கள்.
அந்த வரிசையில் ஒருவராக, தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு, சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டிய நடிகர் விவேக் அவர்கள், சின்னக் கலைவாணர் என்றே அழைக்கப்பட்டார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தினார்.
தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். அப்துல் கலாம் அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை ஊன்றி வளர்த்தார்.
தான் பிறந்த மண்ணை மறக்காமல், அடிக்கடி வந்து செல்வார். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார். தன் முன்னோர்களுக்கு, நினைவு இடமும் கட்டி வைத்து இருக்கின்றார்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அவரது மகன் மறைவின்போது, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இன்று அவர், 60 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.04.2021
No comments:
Post a Comment